என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது எப்போது என்ற கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 16-ம் தேதி முதலே திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாமலிருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் என திரைத்துறையினர் பெரும் பொருளாதார இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.

     தற்போது ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகளுக்காக சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தாலும் திரையரங்குகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தொற்று எண்ணிக்கை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் சகஜமாக திரும்பும் நிலை வந்த பின்னர்தான் தியேட்டர்கள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது. தற்போதைக்கு எந்த தளர்வும் வழங்கப்பட மாட்டாது” என்று தெரிவித்துள்ளார்.
    நடிகர் விஷ்ணுவிஷாலின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார் ஜூவாலா கட்டா.
    வெண்ணிலா கபடி குழு, ஜீவா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் விஷ்ணுவிஷால். யார் மனைவியை விவகாரத்து செய்த பின் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் நட்பு பாராட்டி வருகிறார்.

     இதையடுத்து ஜூவாலா கட்டாவை விஷ்ணு விஷால் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை விஷ்ணு விஷால் மறுத்திருந்தார்.

    விஷ்ணு விஷாலின் பதிவு

     இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஷ்ணு விஷால் தனக்கு ஜூவாலா கட்டா சர்ப்ரைஸ் கொடுத்ததாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
    ஜா.ரகுபதி இயக்கத்தில் பாலாஜி, நிகிலா விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒன்பது குழி சம்பத் படத்தின் முன்னோட்டம்.
    ஜா.ரகுபதி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'ஒன்பது குழி சம்பத்'. புதுமுக நாயகன் பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். மேலும் அப்புக்குட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சார்லி இசையமைத்துள்ள இப்படத்திற்கு கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    படத்தை பற்றி இயக்குனர் ஜா.ரகுபதி கூறியதாவது: “கிராமத்தில் சிறுவர்களுடன் சேர்ந்து கோலி விளையாடியபடி திரிந்து கொண்டிருக்கிறான், ஒரு இளைஞன். அவன் வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அதனால் அவன் வாழ்க்கை திசைமாறிப் போகிறது. ‘சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்த திகில் படம், இது.

    ஒன்பது குழி சம்பத் படக்குழு

    தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத கிராமத்தில் நிகழும் சம்பவங்களே திரைக்கதை. இதற்காக பல கிராமங்களை பார்த்து, இறுதியாக திருச்சி அருகில் ஒரு கிராமத்தை தேர்வு செய்து படப்பிடிப்பை நடத்தினோம். திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். படம், ‘ஆன்லைன்’ தியேட்டரில் வெளியாகும்.” என கூறினார்.
    டுவிட்டரில் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்து ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் என நடிகை மீரா மிதுன் பதிவிட்டுள்ளார்.
    தமிழில் சில படங்களில் நடித்த மீரா மிதுன், பிக்பாஸ் வீட்டில் நுழைந்து மிகவும் பிரபலமானார். அதன்பின் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் திரிஷா தன்னை காப்பியடிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து பதிவு செய்திருந்தார். 

    இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ள மீரா மிதுன், அதில் உதயநிதியை டேக் செய்து 'ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம்’ என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் திமுக தலைவர் முக ஸ்டாலினை டேக் செய்து ‘நாம் இணைந்து வெல்வோம்’ என்றும் பதிவு செய்துள்ளார். வழக்கம்போல் இந்த டுவிட்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    நடிகர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கமல்ஹாசன், அடுத்ததாக ஓ.டி.டி-யில் தடம்பதிக்க தயாராகி வருகிறாராம்.
    கொரோனா ஊரடங்கில் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. இதனால் முன்னணி நடிகர்கள் இயக்குனர்கள் டிஜிட்டல் தளத்துக்கு மாறுகிறார்கள். மணிரத்னம், சுஹாசினி, சித்தார்த், அரவிந்தசாமி, ஜெயேந்திரா, பிஜாய் நம்பியார் உள்பட 9 இயக்குனர்கள் இணைந்து புதிய வெப் தொடரை எடுக்க உள்ளதாகவும் அவற்றில் சூர்யா, விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட 9 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனும் ஓ.டி.டி. தளத்துக்கான திரைப்படங்களையும் வெப் தொடர்களையும் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான கதைகள் கேட்டு வருகிறார். நல்ல கதை அமைந்தால் தானே நடித்து இயக்கி ஓ.டி.டி. தளத்தில் வெளியிட முடிவு செய்து இருக்கிறார். 

    கமல்ஹாசன்

    சில வருடங்களுக்கு முன்பே தனது விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்சில் வெளியிட ஆயத்தமாகி எதிர்ப்பினால் கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன்-2 பட வேலைகள் கொரோனாவால் முடங்கி உள்ளன. இந்த படத்தை முடித்து விட்டு முழுவீச்சில் ஓ.டி.டி. தளத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    கந்தசஷ்டி கவசம் குறித்து நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக நடிகர்கள் நட்ராஜ், பிரசன்னா, சௌந்தரராஜா, ராஜ் கிரண் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில்,நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: அனைத்து முருக பக்தர்களுக்கும் வணக்கம், நான் உங்கள் அனைவருடனும் ஒரு கருத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தினமும் கந்தசஷ்டி கவசத்தை கேட்டு வளர்ந்தவன் நான். என் அம்மா அதை தினமும் என்னிடம் காலையில் படித்துக் காட்டுவார். அதன் சக்தியை நான் உணர்ந்துள்ளேன். கந்தசஷ்டி கவசம் என்னைப் பாதுகாத்த ஒரு கேடயம் என்பதை நான் நம்புகிறேன்.

    ராகவா லாரன்ஸின் டுவிட்டர் பதிவு

    என் வீட்டில் உள்ள முருகன் சிலையை நான் தினமும் வணங்குவேன். நான் இதை எதற்காக சொல்கிறேன் என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நீங்கள் அனைவரும் அதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இதைப் பற்றி அதிகமாகப் பேசி யாரையும் பெரிய ஆளாக மாற்ற வேண்டாம். இந்த புகைப்படத்தில் முருகனின் அழகு, அன்பு மற்றும் சக்தியை பாருங்கள். அதற்கு முன் எல்லாம் மறைந்து போகும். அனைத்திற்கும் காலம் பதிலளிக்கும். இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
    நடிகர் ஆதியும், நடிகை நிக்கி கல்ராணியும் காதலித்து வருவதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    தமிழில் மிருகம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான ஆதி, ஈரம், அய்யனார். ஆடுபுலி, அரவான், யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் கிளாப் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆதிக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

    கன்னட நடிகையான நிக்கி கல்ராணி தமிழில் டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு-2, கீ போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆதியுடன் யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு ரகசியமாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

    ஆதி, நிக்கி கல்ராணி

    இரு தினங்களுக்கு முன்பு ஆதி தனது தந்தையின் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினார். கொரோனா ஊரடங்கினால் யாரையும் அழைக்கவில்லை. ஆனால் நிக்கி கல்ராணியை மட்டும் அழைத்து இருந்தார். அவரும் ஆதி குடும்பத்தினரோடு பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இருவரும் காதலிப்பது உண்மைதான் என்றும் விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகும் என்றும் தெலுங்கு திரையுலகினர் கூறுகிறார்கள்.
    துப்பறிவாளன் 2-ம் பாகத்தை மீண்டும் மிஷ்கினே இயக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், விஷால் தரப்பு அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
    மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு லண்டனில் சில வாரங்கள் நடந்தது. அங்கு விஷால்-மிஷ்கின் இடையே திடீர் மோதல் ஏற்பட்டு படப்பிடிப்பு நின்று போனது. படத்துக்கு அதிகம் செலவு வைத்து விட்டதாக மிஷ்கின் மீது விஷால் குற்றம் சாட்டினார். 

    படத்தை தொடர்ந்து இயக்க தனக்கு ரூ.5 கோடி சம்பளம் தரவேண்டும் என்பது உள்பட 15 நிபந்தனைகளை மிஷ்கின் விதித்ததாக கடித நகல் வெளியானது. இந்த மோதலையடுத்து துப்பறிவாளன் 2-ம் பாகத்தை நானே இயக்குவேன் என்று விஷால் அறிவித்தார். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்கும் முடிவில் இருக்கிறார்.

    விஷால், மிஷ்கின்

    இந்த நிலையில் மிஷ்கின்-விஷால் இடையே சமரசம் ஏற்பட்டு உள்ளது என்றும் துப்பறிவாளன் 2-ம் பாகத்தை மிஷ்கினே இயக்க இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது. 

    இதனை விஷால் தரப்பில் மறுத்துள்ளனர். “மிஷ்கினுடன் சமரசம் ஏற்பட வாய்ப்பே இல்லை. சரியான திட்டமிடல் இல்லாமல் துப்பறிவாளன்-2 படத்துக்கு பலகோடி நஷ்டத்தை மிஷ்கின் ஏற்படுத்தி விட்டார். எனவே மீண்டும் படத்தை இயக்க அவரை அழைக்கும் எண்ணம் இல்லை. சக்ரா படத்தின் 4 நாள் படப்பிடிப்பு பாக்கி உள்ளது. அதை முடித்து விட்டு துப்பறிவாளன் 2-ம் பாகத்தை விஷால் இயக்குவார்” என்றனர்.
    முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானால் எனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இயக்குனர், தயாரிப்பாளர் பாபு கணேஷ் புகார் கூறியிருக்கிறார்.
    ‘நடிகை’, ‘தேசிய பறவை’, ‘நானே வருவேன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து 'காட்டுப் புறா' திரைப்படத்தின் மூலம் உலகின் முதல் 'வாசனை படம்' என்று பெயர் எடுத்தவர் இயக்குனர், தயாரிப்பாளர் பாபு கணேஷ். இவர் தற்போது ஏ.ஆர்.ரகுமான் மீது புகார் கூறியிருக்கிறார். 

    இதுகுறித்து அவர் கூறும்போது, ‘நான் 2000 ஆம் ஆண்டு நான் செய்த கான்செப்ட் வேர்ல்ட் ரெக்கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிய புக், இந்தியன் புக், யுனிவர்சல் புக் ஆகிய சாதனைகள் படைத்துள்ளது. இந்த கான்செப்ட்டை வைத்து இசையமைபாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘லீ மஸ்க்’ என்ற ஆங்கில படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார். இதை பயன்படுத்தியதற்காக அவருக்கு மெயில், கடிதம், மியூசிக் யூனியன் வாயிலாக கேட்டு அவர் பதிலளிக்கவில்லை. என்னை அவருக்கு நன்றாக தெரியும். என்னுடைய கான்செப்ட்டை பயன்படுத்தியது எனக்கு பெருமை. இருந்தாலும் அவரால் எனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    ஏ.ஆர்.ரகுமான் - பாபு கணேஷ்

    என்னுடைய கான்செப்ட்டை பயன்படுத்தி காட்டுப்புறா படத்தை மூன்று மொழிகளில் உருவாக்கினேன். இதை நம்பிதான் எனக்கு பைனான்சியர்கள் பணம் கொடுத்தார்கள். ஒரு ஆறுத்தலுக்காகவது ஏ.ஆர்.ரகுமான் என்னிடம் பேசுவார் என்று நினைத்தேன். ஆனால், இதுவரை அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அதனால், கான்செப்ட் திருட்டு என்று லீகலாக நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். அதற்கும் பதில் இல்லை. அடுத்தகட்டமாக எப்.ஐ.ஆர் போடவுள்ளேன். இது எனக்கு கஷ்டத்தை கொடுத்தாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என்றார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் மனிதன் போட்டோஷூட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

    ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடங்கள் என அனைத்திலும் தன் திறமையை நிரூபித்து, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது டுவிட்டர் பக்கத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்தது. இதற்காக ரசிகர்களுக்கு நன்றி சொல்லி புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.


    தற்போது மனிதன் என்ற பெயரில் புதிய போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார் விஜய் சேதுபதி. இதற்கான வீடியோ ஒன்றை விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.
    தமிழில் முன்னணி இயக்குனரான கவுதம் மேனன் இயக்கி வரும் புதிய படத்தில் வில்லனாக பிரபல நடிகர் நடித்திருக்கிறார்.
    பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் கவுதம் மேனன் கொரோனா ஊரடங்கு நேரத்திலும், ’கார்த்திக் டயல் செய்த எண்’ மற்றும் ’ஒரு சான்ஸ் கொடு’ ஆகிய குறும்படங்களை எடுத்தார். 

    தற்போது இவர் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வருண் கதாநாயகனாகவும், ராஹே கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக பிரபல நடிகர் கிருஷ்ணா நடித்திருப்பதாக கவுதம் மேனன் அறிவித்திருக்கிறார். 

    கிருஷ்ணா

    நடிகர் கிருஷ்ணா ‘கழுகு’, ‘யாமிருக்க பயமே’ உள்பட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
    பாடலாசிரியர் மதன் கார்க்கியின் புதிய முயற்சி மூலம் புலம் பெயர்ந்த தமிழர்களின் கனவு நனவாகி இருக்கிறது.
    இணைய வழியில் தமிழ் கற்க விரும்புவோருக்கு ஏற்றவாறு கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ‘பயில்’ எனும் பாடத்திட்டத்தை வடிவமைத்து அதன் அடிப்படையில் இணைய வகுப்புகளையும் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் நூற்றுக்கணக்கானோர் இந்த வகுப்புகளில் தமிழ் பயின்று வருகிறார்கள். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சைப்ரஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்கள் இந்த வகுப்புகளில் இணைந்துள்ளனர். 

    ‘எழுது’, ‘பேசு’, ‘இலக்கணம்’, ‘இலக்கியம்’ என்ற நான்கு வகுப்புகள் இந்தப் பயில் இணைய அரங்குகளில் வழங்கப்படுகிறது. ஒரே வகுப்பில் எட்டு வயது சிறுவர் சிறுமியரும் எழுபது வயது முதியவர்களும் ஒன்றாகக் கூடி தமிழ் பயின்று வருகிறார்கள். இரண்டு ஆண்டு ஆராய்ச்சியில் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

    மதன் கார்க்கி

    தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பதை வாழ்நாள் கனவாகக் கொண்ட புலம்பெயர்ந்த தமிழர்களின் கனவு முப்பது நாட்களில் நனவாகியிருக்கிறது. பாடல்கள், கதைகள், ஓவியங்கள் போன்ற கலைவடிவங்களோடு இணைய விளையாட்டுக்களின் மூலம் தமிழ் பயிற்றுவிக்கும் இந்த முறை, இந்தத் தலைமுறை குழந்தைகளையும் பெற்றோரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. 

    உலகெங்கும் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு இந்தப் பாடத்திட்டத்தை எடுத்துச் செல்லும் முயற்சியிலும் மொழி குறித்த ஆராய்ச்சிகளிலும் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
    ×