என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர் விஷால் நிறுவனத்தில் பணிபுரிந்த கணக்காளர் ரம்யா பற்றி விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் ரூ.45 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக அந்நிறுவனத்தில் பணியாற்றிய கணக்காளர் ரம்யா மீது சமீபத்தில் புகாரளிக்கப்பட்டது.
இந்தப் புகாரை அடுத்து அலுவலக ஊழியர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய விருகம்பாக்கம் போலீஸ், பெண் கணக்காளர் ரம்யா மீது மோசடி, போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் கணக்காளர் ரம்யாவிடம் விஷால் பிலிம் பேக்டரி கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் அவரை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அந்நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “எங்கள் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்த ரம்யா, நிறுவனத்தில் பல வருடங்களாக வங்கிக் கணக்குகளை முறைகேடாக பயன்படுத்தி ரூ.45 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார் என்பதை கண்டறியப்பட்டு 30.06.2020 அன்று காவல்துறையில் புகாரளிக்கப்பட்டு விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் மோசடி தொடர்புடைய பிரிவின் கீழ் 7-07-2020 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.
எனவே ரம்யா இனி எங்கள் நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியில் பணியாற்றவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம். விஷால் ஃபிலிம் பேக்டரி கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் இனிமேல் ரம்யாவை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மீறி தொடர்பு வைத்துக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானம் செய்யுமாறு நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதே நேரம் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகமாகி இருப்பது நிம்மதி அளிக்கிறது. தற்போது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தை தானமாக பெற்று அதில் இருந்து பிளாஸ்மாவை மட்டும் பிரித்து எடுத்து வைரஸ் தொற்றால் பாதிக்கபடுவோருக்கு அதிக அளவில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பிளாஸ்மா சிகிச்சை மூலம் கொரோனா நோயாளிகள் விரைவில் குணமடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் ரத்த தானம் செய்யும்படி வற்புறுத்தப்படுகிறது. இதற்கான விழிப்புணர்வு பணியில் நடிகர் விஜய் சேதுபதியும் ஈடுபட்டு உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: "கருணையும் பச்சாதாபமும் இந்த நேரத்தில் அவசியமாக உள்ளது. எனவே கொரோனாவில் இருந்து குணமடைந்தவராக இருந்தால் தயவு செய்து பிளாஸ்மா தானம் செய்து கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு உதவி செய்யுங்கள். இதன்மூலம் ஒரு குடும்பத்தின் உயிரை உங்களால் காப்பாற்றலாம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுந்தர் பாலு இயக்கத்தில் வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகியோர் நடித்துள்ள கன்னித்தீவு படத்தின் முன்னோட்டம்.
சுந்தர் பாலு தயாரித்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’. இதில் வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகிய நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் மொட்டை ராஜேந்திரன், சூப்பர் சுப்பராயன், சர்மிளா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சண்டைக்காட்சியை ஸ்டண்ட் சிவா இயக்குகிறார். ஆரோல் கரோலி இசையமைக்கும் இந்த படத்திற்கு சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் சுந்தர் பாலு கூறியதாவது: வட சென்னையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்திய கதை இது. சின்ன வயதில் இருந்தே தோழிகளான வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா நான்கு பேரும் சமூக அக்கறையுள்ளவர்கள். உலகத்தை காப்பாற்ற முடியாவிட்டாலும் தங்கள் பகுதியையாவையாவது நன்றாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

அந்த பகுதியில் நீண்ட நாளாக இருக்கும் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக போராட்டத்தில் குதிக்கிறார்கள். அந்த பகுதி மக்களின் பேராதரவோடு அந்த போராட்டத்தில் பெரிய வெற்றி பெறுகிறார்கள். அந்த வெற்றியே இந்த நான்கு பேருக்கும் பெரிய பிரச்சினையாக மாறுகிறது. அந்த பிரச்சினை என்ன? அதில் இந்த நான்கு பேரும் எப்படி போராடி வெற்றி பெற்றார்கள் என்பதை ஆக்சன் த்ரில்லர் திரைக்கதையாக உருவாகுவதாக இயக்குநர் சுந்தர்பாலு கூறினார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான சுதீப், நான்கு அரசுப் பள்ளிகளை தத்தெடுத்துள்ளார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கிச்சா சுதீப். இவர் ராஜமவுலி இயக்கிய நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். தமிழில் விஜய்யுடன் புலி படத்தில் நடித்திருந்தார். இதேபோல் பாலிவுட்டிலும் தபாங் படத்தில் சல்மான் கானுக்கு வில்லனாக நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் சுதீப் கர்நாடகாவின் சித்ர துர்கா மாவட்டத்தில் உள்ள நான்கு அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தருவதோடு, ஆசிரியர்களின் சம்பளச் செலவுகளையும் சுதீப் ஏற்றுள்ளாராம்.

டிஜிட்டல் வழி கல்விக்காக அந்த அரசுப் பள்ளிகளில் சுதீப், கணினிகளை நிறுவியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பள்ளியின் வசதிகளைத் தொடர்ந்து கண்காணிக்க, ஒரு தன்னார்வலர் குழுவை சுதீப் நியமித்துள்ளாராம். சுதீப்பின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
‘பேர்ட்ஸ் ஆப் பிரே த ஹண்ட் பிகின்ஸ்’ என்கிற வெப் தொடரில் நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வெப் தொடர்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனால் முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால், பரத், பாபி சிம்ஹா, மீனா, நித்யா மேனன், சீதா ஆகியோர் வெப் தொடர்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் சரத்குமாரும் வெப் தொடரில் நடிக்கிறார். இதனை நடிகை ராதிகா சரத்குமார் சமூக வலைதளத்தில் தெரிவித்து உள்ளார். வெப் தொடரில் நடிக்கும் சரத்குமாரின் தோற்றங்களையும் வெளியிட்டு உள்ளார். அதில் சரத்குமார் நீளமான தாடி, கையில் துப்பாக்கியுடன் மிரட்டலான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார்.

இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகின்றன. சரத்குமார் நடிக்கும் வெப் தொடருக்கு ‘பேர்ட்ஸ் ஆப் பிரே த ஹண்ட் பிகின்ஸ்’ என்று பெயர் வைத்துள்ளனர். கவுதம் மேனன் உதவியாளர் பிரவீன் நாயர் இயக்குகிறார். சரத்குமாருடன் இணைந்து நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.
கொரோனா ஊரடங்கு முடிந்ததும் ஐதராபாத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த தொடரை ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரிக்கிறது. மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், ஏ.வேங்கடேஷ் இயக்கும் பாம்பன் ஆகிய படங்களிலும் சரத்குமார் நடிக்கிறார்.
உடல் முழுவதும் சேறு பூசிக்கொண்டு புகைப்படம் வெளியிட்ட பாலிவுட் நடிகர் சல்மான் கானை நெட்டிசன்கள் கடுமையாக சாடியுள்ளனர்.
கொரோனா ஊரடங்கில் நடிகர், நடிகைகள் சமையல், விவசாயம், உடற்பயிற்சிகள், யோகா செய்தல் என்று நேரத்தை கழிக்கின்றனர். நடிகர் சல்மான்கான் மும்பையில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கி விவசாய வேலைகளை செய்கிறார். ஏற்கனவே திரைத்துறையில் ஊரடங்கினால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். சினிமா தினக்கூலி தொழிலாளர்கள் 23 ஆயிரம் பேரின் வங்கி கணக்கிலும் பணம் செலுத்தினார்.
தற்போது பண்ணை வீட்டில் சல்மான்கான் தோட்ட வேலைகள் மற்றும் விவசாயம் செய்ய தொடங்கி உள்ளார். வயல்வெளிகளில் இறங்கி வேலை பார்க்கும் புகைப்படத்தை வலைதளத்தில் வெளியிட்டார். உடல் முழுவதும் சேறான நிலையில் தரையில் சல்மான்கான் உட்கார்ந்திருக்கும் இன்னொரு படமும் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தின் கீழே அனைத்து விவசாயிகளையும் மதிப்பதாக பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

உடலில் செயற்கையாக சேற்றை பூசி சல்மான்கான் நடிக்கிறார் என்று விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. உடலில் சேற்றை பூசிக் கொண்டு எதற்காக விவசாயி போல வேஷம் போடுகிறீர்கள். எந்த விவசாயியாவது போட்டோஷுட் நடத்தி உள்ளாரா? அந்த சேற்றை கூட உங்களால் சரியாக தடவிக் கொள்ள முடியவில்லையே என்று கிண்டலடிக்கின்றனர். எந்த விவசாயியும் முகத்தில் சேறு பூசிக்கொள்ள மாட்டார். நீங்கள் நல்ல நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள். சுஷாந்தின் ஆன்மா உங்களை சும்மா விடாது என்றும் கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான சாய் பல்லவி, டான்ஸ் மாஸ்டராக உள்ளாராம்.
பரத நாட்டியம், மேற்கத்திய நடனங்கள் கற்றுள்ள சாய் பல்லவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமாகி பிரேமம் மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் அவரது நடன காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. படமும் வெற்றி பெற்றது. இதையடுத்து தியா படம் மூலம் தமிழுக்கு வந்தார்.
தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்தில் நடித்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடலில் சாய் பல்லவி ஆடிய நடனம் உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்றது. யூடியூப்பில் அதிகமானோர் பார்த்து சாதனையும் நிகழ்த்தியது. தொடர்ந்து சூர்யா ஜோடியாக என்.ஜி.கே. படத்தில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சேகர் கம்முலா இயக்கும் லவ் ஸ்டோரி தெலுங்கு படத்தில் சாய் பல்லவி நடன இயக்குனராக பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக நாக சைதன்யா நடிக்கிறார். படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு நடனம் அமைக்கும்படி சாய்பல்லவியிடம் இயக்குனர் கேட்டு இருப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் மகனும் இயக்குனருமான ஹோமோ ஜோ என்பவர் காலமானார்.
இயக்குனர் ஹோமோ ஜோ எனும் பாவலர் மைந்தன் அவர்கள் உடல்நிலை காரணமாக சற்றுமுன் காலமானார். இவர் இசைஞானி இளையராஜா அவர்களின் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களின் இளைய மகன்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் அவர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். கிழக்கு வாசல், சிங்காரவேலன், சின்ன கவுண்டர், உட்பட பல படங்களுக்கு இணை இயக்குனராகவும், கற்க கசடற படத்திற்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய இவர், தற்போது நாலு பேரும் ரொம்ப நல்லவங்க என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காடுவெட்டி குரு வாழ்க்கை கதையில் நடிக்க பிரபல நடிகர் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
அரசியல் தலைவர்கள் வாழ்க்கை கதைகள் சினிமா படமாக வெளிவந்து வரவேற்பை பெற்றுள்ளன. இந்த வரிசையில் மறைந்த வன்னியர் சங்க தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குரு வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகிறது.

படத்துக்கு ‘மாவீரன் ஜெ குரு” என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை தமிழ்த்தாய் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது. இதில் குரு கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிக்க இருக்கிறார்.

இத்திரைப்படத்தை சோலை ஆறுமுகம் என்பவர் இயக்க, சாதிக் இசையமைக்கிறார். கொரோனா பிரச்னை முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் நடிகர் அர்ஜுனின் சகோதரரும் கன்னட நடிகருமான துருவா சார்ஜாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகர் அர்ஜுனின் உறவினரும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. அந்த சோகத்தில் இருந்து ரசிகர்கள் மீளாத நிலையில், மற்றொரு அதிர்ச்சி செய்து கிடைத்துள்ளது.
சிரஞ்சீவி சார்ஜா மற்றும் அர்ஜுனின் சகோதரரும் நடிகருமான துருவா சார்ஜாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதித்துள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
My wife and I have both been tested positive for COVID-19 with mild symptoms and hence chosen to get ourselves hospitalised. I’m sure we’ll be back all fine! All those who were in close proximity with us please get yourselves tested and remain safe.
— Dhruva Sarja (@DhruvaSarja) July 15, 2020
ಜೈ ಆಂಜನೇಯ 💪🏼
அதில், ''எனக்கும் என் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறிய அறிகுறிகள் உள்ளது. விரைவில் நாங்கள் மீண்டு வருவோம். எங்கள் உடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தீர்களோ, அவர்களெல்லாம் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளத்தில் அளித்த பதிலுக்கு ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். இப்படத்தை தொடர்ந்து தற்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆர்வமாக செயல்பட்டு வருவார். தற்போது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர் ஒருவர் “உங்களுடைய எக்ஸ் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்த வேண்டுமா? எழுதி அனுப்புங்கள். எங்களது பக்கத்தில் பதிவிடுகிறோம்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். தன்னை குறிப்பிட்டு கமெண்ட் பதிவிட்ட அந்த இன்ஸ்டா பக்கத்துக்கு பதிலளித்த மாளவிகா மோகனன், கண்டிப்பாக எனது எக்ஸை (Ex) பற்றி முடிந்த வரையில் இன்று இரவுக்குள் எழுதி அனுப்பி விடுகிறேன்” என்று பதிலளித்திருக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எக்ஸ் இருக்கிறாரா என்றும், அவர் மீது அப்படி என்ன கோபம் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரபல நடிகர் தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்புக்கு வாட்ச்மேனாக மாறி இருக்கிறார்.
கன்னட திரைப்பட நடிகர் ஸ்ரீநாத் வசிஷ்டா. இவர் ஏராளமான கன்னட படங்களில் கதாநாயகன் மற்றும் கதாநாயகிகளின் தந்தையாக நடித்து பிரபலமானவர். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளிகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் அவர்கள் 2 பேரும் விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தற்போது காவலாளிகள் யாரும் இல்லை. புதிதாக யாரும் வேலைக்கு வரவில்லை. இதனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கமிட்டி உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து அங்கு வசித்து வருபவர்களின் ஒவ்வொருவரின் வீட்டில் இருந்தும் ஒருவர் முன்வந்து 8 மணி நேரம் என்ற அடிப்படையில் காவல் பணியில் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்தனர்.

அதன்படி நடிகர் ஸ்ரீநாத் வசிஷ்டா முழு உடல் பாதுகாப்பு கவச உடையை அணிந்து கொண்டு, அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து காவல் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் தான் காவல் பணியில் ஈடுபடுவதை தன்னுடைய செல்போனில் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். தற்போது அது வைரலாகி வருகிறது. அதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.






