என் மலர்
சினிமா செய்திகள்
இந்தி பட உலகம் குறித்தும் மும்பை குறித்தும் அவதூறான கருத்தை வெளியிட்டு வரும் கங்கனாவுக்கு கமல் பட நடிகை பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தி பட உலகில் போதை பொருள் புழக்கம் அதிகம் உள்ளதாக நடிகை கங்கனா ரணாவத் குற்றம் சாட்டி உள்ளார். அவர் கூறும்போது, “சினிமா பிரபலங்கள் வீடுகளில் நடக்கும் விருந்துகளில் கொக்கைன் போதை பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது விலை அதிகம் என்பதால் இலவசமாகவே வழங்குகிறார்கள்.
தண்ணீரில் கலந்து விருந்தில் பங்கேற்பவர்களுக்கு தெரியாமலேயே கொடுத்தும் விடுவார்கள். போதை பொருள் தடுப்பு போலீசார் இந்தி பட உலகில் புகுந்தால் பெரிய நடிகர்கள் ஜெயிலுக்கு போவார்கள். அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்தால் அதிர்ச்சியான உண்மைகள் வெளிவரும்” என்றார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கங்கனா ரணாவத் குற்றச்சாட்டை தமிழில் இந்தியன் படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகை ஊர்மிளா கண்டித்துள்ளார். அவர் கூறும்போது, “கங்கனா ரணாவத் இந்தி பட உலகம் குறித்தும் மும்பை குறித்தும் அவதூறான கருத்தை வெளியிட்டுள்ளார். மும்பை மக்களை அவமரியாதை செய்துள்ளார். மும்பை மகளான என்னால் இதனை பொறுக்க முடியாது.
நாடு முழுவதுமே போதை பொருள் அச்சுறுத்தல் உள்ளது. கங்கனா ரணாவத் போதை மருந்துக்கு எதிரான போராட்டத்தை அவரது சொந்த மாநிலமான இமாசலபிரதேசத்தில் இருந்து தொடங்க வேண்டும். அங்குதான் போதை பொருள் உற்பத்தி ஆகிறது. கத்தி பேசுவதால் நீங்கள் சொல்வது உண்மையாகி விடாது” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை நமீதா பொதுமக்களுக்கு இலவசமாக மீன் வழங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்தநாள் விழா, தமிழக பா.ஜ.க. மீனவர் அணி சார்பில் சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகையும், பா.ஜ.க. செயற்குழு உறுப்பினருமான நமீதா கலந்து கொண்டார். பின்னர் அந்த பகுதி பொதுமக்களுக்கு இலவசமாக மீன்கள் வழங்கினார்.
சூரை, சங்கரா, சீலா, அயிலா வகை மீன்கள் சுமார் 370 கிலோ அளவில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இலவச மீன்கள் பெற வந்தவர்கள் நடிகை நமீதாவுடன் ஆர்வமாக ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர். நமீதாவும் பெரிய, பெரிய மீன்களை கையில் ஏந்தி உற்சாகமாக ‘போஸ்’ கொடுத்தார்.
முன்னதாக நமீதா நிருபர்களிடம் கூறுகையில், “பிரதமர் மோடி பிறந்தநாள் எனும் பொது நிகழ்ச்சியில் முதன்முதலில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் எனது கட்சி பா.ஜ.க. மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியிருக்கிறது. இந்த பெருமை எனக்கு உண்டு. பிறந்தநாள் வாழ்த்துகள் மோடிஜி”, என்றார். நடிகை நமீதாவை காண ஏராளமானோர் திரண்டதால் ஐஸ்ஹவுஸ் பகுதி நேற்று பரபரப்பாக காணப்பட்டது.
விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தை இயக்கிய இயக்குனர் பாபு சிவன் காலமானார்.
விஜய் நடிப்பில் வெளியான படம் வேட்டைக்காரன். இப்படத்தை பாபு சிவன் இயக்கி இருந்தார். மேலும் விஜய் நடித்த குருவி திரைப்படத்திற்கும் பாபு சிவன் வசனம் எழுதி இருந்தார்.

திடீர் உடல் நலக்குறைவால் பாதிப்புக்குள்ளான பாபு சிவன், சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக, அவர் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. அவரது மரணம் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திரை உலகை சேர்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கு சூர்யா நன்றி தெரிவித்து உள்ளார்.
நீட் தேர்வை க்ளியர் செய்யும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதில் 7.5 சதவீத “கிடைமட்ட இடஒதுக்கீடு” வழங்கும் மசோதாவை, தமிழக சட்டமன்றம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றியது.

இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருக்கிறார். அவரது பதிவில்,

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாணவர்களுக்கு துணை நிற்போம்... ஒன்றிணைந்து செயல்படுவோம்... இவ்வாறு அவர் பதிவு செய்து இருக்கிறார்.
தமிழ்சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் இருக்கும் ராகவா லாரன்ஸ் தன்னுடைய அடுத்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கிறார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சில படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீசாகின்றன.

தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகி வந்த ’லட்சுமி பாம்’ என்ற திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இந்த படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் நவம்பர் 9ஆம் தேதி தீபாவளி விருந்தாக இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்ஷய்குமார், கைரா அத்வானி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தமிழில் வெளியான ’காஞ்சனா’ திரை படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷாலின் புதிய திரைப்படம் ஒன்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சக்ரா’. எம்.எஸ்.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷால் இப்படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், சக்ரா திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மாநகரம் படத்தில் அறிமுகமாகி பின்னர் கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இன்னும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கே முடியாததால் தற்போதைக்கு இந்த கூட்டணி இணைய வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது.

இதனால் கமலை வைத்து அடுத்த படத்தை இயக்கும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் இறங்கி உள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பை இன்று மாலை லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இருக்கிறார்.
கமலின் 232 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு எவனென்று நினைத்தாய் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இதன் போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இலவச விளம்பரம் ஆரம்பிச்சிட்டிங்க போல என்று சூர்யா படம் குறித்து விஜய் பட இயக்குனர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் சூரரைப்போற்று திரைப்படம் அக்டோபர் 30 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’மண்ணுருண்ட மேல’ என்ற பாடலில் ஜாதியைக் குறிப்பிடும் ஒரு வார்த்தை இருப்பதாகவும், இது அமைதியை குலைக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவான இந்தப் பாடலை ஏகாதசி என்பவர் எழுதியிருந்தார். இந்த புகாரை விசாரித்த நீதிமன்றம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கின் செய்தி குறித்து இயக்குநர் ஜான் மகேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’இலவச விளம்பரம் ஆரம்பிச்சிட்டிங்க போல... குட் பாய்ஸ்’ என்று பதிவு செய்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த ’சச்சின்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஐங்கரன்' படத்தின் முன்னோட்டம்.
காமன்மேன் நிறுவனம் சார்பில் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐங்கரன்’. ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், ரவி வெங்கட்ராமன், ஹரீஷ் பேரடி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.
சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஏ.எம்.ராஜா முகமது படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். கலை இயக்குனராக ஜி.துரைராஜ் பணியாற்றி உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் பாடல்களை ஏகதாசி, மதன் கார்க்கி, ரோகேஷ், சிவசங்கர், விவேக் ஆகியோர் எழுதி உள்ளனர். நடன இயக்குனராக ராஜு சுந்தரம், ஷோபி பணியாற்றி உள்ளனர்.
சொந்த வீட்டிலேயே கணவனுக்கு கொள்ளையடிக்க திட்டம் போட்டுக் கொடுத்த நடிகை ஒருவர் தற்போது தலைமறைவாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து, வாய்ப்பு கிடைக்காததால் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சீரியல் நடிகைகளுக்கும் இவர் கார் ஓட்டி வந்துள்ளார். அந்த வகையில்தான் தெய்வமகள் சீரியல் நடிகை சுசித்ராவுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. காதலித்து வந்த இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு ஒன்றாக சென்னையில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் செலவுக்கு பணமின்றி இருவரும் தவித்துள்ளனர். அப்போது தனது சொந்த ஊருக்கு மனைவி சுசித்ராவை, மணிகண்டன் அழைத்துச் சென்று பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்.
மணிகண்டன் அங்கு சில நாட்கள் மனைவியுடன் தங்கி இருந்துள்ளார். அப்போது அங்கு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை பார்த்ததும் கணவனிடம் அந்த பணத்தை கொள்ளையடித்து சென்னைக்கு சென்றுவிடலாம் என நடிகை சுசித்ரா ஐடியா கொடுத்துள்ளார். அந்த பணத்தை வைத்து குறும்படம் எடுத்து யூடியூப்பில் சம்பாதிக்க திட்டம் போட்டுள்ளார்.

இதையடுத்து சுசித்ராவை மட்டும் சென்னைக்கு அனுப்பி வைத்த மணிகண்டன், சில நாட்களுக்கு பின் மனைவி சொன்னபடி பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துள்ளார். வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் காணாமல் போனதை அறிந்த மணிகண்டனின் பெற்றோர், போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
விசாரணை நடத்தியதில் மணிகண்டன் தான் குற்றவாளி என்பதை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளையும் பறிமுதல் செய்தனர். கணவன் மாட்டிக் கொண்டதை அறிந்த நடிகை சுசித்ரா தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் அவரை போலீசார் வலைவீசி தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் அஜித் பட ஹீரோயின் ஒருவர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது.
தமிழில் 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. சமீபத்தில் இதன் புரமோ வெளியாகி பிக்பாஸ் 4 சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

இதில் பங்கு பெறும் போட்டியாளர்கள் யார் யார் என்பது இன்னும் அறிவிக்கப்பட வில்லை. இருப்பினும் அவ்வப்போது சில நடிகைகளின் பெயர்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில், தற்போது பிரபல நடிகை வசுந்தரா தாஸ் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இவர் அஜித்துக்கு ஜோடியாக சிட்டிசன், கமலுக்கு ஜோடியாக ஹே ராம் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை மீனா 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில் கடந்த 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கிய இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம் ரூ.75 கோடி வசூல் குவித்தது.
இதன் வெற்றி இந்தியா முழுவதும் அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடித்தனர். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

தற்போது 7 வருடங்களுக்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்க உள்ளார். இந்த படத்திலும் மோகன்லாலே ஹீரோவாக நடிக்கிறார். மீனா நடிப்பாரா? இல்லையா? என்பது கேள்விக்குரியாக இருந்தது.
இந்நிலையில், திரிஷ்யம் இரண்டாம் பாகத்தில் மீனா நடிப்பதை நடிகர் மோகன்லால் உறுதிப்படுத்தி உள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை மீனாவிற்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள மோகன்லால், திரிஷ்யம் 2 படத்தின் செட்டிற்கு உங்களை வரவேற்கிறேன் என குறிப்பிட்டு உள்ளார். திரிஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.






