என் மலர்
சினிமா செய்திகள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மாநகரம் படத்தில் அறிமுகமாகி பின்னர் கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இன்னும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கே முடியாததால் தற்போதைக்கு இந்த கூட்டணி இணைய வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

இதனால் கமலை வைத்து அடுத்த படத்தை இயக்கும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் இறங்கி உள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பை இன்று மாலை லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்.
இந்நிலையில், கமல் - லோகேஷ் இணையும் படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது. அதன்படி இந்த படத்திற்கு ‘எவனென்று நினைத்தாய்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ பட பாடலுக்கு எதிரான புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் வெளியானது. இதில் ஒரு பாடலில், சாதி பிரச்சினையை தூண்டும் விதமான வரிகள் வருவதாக கூறி, சென்னை ஐகோர்ட்டில், தர்மபுரி மாவட்டம், அஞ்சேஹல்லி கிராமத்தை சேர்ந்த ஏ.கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், சூரரைப்போற்று படத்தில் வரும் “மண் உருண்ட மேல... மனுச பையன் ஆட்டம் பாரு” என்று தொடங்கும் பாடலில், “கீழ்சாதி உடம்புக்குள்ளே ஒடுறது சாக்கடையா? அந்த மேல் சாதிகாரனுக்கு இரண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா” என்ற வரிகள் வருகிறது. அனைத்து சாதியினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில், இதுபோன்ற பாடல் வரிகள் தவறான எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தும்.

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இந்த பிரச்சினையை பெரிதாக்கலாம். அதனால் 2022-ம் ஆண்டு வரை சூரரைப்போற்று படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், “இதுகுறித்து கடந்த மார்ச் 20-ந்தேதி தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தபால் மூலம் புகார் அனுப்பியும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஜெய்சிங், ‘புகார் கொடுத்து 5 மாதங்கள் கடந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் எஸ்.கார்த்திகேயன், ‘தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் வந்து சேரவில்லை’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, “மனுதாரர் மீண்டும் புகார் மனுவை போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுக்க வேண்டும். அவர் அந்த புகாரை சட்டப்படி பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது ஐம்பதாவது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடி இருக்கிறார்.
90-களில் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். இவர் 1999-ம் ஆண்டு வெளியான ‘படையப்பா’ படத்தில் ரஜினிக்கு வில்லியாக நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டினார்.

2003-ம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியை திருமணம் செய்து கொண்டார் ரம்யா கிருஷ்ணன். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. 50-வயதைத் தொட்டிருக்கும் ரம்யா கிருஷ்ணன் அதை மறைக்காமல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டு தான் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

ரம்யா கிருஷ்ணனுக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கோவா சென்றதற்கான காரணம் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

தற்போது குடும்பத்தினருடன் கோவா சென்றுள்ளார்கள். அங்கு நயன்தாராவை விக்னேஷ் சிவன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது. இந்நிலையில் நயன்தாரா தாயின் பிறந்தநாளை கோவாவில் கொண்டாடி இருக்கிறார்கள்.

நயன்தாராவின் தாய் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக தான் கோவா சென்று இருக்கிறார்கள். நயன்தாராவின் தாய்க்கு கோவா மிகவும் பிடித்த இடம் என்பதற்காக அங்கு சென்று பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்கள்.
விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தை இயக்குபவர் யார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
விக்ரம் மகன் துருவ் விக்ரம், கடந்த ஆண்டு வெளியான ஆதித்யவர்மா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அடுத்ததாக தந்தை விக்ரமுடன் துருவ் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் துருவ்விக்ரம் நடிக்கவிருக்கும் மூன்றாவது திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. துருவ் விக்ரம் மூன்றாவது படத்தை ’பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது மாரி செல்வராஜ் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு துருவ்விக்ரம் படத்தை இயக்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தன்னுடைய படத்தை வெளியிட இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'க/பெ. ரணசிங்கம்'. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் 'பூ' ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம் பணிபுரிந்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இருக்கிறார்கள்.
ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 இந்திய மொழிகளிலும் இப்படம் ஒரே சமயத்தில் வெளியாக இருக்கிறது.
மாஸ்டர் படத்தை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ் தான் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பை நாளை வெளியிட இருக்கிறார்.
மாநகரம், கைதி படத்தை அடுத்து விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தை அடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும், ரஜினிகாந்த் நடிக்கும் கடைசிப் படமாக இது இருக்கும் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. மேலும் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தான் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை நாளை அதிகாரப்பூர்வமாக லோகேஷ் கனகராஜ் அறிவிக்க இருக்கிறார். இது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற திரைப்படம் ட்ரோண்டோ உலகத் தமிழ் திரைப்பட விழாவில் 3 விருதுகளை வென்றுள்ளது.
பார்த்திபன் இயக்கி நடித்த படம் “ஒத்த செருப்பு சைஸ் 7”. ஆஸ்கர் அகாடமி விருது குழுவின் விமர்சகர்கள் முதல், தியேட்டரில் படம் பார்த்த அடிமட்ட ரசிகர்கர்கள் வரை அனைவரும் பாராட்டிய இப்படம், தமிழ் சினிமாவில் ஒரு பெரும் புரட்சியை, புதிய அலையை ஏற்படுத்தியது.

தற்போது இந்த படம் 2020 ட்ரோண்டோ உலகத்தமிழ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றுள்ளது. ஜீரி விருதான சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த தனி சோலோ நடிப்பு என மூன்று விருதுகளை இப்படம் பெற்றுள்ளது.

நடிகர், இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இது குறித்து கூறியதாவது...
மனதை தாலாட்டும் மற்றுமொரு பாராட்டு. “ஒத்த செருப்பு சைஸ் 7 “ 2020 ட்ரோண்டோ உலகத்தமிழ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றுள்ளது எனக்கு கிடைத்த பெருமை. இந்த படம் கடந்த வருடம் பல இன்னல்களுக்கு நடுவே, நான் போட்ட விதை. அது இந்த வருடம் பூர்வ ஜென்ம புண்ணியம் போல் பாராட்டுக்களை கொண்டு வந்து சேர்த்துகொண்டே இருக்கிறது. இவ்வருடம் எனது அடுத்த மாபெரும் முயற்சியாக “இரவின் நிழல்” திரைப்படத்தை தொடங்கியுள்ளேன் இதற்கான பெருமையும், பாராட்டுக்களும் அடுத்த வருடம் கிடைக்குமென ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என்றார்.
வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயில் படத்தின் முன்னோட்டம்.
ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கணேஷ் சந்திரா கையாண்டுள்ளார்.
படப்பிடிப்பின் போது நேர்ந்த விபத்தில் சிக்கி நீரில் சிக்கிய ஜாக்கி சான் நீண்ட போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டார்.
ஜாக்கி சான் நடிக்கும் வேன்கார்டு என்ற ஆங்கில படத்தின் படப்பிடிப்பு சீனாவில் நடைபெற்று வருகிறது. அப்போது காட்டாற்று வெள்ளத்தில் ஜாக்கி சான் மற்றும் நடிகை மியா முகி இருவரும் நீர் ஸ்கூட்டரில் பயணிப்பது போன்ற சாகசக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக நீர் ஸ்கூட்டர் பாறையில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விட்டதால் ஜாக்கி சானும் மியாவும் வெள்ளத்தில் மூழ்கினர்.
அவர்களை காப்பாற்ற பாதுகாவலர்கள் உடனடியாக தண்ணீரில் குதித்தனர். மியா சிறிது நேரத்தில் மேலே தோன்றினார். ஆனால் சுமார் 45 விநாடிகள், ஜாக்கி சான் எங்கும் காணப்படவில்லை. பெரும் போராட்டத்திற்கு பிறகு அவரை பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டுவந்து சேர்த்தனர். இந்த பரபரப்பான காட்சிகள் அனைத்தும் தற்செயலாக ஓடிக் கொண்டு இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது.

விபத்தினை அடுத்து படப்பிடிப்பினை தள்ளி வைக்க தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்ட போதிலும், சிறிதுநேர ஓய்வுக்கு பின் மீண்டும் அதே காட்சியில் நடித்து அசத்தினார் ஜாக்கி சான். நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாக இருக்கும் ஜாக்கியின் வேன்கார்டு திரைப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே விபத்து குறித்து பேசிய ஜாக்கி சான், ‘அது சாதாரணமான ஒரு காட்சி தான். ஆனால் கிட்டத்தட்ட நீரில் முழுவதுமாக மூழ்கி விட்டேன். ஸ்கூட்டர் கவிழ்ந்ததால் நீருக்கு அடியில் சிக்கிக் கொண்டேன். என்ன நடந்தது என்று கூட நினைவில்லை. ஏதோ ஒரு சக்தி என்னைக் காப்பாற்றியதாக உணர்ந்தேன். முழு மூச்சில் ஸ்கூட்டரைத் தள்ளியதால் என்னால் வெளிவர முடிந்தது’. என கூறினார்.
நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சூர்யா தனது அறிக்கையில், உயிருக்குப் பயந்து வீடியோ கான்பரன்சில் செயல்படும் நீதிமன்றம் மாணவர்களை மட்டும் நேரில் தேர்வு எழுதச் சொல்கிறது என்று தெரிவித்திருந்தார். இந்தக்கருத்தை நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், சூர்யாவிற்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பானுமதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கொரோனா காலகட்டத்தில் நீதிமன்றங்கள் இயங்காமல் இருந்தது. பல வழிகளில் கோர்ட்டு நடைமுறைகள் நடத்தப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. இதனால் பொது மக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் கோர்ட்டுகள் மூடப்பட்டுதான் இருக்கின்றன.

மத்திய- மாநில அரசு அலுவலகங்கள் இயங்கினாலும் நீதிமன்றங்களை பொறுத்தவரை இதே நிலை தான் நீடிக்கிறது. எனவே சூர்யா கூறிய கருத்துகள் மக்கள் பலரிடமும் இருக்கிறது. நீதிமன்ற நடவடிக்கைகள், தீர்ப்புகள் குறித்து கருத்துச் சொல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது.
கருத்துச் சுதந்திரத்திற்கு உட்பட்டு, நேர்மையான, வெளிப்படையான, யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத விமர்சனமாக சூர்யாவின் கருத்துகளை எடுத்துக் கொள்ளாமல் நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக் கொண்டது தவறு. நடிகர் சூர்யா மீதும் இது போன்ற கருத்துகளைத் தெரிவிக்கும் நபர்கள் மீதும் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு முற்போக்கு பெண் வழக்கறிஞர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதேபோல, சூர்யாவின் கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர். பிரசாத், சுதா ராமலிங்கம் உள்பட 25-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆன்லைனில் ஆப்பிள் வாட்ச் ஆர்டர் செய்தேன், கல்லை கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள் என பிரபல இசையமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள் ஒரு சிலரே, அந்த வரிசையில் சாம்.சி.எஸ் மிகவும் முக்கியமானவர். இவர் ‘புரியாத புதிர்’, ‘விக்ரம் வேதா’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கைதி’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ போன்ற பல்வேறு சூப்பர் ஹிட் படங்களுக்கு தனது இசையால் வலுசேர்த்துள்ளார்.
இந்நிலையில், ஆன்லைனில் பொருள் வாங்கி தான் ஏமாந்தது குறித்த அதிர்ச்சி தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் சாம்.சி.எஸ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: "என்னுடைய சகோதரனுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுக்க ஆப்பிள் வாட்ச் ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தேன். அது வந்த போது அதை திறந்து பார்த்து அதிர்ச்சியானோம். அதில் கற்களை மிக அழகாக பேக் செய்து அனுப்பி இருந்தார்கள். அது பற்றி சம்பந்தப்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திடம் புகார் அளித்த போது அவர்கள் எங்களது புகாரை நிராகரித்து, பணத்தை திருப்பித் தர முடியாது என கூறி விட்டனர். இதனால் தயவு செய்து அந்த நிறுவனத்திலிருந்து வாங்காதீர்கள். அவர்கள் ஏமாற்றுக்காரர்கள்" என சாம்.சி.எஸ் கடுமையாக சாடியுள்ளார்.
I had sent an Apple Watch as a gift to my brother through @Flipkart And we were shocked when he received beautifully packed stones instead of the watch. When we raised the complain Flipkart, rejected our refund. Pls never buy from #Flipkart again. They’re cheats.#flipkartfraudpic.twitter.com/oGt2E6olph
— 𝐒𝐀𝐌 𝐂 𝐒 (@SamCSmusic) September 14, 2020






