என் மலர்
சினிமா செய்திகள்
நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு சமீபத்தில் அளித்த பேட்டியில், அந்த அனுபவமே தனிதான் என்று கூறியிருக்கிறார்.
ஊரடங்கு காரணமாக ஆறு மாதங்களுக்கு மேலாக மூடியிருந்த தியேட்டர்களை திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வரும் 15ம் தேதி தியேட்டர்கள் திறக்க இருக்கும் நிலையில் தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் பற்றி குஷ்பு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, ’தியேட்டரில் நான் பார்த்த முதல் படம் தரம்வீர். அந்த படத்தை மும்பை அந்தேரியில் இருந்த நவ்ரங் சினிமா தியேட்டரில் பார்த்தேன்.
தரம்வீர் படம் 1877 ஆம் ஆண்டு வெளியானது. தர்மேந்திரா, ஜிதேந்திரா, ஜீனத் அமன் மற்றும் நீத்து சிங் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். அப்போது எனக்கு வயது ஏழு. அந்த படத்தை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்த நினைவு இன்னும் இருக்கிறது. அது நாட்டுப்புற வாழ்க்கை சார்ந்த ஒரு படமாக இருக்கும். நடிகர்கள் எல்லாம் ரோமன் போன உடைகள் அணிந்து இருப்பார்கள். பெரிய பட்ஜெட் படமும் கூட.

பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட அந்த படத்தை பெரிய திரையில் பார்த்த அனுபவம் அசாதாரணமானது. என்னை அம்மாதான் அழைத்துச் சென்றார். அதுதான் நான் தியேட்டரில் முதல் பார்த்த படம். மும்பையில் உள்ள மராத்தி மந்திரில் ஷோலே படத்தையும் பார்த்து ரசித்திருக்கிறேன். சென்னைக்கு வந்ததும் அண்ணாசாலை ஆனந்த தியேட்டரில் படம் பார்த்திருக்கிறேன். ஆனால் என்ன படம் என்று ஞாபகமில்லை. இங்கு படம் பார்த்த முதல் தியேட்டர் அதுதான். அடுத்து அண்ணாமலை, பிரம்மா படங்களை முதல்நாள் முதல் காட்சியில் பார்த்தேன், சின்னத்தம்பி படத்திற்கு பிறகுதான் இந்த அனுபவத்தைப் பெற்றேன், தற்போது தியேட்டருக்கு போகும் வாய்ப்பே கிடைப்பதில்லை, மக்கள் ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்க தொடங்கி விட்டார்கள். ஆனால் தியேட்டருக்கு சென்று பெரிய திரையில் படம் பார்க்கும் அனுபவமே தனிதான்’. இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா திருமணத்திற்காக அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். அவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்துவருகிறார். அது தவிர ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார்.

நயன்தாரா டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலிப்பதும் இருவரும் திருமணத்தை தள்ளிப்போட்டுவிட்டு ஒன்றாக வசிக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். இந்நிலையில் திருமணத்தை பொறுத்தவரை நயன்தாரா புது முடிவு எடுத்துள்ளார்.

தேசிய விருது பெற்ற பின்னர் தான் திருமணம் என முடிவு எடுத்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். நயன்தாராவுக்கு முன்பே அறம் படத்துக்காக தேசிய விருது கிடைக்க வேண்டியது. பல்வேறு பாராட்டுகளும் விருதுகளும் குவிந்தாலும் அவருக்கு இன்னும் தேசிய விருது மட்டும் கிடைக்கவில்லை.
அறிமுக இயக்குனர் சாய் கார்த்திக் இயக்கத்தில் நட்ராஜ், வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகி வரும் ‘இன்ஃபினிட்டி’ படத்தின் முன்னோட்டம்.
மென்பனி புரோடக்ஷன்ஸ் சார்பாக மணிகண்டனும், ழகரலயா ஃபிலிம் புரோடக்ஷன்ஸ் சார்பாக பிரியதர்ஷினியும் இணைந்து தயாரிக்கும் படம் ‘இன்ஃபினிட்டி’. நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். வித்தியாசமான கதை களம் கொண்ட இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக உருவாகி வருகிறது. அறிமுக இயக்குனர் சாய் கார்த்திக் எழுதி இயக்குகிறார்.

மேலும் வித்யா பிரதீப், ராமதாஸ் (முனிஸ்காந்த்), மெட்ராஸ் சார்லஸ் வினோத், முருகானந்தம், ராட்சசன் வினோத் சாகர், மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். டாம் ஜோ இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு கே ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை எஸ்.என். ஃபாசில் கவனிக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டராக சில்வா பணியாற்றி உள்ளார்.
பாலா இயக்கி கைவிடப்பட்ட ‘வர்மா’ படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ படம், ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் படமானது. அதில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க, பாலா இயக்கி இருந்தார். படம் முடிவடைந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் ‘வர்மா’ படத்தை கைவிடுவதாக அறிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
‘வர்மா’ படம் எதிர்பார்த்த அளவுக்கு விறுவிறுப்பாக இல்லை என்றும், ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் இருந்த உயிரோட்டம், ‘வர்மா’ படத்தில் இல்லை என்றும் கூறியதுடன், ‘வர்மா’ படத்தை வேறு ஒரு இயக்குனரை வைத்து திரும்ப எடுக்கப் போவதாகவும் கூறியிருந்தார். சொன்னபடியே ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தை எடுத்து வெளியிட்டனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். சிம்ப்லி சவுத் என்கிற ஓடிடி தளத்தில் வர்மா படம் வருகிற அக்டோபர் 6-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்த அறிவிப்பு இயக்குனர் பாலா மற்றும் நடிகர் துருவ் விக்ரமின் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவுக்கு, பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ் சவால் விட்டுள்ளார்.
சமூக வலைதளங்களின் வாயிலாக புதிய புதிய சேலஞ்ச்கள் அவ்வப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரம் நடுவதை சவாலாக விடுத்து வருகின்றனர். தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார் உலக சுற்றுச் சூழல் தினத்தனறு மரம் நடும் ‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ என்ற ஒன்றை தொடங்கி வைத்தார்.
இந்த சேலஞ்சை விஜய், மகேஷ் பாபு, பிரபாஸ், நாகர்ஜுனா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் செய்து அசத்தினர். சமீபத்தில் இந்த சேலஞ்சை செய்து முடித்த பிரகாஷ் ராஜ், நடிகர்கள் சூர்யா, மோகன் லால், ரக்ஷித் ஷெட்டி மற்றும் நடிகைகள் திரிஷா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரை கிரீன் இந்தியா சேலஞ்சுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரகாஷ் ராஜின் இந்த சவாலை சூர்யா ஏற்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Thank you @MPsantoshtrs for this initiative. i have accepted #GreenindiaChallenge
— Prakash Raj (@prakashraaj) October 1, 2020
from @TanikellaBharni Planted 3 saplings.Further I am nominating @Mohanlal@Suriya_offl@rakshitshetty@meramyakrishnan@trishtrashers and everyone of you too ..pls🙏🏻continue the chain #JustAskingpic.twitter.com/HrCNAvEGve
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ், கமலை தொடர்ந்து பிரபல நடிகரின் படத்தை இயக்க உள்ளாராம்.
மாநகரம் படத்தில் அறிமுகமாகி பின்னர் கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களை இயக்க லோகேஷ் கனகராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒரு படத்தில் கமலே நாயகனாக நடிக்கிறார். அதன் அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது.

இப்படத்தை தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் மற்றொரு படத்தில் சிம்பு நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் தொடர்பாக கடந்த வாரம் சிம்புவுடன் கமல் பேச்சுவார்த்தை நடத்தினாராம். சிம்புவும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறினாராம். தற்போது கேரளாவில் இருக்கும் சிம்பு தமிழ்நாடு திரும்பியதும் லோகேஷிடம் கதை கேட்க உள்ளாராம்.
சிம்பு அடுத்ததாக சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கலில் நடக்க உள்ளது. ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
முன்னணி இயக்குனர்களான கவுதம் மேனன் - வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள அந்தாலஜி படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையுலகில் தற்போது அந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி படம் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இயக்குனர்கள் வெற்றிமாறன், சுதா கொங்கரா, கவுதம் மேனன், விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து ஒரு அந்தாலஜி படத்தை உருவாக்கி உள்ளனர்.
இந்நிலையில், அந்த படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘பாவ கதைகள்’ என பெயரிடப்பட்டு உள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் மேலும் இரண்டு அந்தாலஜி படங்கள் தயாராகி வருகின்றன. ‘புத்தம் புது காலை’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ், கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் சுகாசினி மணிரத்தினம் ஆகியோர் இயக்கி உள்ளனர். இதனை அமேசான் பிரைம் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட்டி லவ் ஸ்டோரி’ என்ற அந்தாலஜி படத்தை கவுதம் மேனன், வெங்கட்பிரபு, ஏ.எல் விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகைகளின் போன்களில் இருந்து ஆபாச படங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கன்னட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், போதைப்பொருள் விவகாரம் குறித்த தகவல்கள், ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணியின் செல்போன்களில் இருக்குமா என்பதை அறிய, இருவரின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அந்த போனிலிருந்து அழிக்கப்பட்ட தரவுகளை ரிக்கவரி செய்து போலீசார் ஆய்வு செய்ததாகவும் தெரிகிறது.

அப்போது ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், நிர்வாண புகைப்படங்கள் ஆகியவை இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக சஞ்சனாவின் போனில் பாலியல் தொடர்பான ஒரு வாட்ஸ்-அப் குரூப் இருந்ததாகவும், சஞ்சனா கைதான பின்னர் அந்த குழு கலைக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து போதை பொருள் விவகாரம் மட்டுமின்றி பாலியல் விவகாரம் குறித்தும் சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளார்களாம்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற தோனி, அடுத்ததாக சினிமா துறையில் கவனம் செலுத்த உள்ளாராம்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் தோனி ஓய்வுக்குப் பின்னர், அடுத்ததாக சினிமா துறையை தேர்வு செய்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்த தோனி, அந்த நிறுவனத்தின் சார்பில் ஒருசில டாக்குமெண்டரி படங்களை எடுத்துள்ளார்.

அடுத்ததாக வெப் தொடர் ஒன்றை தயாரிக்க அவர் முடிவு செய்துள்ளாராம். இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தோனியின் மனைவியுமான சாக்ஷி கூறியபோது, ‘அறிவியல் சம்பந்தமான நாவல்களின் அடிப்படையில் வெப் தொடர்களை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ள அவர், விரைவில் இந்த வெப் தொடரில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனர் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் தோனி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஒரே நேரத்தில் 5 புதிய வெப்தொடர்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக சாக்ஷி தோனி கூறியுள்ளார்.
மன்மதன் பட தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மன்மதன் பட தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மாரடைப்பால் காலமானார். அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: “நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம். "மன்மதன்" படம் என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்களைக் கொண்டது.
என் மீது மிகுந்த அன்பு கொண்டவர் கிருஷ்ணகாந்த் அவர்கள். "மன்மதன்" படத்தை என் மீது நம்பிக்கை வைத்து இயக்கச் சொன்னவர். நீங்க ஸ்கிரிப்ட் பண்ணுங்க.. இயக்குங்க என உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்ட நல்ல மனிதர். அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கலங்க வைக்கிறது. அவரது இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் மடியில் அந்த நல்ல ஆத்மா அமைதி கொள்ளட்டும்”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பார்த்திபன் இயக்கி நடித்த படம் புதிய பாதை, அதன் இரண்டாம் பாகத்தில் சிம்புவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
பார்த்திபன் இயக்கி நடித்த முதல் படமான புதிய பாதை 1989-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. இதில் நாயகியாக சீதா நடித்து இருந்தார். இந்த படத்துக்கு சிறந்த தமிழ் படம் மற்றும் சிறந்த துணை நடிகை ஆகிய 2 தேசிய விருதுகளும் கிடைத்தன. துணை நடிகைக்கான விருதை மறைந்த நடிகை மனோரமா பெற்றார்.
தமிழக அரசின் சிறந்த படம் மற்றும் சிறந்த கதாசிரியருக்கான விருதையும் புதிய பாதை பெற்றது. புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் பார்த்திபன் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் பரவி வந்தன. இதில் கதாநாயகனாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

இதுகுறித்த கேள்விக்கு பார்த்திபன் தற்போது அளித்துள்ள பதிலில், “புதிய பாதை 2 படத்தில் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் சமீபத்தில் இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளது. விரைவில் அதற்கான பதில் கிடைக்கும். அதுபோல் என்னுடைய ‘உள்ளே வெளியே’ படத்தை ரீமேக் செய்வதாக இருந்தால் அதிலும் கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புதான் பொருத்தமாக இருப்பார்” என்றார். சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். கொரோனாவால் நிறுத்தி வைத்திருந்த இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது.
நடிகை அனுஷ்கா பெரிய நடிகை ஆனாலும், பந்தா இல்லாமல் இருப்பதாக நடிகர் மாதவன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
மாதவன், அனுஷ்கா நடிப்பில் உருவாகி இருக்கும் சைலன்ஸ் திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி நடிகர் மாதவன், பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது: “அனுஷ்காவும், நானும் முதன்முதலாக ‘இரண்டு’ படத்தில் ஜோடியாக நடித்தோம். அந்த படத்தில் அவ்வளவு அழகாக இருப்பார். அப்போது அவர் சினிமாவுக்கு புதுசு. 14 வருடங்கள் கழித்து நாங்கள் இருவரும் ‘சைலன்ஸ்’ படத்தில் இணைந்து நடித்து இருக்கிறோம். அனுஷ்காவிடம் அதே அழகு.
அவருடைய தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. பதினான்கு வருடங்களில் அவர் அற்புதமான நடிகையாகி விட்டார். சினிமா மீது அவருக்கு இருக்கும் அக்கறை, அனுபவம், கதை சரியாக நகர்கிறதா? என்று கேட்டு தெரிந்து கொள்வதை எல்லாம் பார்த்தபோது ரொம்பவே பெருமைப்பட்டேன். ‘பாகுபலி’க்கு பிறகு பெரிய நடிகையாகி விட்டார். என்றாலும் அவரிடம் பந்தா இல்லை.

சினிமா வேறு ஒரு வடிவத்துக்கு மாறியிருக்கிறது. ஓடிடி தளங்கள் புதிய மாற்றமாக வரப்போகிறது என்பது 10 வருடங்களுக்கு முன்பே தெரியும். அதை சுதா கொங்கராவிடம் சொன்னபோது, முதலில் அவர் நம்பவில்லை. இப்போது, “எப்படிடா சொன்னே?” என்று கேட்கிறாள்.
ஓடிடி-யில் நிறைய பேர் பணிபுரிய தொடங்கி விட்டார்கள். மணிரத்னமே ஓடிடிக்கு வந்து விட்டார். எதிர்காலம் எப்படியிருக்கும்? என்ற கேள்வியும், பயமும் எல்லோருக்கும் இருக்கிறது. அனைத்தையும் துணிச்சலுடன் கையாள வேண்டும்.” இவ்வாறு மாதவன் கூறினார்.






