என் மலர்
சினிமா செய்திகள்
விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் க.பெ.ரணசிங்கம் படத்தின் விமர்சனம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் விஜய் சேதுபதி. இவர் ஊரில் நடக்கும் பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகிறார். குறிப்பாக தண்ணீர் பிரச்சனைக்காக மக்களை திரட்டி போராட்டங்களை நடத்துகிறார்.
இந்நிலையில் பக்கத்து ஊர் பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார் விஜய் சேதுபதி. ஊர் பிரச்சனைக்கு போராடினது போதும், வீட்டு பிரச்சனையை பார் என்று விஜய் சேதுபதியிடம் ஐஸ்வர்யா ராஜேஷ் கூற, விஜய் சேதுபதி துபாய்க்கு வேலைக்கு செல்கிறார்.

வேலைக்கு சென்ற இடத்தில் விஜய் சேதுபதி இறந்து விடுகிறார். இவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர பல சிக்கல்கள் ஏற்படுகிறது. எப்படியாவது விஜய் சேதுபதி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஐஸ்வர்யா ராஜேஷ் போராடுகிறார். இறுதியில் போராட்டங்களை வென்று விஜய் சேதுபதியின் உடலை சொந்த ஊருக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் கொண்டுவந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனக்கே உரிய ஸ்டைலில் அசத்தும் விஜய் சேதுபதி, இந்த படத்தில் நீரோட்டம் பார்ப்பது, தண்ணீர் பிரச்சனைக்கு போராடுவது என்று கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். டயலாக் டெலிவரியில் அப்லாஸ் அள்ளுகிறார். மனைவி ஐஸ்வர்யா ராஜேஷுடன் இருக்கும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

அரியநாச்சி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு அபாரம். முதல் பாதியில் கலகலப்பாகவும், இரண்டாம்பாதியில் கணவருக்காக போராட்டும் பெண்ணாவும் மனதில் பதிகிறார். கொடுத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி இருக்கிறார் என்றே சொல்லலாம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நெகிழ வைத்திருக்கிறார். படத்திற்கு படம் நடிப்பை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வாழ்த்துகள்.
விஜய் சேதுபதிக்கு தங்கையாக வரும் பவானி ஸ்ரீ நடிப்பால் கவனிக்க வைக்கிறார். குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷுடன் சண்டை போடுவது, விஜய் சேதுபதி ஊருக்கு செல்லும் காட்சி, அண்ணன் இறந்தவுடன் கலங்குவது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
வேலராமமூர்த்தி குணச்சித்ர நடிப்பால் மனதில் நிறைகிறார். அருண்ராஜா காமராஜ், சுப்பிரமணிய சிவா, முனீஸ்காந்த், அபிஷேக், டி.சிவா, இயக்குநர் மனோஜ்குமார், பந்தா எம்எல்ஏவாக நமோ நாராயணா ஆகியோர் பொருத்தமான கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்கள்.

பல படங்களில் குணச்சித்ர நடிகராக முத்திரை பதித்த நடிகர் பெரிய கருப்பத் தேவரின் மகன் விருமாண்டி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். முதல் படத்திலேயே மக்கள் பிரச்சினை, தண்ணீர்ப் பிரச்சினை, வெளிநாடு சென்று வேலை செய்பவர்கள் அங்கு இறந்துவிட்டால் ஏற்படும் பிரச்சனை என துணிச்சலாக பதிவு செய்திருக்கிறார். இறந்தவர்களின் உடலை கொண்டு வர இங்கு இருக்கும் அரசியல், சட்ட சிக்கல்கள் என அனைத்திலும் அலசி இருக்கிறார். முதல் படம் என்று நம்பமுடியாத அளவுக்கு அபாரத் திறமையால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். கதாபாத்திரங்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். போகிற போக்கில் பல விஷயங்களை சொல்லி இருக்கும் இயக்குனர் படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். சின்ன குறைகள் இருந்தாலும் பெரியதாக தெரியவில்லை. படத்திற்கு பெரிய பலம் சண்முகம் முத்துசாமியின் வசனங்கள். பல வசனங்கள் நச் என்று இருக்கிறது.
கிராமத்தின் வறட்சியையும், மண்ணின் சூழலையும் கண்களுக்குள் பதிய வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம். ஜிப்ரான் இசையில் பாடல்கள் கதையோடு பார்ப்பவர்களை உட்கார வைக்கிறது. பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘க.பெ.ரணசிங்கம்’ சிங்கம்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகிபாபு, இப்போவரைக்கும் அவர் சொன்ன அட்வைஸைத்தான் கடைபிடித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகிபாபு மூத்த காமெடி நடிகர்கள் பற்றி கூறியிருப்பதாவது, `எல்லாரையும் சந்தித்து பேசியிருக்கிறேன். அவர்களும் நிறைய விஷயங்களை என்னிடம் சொல்லியிருக்காங்க. குறிப்பா, கவுண்டமணி சார் சொன்ன ஒரு அறிவுரையைத்தான் இப்போவரைக்கும் கடைபிடித்து வருகிறேன்.
முதல்முறை அவரை சந்தித்தபோது, 'தம்பி யோகி பாபு, நீ எதை நோக்கி ஓடுறியோ அதை நோக்கி ஓடிட்டே இரு. எவனாவது கூப்பிடுறான்னு திரும்பிப் பார்த்தா, உன்னைத் திண்ணையில உட்கார வெச்சுடுவாங்க. உன் இலக்கு மட்டும்தான் உன் கண்ணுக்குக் தெரியணும்'னு சொன்னார்.

இப்போ வரைக்கும் அப்பப்போ சார்கிட்ட பேசுவேன். அதே மாதிரி, வடிவேலு அண்ணனும் 'கோலமாவு கோகிலா' படம் பார்த்துட்டு என்னை ஆபீசுக்கு வரச்சொன்னார். அவர்கிட்ட ரொம்ப நேரம் பேசிட்டிருந்தேன். விவேக் சாரும் `கோலமாவு கோகிலா' படம் பார்த்ததுக்கு அப்புறம் கூப்பிட்டுப் பேசினார். அவரோடு 'பிகில்', 'அரண்மனை - 3' படத்துல நடிச்சிருக்கேன். சந்தானமும் சூரியும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கார் வாடகை கொடுக்காமல் ஏமாற்றியதாக வந்த புகாருக்கு நடிகை முமைத்கான் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
பிரபல கவர்ச்சி நடிகை முமைத்கான். இவர் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற நெருப்பே, சிக்குமுக்கி நெருப்பே பாடலுக்கும் விஜய்யின் போக்கிரி படத்தில் இடம்பெற்ற என் செல்லப்பேரு ஆப்பிள் பாடலிலுக்கும் நடனம் ஆடி உள்ளார். விக்ரமின் கந்தசாமி படத்தில் இடம்பெற்ற என்பேரு மீனா குமாரி பாடலுக்கும் ஆடி உள்ளார். இவர் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் முமைத்கான் மீது கார் டிரைவர் ஒருவர் மோசடி புகார் கூறினார். கோவாவுக்கு தனது வாடகை காரில் பயணித்து 8 நாட்கள் தங்கியதாகவும் வீடு திரும்பியதும் வாடகை ரூ.15 ஆயிரத்தை தராமல் சென்று விட்டார் என்றும் தெரிவித்தார். இது சமூக வலைத்தளத்தில் பரபரப்பானது.

இதையடுத்து ஐதராபாத் மேற்கு பகுதியில் உள்ள புஞ்சகட்டா போலீசில் கார் டிரைவர் மீது முமைத்கான் புகார் அளித்தார். அதில், டிரைவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தபிறகும் என்மீது பொய்யான குற்றச்சாட்டு சொல்லி அவதூறு செய்து இருப்பதாக கூறியுள்ளார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறும்போது, ‘புகார் தொடர்பாக இருவரிடமும் விசாரித்து உண்மை கண்டறியப்படும்’ என்றார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்த சில்க் ஸ்மிதாவை அவள் அப்படித்தான் படக்குழு தேடிவருகின்றனர்.
எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தென்னிந்திய திரைப்பட இயக்குனர்களாலும் தயாரிப்பாளர்களாலும் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா.

அவருக்கு முன்னாலே பல கவர்ச்சி நடிகைகளை சினிமா உலகம் பார்த்து இருக்கிறது என்றாலும் தன்னுடைய மயக்கும் விழிகளாலும், வாளிப்பான உடல் கட்டினாலும் மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கட்டிப் போட்ட ஒரு கவர்ச்சி நடிகை அவர்.
ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறுவயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம். கணக்கிலடங்காத திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை "அவள் அப்படித்தான்" என்ற பெயரிலே காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிக்கின்றனர்.

பல விளம்பரப் படங்களை இயக்கியவரும் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” என்ற வெற்றிப் படத்தை இயக்கியவருமான மணிகண்டன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
"சில்க் ஸ்மிதாவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் அவருடைய காந்தக் கண்கள். அப்படிப்பட்ட அழகான கண்கள் உடைய ஒரு அழகான பெண்ணை இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறோம்" என்கிறார்.
தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் மனோபாலா தலைவராக தேர்வு செய்ததை அடுத்து சௌந்தரராஜா நேரில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் இருப்பது போல் சின்னத்திரை நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது. சின்னத்திரை சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் ஏகமனதாக நடிகர் மனோபாலா தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். தன்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்தார் மனோபாலா. மேலும் சின்னத்திரைக்காக என்றும் உழைப்பேன் என்று உறுதி அளித்துள்ளார்.
சின்னத்திரை தலைவராக மனோபாலா தேர்வு செய்யப்பட்டதை அறிந்த நடிகர் சௌந்தரராஜா, அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ஜெய ஸ்ரீ விஜய் தயாரிப்பில் விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘பவுடர்’ படத்தின் முன்னோட்டம்.
சாருஹாசன் நடித்த 'தாதா 87' வெற்றிப் படத்தை தந்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, தற்போது ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது பவுடர் என்ற புதிய படத்தை துவங்கியுள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி.
வித்யா பிரதீப் முதன்மை வேடத்தில் நடிக்க மனோபலா, வையாபுரி, ஆதவன் ஆகல்யா வெங்கடேசன், ஆகியோருடன் பல அறிமுக நாயக நாயகியர்களும் நடிக்கிறார்கள். த்ரில்லர் கலந்த பிளாக் காமெடியாக படமாக தயாராகிறது.
பெரும்பாலான மக்கள் பவுடர் பூசிய போலியான முகத்தோற்றத்துடன் தங்கள் அடையாளத்தை மறைத்து காலம் காலமாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படி வாழும் 18 விதமான கதாபத்திரங்களை பற்றிய படம்தான் பவுடர்.
ஒளிப்பதிவாளர் ராஜா பாண்டி. இசை லியாண்டர் லீ மார்ட்டி. படத்தயாரிப்பாளர் ஜெய ஸ்ரீ விஜய்.
சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் ஷிவானி நாராயணன், உங்களுக்கு வெட்கமே இல்லையா என்று பதிவு செய்திருக்கிறார்.
சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீனன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இவர் கடந்த சில மாதங்களாகவே தனது சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஒருபுறம் ஆதரவு அளித்தாலும் பலர் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.
இதற்கு பதில் அளிக்கும் விதமான ஷிவானி நாராயணன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘எனது பதிவில் மூன்றாம் தரமான கருத்துக்களை கமெண்ட் செய்பவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். யூடியூப்பில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் ஒருசிலர் என்னைப்பற்றி மலிவாக விமர்சனம் செய்கின்றனர். இது போன்று ஒரு பெண்ணை விமர்சனம் செய்ய உங்களுக்கு வெட்கம் இல்லையா?. நான் என்ன ஆடைகளை அணிய வேண்டும் எதை அணியக் கூடாது என்று எனக்கு தெரியும். என்னுடைய பெற்றோர்கள் என்னை நன்கு வளர்ந்து உள்ளார்கள். நான் எதையும் சுயமாக தேர்வு செய்ததற்கான சுதந்திரத்தை எனக்கு அவர்கள் கொடுத்துள்ளார்கள்.

நான் பதிவு செய்யும் புகைப்படங்கள், ஆடும் நடனங்கள் இவை அனைத்துமே யாரையும் கவர்ந்திழுக்கும் நோக்கத்திற்கு அல்ல. அதுபோன்ற அவசியமும் எனக்கு இல்லை. என்னுடைய சுய விருப்பத்தினால் நான் அதை பதிவு செய்து வருகிறேன். எனவே மோசமான விமர்சனங்கள் செய்து என்னை காயப்படுத்த முயற்சிக்க வேண்டாம். அவ்வாறு முயற்சித்தால் நீங்கள் தோல்வி அடைவீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சைலன்ஸ்’ படத்தின் விமர்சனம்.
அமெரிக்காவில் இருக்கும் ஒரு பங்களாவில் மர்மமான முறையில் இரண்டு பேர் இறந்து போகின்றனர். அந்த வீட்டில் உள்ள ஒரு ஓவியத்தைத் தேடி மாதவனும் அவரது காதலியான அனுஷ்காவும் செல்கிறார்கள். அங்கு மாதவன் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். காயங்களுடன் தப்பிக்கும் அனுஷ்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
இந்த கொலையை துப்பறிய அஞ்சலி மற்றும் மைக்கல் மேட்சன் களமிறங்குகிறார்கள். இதற்கிடையில் பல இளம் பெண்கள் காணாமல் போகிறார்கள். காணாமல் போன பெண்களுக்கும் மாதவன் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக விசாரிக்கிறார்கள். இறுதியில் மாதவன் எப்படி கொல்லப்பட்டார்? காணாமல் போன பெண்கள் என்ன ஆனார்கள்? இதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

இசைக்கலைஞராக நடித்திருக்கும் மாதவன் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வித்தியாசமான வேடம் என்று திறம்பட செய்திருக்கிறார். காது கேட்காமல், வாய் பேச முடியாமல் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அனுஷ்கா. ஓவியராக வரும் அனுஷ்கா படத்தில் நிறைய காட்சிகளில் வருகிறார். ஆனால், நடிப்பு திறனை வெளிப்படுத்து அளவிற்கு காட்சிகள் அமையாதது வருத்தம். மாதவனும் அனுஷ்காவும் வரும் காட்சிகள் ரசிக்கலாம்.

போலீஸ் அதிகாரியாக வரும் அஞ்சலி, கதாபாத்திரத்திற்கு பொருந்தினாலும், நடிப்பில் மிளிரவில்லை. குறிப்பாக இவர் பேசும் ஆங்கிலம் செட்டாகவில்லை. மற்றொரு போலீஸ் அதிகாரியான மைக்கல் மேட்சன் மற்றும் சுப்பராஜு ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். மற்றொரு கதாநாயகியாக வரும் ஷாலினியின் நடிப்பு செயற்கை தனமாக இருக்கிறது.

திகில் கலந்த திரில்லர் படத்தை இயக்கி இருக்கிறார் ஹேமந்த் மதுக்கூர். படம் ஆரம்பத்தில் இருக்கும் விறுவிறுப்பு போகபோக குறைந்து விடுகிறது. அமெரிக்காவை சுற்றியே படமாக்கி இருக்கிறார். ஹாலிவுட் தரத்தில் உருவாக்க நினைத்த இயக்குனர் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். பல படங்களில் பார்த்த அதே திருப்பங்கள் சோர்வை ஏற்படுத்துகிறது. அடுத்தடுத்து வரும் காட்சிகளை யூகிக்க முடியும் அளவிற்கு வைத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடம் இன்னும் வேலை வாங்கி இருந்தால் இந்த சைலன்ஸ் இன்னும் சத்தமாக இருந்திருக்கும்.
கோபி சுந்தர் இசையில் பாடல்கள் கவனம் பெறவில்லை. ஷெனியல் டியோ ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். அமெரிக்கா என்பதால் பிரம்மாண்டம் என்று இல்லாமல் கதைக்கு எது தேவையோ அதை அழகாக படம் பிடித்து கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘சைலன்ஸ்’ சத்தம் தேவை.
80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா, போருக்கு போற மாதிரி இருக்கு என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் படம் 'திருஷ்யம் 2'. முதல் பாகத்தில் நாயகியாக நடித்த மீனாவே இதிலும் நடிக்கிறார். படப்பிடிப்புக்காக சென்னையிலிருந்து கேரளாவுக்கு விமானத்தில் பயணித்துள்ளார். விமானப் பயணத்தின்போது கொரோனா அச்சுறுத்தலிலிருந்து தற்காத்துக் கொள்ள பிபிஇ உடைகள் அணிந்துள்ளார் மீனா.
அந்தப் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மீனா கூறியிருப்பதாவது: "நான் விண்வெளிக்குச் செல்வதுபோல இருந்தாலும், நான் போருக்குச் செல்வதைப் போல உணர்கிறேன். 2 மாதங்களுக்குப் பிறகு பயணம் செய்கிறேன். விமான நிலையம் மிகவும் அமைதியாகவும், ஆள் அரவமற்றதாகவும் இருப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.

பலரும் என்னைப் போல உடையணியாமல் இருந்தது இன்னும் ஆச்சரியமாக இருந்தது. இது மிகவும் வசதியற்ற ஆடை என்று சொல்வேன். குளிர்ந்த வானிலையும், ஏசியும் இருந்தபோதும் மிகவும் வெப்பமாகவும், இறுக்கமாகவும், வியர்வையை ஏற்படுத்தக் கூடியதாகவும் இந்த ஆடை உள்ளது. முகத்தைக் கூட துடைக்க முடியவில்லை. குறிப்பாகக் கையுறைகள். இரவு பகலாக இந்த பிபிஇ கவச உடையுடன் இருந்த சுகாதாரப் பணியாளர்களுக்குத் தலைவணங்குகிறேன்.
இத்தகைய சிரமத்திலும் அவர்கள் நமது வலியைப் புரிந்துகொண்டு எப்போதும் நம்மை எப்போதும் பாதுகாக்கிறார்கள். அவர்கள் மீது நான் வைத்திருக்கும் மதிப்பு அதிகமாகி விட்டது. மனித இனத்துக்கும் நீங்கள் செய்து வரும் தன்னலமற்ற சேவைக்கு நன்றி". இவ்வாறு மீனா தெரிவித்துள்ளார்.
‘கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் கேரளாவில் வரும் டிசம்பர் மாதம் வரை தியேட்டர்கள் திறக்கப்படாது.
கொச்சின்:
கேரள தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
‘கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் கேரளாவில் வரும் டிசம்பர் மாதம் வரை தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை.
ஜி.எஸ்.டி., முனிசிபல் வரி, போன்ற வரி விதிப்புகளுடன் 50 சதவீத பார்வையாளர்களை கொண்டு தியேட்டர்களை லாபகரமாக இயக்க முடியாது.
மேலும் தற்போதைய சூழலில் பார்வையாளர் யாருக்காவது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் தியேட்டரை மூட வேண்டிய நிலை ஏற்படும்.
வரி விதிப்புகளை அரசு நீக்கினால் மட்டுமே சினிமா தியேட்டர்களை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்‘.
இவ்வாறு கேரள தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மாரி 2, தடம் படங்களில் நடித்து பிரபலமான வித்யா பிரதீப், தற்போது பவுடர் பூசி ரசிகர்களை பயமுறுத்த இருக்கிறார்.
சாருஹாசன் நடித்த 'தாதா 87' வெற்றிப் படத்தை தந்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, தற்போது ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தில் விக்ரம் தங்கை அனிதாவின் மகன், அர்ஜூமன் கதையின் நாயகனாக நடிக்கிறார். அனித்ரா நாயர், ஆராத்யா, சாந்தினி, சான்ட்ரியா, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி ஆகியோரும் நடிக்கின்றனர்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது பவுடர் என்ற புதிய படத்தை துவங்கியுள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி. வித்யா பிரதீப் முதன்மை வேடத்தில் நடிக்க மனோபலா, வையாபுரி, ஆதவன் ஆகல்யா வெங்கடேசன், ஆகியோருடன் பல அறிமுக நாயக நாயகியர்களும் நடிக்கிறார்கள். த்ரில்லர் கலந்த பிளாக் காமெடியாக படமாக தயாராகிறது.
ஆனால் பெரும்பாலான மக்கள் பவுடர் பூசிய போலியான முகத்தோற்றத்துடன் தங்கள் அடையாளத்தை மறைத்து காலம் காலமாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படி வாழும் 18 விதமான காதாபத்திரங்களை பற்றிய படம்தான் பவுடர்.

படத்தில் வரும் கதாபத்திரங்களை நம் வாழ்க்கையில் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்திருப்போம் அல்லது கடந்து வந்திருப்போம். பவுடர் முகத்திற்கு மட்டும் அல்ல உடலுக்கும் கேடுதான். ஆம், போதைப்பொருள் வடிவத்தில் என்பது நிதர்சனமான உண்மை.
ராஜா பாண்டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். கொரோனா நிலைமைகள் சீரானதும் பவுடர் பொங்கல் வைக்கலாம் என தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து அசத்திய சாய் தீனா, தற்போது இரண்டு வேடங்களில் அலற வைக்க வருகிறார்.
தமிழ் சினிமாவில் வில்லன் வேடங்களில் அசத்தி வருபவர் சாய் தீனா. தற்போது இவர் மாறுபட்ட இரட்டை வேடங்களில் ‘அலறல்’ என்னும் படம் மூலம் அசத்த வருகிறார். ஜிடி புரொடக்ஷன்ஸ், ஜீவேதா பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து அலறல் படத்தை தயாரித்துள்ளார்கள்.
இதில், கிரி கதாநாயகனாகவும் நந்தினி, ஸாகித்யா கதாநாயகிகளாகவும் நடித்திருக்கிறார்கள். குழந்தை நட்சத்திரங்களாக பேபி - தன்யஸ்ரீ மாஸ்டர் கே. சுடர் நிலவன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ம.ரூபநாதன் மற்றும் அ.பாரூக் ஆகியோர் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.






