என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தனுஷ் மற்றும் சிம்பு படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்துள்ளார்.
    தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் திருடா திருடி. இந்த படத்தை கிருஷ்ணகாந்த் என்பவர் தயாரித்திருந்தார். மேலும் தனுஷின் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தையும் சிம்பு நடித்த மன்மதன் படத்தையும் கிருஷ்ணகாந்த் தயாரித்துள்ளார்.

    தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த்

    இந்நிலையில் மாரடைப்பால் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மரணமடைந்துள்ளார். சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
    நகைச்சுவை நடிகையாக அறிமுகமான வித்யூலேகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    கவுதம் மேனன் இயக்கத்தில்  வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா. இதையடுத்து தீயா வேலசெய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழைவிட தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல குணசித்திர நடிகர் மோகன் ராமனின் மகள் ஆவார். 

    வித்யூலேகா

    நடிகை வித்யூலேகா, இந்த ஊரடங்கு சமயத்தில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து அனைவருக்கு அதிர்ச்சி அளித்தார். சமீபத்தில், நடிகை வித்யூலேகாவிற்கு, சஞ்சய் என்பவருடன் திருமணம் நிச்சயமானது.

    வித்யூலேகா

     இந்நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் சட்டை மற்றும் சிறிய டவுசர் அணிந்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
    தமிழில் பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்த முமைத்கான் மீது கார் ஓட்டுநர் ஒருவர் கார் வாடகை தராமல் ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
    மும்பையைச் சேர்ந்த நடிகை முமைத்கான், இந்தி மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் தனது கவர்ச்சி நடனத்தை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் முமைத்கான் தனக்குத் தர வேண்டிய ரூ.15000-த்தை தராமல் ஏமாற்றியதாக கார் ஓட்டுநர் குற்றம்சாட்டியுள்ளார்.

    கார் ஓட்டுநர் ராஜூ தெரிவிக்கும் போது, முமைத்கான் 3 நாள் பயணமாக கோவா செல்ல கார் புக் செய்ததாகவும், ஆனால் 8 நாட்கள் கோவாவில் தங்கியதாகவும் பின்னர் தனக்குத் தரவேண்டிய ரூ.15000-த்தை தரவில்லை என்றும் கூறியுள்ளார். 

    முமைத்கான்

    முமைத் கான் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, முமைத் கான் அனுப்பிய கோவா முகவரி, சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தியதற்கான ரசீதுகளை ஊடகங்களிடம் ஒப்படைத்துள்ளார். தன்னைப்போல் மற்றொரு ஓட்டுநர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இதை வெளியில் சொல்வதாகவும் கார் ஓட்டுநர் ராஜூ தெரிவித்ததாக கூறியுள்ளார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் கவீன், சாவுல கூட நியாயம் இல்ல என்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.
    உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் நான்கு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி நாக்கு அறுக்கப்பட்டு இருந்ததாகவும் அவரது முதுகெலும்பு உடைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அந்த இளம்பெண் நேற்று சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார். இந்த மரணத்தை அடுத்து அவசர அவசரமாக அந்த பெண்ணின் பெற்றோர்கள் சம்மதம் கூட இல்லாமல் போலீசார் அந்த பெண்ணின் உடலை தகனம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் உத்தரபிரதேச மாநிலத்தை மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    கவின் பதிவு

    இந்த நிலையில் நடிகர் கவீன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘சாவில் கூட நியாயம் இல்ல’ #JusticeForManishaValmiki என்று ஆவேசமாக பதிவு செய்திருக்கிறார். இவரது பதிவுக்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றன.
    மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ திறக்கப்படும் என்று ராதாரவி தெரிவித்திருக்கிறார்.
    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் செப்டம்பர் 25ம் தேதி காலமானார். இவரது மறைவு உலக ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.

    இந்நிலையில், டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினரான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை கௌரவிக்கும் விதமாக, டப்பிங் யூனியனின் செயற்குழு குழு 30.09.2020 அன்று தலைவர் டத்தோ ராதாரவி தலைமையில் கூடி, எஸ்பிபி அவர்களின் திருவுருவப் படம் திறந்துவைக்கப்பட்டது.

    டப்பிங் குழுவினர்

    மேலும் டப்பிங் யூனியனுக்கென தனியே டப்பிங் ஸ்டுடியோ ஒன்று இசைத் துறைச் சாதனையாளரும் டப்பிங் கலைஞருமான எஸ்பிபி நினைவாக விரைவில் திறக்கப்படும் என ராதாரவி தெரிவித்தார்.
    ஐந்து முன்னணி இயக்குனர்கள் இணைந்து உருவாக்கிய புத்தும் புது காலை என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் உடன் சுஹாசினி மணி ரத்னமும் இணைந்து ‘புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளனர். இதில் ‘இளமை இதோ இதோ’ என்ற கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

    ‘அவரும் நானும்/ அவளும் நானும்’ என்ற கதையை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இதில் ரீத்து வர்மா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் ‘மிராக்கிள்’ என்ற கதையை இயக்கியுள்ளார். இதில் பாபி சிம்ஹா, முத்துக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

    ராஜீவ் மேனன் இயக்கியிருக்கும் ‘ரீயூனியன்’ கதையில் ஆன்ட்ரியா, லீலா சாம்சன், குருச்சரண் ஆகியோர் நடித்துள்ளனர். சுஹாசினி மணிரத்னம் இயக்கி நடித்திருக்கும் ‘காஃபி எனி ஒன்’ கதையில் அவருடன் இணைந்து ஸ்ருதிஹாசன், அனுஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர்.

    ஐந்து இயக்குனர்கள்

    இந்த ஆந்தாலஜி திரைப்படம் அக்டோபர் 16-ஆம் தேதி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமேசான் பிரைம் தயாரிப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் 'புத்தம் புது காலை' திரைப்படம் ஊரடங்கு தளர்வின் போது படப்பிடிப்பிற்காக தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFSI) வகுத்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றி படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஹோசிமின் இயக்கத்தில் சிவா, பிரியா ஆனந்த், வி.டி.வி.கணேஷ், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள சுமோ படத்தின் முன்னோட்டம்.
    ‘வணக்கம் சென்னை’ படத்தை அடுத்து, சிவா-பிரியா ஆனந்த் இணைந்து நடிக்கும் படம், ‘சுமோ.’ இந்த படத்தை ஹோசிமின் இயக்க, ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ‘சுமோ’ என்பது குண்டு உடம்புடன் சண்டை போடுகிற வில்லனின் பெயர். சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் முதல் இந்திய படம், இது. பெரும் பகுதி காட்சிகள் ஜப்பானில் படமாக்கப்பட்டன. 

    சுமோ படக்குழு

    படத்தை பற்றி இயக்குனர் ஹோசிமின் கூறியதாவது:- ‘‘சிவாவின் வித்தியாசமான நடிப்பில், படம் உருவாகி வருகிறது. முக்கிய கதாபாத்திரங்களில் வி.டி.வி.கணேஷ், யோகி பாபு ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். குழந்தைகள் முதல் வயதானவர் வரை, ரசிக்கக் கூடிய ஜனரஞ்சகமான படம், இது. கதாநாயகனாக நடிப்பதுடன், படத்தின் திரைக்கதை-வசனத்தையும் சிவாவே எழுதியிருக்கிறார். 
    தமிழ், திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, தன் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
    நடிகை திரிஷா, 1999-ம் ஆண்டு வெளியான ஜோடி படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். அதில் சிம்ரனுக்கு தோழியாக நடித்தார். பின்னர் சூர்யாவின் மெளனம் பேசியதே மூலம் ஹீரோயினாக அறிமுகமான திரிஷா, அடுத்தடுத்து அஜித், விஜய், விக்ரம் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். 

    அவர் திரையுலகில் அறிமுகமாகி 21 ஆண்டுகள் ஆகப் போகிறது. அவர் திரையுலகத்திற்கு வர முக்கிய காரணமாக இருந்தது 1999-ம் ஆண்டு அவர் வென்ற ‘மிஸ் சென்னை’ பட்டம்தான். அந்த பட்டம் வென்ற நாளை நினைவு கூறும் வகையில் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள திரிஷா, “30-09-1999, என் வாழ்க்கையை மாற்றிய நாள்,” எனக் குறிப்பிட்டுள்ளார். 

    திரிஷாவின் டுவிட்டர் பதிவு

    நடிகை திரிஷாவின் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அதேபோல் மலையாளத்திலும் மோகன் லாலுக்கு ஜோடியாக ராம் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
    சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
    சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள படமாக தயாராகி வரும் இதில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த 6 மாதமாக இதன் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. 

    ரஜினிகாந்த்

    இந்நிலையில், வருகிற அக்டோபர் 15-ந் தேதி முதல் மீண்டும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக நடிகர் ரஜினிகாந்த் வருகிற அக்டோபர் 8-ந் தேதி ஐதராபாத் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அங்கு சென்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்பவர்களுக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ள உள்ளார்களாம். 
    எந்திரன் படத்தின் கதை திருட்டு விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
    ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘எந்திரன்’. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார். 

    அதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். அந்த கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளார். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    ஷங்கர், ரஜினி

    இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்ட சென்னை ஐகோர்ட்டு, தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது.

    இந்நிலையில்  ‘எந்திரன்’ படத்தின் கதை தன்னுடையது என்று ஆரூர் தமிழ்நாடன் என்பவர் தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்ததற்கு எதிராக இயக்குனர் ஷங்கர் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    கொரோனா ஊரடங்கு காலத்தில், பல்வேறு உதவிகளை செய்த இந்தி நடிகர் சோனு சூட்டுக்கு, ஐ.நா.வின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
    கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை தன்னால் இயன்ற உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார். 

    குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல பஸ் வசதி செய்து கொடுத்தது, ரஷ்யாவில் சிக்கித்தவித்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்ப விமானம் ஏற்பாடு செய்து தந்தது, விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது, ஏழைகளுக்கு உதவி செய்வது என இவர் செய்த உதவிகள் ஏராளம்.

    சோனு சூட்

    இந்நிலையில், சோனு சூட்டின் மனிதநேயமிக்க சேவையை பாராட்டி, ஐ.நா. மேம்பாட்டு திட்டத்தின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதினை இதற்கு முன், பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி, லியோனார்டோ டிகாப்ரியோ, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் பெற்றுள்ளனர். 
    பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு ஆண்டாகியும் தனக்கான சம்பளம் தரவில்லை என்று நடிகை கஸ்தூரி குற்றம் சாட்டியுள்ளார்.
    சர்வதேச அளவில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளாக தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. கொரோனா காரணமாக தள்ளிப்போன பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் வரும் அக்டோபர் 4-ந்தேதி முதல் ஆரம்பமாகிறது. வழக்கம் போல் நடிகர் கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.

    இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு ஆண்டாகியும் தனக்கான சம்பளம் தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    கஸ்தூரியின் டுவிட்டர் பதிவு

    நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதே ஆதரவற்ற குழந்தைகளோட ஆபரே‌ஷன் செலவுக்காகத்தான். நான் எப்போதுமே பொய் வாக்குறுதிகளை நம்புவதில்லை. ஆனால் இதிலும் அப்படியே நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று கூறியுள்ளார். 

    இதை கண்ட ரசிகர்கள் பலர் கஸ்தூரிக்கு ஆதரவாக கருத்து கூறினால் சிலரோ எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஓராண்டு கழித்து இப்படி ஒரு புகாரை கூறுவது ஏன்? இதுவும் வீண் விளம்பரத்திற்காகவா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
    ×