என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மலையாள திரையுலகை சேர்ந்த பழம்பெரும் நடிகை சாரதா நாயர் உடல்நல குறைவு காரணமாக நேற்று காலமானார்.
    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகை சேர்ந்த பழம்பெரும் நடிகை சாரதா நாயர். இவர் மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர். குறிப்பாக கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளின் பாட்டியாக இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.

    இந்த நிலையில் 92 வயதான சாரதா நாயர், வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாடகி பிரகதி, அசோக் செல்வன் பற்றிய கேள்விக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் பாடகி பிரகதி. இவர் பாலாவின் ’பரதேசி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடியிருக்கிறார். இவர் சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் அசோக் செல்வனை பிரகதி காதலித்து வருவதாக செய்திகள் பரவியது. இது வதந்தி என்று பிரகதி கூறினார். கல்லூரியில் படித்து கொண்டு இருப்பதாகவும் திருமணம் குறித்த எந்தவித நினைப்பும் தனக்கு இல்லை என்றும் யாரையும் காதலிக்கவில்லை என்றும் கூறினார். 

    பாடகி பிரகதி

    இந்த நிலையில் பிரகதியிடம், ‘அசோக் செல்வன் எப்படி இருக்கிறார்? என்று சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கு பதிலளித்த பிரகதி ’அவரைத்தான் கேட்கணும்’ என்று கூறியுள்ளார். பிரகதியின் இந்த பதிலுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
    நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் பட்டியல் சமூக வலைத்தளத்தில் லீக்காகி இருக்கிறது.
    கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்கான புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் லீக்காகி உள்ளது.

    லீக்கான பட்டியலில், நடிகை ரேகா, சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ஆர்ஜே அர்ச்சனா, செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத் ஆகிய பெண் போட்டியாளர்களும், நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஆரி, ரியோ, சிங்கர் அஜீஸ், மாடல் பாலாஜி முருகதாஸ் ஆகிய ஆண் போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 

    பிக்பாஸ் 4 பட்டியல்

    தற்போது இந்த லிஸ்ட் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 4ம் தேதி தெரியவரும்.
    நடிகை பிரியா பவானி சங்கரை காதலிப்பது போன்ற ஹரிஷ் கல்யாண் போட்ட டுவிட்டால் ரசிகர்கள் குழப்பம் அடைந்திருக்கிறார்கள்.
    "பியார் பிரேமா காதல்", "இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்", “தாராள பிரபு” போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டவர். இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் நடிகை பிரியா பவானி சங்கரை காதலிப்பது போல் டுவிட் செய்திருக்கிறார்.

    இதற்கு பிரியா பவானி சங்கரும், ‘லாக்டவுன் முடியுற வரைக்கும் உன்னால வெயிட் பண்ண முடியலல... நான்தான் முதலில் சொல்ல நினைத்தேன் என்று பதிவு செய்திருக்கிறார்.

    ஹரிஷ் கல்யாண் பதிவு

    இதற்கு ஹரிஷ் கல்யாண், காத்திருக்க முடியாது! காத்திருக்க வேண்டாம்! நாளை மாலை 5 மணிக்கு நான் அதை அதிகாரப்பூர்வமாக்குகிறேன் என்று பதிவு செய்திருக்கிறார்.

    இதைப்பார்த்த ரசிகர்கள் குழப்பம் அடைந்திருக்கிறார்கள். அனேகமாக நாளை மாலை 5 மணிக்கு படத்திற்கான அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    திருமணமான 2 வாரங்களில் பாலியல் புகார் கூறி கணவரை பிரிந்த கவர்ச்சி நடிகை மீண்டும் அவருடன் இணைந்து இருக்கிறார்.
    சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. கடந்த செப்டம்பர் 10-ந் தேதி இவருக்கும் - சாம் பாம்பேவுக்கு திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை வெளியிட்டு ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும் என்றெல்லாம் காதலர் குறித்து சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். திருமணம் முடிந்த கையோடு பூனம் பாண்டே தன் கணவருடன் கோவாவுக்கு சென்றார். 

    கோவாவுக்கு சென்ற இடத்தில் சாம் பாம்பே தன்னை பலாத்காரம் செய்ததுடன், தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாக பூனம் பாண்டே போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். போலீசார் சாம் பாம்பே மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

    கணவருடன் பூனம் பாண்டே

    இந்நிலையில் புகார் அளித்த சில தினங்களிலேயே தனது கணவருடன் மீண்டும் சமாதானம் ஆகிவிட்டார் பூனம் பாண்டே.

    “நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் வெறித்தனமாக நேசிக்கிறோம். எங்களுக்குள் இருந்த பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டுவிட்டன. எந்த குடும்பத்தில் தான் சண்டை சச்சரவு, ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் உள்ளது” என தனது கணவருடன் சேர்ந்தது குறித்து பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.
    சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த நடிகர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சிவகார்த்த்கேயன் நடிப்பில் 2012-ஆம் வெளியான திரைப்படம் மெரினா. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் பல்வேறு சிறுவர்கள், கடற்கரை ஓர வேலைகள் பார்ப்பவர்களாக நடித்திருந்தனர். இதில் ஒருவராக மைலாப்பூரைச் சேர்ந்த தென்னரசு என்பவர் நடித்திருந்தார்.

    தென்னரசு

    இவர் தற்போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விஷயம் தெரிய வந்துள்ளது. மைலாப்பூர் நொச்சி நகர் பகுதியில் வசித்து வந்த இவர், குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தென்னரசுவின் இந்த திடீர் மரணம், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
    சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாக உள்ள புஷ்பா படத்தின் முன்னோட்டம்.
    சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். மேலும் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக உள்ளது. 

    செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், பாபி சிம்ஹா வனத்துறை அதிகாரி வேடத்திலும் நடிக்க உள்ளனர். ராஷ்மிகா மந்தனா கிராமத்து பெண்ணாக நடிக்க பிரத்யேக பயிற்சி எடுத்து நடிக்க உள்ளார். இப்படம் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. 
    ‘சைலன்ஸ்’ படம் ஓடிடி-யில் ரிலீசாக உள்ள நிலையில், நடிகை அனுஷ்கா அப்படம் குறித்து எந்தவித பேட்டியும் கொடுக்காமல் மவுனம் காத்து வருகிறார்.
    ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சைலன்ஸ்’. இதில் மாதவன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தில், அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

    இப்படம் வருகிற அக்டோபர் 2-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட நடிகை அனுஷ்கா, ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. தற்போது வேறு வழியின்றி படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் சம்மதித்தார்.

    அனுஷ்கா

    படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற நடிகர்கள் இதில் கலந்துகொண்டு படம் பற்றி பேட்டி கொடுக்கிறார்கள். ஆனால் அனுஷ்கா இதுவரை எந்த பேட்டியும் கொடுக்காமல் மவுனம் காத்து வருகிறார். 

    முன்னதாக தனது தரப்பில் ஒரே ஒரு வீடியோவை எடுத்துத் தருவதாகவும், அதையே அனைத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அனுஷ்கா சொல்லியிருந்தாராம். படம் ரிலீசாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அந்த வீடியோவும் இன்னும் வராததால் படக்குழு குழப்பத்தில் உள்ளார்களாம். படத்தை ஓடிடியில் வெளியிடுவது பிடிக்காமல் தான் அனுஷ்கா இப்படி செய்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் மாதவன், அடுத்ததாக பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க உள்ளாராம்.
    கதாநாயகர்கள் வில்லன் வேடங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளனர். ஏற்கனவே அர்ஜுன் கடல், இரும்புத்திரை படங்களில் வில்லனாக வந்தார். தனி ஒருவன் படத்தில் அரவிந்தசாமி வில்லன் வேடம் ஏற்றார். விஜய் சேதுபதி விக்ரம் வேதா, பேட்ட படங்களில் வில்லனாக வந்தார். தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்திலும் குரூர வில்லனாக நடித்துள்ளார்.

    இந்தநிலையில் மாதவனும் வில்லன் வேடங்களை ஏற்று நடிக்க தொடங்கி உள்ளார். இவர் அலைபாயுதே, மின்னலே, டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், ரன், தம்பி, ரெண்டு, ஆர்யா, யாவரும் நலம், இறுதிச் சுற்று உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். அனுஷ்காவுடன் நடித்துள்ள சைலென்ஸ் படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. 

    புஷ்பா பட போஸ்டர்

    இந்நிலையில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் ‘புஷ்பா’ படத்தில் வில்லனாக நடிக்க மாதவனை அணுகி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஆரம்பத்தில் விஜய்சேதுபதியை வில்லன் வேடத்துக்கு முடிவு செய்தனர். ஆனால் அவரிடம் கால்ஷீட் இல்லாததால் மாதவனிடம் பேசி வருகிறார்கள். ஏற்கனவே நாகசைதன்யா படத்திலும் மாதவன் வில்லனாக நடித்துள்ளார்.
    போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகைகள் இருவரும் ஜாமீன் கிடைக்காததால் கண்ணீர் விட்டு கதறி அழுததாக தகவல் வெளியாகி உள்ளது.
    கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக்குள் கைதிகளுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிதாக கைதாகும் நபர்களை, சிறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெண்களுக்கான அறைகளில் தங்க வைப்பதே வழக்கம். அங்கு 14 நாட்கள் தனிமை முடிந்த பின்பு தான் மற்ற கைதிகளுக்கான அறைகளுக்குள் அடைக்கப்படுவார்கள். 

    மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்படும். அதுபோல, நடிகைகள் ராகணி திவேதியின் 14 நாட்கள் தனிமை முடிந்துள்ளது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்திவிட்டு மற்ற பெண் கைதிகளுக்கான சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. அதுபோல, நடிகை சஞ்சனா கல்ராணியும் இன்னும் 2 நாட்களில் மற்ற பெண் கைதிகளுடன் அடைக்கப்பட உள்ளார்.

    ராகணி திவேதி, சஞ்சனா கல்ராணி

    இதற்கிடையில், நேற்று தங்களுக்கு ஜாமீன் கிடைக்கும், சிறையில் இருந்து வெளியே வந்து விடலாம் என்று நடிகைகள் 2 பேரும் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்துள்ளனர். ஆனால் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது பற்றி அறிந்ததும் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி கண்ணீர் விட்டு கதறி அழுததாக தகவல் வெளியாகி உள்ளது.
    போதை பொருள் வழக்கில் தன்னை பற்றிய செய்திகள் வெளியிட இடைக்கால தடை கோரி, டெல்லி ஐகோர்ட்டில் நடிகை ரகுல் பிரீத் சிங் மனு தாக்கல் செய்துள்ளார்.
    பாலிவுட்டில் போதை பொருள் விவகாரம் தொடர்பான விசாரணை விஸ்வரூபம் எடுத்துள்ளது. பிரபல நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஸ்ரத்தா கபூர், சாரா அலிகான் உள்பட பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தேசிய போதை மருந்து தடுப்பு துறை (என்.சி.பி) நடத்திய விசாரணைக்கு ஆஜராகினர். 

    இந்நிலையில், ஊடகங்கள் தனது புகழை கெடுக்கும் வகையில் செய்திகள் வெளியிடுவதாக கூறி நடிகை ரகுல் பிரீத் சிங், டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “எனக்கு கடந்த 24ந் தேதி வாட்ஸ்-அப் மூலம் சம்மன் கிடைத்தது. அடுத்த நாள் என்.சி.பி. முன் விசாரணைக்கு ஆஜராகி, எழுத்து மூலம் விளக்கம் அளித்தேன். ஆனால், என்னை பற்றி பல தவறான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன. 

    ரகுல் பிரீத் சிங்

    ஏற்கனவே என்.சி.பி.க்கு நான் அளித்த வாக்குமூலம் நீதிமன்றத்துக்கு அனுப்பட்டுள்ளது. அது இன்னும் வெளிவராத நிலையில், என் புகழை கெடுப்பது போல் ஊடகங்கள் தவறான செய்திகள் வெளியிட்டு வருகின்றன. எனவே, இந்த வாக்குமூலம் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் வரை, இந்த வழக்கில் என்னை பற்றி எந்த செய்தியையும் ஊடகங்கள் வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


    உலக அளவில் பிரபலமான நடிகர் ஜாக்கி சான், தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    சீன நடிகரான ஜாக்கி சான் உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்டவர். குறிப்பாக இவரது ஆக்‌ஷன் படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தற்போது 66 வயதாகும் ஜாக்கி சான் இன்றளவும் தான் நடிக்கும் படங்களில் இடம்பெறும் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்து அசத்தி வருகிறார்.

    இந்நிலையில், ஜாக்கிசானின் நிறுவன பெயரை சிலர் தவறாக பயன்படுத்தி வருவதாகவும், அவ்வாறு வருபவர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் அந்நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாக்கி சானின் நிறுவனம் பல இளம் நடிகர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ஜாக்கி சான்

    இதே போன்ற ஒரு பிரச்சனை தான் நடிகர் அஜித்துக்கும் வந்தது. சென்ற வாரம் அவர் இது பற்றி தனது வழக்கறிஞர் மூலமாக எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டிருந்தார். தன் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்தி வருவதாக அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×