என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    திரைப்பட இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று கூறியிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். 

    எஸ்.ஏ.சந்திரசேகர்

    நடிகர் விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் குறித்து இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ''நான் பாஜகவில் இணையப்போகிறேனா என்ற கேள்விக்கே இடமில்லை. எனக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது. ''விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும். மக்கள் அழைக்கும் போது நாங்கள் அரசியலுக்கு வருவோம்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
    நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகை சனம் ஷெட்டியை சுரேஷ் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பதினாறு போட்டியாளர் கொண்ட இந்நிகழ்ச்சியில் தற்போது அரச குடும்பம் அரக்கர்கள் டாஸ்க் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புதிய புரோமோவில், சுரேஷ் வைத்திருக்கும் தடியால் சனம் ஷெட்டியை தாக்குகிறார். அதன்பின் கோபமடையும் சனம் செட்டி சுரேசை திட்டுகிறார். சுரேஷின் இந்த செயலை ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

    சனம் - சுரேஷ்

    அதன்பின் பிக்பாஸ் இடம் பேசும் சுரேஷ், செய்த தவறுக்கு கதறி அழுகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
    பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் காடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    கும்கி திரைப்படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 'காடன்'. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார்.

     இதில் ராணா, விஷ்ணு விஷால் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.நாயகியாக ஜோயா நடித்துள்ளார். 3 இடியட்ஸ் படத்தின் இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும், ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி ஒலி அமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

    காடன்

     ஏப்ரல் 2-ம் தேதி திரைக்கு வரும் என்ற அறிவிக்கப்பட்ட இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. தற்போது 2021-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ‘காடன்’ திரைக்கு வரும் என்று பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷூக்கு, ரகசியமாக திருமணம் நடந்துள்ளது.
    தம்பிக்கோட்டை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். இதையடுத்து விஜய் ஆண்டனியின் சலீம், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை போன்ற படங்களை தயாரித்த அவர், கடந்த 2016-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் நடிகராக அவதாரமெடுத்தார். பின்னர் மருது, ஸ்கெட்ச், பில்லா பாண்டி, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

    அவருக்கும், சீரியல் நடிகை திவ்யாவுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்களது திருமணம் நின்று போனது.

    ஆர்.கே.சுரேஷின் திருமண புகைப்படம்

    இந்நிலையில், நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கும், சினிமா பைனான்சியரான மது என்பவருக்கும்  கடந்த சில நாட்களுக்கு முன்பு ரகசியமாக திருமணம் நடந்துள்ளது. அந்த திருமண விழாவில் வெறும் 15 பேர் தான் கலந்து கொண்டார்களாம். இந்த தகவல் கசிந்ததை அடுத்து, தனது திருமண புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என ஆர்.கே.சுரேஷ் பதிவிட்டுள்ளார்..
    லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பூமி திரைப்படத்தை வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
    ஜெயம் ரவியின் 25-வது படம், ‘பூமி’. லட்சுமண் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்,’ ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், சதீஷ், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஜாதா தயாரித்துள்ளார்.

    பூமி படத்தை கடந்த மே மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி படம் ரிலீசாகவில்லை. திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால், இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியானது.

    ஜெயம் ரவி, நிதி அகர்வால்

    ஆனால் அதில் தற்போது ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம். அது என்னவென்றால், பூமி படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு நேரடியாக சன் டிவி-யில் ஒளிபரப்ப உள்ளார்களாம். இதற்காக பெருந்தொகை கொடுக்கப்பட்டுள்ளதாம். டிவி-யில் ஒளிபரப்பிய பின்னரே சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு பிரபல இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.
    இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையில் நடிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து நடிகர் விஜய் சேதுபதி அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். இதை வெப் தொடராக எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

    இவர் ஏற்கனவே வீரப்பனின் வாழ்க்கை கதையை ‘வனயுத்தம்’ என்ற பெயரிலும், ராஜீவ்காந்தி கொலை வழக்கை ‘குப்பி’ என்ற பெயரிலும் படமாக எடுத்து வெளியிட்டார். தற்போது வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்கும் அவர் அடுத்ததாக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையை வெப் தொடராக எடுக்க திட்டமிட்டுள்ளார்.

    விஜய் சேதுபதி

    இதில் பிரபாகரன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ள ஏ.எம்.ஆர்.ரமேஷ், பிரபாகரன் வாழ்க்கை சம்பவங்கள் முழுவதும் இந்த தொடரில் இருக்கும் என கூறியுள்ளார். 
    பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படத்திற்கும், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படத்திற்கும் மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அதன்படி 2019ம் ஆண்டுக்கான விருது பட்டியலில் தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசின் விருது அறிவித்துள்ளது. இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் கடந்த ஆண்டு ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கி இருந்தார். 

    அதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இருந்தார். இந்திய சினிமாவில் இது புதிய முயற்சி என்று பலரும் பாராட்டினர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மத்திய அரசின் விருதுக்கு ‘ஒத்த செருப்பு’ தேர்வாகி உள்ளது. 

    இதேபோல் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் என்ற தமிழ் திரைப்படத்திற்கு விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திரைப்படமும் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது
    பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்திற்கு இளம் இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்க உள்ளாராம்.
    யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘ராதே ஷ்யாம்’. பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ணகுமார் இயக்குகிறார். அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. கொரோனா அச்சுறுத்தால் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. 

    ஜஸ்டின் பிரபாகரன்

    இந்நிலையில், இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் பண்ணையாரும் பத்மினியும், ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் என சிறு பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்து வந்த இவருக்கு இப்படம் ஒரு ஜாக்பாட் தான். கடந்தாண்டு தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான டியர் காம்ரேட் படத்திற்கு இவர் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
    தெலுங்கானாவில் கொட்டி தீர்த்த கனமழை, வெள்ளம் காரணமாக பல கோடி ரூபாய் சேதம் அடைந்திருப்பதால் நடிகர்கள் பலர் நிவாரணம் கொடுத்து வருகிறார்கள்.
    தெலுங்கானாவில் கொட்டித்தீர்த்த கனமழை, வெள்ளம் காரணமாக 5000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார். பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக உடனடியாக ரூ 1,350 கோடி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மழை, வெள்ளம், அதனால் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக தெலங்கானாவில் மட்டும் 70 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர்

    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள தெலுங்கானாவுக்கு நடிகர் சிரஞ்சீவி ரூ.1 கோடியை தெலுங்கானா முதலமைச்சர் நிவாரணத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளார். அதுபோல் மகேஷ் பாபு ரூ.1 கோடியும், ஜூனியர் என்.டி.ஆர். ரூ.50 லட்சமும், விஜய் தேவரகொண்டா ரூ.10 லட்சமும் நிவாரண நிதியுதவியாக வழங்கி இருக்கிறார்கள். மேலும் பலர் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
    தமிழில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் வடிவேலு, மீண்டும் அரசியலில் ஈடுபடுவதாக வந்த செய்தி புரளி என்று அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
    தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகர் வடிவேலு. ஒரு சமயத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அந்தளவிற்கு பல படங்களில் பிசியாக நடித்து வந்தார். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி இருக்கிறார். சில ஆண்டுகளாக இவர் படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இருப்பினும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறார்.

    வடிவேலு

    இந்நிலையில், வடிவேலு பாஜக கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியானது. சமீபகாலமாக தமிழ் சினிமா நட்சத்திரங்களான கங்கை அமரன், ராதாரவி, நமீதா, காயத்ரி ரகுராம், குஷ்பு உள்ளிட்டோர் தேசிய கட்சியான பாஜகவில் இணைந்து இருக்கின்றனர். இதனால், வடிவேலுவும் இணைந்திருப்பதாக செய்திகள் வெளியானது.

    இது தொடர்பாக, வடிவேலு தரப்பில் விசாரித்த போது, அரசியலா, கட்சியா அதெல்லாம் இல்லை. அது எல்லாம் புரளி என்று கூறியிருக்கிறார்.

    தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது.
    பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. முதல் படத்திலேயே முத்திரை பதித்த அவர், தொடர்ந்து பையா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, மெட்ராஸ் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். 



    இந்த தம்பதிக்கு கடந்த 2013ம் ஆண்டு உமையாள் என்ற பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் கழித்து தற்போது கார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
    பல வெற்றி படங்களில் நடித்து வரும் பாபி சிம்ஹா, அடுத்ததாக பிரபல இயக்குனர் படத்தில் கேங்க்ஸ்டராக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    பாபி சிம்ஹா நடிப்பில் தற்போது புத்தம் புது காலை என்னும் ஆந்தாலஜி படம் வெளியானது. இதில் மிராக்கிள் என்ற தலைப்பில் திருடனாக பாபி சிம்ஹா நடித்திருந்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

    தமிழ், தெலுங்கு என பிசியாக இருக்கும் பாபி சிம்ஹா இப்போது புதிய படமொன்றில் மீண்டும் தன்னை நீருபிக்க தயாராகியுள்ளார். 5 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரப்பட உலகில் பிரபலமான விக்ரம் ராஜேஷ்வர் இப்படத்தை இயக்கவுள்ளார். 

    பாபி சிம்ஹா - விக்ரம் ராஜேஷ்வர் இணையும் கேங்க்ஸ்டர் படத்துக்கு 'அவள் அப்படித்தான்', 'பன்னீர் புஷ்பங்கள்', 'கடலோர கவிதைகள்', 'சீவலப்பேரி பாண்டி', மற்றும் பல படங்களின் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய கே.ராஜேஷ்வர் இப்படத்திற்கும் எழுதுகிறார். இவர் விக்ரம் ராஜேஷ்வரின் தந்தை. 'நியாய தராசு', 'அமரன்', 'துரைமுகம்', 'அதே மனிதன்', 'இந்திர விழா' மற்றும் பல படங்களையும் கே.ராஜேஷ்வர் இயக்கியுள்ளார்.

    பாபி சிம்ஹா

    தற்போது இதன் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×