என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தற்போது தலைகீழாக தொங்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பதறிப் போய் இருக்கிறார்கள்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். இவரது நடிப்பில் அதோ அந்த பறவை போல, கடாவர் திரைப்படம் உருவாகியுள்ளது. சமீப காலமாக அமலாபால் சமூக வலைத்தளத்தில் சர்ச்சை புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் அமலா பால்.

ஆண் நண்பர்களுடன் மதுகோப்பையுடன் இருக்கும் படங்களை வெளியிட்டார். இன்னொரு ஆண் நண்பர் அருகில் நிற்க கடற்கரையில் படுத்திருப்பதுபோன்ற புகைப்படம் வந்தது. பின்னர் புகைப்பிடித்து வாயில் இருந்து வரும் புகையை வட்டமாக வெளியிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

தற்போது துணியில் தலைகீழாக தொங்குவது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். வித்தியாசமாக யோகா செய்யும் அமலா பாலின் இந்த போட்டோக்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும் பதறிவிட்டனர்.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைதாகி இருக்கும் கணவர் ஹோம்நாத் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் நட்சத்திர ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர். இருவருக்கும் அடுத்த மாதம் ஊர் அறிய திருமணம் நடைபெற இருந்த நிலையில் அக்டோபர் மாதம் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
திருமணமாகி 2 மாதங்களிலேயே சித்ரா தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதன்படி இன்று காலை 8.15 மணியளவில் ஹேம்நாத் விசாரணைக்காக ஆர்.டி.ஓ. முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். ஆர்.டி.ஓ. கேட்ட கேள்விகளுக்கு ஹேம்நாத் முறையாக பதில் அளித்துள்ளார். பல மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடைபெற்றது.

தற்போது ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை முடிந்து ஹேம்நாத் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பதால் பொன்னேரி கிளைச்சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றம் என சிறைத்துறை தகவல் அளித்துள்ளது.
இந்தியில் சூப்பர் ஹிட்டான அந்தாதூன் படத்தின் ரீமேக்கில் பிரசாந்துடன் பிரபல நடிகர் இணைந்திருக்கிறார்.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க இருக்கிறார்.

இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார் சிம்ரன். பொன்மகள் வந்தால் பட இயக்குனர் பேட்ரிக் இப்படத்தை இயக்க இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் பிரபல நடிகர் கார்த்திக் இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இருக்கிறார்கள்.
பல வெற்றி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் ஶ்ரீகாந்த், தற்போது சைக்கோ கிரைம் திரில்லர் படத்தில் வெற்றியுடன் இணைந்து நடிக்கிறார்.
சஹானா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.கே.குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. இதில் பல இளம் ரசிகைகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட நாயகன் ஶ்ரீகாந்த்தும், 8 தோட்டாக்கள் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக அபூர்வா ராவ் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடிக்கிறார்.

இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்குகிறார். சூழ்நிலை சிலரை இரையாக்கும். அதில் வெகுசில தருணங்களில் அந்த இரையே வேட்டையாடத் துவங்கி தீங்கு செய்யும் செயலே..தீங்கிரை. சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரில் கொரியன் படங்களுக்கு கொஞ்சமும் சளைக்காத வித்தியாசமான கதைக்களத்துடன் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படம் உருவாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பரபரப்பாக மிகுந்த பொருட்செலவில் படமாக இருக்கிறது.

பிரகாஷ் நிக்கி இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக என்.கே. ராகுல். மணிகுமரன் சங்கரா படத்தொகுப்பை கவனிக்கிறார். நிர்வாக தயாரிப்பாளர் ஆம்ஸ்ட்ராங் பிரவீன் மற்றும் ப்ரோடக்ஷன் கண்ட்ரோல் கே.எஸ். ஷங்கர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பிரகாஷ் ராகவதாஸ் இயக்குகிறார்.
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வரும் கௌதம் கார்த்திக்கிடம் செல்போனை திருடிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக். இவர் தமிழ் சினிமாவின் இளம் நடிகராக நடித்து வருகிறார். இவர்கள் போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் வசித்து வருகின்றனர். கெளதம் கார்த்திக் கடந்த செப்டம்பர் 2ம் தேதி அதிகாலை தனது ஸ்மார்ட் சைக்கிளை எடுத்துக் கொண்டு மெரினா சாலையில் சைக்கிளிங் சென்றுள்ளார்.

ராதாகிருஷ்ணன் - டி.டி.கே. சாலை சந்திப்பு வழியாக வீடு திரும்பி கொண்டிருந்த கெளதம் கார்த்திக்கை 2 பேர் வழிமறித்து அவருடைய விலையுயர்ந்த சாம்சங் செல்போனை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மயிலாப்பூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கெளதம் கார்த்திக்கின் செல்போனை திருடியதாக மயிலாப்பூர் குயில் தோட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனையும், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சரத் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகி ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.
விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் தீபாவளியன்று வெளியானது. யூடியூப் தளத்தில் 'மாஸ்டர்' டீசர் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

தற்போது மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. சில நிமிடத்தில் இந்த டீசர் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று பல லட்சம் பார்வையாளர்களை கடந்தது. மேலும் அதிக லைக்குகளையும் குவித்து வருகிறது.
உலக சினிமா ரசிகர்களிடையே புகழ்பெற்ற நடிகர் ஜாக்கிசானுக்கு இந்திய நடிகர் மாதவன் உதவயிருக்கிறார்.
உலகளவில் புகழ் பெற்றவர் நடிகர் ஜாக்கி சான். இவர் ஆக்ஷன் படங்களில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக் கொண்டு வருகிறார். ஆனாலும் அவர் ரசிகர்களுக்காக அவர் சில படங்களில் நடிக்கிறார். அப்படி நடித்த படம் தான் வான்கார்ட்.

இந்த படம் சீனாவில் ஜனவரி 30 ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக செப்டம்பர் மாதம் ரிலீஸானது. அங்கு பெரிய வெற்றியைப் பெற்ற அந்த திரைப்படம் இப்போது இந்தியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

இந்நிலையில் வான்கார்ட் படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் மாதவன் நாளை மாலை வெளியிட இருக்கிறார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர், பாடகியுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்.
மலையாளம், தெலுங்கு படங்களில் பாடி வருபவர் அபயா ஹிரன்மயி. அவர் கோபி சுந்தர் இசையில் தான் அதிகம் பாடியிருக்கிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து வரும் கோபி சுந்தருக்கும், ப்ரியா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கோபி சுந்தர் தன் மனைவியை பிரிந்துவிட்டார்.


இந்நிலையில் கோபி சுந்தரும், அபயாவும் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள். கடந்த 9 ஆண்டுகளாக அபயாவுடன் இருப்பதாக கோபி சுந்தர் தெரிவித்தார். கோபி சுந்தருடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது குறித்து அபயா சமீபத்தில் தான் மனம் திறந்து பேசினார். அதில் இருந்து கோபி சுந்தருடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் படத்தால் நடிகர் சிம்புக்கு பிரச்சனை ஏற்பட இருக்கிறது.
சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தை வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் மாஸ்டர் திரைப்படத்தை ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஈஸ்வரன் படத்துக்கு 100 திரையரங்குகள் மட்டுமே கிடைக்கும் சூழல் ஏற்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

இதனால் ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் சிலம்பரசனின் பிறந்த நாளை முன்னிட்டு ஜனவரி இறுதியில் வெளியிட முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலமாக மிகவும் பிரபலமான அபர்ணதி மலைவாழ் பெண்ணாக நடித்துள்ளார்.
கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தருண் குமார், அபர்ணதி நடித்த தேன் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளது. இந்த படத்தின் வினியோக உரிமையை பிரபல தயாரிப்பாளரான டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் கைப்பற்றி அடுத்த ஆண்டு வெளியிடுகிறார்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது, ’தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் பெரும்பாலான படப்பிடிப்பு நடந்தது. கதாநாயகனின் தொழில் தேன் எடுப்பது. சில தடைகளை மீறி அவர் கதாநாயகியை திருமணம் செய்கிறார். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை எப்படி மாறியது என்பதை உணர்வுபூர்வமாக கூறியிருக்கிறோம்.

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலமாக பிரபலமான அபர்ணதி மலைவாழ் பெண்ணாக நடித்துள்ளார். நம் நாட்டில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. மைனா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
ராம்தேவ் இயக்கத்தில் மீரான், மேகனா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பழகிய நாட்கள்’ படத்தின் முன்னோட்டம்.
ராம்தேவ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பழகிய நாட்கள்’. மீரான் என்ற புதுமுகம் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மேகனா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பிரபல நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ், இயக்குனர் ஸ்ரீநாத், வின்சென்ட் ராய், சுஜாதா, நெல்லை சிவா, சிவக்குமார், மங்கி ரவி ஆகியோர் நடித்து உள்ளனர்.

இளம் வயதில் ஏற்படும் காதல் எவ்வாறு முடிவுறுகிறது. அதே பக்குவப்பட்ட காதல் அவர்களின் வாழ்வியலை எவ்வாறு உறுதிப்படுத்துகிறது என்பதை கூறும் காதல் கதை தான் இந்த படம். சண்டைக் காட்சிகள் இன்றி உருவாகி இருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம்தேவ் இயக்கி உள்ளார். ஜான் ஏ. அலெக்ஸிஸ் - ஷேக் மீரா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிலிப் விஜயக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘சிவா மனசுல சக்தி’ என்கிற ஹிட் படத்தை கொடுத்த ஜீவா - ராஜேஷ் கூட்டணி, தற்போது மீண்டும் இணைய உள்ளதாம்.
ஜீவா நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான சிவா மனசுல சக்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜேஷ். குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக வெளியாகி இருந்த இதில் ஜீவா, சந்தானம் இணைந்து நடித்திருந்த காமெடி காட்சிகள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஜீவாவுக்கு இப்படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து பெரிய பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தன.

இந்நிலையில், நடிகர் ஜீவா - இயக்குனர் ராஜேஷ் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதையை சிவா மனசுல சக்தி பட பாணியில் ராஜேஷ் அமைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தில் காமெடியனாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படம் குறித்த அறிவிப்பை பொங்கலையொட்டி வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். நடிகர் ஜீவா தற்போது மேதாவி, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.






