என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அனிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தில் சிறைவாசம் அனுபவித்த கைதிகளை நடிக்கவைக்க உள்ளார்களாம்.
    சசிகுமார் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘பகைவனுக்கு அருள்வாய்’. இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார். இதில் சசிகுமா ஜோடியாக வாணி போஜன், பிந்து மாதவி நடிக்கின்றனர். மேலும் நாசர், சதிஷ், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திரில்லர் திரைப்படமாக இது உருவாகிறது. ஜிப்ரான் இசையமைக்க உள்ளார்.

    பகைவனுக்கு அருள்வாய் பட போஸ்டர்

    கைதிகளின் வாழ்க்கை முறையைப் பற்றி கதைகளம் அமைந்துள்ளதால், உண்மையிலேயே சிறைவாசம் அனுபவித்த கைதிகளை நடிக்கவைக்க உள்ளார்களாம். இதற்காக சிறையில் இருந்து விடுதலையான சிலரை அணுகி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். சிறையில் இருந்தவர்களை நடிக்க வைத்தால் கதையின் நம்பகத்தன்மைக்கு உதவும் என்பதால் அவர்களை நடிக்க வைப்பதாக இயக்குனர் கூறி உள்ளார்.
    பீட்டர் பால் உடன் பிரச்சனை ஏற்பட்டு சமீபத்தில் பிரிந்த வனிதா, தற்போது மீண்டும் காதலிப்பதாக பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    நடிகை வனிதா கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுவிட்டார். இதனிடையே கடந்த ஜூன் மாதம் இவர் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார். 

    பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. வனிதா - பீட்டர் பால் திருமண உறவு சில மாதங்களே நீடித்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக பிரிந்து விட்டனர்.

    வனிதாவின் இன்ஸ்டா பதிவு

    இந்நிலையில், வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் காதலிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். ஆனால் எதற்காக அவ்வாறு பதிவு செய்தார், என்பது தெரியவில்லை. வனிதாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    நடிகை சித்ரா தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது பற்றி ஹேம்நாத்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் நட்சத்திர ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர். இருவருக்கும் அடுத்த மாதம் ஊர் அறிய திருமணம் நடைபெற இருந்த நிலையில் அக்டோபர் மாதம் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் சித்ரா மீது சந்தேகம் அடைந்த ஹேம்நாத் அவரை துன்புறுத்தி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகே ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    திருமணமாகி 2 மாதங்களிலேயே சித்ரா தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது. சிறையில் இருக்கும் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்துவதற்காக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, பொன்னேரி சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார்.

    அதில், பலத்த பாதுகாப்புடன் ஹேம்நாத்தை ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதன்படி இன்று காலை 8.15 மணியளவில் ஹேம்நாத் விசாரணைக்காக ஆர்.டி.ஓ. முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் ஹேம்நாத்தை சிறைத்துறை காவலர்கள் அழைத்து வந்தனர்.

    சித்ரா தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது பற்றி ஹேம்நாத்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆர்.டி.ஓ. கேட்ட கேள்விகளுக்கு ஹேம்நாத் முறையாக பதில் அளித்துள்ளார். பல மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடைபெற்றது.

    விசாரணையின்போது ஹேம்நாத் அளித்த தகவல்களை வாக்குமூலமாக ஆர்.டி.ஓ. பதிவு செய்துள்ளார். மதியம் 12 மணிக்கு பிறகும் விசாரணை நீடித்தது.

    முழு விசாரணை முடிந்த பிறகு தான் ஆர்.டி.ஓ. விசாரணையில் ஹேம்நாத் என்ன சொல்லி இருக்கிறார்? என்பது தெரியவரும்.

    சித்ராவிடம் நெருங்கி பழகிய நடிகைகளிடமும் அவருடன் தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ள நடிகர்களிடமும் நாளை ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார்.

    சித்ரா மற்றும் ஹேம்நாத் பெற்றோரிடம் ஏற்கனவே ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்தின் கதை குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில் ‘தளபதி 65’ படத்தின் கதை குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. அதன்படி நெல்சன் இயக்கத்தில் சிம்பு நடித்து கைவிடப்பட்ட ‘வேட்டை மன்னன்’ படத்தின் கதை தான், ‘தளபதி 65’ படத்தின் கதை என்று கூறப்படுகிறது. மேலும் அந்தக் கதையில் விஜய்க்காக ஒரு சில மாற்றங்களை நெல்சன் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    வேட்டைமன்னன் பட போஸ்டர்

    இயக்குனர் நெல்சன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சிம்புவை வைத்து ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தை இயக்கினார். ஒரு சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில், ஒரு சில காரணங்களால் படம் கைவிடப்பட்டது. இதையடுத்து நயன்தாராவை வைத்து அவர் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் அவருக்கு அறிமுக படமாக அமைந்தது. 
    வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் சித்தார்த், அடுத்ததாக சூப்பர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளாராம்.
    சித்தார்த் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'அவள்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிலிந்த் ராவ்.  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் வாரிக் குவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா நடிக்கும் 'நெற்றிக்கண்' படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.

    சித்தார்த்

    இந்நிலையில், மிலிந்த் ராவ் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவள் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை அவர் எழுதி முடித்துவிட்டாராம். முதல் பாகத்தில் நடித்த சித்தார்த் தான் இதிலும் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    அந்தகாரம் படத்தின் வெற்றியை அட்லீ உள்ளிட்ட படக்குழுவினர் நட்சத்திர ஓட்டலில் கொண்டாடி உள்ளனர்.
    இயக்குனர் அட்லீ தயாரித்த படம் ‘அந்தகாரம்’. அறிமுக இயக்குனர் விக்னராஜன் இயக்கியிருந்த இப்படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்திருந்தார். மேலும் வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிரதீப் குமார் இசையமைக்க, எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்திருந்தார்.

    இப்படம் கடந்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது. படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரும் படக்குழுவை பாராட்டினர். 

    அந்தகாரம் படக்குழு

    இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி உள்ளனர். இதற்காக நட்சத்திர ஓட்டலில் நடத்தப்பட்ட பார்ட்டியில் தயாரிப்பாளர் அட்லீ, அவரது மனைவி பிரியா, நடிகர்கள் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் உள்பட படக்குழுவினர்  அனைவரும் கலந்து கொண்டனர். 
    பிரசாந்த் நடிக்க உள்ள அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளாராம்.
    ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது. 

    சந்தோஷ் நாராயணன்

    இந்தப் படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் ஆயுஷ்மான் குரானா வேடத்தில் பிரசாந்த் நடிக்கிறார். வில்லியாக சிம்ரன் நடிக்க உள்ளார். பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே ஜே பிரட்ரிக் இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளாராம்.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் சுந்தர் சி, அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்தில் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளாராம்.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் சுந்தர் சி. குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவரான சுந்தர் சி, படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்த ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

    சமீபத்தில் இவர் தயாரித்த ‘நாங்க ரொம்ப பிஸி’ திரைப்படம் தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. சுந்தர் சி.யிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பத்ரி இப்படத்தை இயக்கினார். இவர் ஏற்கனவே வீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு, தில்லுமுல்லு ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

    சுந்தர் சி, ஜெய்

    இந்நிலையில், சுந்தர் சி அடுத்ததாக தயாரிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தையும் பத்ரி தான் இயக்க உள்ளாராம். அதுமட்டுமின்றி இந்த படத்தில் சுந்தர் சி ஹீரோவாகவும் நடிக்கிறாராம். மேலும் இந்த படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹீரோவை விட வில்லனுக்கு பவர்புல்லான ரோல் என்பதால் ஜெய் இதில் நடிக்க சம்மதித்ததாக கூறப்படுகிறது.
    நடிகர் பார்த்திபன், தான் அரசியல் கட்சி தொடங்கினால் என்ன பெயர் வைப்பேன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் பார்த்திபன். கடந்தாண்டு அவர் மட்டும் நடித்து இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்தினார். இந்த படத்தை திரையுலகினர் பலரும் பாராட்டினர். இப்படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்து வருகிறது.

    அந்தவகையில், அண்மையில் புதுவை அரசு ஒத்த செருப்பு படத்துக்கு விருது வழங்கியது. அப்போது பேசிய பார்த்திபன், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்திருந்தார்.

    பார்த்திபன்

    இந்நிலையில், சமீபத்திய பேட்டியில், இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என கூறியுள்ள அவர், தான் அரசியல் கட்சி தொடங்கினால் புதிய பாதை என பெயர் வைப்பேன் என தெரிவித்துள்ளார்.  

    பார்த்திபன் இயக்கி நடித்த முதல் படம் புதிய பாதை. 1989-ல் திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்துக்கு சிறந்த தமிழ் படம் மற்றும் சிறந்த துணை நடிகை ஆகிய 2 தேசிய விருதுகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 
    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் ரகுல் பிரீத் சிங், வருங்கால கணவர் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
    என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்தவர், ரகுல் பிரீத் சிங். தற்போது சிவகார்த்தியேன் நடிக்கும் அயலான், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.

    அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: “பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தால்தான் நடிகைகளுக்கு மதிப்பு கிடைக்கும். அதிர்ஷ்டவசமாக எனக்கு சினிமாவில் அறிமுகமான ஆரம்பத்திலேயே முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன். 

    ரகுல் பிரீத் சிங்

    இப்போது ஆறு படங்கள் கைவசம் உள்ளன. திருமணம் வாழ்க்கையில் முக்கியமானது. எனக்கு பிடித்த மாதிரி திருமணம் செய்து கொள்ள ஆசை. எனக்கு கணவராக வருபவர் வாழ்க்கையில் தெளிவான முடிவுகள் எடுப்பவராகவும், எதிர்காலத்தை எப்படி அமைத்துகொள்ள வேண்டும் என்பதில் எந்த குழப்பமும் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். 

    அதே மாதிரி சடங்கு, சம்பிரதாயங்களுக்கும், நமது கலாசாரத்துக்கும் மதிப்பு கொடுப்பவராகவும் இருக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை விதிமுறைகளை அவர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். என்னுடைய குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மத்தியில் எனது திருமணம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்”. இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறியுள்ளார்.
    டி.வி. நடிகை சித்ரா தற்கொலை விவகாரத்தில் தனது கணவர் ஹேம்நாத்தின் தந்தையிடம் சித்ரா புகார் தெரிவித்த செல்போன் ஆதாரத்தை வைத்து அவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    பூந்தமல்லி:

    டி.வி. நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சித்ராவின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத்தின் பெற்றோரிடம் விசாரணை முடிவடைந்த நிலையில் சிறையில் இருக்கும் ஹேம்நாத்தை அழைத்து வந்து இன்று ஆர்.டி.ஓ. விசாரணை செய்ய உள்ளார்.

    இந்த நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஒரு பிறந்தநாள் விழாவுக்கு சென்றபோது சித்ராவுக்கும், ஹேம்நாத்துக்கும் காதல் மலர்ந்து பதிவு திருமணமும் நடைபெற்றது.

    நாடகத்தில் நடித்து வந்த சித்ரா நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஆரம்பித்த போதுதான் ஹேம்நாத்துக்கு சந்தேகம் அதிகரிக்க ஆரம்பித்தது. மேலும் அது போன்று நெருக்கமான காட்சிகளில் தொடர்ந்து நடிக்கக் கூடாது என்று சித்ராவிடம் ஹேம்நாத் கூறி சண்டை போட்டதாக கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட சித்ரா ஹேம்நாத்தின் தந்தையிடம், ஹேம்நாத் தன்னை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தும் விஷயத்தை செல்போனில் கூறி வந்துள்ளார். அந்த ஆடியோ பதிவு அழிந்துள்ளதாகவும் அதனை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்தபோதுதான் தகவல் வெளியானது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    செல்போன் ஆதார அடிப்படையிலேயே ஹேம்நாத் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேம்நாத் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
    நடிகர் விஜயகுமார் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, தயாரிப்பாளராகவும் ஆனார். அவர் தயாரித்த "நெஞ்சங்கள்'' படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.
    படத்தயாரிப்பாளராக மாறிய பின்னணி குறித்து, விஜயகுமார் கூறியதாவது:-

    "1980-ம் வருடம் எனக்கு படங்கள் கொஞ்சம் குறைவாக இருந்த நேரம். ஒருநாள் சிவாஜி சாருடன் பேசிக்கொண்டிருந்தபோது, "விஜயா! நீ எப்போது படம் தயாரிக்கப்போறே?'' என்று கேட்டார்.

    நான் திடுக்கிட்டேன். "என்னண்ணே! தயாரிப்பாளர் ஆவது சாதாரண விஷயமா? தவிரவும் எனக்கு அதில் அனுபவம் எதுவும் இல்லையே'' 

    என்றேன்.அண்ணன் சிவாஜியோ என் உணர்வுகள் எதையும் கண்டு கொள்ளாமல்,

    "நீ நாளைக்கு சிவாஜி பிலிம்சுக்கு போய், தம்பி சண்முகத்தை பாரு'' என்றார்.

    அண்ணன் இப்படிச் சொல்லி விட்டாரே தவிர, எனக்குள் உள்ளுக்குள் உதறல்தான். என்றாலும், அவர் சொல்லி விட்டாரே என்பதற்காக சண்முகம் சாரை பார்க்கப் போனேன். அவர் சிவாஜி பிலிம்சில் இல்லை. சிவாஜி தோட்டத்துக்கு போயிருப்பதாகச் சொன்னார்கள்.

    அங்கே போய் பார்த்தேன். என்னைப் பார்த்தவர், "அண்ணன் (சிவாஜி) சொன்னாரு! கையில் எவ்வளவு பணம் வெச்சிருக்கீங்க?'' என்று கேட்டார்.

    பதிலுக்கு நான், "பணம் எல்லாம் கிடையாது. அண்ணன் உங்களை பார்க்கச் சொன்னாரு! அதன்படி வந்திருக்கிறேன்'' என்றேன்.

    "சரி! என்ன கதை?'' என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

    "அதுவும் அண்ணன்தான் சொல்லணும். படம் எடுக்கச் சொல்லி என்னிடம் அண்ணன் (சிவாஜி) தானே சொன்னார்'' என்றேன்.

    உடனே அவர், "அண்ணனும் மேஜர் சுந்தர்ராஜனும் சமீபத்தில் பார்த்த ஒரு இந்திப்படம் பற்றி பெரிசா பேசிக்கிட்டிருந்தாங்க! அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அந்தக் கதையோட தமிழ் உரிமை வாங்கிடுங்க'' என்றார்.

    மேஜர் சுந்தர்ராஜன், சிவாஜி சாரின் நெருங்கிய நண்பர். அப்போது அவர் டைரக்டராகவும் மாறி, சிவாஜி சாரை "கல்தூண்'', "லாரி டிரைவர் ராஜாக்கண்ணு'' என்று 2 படங்கள் இயக்கினார். இந்திப்படத்தின் தமிழ் உரிமை வாங்கியதும், அதை மேஜரே இயக்குவதாக  இருந்தது.

    நான் இந்தித் தயாரிப்பாளரை சந்தித்து, தமிழுக்கு உரிமை வாங்கினேன். ஒப்பந்தம் கையெழுத்தானதும் படத்தின் ஒரிஜினல் பிரிண்ட்டை ஒரு வாரத்தில் அனுப்பி வைப்பதாக சொன்னார்கள்.

    சொன்னபடி ஒரு வாரத்தில் பிரிண்ட் வந்தது. இராம.அரங்கண்ணலின் ஆண்டாள் தியேட்டரில் படத்தை திரையிட்டுப் பார்த்தோம். இந்தி நடிகர் அமல் பலேகர் நடித்திருந்த படம் அது. அவர் `காமெடி டைப்'பில் நடிக்கக்கூடிய நடிகர். படம் முழுக்க அவர் பாணியிலேயே நடித்திருந்தார். முழுப்படமும் பார்த்து முடித்ததும் `இந்த கேரக்டர் சிவாஜி சாருக்கு எப்படி செட்டாகும்?' என்று யோசனை வந்துவிட்டது.

    மறுநாள் காலையில் சிவாஜி சார் வீட்டுக்குப் போனேன். அவரை பார்த்ததும், "அண்ணே! நேற்று இந்திப்படம் பார்த்தேன். அது நீங்க பண்ணவேண்டிய படம் இல்லையே'' என்றேன்.

    அப்போது அங்கிருந்த மேஜர் சுந்தரராஜன், "இந்த இந்திப்படத்தின் மூலக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு சிவாஜி சாருக்கு பொருத்தமான விதத்தில் படத்தை நான் முற்றிலுமாக மாற்றி விடுவேன்'' என்றார்.

    அவர் இப்படிச் சொன்னபோது சிவாஜி சார் என்னைப் பார்த்தார். "அப்புறம் என்னடா?'' என்பது போலிருந்தது அந்தப் பார்வை. நான் அமைதியானேன். பட வேலைகள் தொடங்கின.

    சிவாஜி சார் ஹீரோ. லட்சுமி ஹீரோயின் என்பது முடிவாயிற்று.

    சண்முகம் சார் பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். ஒரு பைனான்சியர் என்னிடம் வீட்டு டாக்குமெண்டை வாங்கிக்கொண்டு 2ஷி லட்சம் ரூபாய் கொடுத்தார்.

    பட வேலைகள் தொடர்ந்தன. சத்யா ஸ்டூடியோவில் பெரிய அளவில் செட் போட்டு படத்தை தொடங்கினோம். 10 நாள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் கையிருப்பு முழுவதும் காலி.

    மறுபடி பைனான்ஸ் பெற வேண்டிய கட்டாயம். சண்முகம் சாரும், "பொறு! ஏற்பாடு பண்றேன்'' என்றார். ஆனால் அவர் ஏற்பாடு செய்த பைனான்சியர், "மேற்கொண்டு பணம் தர முடியாது'' என்று கைவிரித்து விட்டார்.

    படம் 10 நாள் படப்பிடிப்போடு நின்று, மேற்கொண்டு பணமும் இல்லாத நிலையில் தான் ஒரு விழாவில் அண்ணன் எம்.ஜி.ஆரை சந்தித்தேன்.

    அது 1980-ம் வருஷம். அண்ணன் அப்போது தேர்தலில் ஜெயித்து மீண்டும் முதல்-அமைச்சர் ஆகியிருந்தார். அவரது மேக்கப் மேனாக இருந்த ராமதாசின் மகன் திருமணம் சென்னை அசோக் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு அண்ணன் சிவாஜி உள்ளிட்ட கலையுலகமே திரண்டு வந்திருந்தது.

    என் படம் முதல் ஷெட்ïலோடு நின்று 15 நாள் ஆகியிருந்த நிலையில் இந்த விழாவுக்கு போயிருந்தேன். முதல்-அமைச்சர் கலந்து கொண்ட விழா என்பதால் எல்லா அமைச்சர்களும் தவறாமல் வந்திருந்தார்கள். எம்.ஜி.ஆர். முதல் வரிசையில் அமர்ந்திருக்க, திருமண ஏற்பாடுகள் மேடையில் நடந்து கொண்டிருந்தன. நான் 10-வது வரிசையில் உட்கார்ந்திருந்தேன். திடீரென அண்ணன் எம்.ஜி.ஆர். எதற்கோ திரும்ப, அவர் பார்வை என் மீது பட்டது. உடனே விரலை சொடுக்கி, என்னை அழைத்தார். நான், எனக்கு பக்கத்தில் உள்ள யாரையோ அவர் அழைக்கிறார் என்று நினைத்து, அமைதியாக இருந்தேன். அண்ணன் விடவில்லை. இருக்கையில் இருந்து எழுந்து என்னைப் பார்த்து விரல் நீட்டி அழைத்தார்.

    அழைத்தது என்னைத்தான் என்று தெரிந்ததும் எழுந்து, அவரை நோக்கிச் சென்றேன். நான் அவர் அருகில் போனதும், பக்கத்தில் இருந்த ஒரு அமைச்சர் எழுந்து, தனது இருக்கையை எனக்கு கொடுக்க முன்வந்தார். ஆனால், அந்த அமைச்சரை அமரச்சொன்ன அண்ணன், என்னைத் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.

    எனக்கு தர்ம சங்கடமான நிலை. எப்பேர்ப்பட்ட அன்பு இருந்தால் இப்படிச் செய்வார்? திருமணம் நடந்த அந்த அரை மணி நேர வைபவத்திலும் அவரது மடியிலேயே உட்கார வைத்துக் கொண்டார்.

    திருமணம் முடிந்ததும், அவரது காரில் என்னை தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். "என்ன நீ! ரொம்ப நாளா என்னை ஏன் பார்க்கவில்லை?'' என்று கேட்டார்.

    நான் படத்தயாரிப்பு விஷயத்தை விவரித்தேன். `சிவாஜி சார் நடிக்கிறார். மேஜர் டைரக்ட் செய்கிறார்' என்பதில் தொடங்கி 2ஷி லட்சம் பைனான்சில் படம் ஒரு ஷெட்யூலுடன் நிற்பது வரை கூறிவிட்டேன்.

    நான் சொல்லி முடித்ததும், "வீட்டு டாக்குமெண்டை வைத்தா பணம் வாங்கினாய்?'' என்று கேட்டார்.

    "ஆமாண்ணே! படம் எடுத்து முடித்ததும் திருப்பிடலாம்'' என்றேன்.

    அப்புறமாய் என்னை சாப்பிட வைத்து அனுப்பினார். இடையில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

    வீட்டுக்கு நான் திரும்பியபோது, என்னை பார்க்க ஒருவர் வந்து காத்திருந்தார். "சின்னவர் (எம்.ஜி.ஆர்) அனுப்பினாருங்க. உங்க படத்துக்கு 10 லட்சம் பைனான்ஸ் கொடுக்கச்சொன்னார். அதுல 2ஷி லட்சம் எடுத்துட்டுப்போய், உடனடியாக உங்கள் வீட்டு டாக்குமெண்டை மீட்கச் சொன்னாருங்க'' என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார், அவர்.

    எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அதாவது - ஆனந்த அதிர்ச்சி! இப்படி ஒரு அன்பா என் மீது!

    இப்போது அடுத்த "ஷெட்ïல்'' படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டும். பணம் வந்துவிட்டதே, கதாநாயகி லட்சுமியிடம் தேதி கேட்டபோது, அவரோ "நான் அமெரிக்கா போக வேண்டியிருக்கிறதே'' என்றார்.

    சொன்னபடி லட்சுமி அமெரிக்கா போய்விட்டதால் மறுபடியும் படப்பிடிப்பு தொடங்க முடியாத நிலை. இப்படி 20 நாள் போயிருந்த நிலையில் அண்ணன் எம்.ஜி.ஆரிடம் இருந்து எனக்கு போன். "என்ன தம்பி! படம் வளர்ந்து வருகிறதா?'' என்று கேட்டார்.

    நான் உண்மையைச் சொன்னேன். "லட்சுமி அமெரிக்காவில். அண்ணன் சிவாஜியோ இன்னொரு படத்தில். மறுபடி கால்ஷீட் கிடைத்தால்தான் படப்பிடிப்பு'' என்றேன்.

    "சரி'' என்று கேட்டுக்கொண்டவர், தனது படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த குஞ்சப்பனை அண்ணன் சிவாஜி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். அவர் சண்முகத்தை சந்தித்து, "விஜயகுமார் எடுக்கும் படத்தை சின்னவர் சீக்கிரம் முடித்து கொடுக்கச் சொன்னார்'' என்று 

    சொன்னார்.வந்ததே கோபம் சண்முகத்துக்கு. உடனே அவர் தனது அண்ணனிடம், "இவர் (விஜயகுமார்) எதற்காகப்போய் சின்னவரிடம் சொல்ல வேண்டும்?'' என்று கோபித்துக்கொண்டு விட்டார்.

    நான் சிவாஜி சாரிடம், "அண்ணே! நானாகப்போய் அண்ணனிடம் (எம்.ஜி.ஆர்) சொல்லவில்லை. நீங்களும் தான் மேக்கப் மேன் பையன் திருமணத்துக்கு வந்திருந்தீர்கள். அல்லவா. அப்போது என்னை அழைத்து பேசி, மடிமீதே உட்கார வைத்துக்கொண்டது வரை பார்த்தீர்கள். பிறகு வீட்டுக்கு அழைத்துச்சென்றபோது என் விஷயத்தைக் கேட்டார். அப்போது தயாரிப்பு பற்றி சொல்ல வேண்டியதாகி விட்டது. இரண்டாவது பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். அதன் பிறகு 20 நாள் ஆகியும் படப்பிடிப்பு வேலைகள் நடக்காததால், அதுபற்றி என்னிடம் போனில் கேட்டார். நானும் சொல்ல வேண்டியதாகி விட்டது.இதில் என் தவறு எதுவும் இல்லை'' என்றேன்.

    சிவாஜி சார் என்னைப் பார்த்தார். `இவ்வளவு நடந்து இருக்கிறதா?' என்ற கேள்வி அந்தப் பார்வையில் இருந்தது. "சரிடா! தம்பி சண்முகம் கிட்ட போய் தேதி வாங்கிக்கோ'' என்றார்.

    பிறகு, "நெஞ்சங்கள்'' மளமளவென தடங்கலின்றி வளர்ந்து ரிலீசானது. எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.

    இந்தப் படத்தில்தான் நடிகை மீனா அறிமுகமானார். அப்போது அவர் ஏழெட்டு வயது சிறுமி. படத்துக்கு 2,500 ரூபாய் பேசி, 500 ரூபாய் அட்வான்சாக கொடுத்தேன். பின்னாளில் பெரிய கதாநாயகி ஆகிவிட்ட மீனா, "சினிமாவில் நடிக்க எனக்கு முதல் அட்வான்ஸ் கொடுத்தவர் விஜயகுமார் சார்தான்'' என்று என்னை பல தடவை பல பேரிடம் சொல்லி பெருமைப்படுத்தியிருக்கிறார்.

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
    ×