என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தேர்வாகி உள்ளது.
    இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) கடந்த 1952ம் ஆண்டு முதல் எல்லா ஆண்டுகளும் நடத்தப்பட்டு வருகிறது. மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த விழா, இந்த ஆண்டு கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சர்வதேச கோவா திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பட்டியல்

    இந்நிலையில், தற்போது இந்த திரைப்பட விழாவில் தேர்வான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தேர்வாகியுள்ளார். அதுபோல் தேன் என்ற தமிழ் படமும் தேர்வாகியுள்ளது.
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சூர்யா, அருண் விஜய்யை ரேக்கிங் செய்ததாகவும், அதை அவர் மதிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
    நடிகர் சூர்யாவும் அருண் விஜயும் கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள். சில ஆண்டுகள் முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா, தான் லயோலா கல்லூரியில் பயிலும் போது தனக்கு ஜூனியராக இருந்த அருண் விஜயுடன் நிகழ்த்த நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார். 

    சூர்யா - அருண் விஜய்

    அந்த வீடியோவை நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. இதில் சூர்யா தனது ஜூனியரான அருண் விஜய்யை ரேக்கிங் செய்த அனுபவத்தை சூர்யா கூறுகிறார். நான் செய்ய சொன்னதை கடைசி வரை அருண் விஜய் என்னை மதிக்காமல் செய்ய வில்லை என்றார்.
    சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வரும் ரஜினி படக்குழுவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் அண்ணாத்த. நயன்தாரா, கீர்த்திசுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, சதீஷ் ஆகியோர் ரஜினியுடன் நடித்துவருகிறார்கள். கொரோனாவுக்கு முன்பாக முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்தனர். கொரோனாவுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் இருந்தது. ஏற்கெனவே 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், மீதம் இருக்கும் 40 சதவீத படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது.

    அண்ணாத்த

     ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடக்கிறது. படக்குழுவினருக்கு ரஜினி ஒரு வேண்டுகோள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு, ஜனவரி 10க்குள் அவருடைய டப்பிங் பணிகளையும் முடித்துவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதன்பின் கட்சி பணிகளில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதால் இந்த வேண்டுகோளை வைத்துள்ளார் என்கிறார்கள்.

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, தனது பெயரை திடீரென்று மாற்றி இருக்கிறார்.
    நடிகை தீபிகா படுகோன் இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த அனிமேஷன் மோஷன் கேப்சர் படமான கோச்சடையான் படத்தில் நடித்தார். இந்தி திரையுலகத்தில் கமர்ஷியல் நாயகியாக மட்டுமல்லாமல் தன்னை ஒரு நடிப்பு திறன் மிக்க கதாபாத்திரங்களிலும் ஈடுபடுத்திக் கொண்டு நடித்து வருகிறார் தீபிகா. 

    இவர் பாஜிராவ் மஸ்தானி என்ற படத்தில் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடித்தார். இப்படத்தில் முஸ்லிம் மன்னரின் பெண்ணான தீபிகா இந்து மன்னர் பாஜிராவை காதலித்து அவருக்கு ஒரு குழந்தையும் பெறும் கதாபாத்திரத்தில் நடித்தார்.

    தீபிகா படுகோனே

    ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் விதமாக தீபிகா படுகோனே என்ற தனது டிவிட்டர் சமூக வலைதள பக்கத்தையே தன் பெயருக்கு பதிலாக மஸ்தானி என்ற தனது பட கதாபாத்திரத்தின் பெயரை குறிப்பிட்டு மாற்றி இருக்கிறார்.
    டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரிக்க ஆர்.டி.ஓ. முடிவு செய்துள்ளார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    டி.வி. நடிகை சித்ரா செம்பரம்பாக்கம் அருகே உள்ள விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்கொலை செய்து கொண்ட சித்ராவுக்கு திருமணம் நடத்து சில மாதங்களே ஆனதால் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, சித்ராவின் பெற்றோர், சகோதரி, சகோதரர் மற்றும் கணவர் ஹேம்நாத்தின் பெற்றோரிடம் தனித்தனியாக 2 கட்டமாக விசாரணை நடத்தினார்.

    ஹேம்நாத்தை விசாரணைகாக ஆஜர்படுத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். நேற்று முன்தினம் ஹேம்நாத்திடம் 8 மணி நேரம் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்தினார்.

    இந்த நிலையில் சித்ராவுக்கு நெருக்கமானவர்கள், சித்ரா தற்கொலை செய்துகொண்ட விடுதியின் ஊழியர்கள், கடைசியாக சித்ராவுடன் பணியாற்றியவர்களிடம் இன்று (சனிக்கிழமை) விசாரணை செய்ய ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ முடிவு செய்து அவர்கள் ஆஜராக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்குமாருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. `அன்பாலயா' பிரபாகரன் தயாரித்த "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் ஹீரோவானார்.
    நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்குமாருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. `அன்பாலயா' பிரபாகரன் தயாரித்த "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் ஹீரோவானார்.

    நடிகர் விஜயகுமாருக்கு ஒரே ஆண் வாரிசு அருண்குமார். சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்.'' இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது சினிமா வாய்ப்பு தேடி வந்தது. அதனால் "எம்.பி.ஏ.'' படிக்க அமெரிக்காவுக்கு போக இருந்த திட்டத்தை கைவிட்டு, முழுநேர நடிகராகி விட்டார், அருண்குமார்.

    மகன் அருண்குமார் சினிமாவுக்கு வந்தது பற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "அருண்குமார் படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்துக் கொண்டிருந்தார். அவரது பள்ளி வாழ்க்கையே, பல பள்ளிகளில் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் நாடு விட்டு நாடும் தொடர்ந்தது.

    ஆரம்பப் படிப்பு சென்னை டான்போஸ்கோவில் தொடங்கியது. அதன் பிறகு `சோ'வின் சகோதரர் நடத்தி வரும் "லா சாட்டலின்'' பள்ளி. அதன் பின்னர் அமெரிக்காவில்

    2 வருடம் என உலகம் சுற்றியது. நான் நடிப்பை நிறுத்திவிட்டு அமெரிக்காவில் 2 வருடம் ரெஸ்டாரெண்ட் நடத்திய நேரத்தில், அருண் 2 வருடமும் அமெரிக்காவில் படித்தார். அதன் பிறகு சென்னை வந்தபோது மறுபடியும் `லா சாட்டலின்' பள்ளியில் படிப்பு.

    அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்குத்தான் பெற்றோர்களின் டிரான்ஸ்பரை பொறுத்து, இப்படி ஊர்ஊராய் பள்ளிகளில் மாறி மாறி படிக்க வேண்டியிருக்கும். அருணுக்கும் இந்த மாதிரியான அனுபவம் கிடைத்தது.

    பள்ளிப்படிப்பை முடித்து சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்.'' பட்டப்படிப்பில் சேர்ந்த பிறகு கூட, அருணுக்குள் சினிமா ஆர்வம் இருந்ததாக தெரியவில்லை. அந்த வாய்ப்பை தேடி வந்து ஏற்படுத்திக் கொடுத்தவர் தயாரிப்பாளர் `அன்பாலயா' பிரபாகரன்.

    அருண் "பி.காம்.'' இரண்டாம் ஆண்டு படிப்பை தொடர்ந்த நேரத்தில் `அன்பாலயா' பிரபாகரன், என்னை வந்து சந்தித்தார். அவரது படத்தில் நான் நடிப்பது தொடர்பாகத்தான் பேச வந்திருக்கிறார் என்று எண்ணினேன். அவரோ வந்ததும் வராததுமாக, "ஒரு நல்ல லவ் ஸ்டோரி. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். உங்க மகன் அருணை ஹீரோவாக அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்'' என்றார்.

    எனக்கு அதிர்ச்சி. சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் எந்த எண்ணமும் இல்லாத மகனுக்குள் வலுக்கட்டாயமாக சினிமாவை திணிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அதனால் அவரிடம், "பையன் பி.காம். முடித்து விட்டு, அமெரிக்காவில் எம்.பி.ஏ. படிக்க இருக்கிறான். அதனால் சினிமா வேண்டாமே'' என்று தவிர்க்கப்பார்த்தேன்.

    ஆனால் நடந்ததை தனது அம்மா மூலம் தெரிந்து கொண்ட அருண், "நான் நடிக்கிறேன். தயாரிப்பாளர் கிட்ட `சரி'ன்னு சொல்லும்படி அப்பாகிட்ட சொல்லுங்க'' என்று கூறியிருக்கிறார்.

    மகனின் விருப்பம் அதுவென தெரிந்த பிறகு தடைபோட விரும்பவில்லை. அதோடு லவ் ஸ்டோரி, ஏ.ஆர்.ரகுமான் இசை என்று தயாரிப்பாளர் பிரமாண்டம் காட்டி விட்டுப் போவதால், "சரி; நடிக்கட்டும்'' என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் படத் தயாரிப்பு தாமதித்துக் கொண்டே போனது. தயாரிப்பாளரைக் கேட்டால், "ஏ.ஆர்.ரகுமான் 3 பாட்டுக்கு டிïன் தந்துவிட்டார். இன்னும் 2 பாட்டுக்கு டிïன் தந்து விட்டால் படத்தை முழு வீச்சில் தொடங்கி முடிக்க ஏதுவாக இருக்கும்'' என்று சொன்னார்.

    எனக்கு நம்பிக்கை குறைந்தது. அவசரப்பட்டு சரி சொல்லிவிட்டோமோ என்று கூட நினைத்தேன்.

    இந்த நிலையில் திடுமென ஒரு நாள் வந்து நின்றார், தயாரிப்பாளர். ரகுமான் இசை தாமதமாவதால் வேறு ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறேன். சுந்தர் சி. இயக்குகிறார். படத்துக்கு "முறை மாப்பிள்ளை'' என்று பெயர் வைத்திருக்கிறேன். முதலில் அருண் இந்தப் படத்தில் நடிக்கட்டும். அடுத்து ரகுமான் பாட்டை முடித்துக் கொடுத்ததும் `லவ் ஸ்டோரி' எடுக்கலாம்'' என்றார்.

    சரி! நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து சினிமாவுக்குள் அருண் காலெடுத்து வைத்தாயிற்று. இனி பின்வாங்கினால் சரியாக இருக்காது. நடப்பது நல்லதாக இருக்கட்டும் என்றபடி "முறை மாப்பிள்ளை'' படத்துக்கு அருணை ஹீரோவாக்க சம்மதித்தேன்.

    படத்தின் பூஜை ஏவி.எம். ஸ்டூடியோ பிள்ளையார் கோவிலில் நடந்தது. நண்பர் ரஜினி வந்து அருணுக்கு பொட்டு வைத்து வாழ்த்தி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். அப்போது அவர், "என் இனிய நண்பர் விஜயகுமாரின் மகன் அருண் சினிமாவுக்கு வருவதை வாழ்த்துகிறேன். அவர் நல்லா வரவேண்டும். நல்லா வருவார்'' என்று வாழ்த்தினார்.

    அவர் வாழ்த்து பலித்தது. "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் அருண் நிலையான ஹீரோ ஆனார். தொடர்ந்து "பிரியம்'', "காத்திருந்த காதல்'', "கங்கா கவுரி'', "துள்ளித்திரிந்த காலம்'', "கண்ணால் பேசவா'', "அன்புடன்'', "பாண்டவர் பூமி'', "முத்தம்'', "இயற்கை'', "ஜனனம்'', "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது'' என தொடர்ந்து இப்போது ரிலீசான "தவம்'' வரை நடிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    இப்போதும் "வேதா'', "துணிச்சல்'' என திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கும் படங்களும் உண்டு.''

    இப்படிச் சொன்ன விஜயகுமார், நடிகர் அர்ஜ×ன், அருணை வைத்து தயாரித்த "தவம்'' படம் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து
    கொண்டார்.

    "அர்ஜ×ன் சார் என்னிடம் அடிக்கடி அருண் பற்றி கேட்பார். "நன்றாக நடிக்கவும் செய்கிறார். `பைட்'டும் சூப்பரா போடறார். பிறகு ஏன் விஜய், அஜித் மாதிரி இன்னும் அருண் பேசப்படவில்லை?'' என்று கவலை தெரிவிப்பார்.

    "எல்லாத்துக்குமே நேரம்னு ஒண்ணு இருக்கே'' என்பேன் நான்.

    ஒருநாள் திடுமென என்னை சந்தித்த அர்ஜ×ன், "அருண் விஷயத்தில் நீங்கள் சொன்ன `நேரம்' இப்போது வந்து விட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள். நான் அருணை ஹீரோவாகப்போட்டு ஒரு படம் தயாரிக்கிறேன். `தவம்' என்பது படத்துக்கு பெயர்'' என்றார்.

    எனக்கு ஆனந்த அதிர்ச்சி. தமிழ் சினிமாவில் ஒரு முதல் தர நடிகர்; `ஆக்ஷன் கிங்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் மாதிரி ஹீரோக்கள் தொடர்ந்து படம் எடுத்து தங்களை வளர்த்துக் கொள்ளவே நினைப்பார்கள். மாறுபட்டு என் மகனை ஹீரோவாகப் போட்டு படம் தயாரிக்கப்போகிறேன் என்று சொல்கிறாரே! இப்படியும் ஒரு அபூர்வ மனிதரா?'' என்ற வியப்புதான் ஆனந்த

    அதிர்ச்சியாகியிருந்தது.சொன்னபடியே `தவம்' படத்தை தயாரித்து ரிலீஸ் பண்ணி அருணுக்கு ஒரு வெற்றிப்படம் கொடுத்த தயாரிப்பாளராகவும் எனக்குள் நிலைத்து விட்டார்.

    படத்தில் அருணை வித்தியாசமான கதைக் களத்தில் நடிக்க வைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் தற்கொலைக்கு முயலும் கதாநாயகியை, "எங்கே என் கண்ணைப் பார்த்து சொல்லு'' என்று அருண் கேட்கிறபோது, அருணின் அப்பா, ஒரு நடிகர் என்பதையெல்லாம் நான் மறந்து ஒரு ரசிகனாக அந்தக் காட்சியில் அருணின் நடிப்போடு ஒன்றிவிட்டேன்.

    அருண்குமார் இந்தப்படம் முதல் `அருண் விஜய்' என்று, பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். புதிய பெயரில் வெற்றியும் அவரோடு கைகோர்த்துக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு ரசிகர்களின் ஆதரவு தேவை.

    அர்ஜ×ன் என் மகன் அருண் விஜய்யை ஹீரோவாக்கியது என்னை ரொம்பவே நெகிழ்ச்சியாக்கி விட்டது. இதன் விளைவு `தவம்' பட பாடல் கேசட்டு வெளியீட்டு விழாவின்போது என்னில் எதிரொலித்தது. அந்த விழாவில், "இனி நானும் வருஷம் 2 படம் தயாரிப்பேன். அதில் ஒரு படத்தில் அருண் விஜய் நடிப்பார். அடுத்த ஆண்டு முதல் தயாரிப்பு தொடங்கும்'' என்று கூறினேன். சொன்னபடி அடுத்த ஆண்டு படத்தயாரிப்பு தொடர்பான வேலைகளை இப்போதே தொடங்கி விட்டேன்.

    அருண் விஜய்யிடம் நான் அடிக்கடி சொல்லும் வாசகம்: "எப்போதும் `பிரஷ்' ஆகவே இரு! எந்தப்படம் பண்ணினாலும் அதை முதல் படமாக நினைத்து சிரத்தையோடு பண்ணு! உழைப்பு இருக்கிறது; தொழில் அக்கறை இருக்கிறது. இதோடு முழு ஈடுபாடும் கலந்து கொள்ளும்போது வெற்றியும் உன்னுடன் பின்னிப் பிணைந்திருக்கும்'' என்பதுதான்.

    சினிமா மீதான அவரது `தவம்' தொடர்ந்து நல்லவிதமாகவே கைகூடும் என்பது அவரது அப்பாவாக என் நம்பிக்கை.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அமீர்கான் தமிழில் வெற்றி பெற்ற படத்தின் ரீமேக்கில் இருந்து விலகி இருக்கிறார்.
    புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

     இந்தியில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து தயாரிப்பாளர் சஷிகாந்த் தயாரிக்க இருந்தார். புஷ்கர் - காயத்ரி இருவருமே இயக்க ஒப்பந்தமானார்கள்.

     விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷாரூக் கான் நடிப்பதாக இருந்தது. ஆனால், முழு திருப்தி இல்லை என விலகிவிட்டதாகக் கூறப்பட்டது. அவரைத் தொடர்ந்து விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அமீர் கான், மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகான் ஆகியோர் நடிப்பது உறுதியானது.

    இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் பல்வேறு படத்தின் பணிகள் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டது. இதனால் முன்பே ஒப்புக் கொண்ட பணிகள் அனைத்துமே மாறியிருப்பதால் 'விக்ரம் வேதா' படத்தின் இந்தி ரீமேக்கிலிருந்து அமீர் கான் விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
    யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில் தெரியவரும் என்று பிரபல நடிகர் விஷ்ணு விஷால், சூரி பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார்.
    நில மோசடி தொடர்பாக விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் சூரி. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் விஷ்ணு விஷால் - சூரி இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.

    இது தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை, ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் விஷ்ணு விஷால். அதற்குப் பிறகு நீதிமன்றத்தில் வழங்கு நடைபெற்று வருவதால், எதுவும் கருத்து தெரிவிக்காமல் இருந்தார்.

    இந்நிலையில், ரசிகர் ஒருவர், "சூரியை ஏமாத்தாதீங்க தல. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், அந்த சூரி செய்திக்குப் பிறகு உங்களை வெறுக்கிறேன்" என்று பதிவிட்டு இருந்தார். அந்த ரசிகருக்குப் பதிலளிக்கும் விதமாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

    விஷ்ணுவிஷால்

    "உண்மை இன்னும் வெளியே வரவில்லை. யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில் தெரியவரும். யார் நம்பிக்கை துரோகம் செய்தார்கள் என்பது சீக்கிரமாகவே வெளியே வரும். அதன் பிறகு என்னை வெறுப்பதா அல்லது இன்னும் நேசிப்பதா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். நான் என் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்"

    இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

    இளம் நடிகை ஒருவர் மாலுக்கு சென்ற போது தன்னுடைய பின்பக்கத்தை இரண்டு இளைஞர்கள் தட்டினார்கள் என புகார் கூறியுள்ளார்.
    மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ’ஹெலன்’. இந்த படம் தமிழில் விரைவில் ரீமேக்காக இருக்கிறது. இந்த படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார் நடிகை அன்னா பென். இவர் சமீபத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

    கேரளாவில் உள்ள மால் ஒன்றுக்கு சென்றேன். அப்போது மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த நேரத்தில் இரண்டு பேர் என்னை கடந்து சென்றபோது அதில் ஒருவர் என் பின் பக்கத்தில் கை வைத்து விட்டு சென்றார். அதற்கு நான் உடனே எதிர்வினையாற்ற முயன்றேன். ஒருவேளை தெரியாமல் பட்டிருக்குமோ என்று விட்டு விட்டேன். ஆனால் யோசித்துப் பார்த்தபோது அது திட்டமிட்டு செய்ததாகவே தெரிகிறது.

    அன்னா பென் பதிவு

    அது மட்டுமின்றி அந்த இரண்டு இளைஞர்கள் மாலில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் பின் தொடர்ந்து வந்தனர். என் அம்மா என்னை நோக்கி வந்ததை பார்த்ததும் தான் அவர்கள் விலகிவிட்டார்கள். இந்த நேரத்தில் அவர்களை பற்றி சொல்வதற்கு ஆயிரம் வார்த்தைகள் இருக்கிறது. எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இவ்வாறு அவர்கள் செய்வது பார்க்கும்போது ஆத்திரமாக வருகிறது.

    தவறான எண்ணம் கொண்ட ஆண்கள், பெண்களின் பாதுகாப்பை பறித்துக் கொள்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை என்றால் இதேபோல் மீண்டும் மீண்டும் நடக்கும் என்பதால் சொல்கிறேன். தவறு செய்தவரின் கன்னத்தில் ஓங்கி அறைய எனக்கு தைரியம் இல்லை. என்றாலும் தைரியமுள்ள பெண்கள் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். என்று அவர் பதிவு செய்துள்ளார்.
    என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள் என்று பிரபல நடிகை ஷகிலா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசி இருக்கிறார்.
    மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி பல படங்களில் நடித்துள்ளார். 1990 களில் வயது வந்தோருக்கான படங்களில் நடித்து, தனக்கென ரசிகர் வட்டத்தை சேர்த்து புகழ் பெற்றார்.

    இந்நிலையில், ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஒன்று உருவாகி உள்ளது. இப்படத்தை இந்திரஜித் லங்கேஷ் இயக்கி இருக்கிறார். நேரிடையாக இந்தி மொழியில் எடுக்கப்பட்ட இப்படம், ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது.

    ஷகிலா

    இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஷகிலா பேசும் போது, எனக்கு தெரிந்து நான் செய்த தவறை தற்போது சினிமா துறைக்கு வரும் நடிகைகள், படிக்கும் மாணவிகள் அனைவருக்கும் ஒன்று சொல்லுகிறேன். என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள். அதைத்தான் என் புக்கில் எழுதி இருக்கிறேன். இதைத்தான் படமாக எடுத்து இருக்கிறார்கள். பெண்களுக்கு மேசேஜாக இந்த திரைப்படம் இருக்கும் என்றார்.
    தற்போது ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர் ஒருவரின் ரசிகர்கள் மீது மோனல் கஜ்ஜார் புகார் அளித்துள்ளார்.
    தமிழில் சிகரம் தொடு மற்றும் வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மோனல் கஜ்ஜார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தெலுங்கில் ஆரம்பிக்கப்பட்ட, பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். கடந்த ஞாயிறு வாரத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து இவர் வெளியேறினார்.

    இந்தநிலையில் தன்னுடன் சக போட்டியாளராக பங்கேற்ற, இந்த சீசனில் டைட்டில் வின்னராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிற அபிஜித் என்பவரின் ரசிகர்கள் மீது, மோனல் கஜ்ஜார் தனது குடும்பத்துடன் சேர்ந்து சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். 

    மோனல் கஜ்ஜார்

    சமூக வலைத்தளத்தில் தன்னை அவதூறான வார்த்தைகளால், அபிஜித்தின் ரசிகர்கள் விமர்சிப்பதாக அந்த புகாரில் மோனல் கஜ்ஜார் குறிப்பிட்டுள்ளார்.
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால், தனது பெயரில் மோசடி செய்வதாக கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘எஃப்ஐஆர்’ திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அத்துடன் ஒரு ஸ்க்ரீன்ஷாட்டையும் இணைத்திருந்தார். அதில் மதன் என்ற பெயரில் ஒருவர் யாரோ சிலருக்கு ஒரு குறுந்தகவலை அனுப்பியுள்ளார். அந்த குறுந்தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

    இந்த குறுந்தகவல் ஒரு தமிழ் திரைப்படத்துக்காக அனுப்பப்படுகிறது. இப்படத்துக்கு பின்னால் திறமையாளர்களின் குழு ஒன்று உள்ளது. புதிய தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இந்த செய்தி அவரிடமிருந்தே அனுப்பப்படுகிறது. அவர் உங்களை இப்படத்தில் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். பெரும் ஊதியம் கிடைக்கும். நீங்கள் விருப்பப்பட்டால் மேற்கொண்டு தகவல்களை நான் உங்களுக்கு அளிக்கிறேன். இப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார்.

    இவ்வாறு அந்த குறுந்தகவலில் கூறப்பட்டுள்ளது.

    விஷ்ணு விஷால்

    இதை பகிர்ந்துள்ள விஷ்ணு விஷால், தனது பெயரை தவறான காரியங்களுக்காக பயன்படுத்த முயற்சிப்போரிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இது போன்ற செய்திகளை பரப்புவர்களுக்கு தனது கண்டனங்களையும் தெரிவித்துள்ளார்.

    தற்போது தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் தவிர்த்து வேறு எந்த நிறுவனத்தின் தயாரிப்பிலும் தான் நடிக்கவில்லை என்றும் விரைவில் இது குறித்து காவல்துறையில் புகாரளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
    ×