என் மலர்
சினிமா செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் அனிதா, அவரின் தந்தை இன்று காலை உயிரிழந்தார்.
பிரபல செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான அனிதா சம்பத், பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடந்த வாரம் தான் எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில் அவரின் தந்தையும், எழுத்தாளருமான சம்பத் மரணம் அடைந்துள்ளார்.
இதுகுறித்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அனிதா, “எனது தந்தை சம்பத் வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 62. அவர் உயிருடன் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன் பார்த்தேன். நான் பிக்பாஸில் இருந்து எவிக்ட் ஆன போது அவர் ஷீரடிக்கு சென்றிருந்தார்.

அவரை போனிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. இன்று காலை அவர் ஷீரடியில் இருந்து சென்னை திரும்பிக்கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளார். காலை 8 மணிக்கு இந்த செய்தியை கேட்டதும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். என்னால் நம்ப முடியவில்லை. தந்தையின் குரலை கேட்டு 100 நாட்களுக்கு மேலானதாக அனிதா உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த செய்தி அறிந்த அனிதாவின் ரசிகர்கள், அனிதாவுக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் விஜய்யின் 64-வது படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தை, கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியது.
இப்படத்தை வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளனர். ஏற்கனவே படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு, தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற ஜனவரி 13-ந் தேதி திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 மாதம் காத்திருப்புக்கு பின் மாஸ்டர் படம் வெளியாவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாஸ்டர் படம் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இளையராஜாவுக்கு சொந்தமான 160 பொருட்கள் 2 லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டன.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனி அரங்கத்தில் தனது இசைப்பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது ஸ்டூடியோ அரங்கை பூட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
இதன் பிறகு இளையராஜாவை எந்த பிரச்சினையும் இன்றி அங்கு எப்போதும் போல செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரசாத் ஸ்டூடியோ முன்பு போராட்டங்களும் நடைபெற்றன. அதற்கு பிரசாத் ஸ்டூடியோ அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து இளையராஜா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. தனக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி இளையராஜா இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.
இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இரு தரப்பும் சமரசமாக செல்ல அறிவுறுத்தியது. இதனை ஏற்றுக் கொண்ட இளையராஜா, ஸ்டூடியோவில் ஒருநாள் மட்டும் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு தனது பொருட்களை எடுத்து கொள்கிறேன் என்றும் கோர்ட்டில் கூறி இருந்தார்.

இதன்படி நேற்று இளையராஜா தியானம் செய்ய வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. இளையராஜா தரப்பில் இருந்து பிரசாத் ஸ்டூடியோவிற்கு சென்றிருந்த வக்கீல்கள், ஸ்டூடியோ பூட்டு உடைக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.
ஸ்டூடியோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் ஒரு குடோனில் போட்டு வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என்று இளையராஜாவின் வக்கீல்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் இளையராஜாவிற்கு சொந்தமான பொருட்களை வக்கீல்கள் மற்றும் உதவியாளர்கள் நேற்று எடுத்து சென்றனர். இளையராஜா பயன்படுத்திய இசைக்கருவிகள், அவர் வாங்கிய விருதுகள், இசைக்குறிப்புகள் உள்ளிட்ட 160 பொருட்கள், 7 பீரோக்களில் பத்திரமாக அடுக்கப்பட்டது. பின்னர் அந்த பீரோக்கள் அனைத்தும் 2 லாரிகளில் எடுத்து செல்லப்பட்டன.
பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள அரங்கில் 5 அறைகளை இளையராஜா தனது இசைப் பயணத்திற்காக பயன்படுத்தி வந்தார். பல்வேறு பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் பிரசாத் ஸ்டூடியோவில் இருந்துதான் தங்கள் பாடல்களை பாடி இருக்கிறார்கள். இப்படி இளையராஜாவின் இசைப் பயணத்தில் பிரசாத் ஸ்டூடியோ மிகவும் முக்கியமானதாகவே இருந்து வந்தது.
இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவை தனது இன்னொரு வீடு போலவே பயன்படுத்தி வந்தார். இதன் காரணமாகவே தான் வாங்கிய விருதுகள், இசைக்குறிப்புகள் அனைத்தையும் அங்கேயே அவர் பாதுகாத்து வந்தார். இந்தநிலையில்தான் பிரசாத் ஸ்டூடியோவில் இருந்த பொருட்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு இருந்தது இளையராஜாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக வக்கீல்கள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகிபாபு, அவரது மனைவி மஞ்சு பார்கவிக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது.
தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ள யோகிபாபு, ரஜினி, விஜய், அஜித் என அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து விட்டார். கடந்த வருடம் மட்டும் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த யோகிபாபு, தற்போது ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பன்னி குட்டி, மண்டேலா போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில் கர்ப்பமாக இருந்த மஞ்சு பார்கவிக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. இருவரும் நலமாக இருப்பதாக யோகிபாபு தெரிவித்தார். மேலும் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் அவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி அடைந்தார். இதையடுத்து யோகிபாபுவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு திரைப்பட நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.
கொரோனா உறுதியான சீரஞ்சிவியின் மகனான ராம்சரண், அறிகுறிகள் இல்லாத நிலையில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தெலுங்கு திரைப்பட நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
Request all that have been around me in the past couple of days to get tested.
— Ram Charan (@AlwaysRamCharan) December 29, 2020
More updates on my recovery soon. pic.twitter.com/lkZ86Z8lTF
கொரோனா உறுதியான சீரஞ்சிவியின் மகனான ராம்சரண், அறிகுறிகள் இல்லாத நிலையில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
ஸ்டான்லி டாங் இயக்கத்தில் ஜாக்கி சான், மியா முகி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வேன்கார்ட்’ படத்தின் விமர்சனம்.
ஜாக்கிசான் ‘வேன்கார்ட்’ என்கிற செக்யூரிட்டி கம்பெனியை நடத்தி வருகிறார். விஐபி-களுக்கு பாதுகாப்பு அளிப்பதே இந்த செக்யூரிட்டி கம்பெனியின் முக்கியமான பணி. அந்த வகையில் தொழில்முனை போட்டி காரணமாக தொழிலதிபர் ஒருவரின் மகளை வில்லன் கடத்தி விடுகிறார். அந்த தொழிலதிபர், வேன்கார்ட் செக்யூரிட்டி கம்பெனியின் உதவியை நாடுகிறார்.
தொழிலதிபரின் மகளை காப்பாற்ற தனது குழுவினருடன் ஜாக்கிசான் களத்தில் இறங்குகிறார். இறுதியில் வில்லனிடம் இருந்து தொழிலதிபரின் மகளை பத்திரமாக ஜாக்கிசான் மீட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

வழக்கமாக பறந்து பறந்து எதிரிகளை துவம்சம் செய்து ஒவ்வொரு காட்சியிலும் அதகளப்படுத்தும் ஜாக்கிசானை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு இந்த படத்தில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அவருக்கு படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் மிகவும் குறைவாகவே வைத்துள்ளனர்.
ஜாக்கிசானுக்கு வயதான காரணத்தால் பெரியளவில் அனல்பறக்கும் ஆக்ஷன் காட்சிகள் இல்லை. இருப்பினும் ஸ்டைலிஷான வேடத்தில் வந்து நம்மை கவர்கிறார். ஜாக்கிசானுடன் நடித்துள்ள மியா முகி, யாங் யாங் ஆகியோர் திறம்பட நடித்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஸ்டான்லி டாங் இப்படத்தை இயக்கியுள்ளார். கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய மைனசாக அமைந்துள்ளது. கிராபிக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்றே தோனுகிறது.
படத்தின் மிகப்பெரிய பலம் லீ-யின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியையும் கலர்புல்லாக காட்சிபடுத்தி உள்ளார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் இவரின் ஒளிப்பதிவு வேற லெவல். பின்னணி இசையும் கதையின் விறுவிறுப்புக்கு வலுசேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘வேன்கார்ட்’ ஜாக்கிசான் ரசிகர்களுக்கு ஏமாற்றமே.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனாவால் தியேட்டர்கள் பல மாதங்களாக மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் தியேட்டர்களில் கூட்டம் குறைவாக இருப்பதால் காலை, பகல் காட்சிகளை ரத்து செய்து வருகிறார்கள். சில தியேட்டர்களை மூடியும் வைத்துள்ளனர்.
சூர்யாவின் சூரரைப் போற்று, விஜய் சேதுபதி நடித்த க.பெ. ரணசிங்கம், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின், வரலட்சுமியின் டேனி உள்ளிட்ட படங்கள் தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி.யில் வந்தன. ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படம் பொங்கலுக்கு ஓ.டி.டி.யில் வெளியாகிறது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தை பொங்கலுக்கு தியேட்டரில் வெளியிட திட்டமிட்டனர். ஆனால் மாஸ்டர், ஈஸ்வரன் படங்களுக்கு திரையரங்குகளை ஒதுக்கி விட்டதால் சுல்தான் படமும் ஓ.டி.டியில் வருகிறது என்று தகவல் பரவியது. இதனை படக்குழுவினர் மறுத்தனர். சுல்தான் படத்தின் ரிலீசை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
கவுரிசங்கர் இயக்கத்தில் கூல் சுரேஷ், கோபிகா நாயர் நடிப்பில் வெளியாகி இருக்கும் சித்திரமே சொல்லடி படத்தின் விமர்சனம்.
மகாநதி சங்கர் டிராவல் ஏஜென்ஸி நடத்தி வருகிறார். இவரின் மகளான நாயகி கோபிகா, தங்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணின் மகளுடன் நட்பாக பழகி வருகிறார். நாளடைவில் மகாநதி சங்கர் அந்தப் பெண்ணை தத்தெடுத்து வளர்க்கிறார். நாயகி கோபிகாவை, போலீஸ் அதிகாரியாக வரும் கூல் சுரேஷ் காதலிக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, தனது டிராவல் ஏஜென்சிக்கும் வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருகிறார் மகாநதி சங்கர். அப்படி ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றபோது, அந்தப்பெண் இறந்துவிடுகிறது. அதை யாருக்கும் தெரியாமல் மறைக்க முயற்சிக்கிறார் சங்கர்.

அந்தப் பெண் மரணமடைந்தது போலீசுக்கு தெரியவர, போலீஸ் அதிகாரியாக வரும் நாயகன் கூல் சுரேஷ் யார் இந்த கொலையை செய்தது என்பதை கண்டுபிடிக்க தீவிர விசாரணையில் இறங்குகிறார். இறுதியில் மகாநதி சங்கர் போலீசிடம் பிடிபட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இந்தப் படத்தில் நாயகனாக கூல் சுரேஷ் நடித்துள்ளார். ஏராளமான படங்களில் அவரை காமெடி வேடங்களில் பார்த்ததால், இப்படத்தில் அவர் சீரியஸான வசனம் பேசினாலும் காமெடியாகவே தெரிகிறது. போலீஸ் வேடம் அவருக்கு சுத்தமாக எடுபடவில்லை. ஹீரோயினாக வரும் கோபிகா நாயர் அழகு பதுமையுடன், துணிச்சலான பெண்ணாக நடித்து கவனிக்க வைக்கிறார்.

வில்லனாக நடித்துள்ள மகாநதி சங்கர் தன் பங்கிற்கு மிரட்டியுள்ளார். தெனாலி, தேனி முருகன், விஜய் கணேசன், சங்கர், புளோரண்ட் பெரேரா, சுமதி, அஞ்சலி ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
பொது இடங்களில் பெண்கள் சந்திக்கும் இன்னல்களை காட்ட முயற்சித்துள்ள இயக்குனர், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். கதாபாத்திரங்கள் தேர்விலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

அதிஷ் உத்ரியன் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். மகிபாலனின் ஒளிப்பதிவு, சிறு பட்ஜெட் படம் என்பதை அப்பட்டமாக காட்டுகிறது.
மொத்தத்தில் ‘சித்திரமே சொல்லடி’ சோபிக்கவில்லை.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’. கடந்த ஏப்ரல் மாதமே இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியது.
இப்படத்தை வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளனர். ஏற்கனவே படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு, தற்போது அடுத்த அப்டேட்டுக்காக மாஸான வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
அந்த டுவிட்டில் “ஒலிக்கும் பேர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும்... தடுக்கும் காலம் தாண்டி அது பரவி நிற்கும்” பிரம்மாண்டமான ரிலீஸ் அப்டேட் நாளை பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் புத்தாண்டன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Olikkum per ondru arangame adhira vaikum! 😉
— XB Film Creators (@XBFilmCreators) December 28, 2020
Thadukkum kaalam thaandi adhu paravi nirkum! 🔥
Nanba, massive release update tomorrow at 12.30pm. Get ready! 😎#MasterUpdate#Masterpic.twitter.com/IzADAJJOUF
ஆனந்த் சங்கர் இயக்கும் எனிமி படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்த நடிகர் ஆர்யா காயமடைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா, விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து ‘எனிமி’ படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அண்மையில் ஆர்யா நடிக்கும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது டூப் போடாமல் நடித்த ஆர்யா, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்யா, சிகிச்சை முடிந்த கையோடு படப்பிடிப்பு தளத்துக்கு வந்து எஞ்சியுள்ள சண்டைக் காட்சிகளை நடித்துக் கொடுத்துள்ளார். தன்னால் படப்பிடிப்பு தடைபட்டுவிடக் கூடாது என்ற காரணத்துக்காக நடிகர் ஆர்யா, வலியையும் பொருட்படுத்தாமல் நடித்துக்கொடுத்தது படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் தாயார் கரீமா பேகம் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கடந்த 1992-ம் ஆண்டு ரோஜா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், சைனீஸ் என பல்வேறு மொழிகளில் சுமார் 145க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார்.
சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட்டதால், பெரும்பாளும் தாயின் அரவணைப்பிலேயே ஏ.ஆர்.ரகுமான் வளர்ந்தார். ஏ.ஆர்.ரகுமானின் இசை பயணத்திலும் அவரது தாய் கரீமா பேகம் முக்கிய பங்கு வகித்தார். தனது தாய் துணிச்சலானவர் என ஏ.ஆர்.ரகுமான் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஏ.ஆர். ரகுமானின் தாயார் கரீமா பேகம் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடும் மன உளைச்சல் காரணமாக இசையமைப்பாளர் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா 35 ஆண்டுகளுக்கு மேலாக ‘ரெக்கார்டிங் தியேட்டராக’ பயன்படுத்தி வந்தார். இந்தநிலையில் அந்த அரங்கை வேறு தேவைக்குப் பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் முடிவு செய்தது.
அதனால் இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இளையராஜாவை அந்த இடத்திலிருந்து ஸ்டூடியோ நிர்வாகம் வெளியேற்றியது. இதுகுறித்து சென்னை கோர்ட்டிலும், போலீசிலும் இளையராஜா புகார் செய்தார்.
இதையடுத்து பிரசாத் ஸ்டூடியோவில் தான் வைத்திருந்த பொருள்களையும், இசைக்குறிப்புகளையும் எடுத்துக்கொள்ள அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், இரு தரப்பினரையும் சமரசமாகச் செல்லும்படி அறிவுறுத்தினார். அதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டனர்.

அதைத் தொடர்ந்து இளையராஜாவை இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிப்பது என்று முடிவு செய்தனர்.
இந்தநிலையில், இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவுக்கு வருகை தந்த இளையராஜாவின் வக்கீல், ஸ்டூடியோவில் உள்ள பொருட்கள் குறித்த நிலவரத்தை இளையராஜாவிற்கு தெரியப்படுத்தினார். அதைக்கேட்டு மனமுடைந்த இளையராஜா, தனது வருகையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். பிரசாத் ஸ்டூடியோவில் தான் பொக்கிஷமாக பாதுகாத்து வந்த சில பொருட்கள் காணாமல் போயுள்ளதால் இளையராஜா வருத்தமடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இளையராஜா வக்கீல் தியாகராஜன் கூறுகையில், ‘பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள இளையராஜாவின் தனி அறை கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளன. அவரின் பொருட்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் இளையராஜா மிகவும் வருத்தத்தில் உள்ளார்’ என்று தெரிவித்தார்.






