என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, பாலிவுட்டில் அறிமுகமாகும் படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
    தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் கடைசி விவசாயி, மாஸ்டர், நவரசா, மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் உள்ளன. இவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

    விஜய் சேதுபதி

    இவர் மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க உள்ளார். இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 1-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு இப்படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    சிம்புவின் 46-வது படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி உள்ளார். இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து நடித்தார். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி 25 நாட்களில் முடிக்கப்பட்டது.

    கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆகஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக ஈஸ்வரன் உருவாகி உள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ஈஸ்வரன் பட போஸ்டர்

    தமன் இசையமைத்துள்ள இப்படத்தில், ஏற்கனவே தமிழன் பாட்டு என்கிற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 2-ந் தேதி ஈஸ்வரன் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட உள்ளன. படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.
    ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
    சிவா - ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. கடந்த மார்ச் மாதம் வரை இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது. இதையடுத்து கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் கடந்த 9 மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது. இதனிடையே கடந்த டிசம்பர் 14-ம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கியது. 

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் கடந்த வாரம் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர்.

    ரஜினிகாந்த்

    இந்நிலையில், ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி மாதம் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், ரஜினியின் உடல்நலனை கருத்தில் கொண்டு, எஞ்சியுள்ள படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த உள்ளார்களாம். இதுவரை 75 சதவீத படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
    `மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.  பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் தற்போது, கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் அதர்வாவுடன் குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை, ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓமணப்பெண்ணே போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கர், கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் அவர் தாசில்தாராக நடிக்கிறாராம். அவர் யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது தெரிவிக்கப்படவில்லை.

    பத்து தல பட போஸ்டர்

    இது கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற மப்டி படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தின் கதைப்படி சிம்புவுக்கு ஜோடி இல்லை. ஆதலால் நடிகை பிரியா பவானி சங்கர் பத்து தல படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
    தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினி அறிவித்துள்ள நிலையில், உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது என நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை டிச.31-ந் தேதி வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் நேற்று அதிரடியாக அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்புக்கு பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்தவகையில், இதுப்பற்றி நடிகை கஸ்தூரி கூறியுள்ளதாவது, ''கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது. உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது. ரஜினியின் முடிவுக்கு பாராட்டுக்கள். நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழ வேண்டும். 

    கஸ்தூரி

    எதிர்பார்த்தது தான். எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம். இப்பவாச்சும் சொன்னாரே. இப்ப இல்லை, எப்பவுமே இல்லை'' என பதிவிட்டுள்ளார்.
    மனோரஞ்சிதம் படமாகும்போது, பல சோதனைகளைச் சந்தித்தது.
    "மனோரஞ்சிதம்'' படமாகும்போது, பல சோதனைகளைச் சந்தித்தது.

    அதுபற்றி கோவி.மணிசேகரன் கூறியதாவது:-

    "மனோரஞ்சிதம் நாவல், அக்காலத்தில் மிகப்பிரபலம்.

    ஒரு சலவைத் தொழிலாளியின் மகள் தன் வீட்டுக்கு வரும் அழுக்குத் துணிகளில், ஒரு பட்டு ஜிப்பாவில் மட்டும் மனோரஞ்சிதம் வாசனை மணப்பதை கவனிப்பாள். அந்த சென்ட் வாசனையை வைத்து, அதை அணிபவன் எத்தகைய அழகான இளைஞனாக இருப்பான் என்று கற்பனை செய்வாள்; காதல் கொள்வாள். கடைசியில் அவன் ஒரு குஷ்டரோகி என்பதுதான் கிளைமாக்ஸ்!

    எஸ்.வி.சுப்பையாதான், அந்த சென்ட் வாசனை ஜிப்பாக்காரராக நடித்தார்.

    4 பக்கங்கள் கொண்ட நீண்ட வசனத்தை அவர் பேசி நடிக்க வேண்டிய காட்சியைப் படமாக்கும்போது அவருக்கு சோதனை ஏற்பட்டது; எனக்கும் சோதனைதான்!

    "ரத்தக்கண்ணீர்'' படத்தில், எம்.ஆர்.ராதா பேசிக்கொண்டே உடம்பை சொறிந்து கொள்வார். அந்த பாணியில் நடிக்க வேண்டிய சுப்பையா, பேசும்போது சொறிய மறந்து விடுவார்; சொறியும்போது வசனம் மறந்துவிடும்!

    10 முறை படம் எடுத்தும் காட்சி "ஓகே'' ஆகவில்லை.

    நேரம் பகல் ஒரு மணி. சாப்பாட்டு நேரம். இந்த காட்சியை எடுத்து விட்டால், நிம்மதியாக இருக்கும் என்று நினைத்தேன். "ஒன் மோர் டேக்'' என்றேன்.

    சுப்பையாவோ, "சாப்பிட்டு விட்டு வந்து முயற்சிக்கலாமே'' என்றார்.

    நான் விடவில்லை. "அண்ணே! இந்த ஒரு டேக்கில் ஓகே ஆகிவிடும் ப்ளீஸ்!'' என்றேன்.

    ஆனால் சுப்பையா, தன் "விக்''கை கழற்றி எறிந்தார். "பிரேக்'' என்று கூறிவிட்டார்.

    படப்பிடிப்பு முடிந்தது என்பதை குறிப்பிடும் "பிரேக்'' என்ற சொல்லை டைரக்டர்தான் கூறவேண்டும். அதை சுப்பையா கூறியதால் கோபம் அடைந்தேன்.

    "மிஸ்டர் சுப்பையா! `பிரேக்' சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை. பிளீஸ் கெட் அவுட்!'' என்றேன்.

    சுப்பையா கோபித்துக்கொண்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டார். படப்பிடிப்பு ரத்து ஆனது. ஒரு மாத காலம் படப்பிடிப்பு

    நடைபெறவில்லை.சிவாஜிகணேசன் தீர்ப்பு

    நான் எஸ்.வி.சுப்பையாவை அவமானப்படுத்தி விட்டதாக, அவர் தரப்பில் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்கள். நான் டைரக்டர்கள் சங்கத்தில், சுப்பையா மீது புகார் செய்தேன்.

    அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். செயலாளர் மேஜர் சுந்தரராஜன்.

    இரு தரப்பையும் அழைத்து சிவாஜி விசாரித்தார்.

    பிறகு எஸ்.வி.சுப்பையாவை நோக்கி, "நீங்கள் இப்படி நடந்திருக்கக் கூடாது. ஒரு துரும்பைக் கிள்ளி, டைரக்டர் என்று சொன்னாலும், உரிய மரியாதை தரவேண்டும். கோவி.மணிசேகரன் பெரிய இலக்கியவாதி. விருதுகள் பெற்றவர். நாம் எல்லோரும் மதிக்கும் கே.பி.யின் மாணவர். ஒரு டேக் எடுக்க விட்டுக் கொடுக்காமல் `பிரேக்' என்று நீங்கள் சொன்னது தவறு'' என்றார்.

    ஆனால், எஸ்.வி.சுப்பையா தொடர்ந்து நடிக்க மறுத்துவிட்டார். வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறினார்.

    "வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடலாம். ஆனால் இதுவரை ஆன செலவை யார் தருவது? தயவு செய்து நடிக்க வாருங்கள்'' என்று நான் கேட்டுக்கொண்டும், சுப்பையா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

    நான் கோர்ட்டுக்குப் போகப்போவதாகக் கூறினேன்.

    அப்போது சிவாஜி, மேஜர் சுந்தரராஜனை அழைத்து, "சுந்தர்ராஜா! நீ போய் அந்த குஷ்டரோகி வேடத்தில் நடித்துவிடு. பணம் எதுவும் கேட்காதே!'' என்றார்.

    சிவாஜி இவ்வாறு கூறியதும் மெய்சிலிர்த்துப் போனேன்.

    சிவாஜி சொன்னபடியே, மேஜர் சுந்தரராஜன் அந்த வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.

    படம் 90 சதவீதம் வளர்ந்தபோது, படத்தயாரிப்பாளர் சிதம்பரத்துக்கும் அவருடைய பார்ட்னருக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டது. அந்த பார்ட்னருடன், என்னால் நியமனம் செய்யப்பட்ட இசை அமைப்பார் வி.குமாரும் சேர்ந்து கொண்டார்.

    மூவரும் என்னை சந்தித்தார்கள். டைரக்டர் பொறுப்பில் இருந்து என்னை விலகிக் கொள்ளச் சொன்னார்கள்.

    சிதம்பரம் நல்லவர். ஆனால், மற்ற இருவரும் செய்த சூழ்ச்சியினால் நான் டைரக்டர் பொறுப்பில் இருந்து விலகினேன்.

    மீதிப்பகுதியை டைரக்டர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவை வைத்து, படத்தை முடிக்க முயற்சி செய்தார்கள்.

    அவர்கள், அதுவரை படமாக்கியிருந்த காட்சிகளைப் போட்டு பார்த்தார்கள். பாதி புரிந்தது; பாதி புரியவில்லை.

    நான் காட்சிகளைப் பகுதி பகுதியாக படமாக்கியிருந்தேன். அதனால் மேற்கொண்டு எப்படி எடுப்பது என்று அவர்கள் குழம்பினார்கள். "முக்கால்வாசி எடுத்த படத்தில் அரை பாகத்தை நீக்கிவிட்டு, கால் பாகத்தை வைத்துக்கொண்டு மீதி படத்தை எடுக்கலாம். சம்மதமா?'' என்று டைரக்டர் பஞ்சு கேட்டார்.

    மீண்டும் கால்ஷீட் பெறுவதில் உள்ள சிக்கல்கள், மேற்கொண்டு ஆகக்கூடிய செலவுகள் என்று யோசித்தபோது, சிதம்பரத்துக்கு தலை

    சுற்றியது."கோவி.மணிசேகரன் வந்து விளக்கங்கள் சொன்னால் தவிர, நாங்கள் இந்தப் படத்தை தொடர்ந்து டைரக்ட் செய்ய இயலாது'' என்று கிருஷ்ணன் - பஞ்சு முடிவாக கூறிவிட்டார்கள்.

    பட அதிபர்கள் வன்நெஞ்சம் அவர்களையே சுட்டது. இனி எப்படி அவர்கள் என்னிடம் வரமுடியும்?

    சிதம்பரத்தை எண்ணி நான் வருந்தினேன் என்பதை விட, கண்ணீர் விட்டேன். அப்படிப்பட்ட நல்ல மனிதர் அவர்.

    மனோரஞ்சிதம் வெளிவராமல் போனதில், இன்னமும் எனக்கு வருத்தம் உண்டு. நட்சத்திரங்கள் நிறைந்த படம். முக்கால்வாசி முடிந்தும், நின்று போய்விட்டது. என்ன செய்வது? இதுதான் விதி!''

    இவ்வாறு மணிசேகரன் கூறினார்.
    ஆர்.சம்பத் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் மந்திர பலகை படத்தின் விமர்சனம்.
    7 பேர் நட்புடன் ஜாலியாக பழகி வருகின்றனர். அவரிகளில் ஒரு பெண் புதிதாக ஒரு வீட்டுக்கு குடிபெயர்கிறார். உதவிக்காக ஒரு தோழியையும் அழைத்து செல்கிறார். புதிதாக செல்லும் வீட்டில் ஒரு மந்திர பலகை இருக்கிறது. அதனை எடுப்பவர்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றினால் தான் எந்தவிதமான வில்லங்கத்திலும் சிக்காமல் இருப்பர்.

    அதை பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளாத அந்த பெண், விளையாட்டுத்தனமாக அந்தப் பலகையை திறந்ததால் இறந்துவிடுகிறார். இந்தப்பலகையை பற்றி அறிந்த மற்றோரு பெண் ஒருவர் தனது தோழிகளுடன் சேர்ந்து அந்த பலகையை திறக்கின்றார். 

    அதில் கொடுக்கப்பட்ட விதிமுறைகளை சரியாக பின்பற்றும் அவர்கள் இறுதியில் பலகையை மூடும் போது மந்திரத்தை சொல்லாமல் மூடி விடுகின்றனர். இதனால் அவர்களுக்கு என்ன ஆனது? அந்த மாய பலகையின் பிடியில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    மந்திர பலகை

    படத்தில் நடித்தவர்கள் புதுமுகங்கள் என்பது அவர்களது நடிப்பிலேயே தெரிகிறது. பேய் படம் என சொல்கிறார்கள் ஆனால் ஒரு இடத்தில் கூட பயம் வராதது படத்தின் மைனஸ். 

    திகில் படத்தை கொடுக்க முயன்றுள்ள இயக்குனர், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். கதாபாத்திரங்கள் தேர்வில் கவனம் செலுத்தி இருக்கலாம். பின்னணி இசை சுத்தமாக எடுபடவில்லை. மகிபாலனின் ஒளிப்பதிவு குறைந்த பட்ஜெட் படம் என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

    மொத்தத்தில் ‘மந்திர பலகை’ பயமில்லை.
    சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்த ஏ.ஆர்.ரகுமான், தற்போது மீண்டும் அவருடன் இணைந்துள்ளாராம்.
    கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை நார்தன் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தின் தமிழ் ரீமேக்கையும் அவரே இயக்கி வந்தார். தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடித்தனர். விறுவிறுப்பாக முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், சிம்புவுக்கும், தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அடுத்தகட்ட படப்பிடிப்பு நடத்தாமல் கிடப்பில் போட்டனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, படத்துக்கு ‘பத்து தல’ என பெயரிட்டிருப்பதாகவும், சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஓபிலி என். கிருஷ்ணா இப்படத்தை இயக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

    பத்து தல பட போஸ்டர்

    இந்நிலையில், இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் கிருஷ்ணா, ஏ.ஆர்.ரகுமானின் நெருங்கிய நண்பர் என்பதால் இப்படத்துக்கு அவர் இசையமைக்க ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கிருஷ்ணா இயக்கிய  சில்லுனு ஒரு காதல் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விஜயபாஸ்கர் இயக்கத்தில் திருநங்கைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பில்டர் கோல்டு படத்தின் முன்னோட்டம்.
    திருநங்கைகளின் காதல், சோகம், வலி, வேதனை, கோபம், பழிவாங்குதல் ஆகிய அத்தனை உணர்ச்சிகளையும் சித்தரிக்கும் வகையில், ‘பில்டர் கோல்டு’ என்கிற படம் தயாராகி இருக்கிறது. 

    முக்கிய வேடத்தில் நடித்து, இயக்கியிருக்கும் விஜயபாஸ்கர், படத்தை பற்றி கூறியதாவது: “பில்டர் கோல்டு என்றால் சொக்க தங்கம் என்று பொருள். இது, இந்த கதையின் நாயகியை குறிக்கும். இதுவரை வந்த திருநங்கைகளை பற்றிய கதையில் இருந்து மாறுபட்ட கதை, இது. 3 திருநங்கைகளை சுற்றி கதை பின்னப்பட்டு இருக்கிறது. 

    தளபதி, நாயகன் ஆகிய படங்களின் கதைகளைப்போல் அதிரடி காட்சிகளுடன் கதை நகரும். 800 திருநங்கைகளை வைத்து ஒரு பாடல் காட்சியையும், 400 பேர்களை வைத்து இன்னொரு பாடல் காட்சியையும் படமாக்கி இருக்கிறோம். படத்தில் வில்லன் இருக்கிறார். அவர் யார்? என்பதை ரகசியமாக வைத்து இருக்கிறோம்.

    பில்டர் கோல்டு படக்குழு

    படம் தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், 70 இடங்களில் ‘கட்’ கொடுத்து, அந்த 70 இடங்களையும் நீக்கியபின், ‘ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். படம், ஜனவரியில் திரைக்கு வரும்” என அவர் தெரிவித்தார்.
    தமிழில் சித்ரா நடித்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் இந்தியில் பாண்டியா ஸ்டோர் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.
    சின்னத்திரை தொடர்களில் மிகவும் பிரபலமானது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இது 4 அண்ணன் தம்பிகள் பற்றிய கதை ஆகும். மளிகைக்கடை வைத்திருக்கும் மூத்த அண்ணன், அவரது 3 தம்பிகள் ஆகியோரை சுற்றியே கதை வடிவமைக்கப்பட்டிருக்கும். கூட்டுக்குடும்ப வாழ்க்கை, அண்ணன் தம்பி பாசம் ஆகியவை இத்தொடரில் இடம்பெற்று உள்ளதால் ரசிகர்களிடம் பேராதரவை பெற்று ஹிட்டானது. 

    சுஜிதா, ஸ்டாலின், குமரன், வெங்கட் என இந்தத் தொடரில் நடித்தவர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. குறிப்பாக இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ராவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இத்தொடர் மூலம் ஏராளமான பெண் ரசிகைகளை மட்டுமின்றி, நடுத்தர வயது ஆண்களையும் சித்ரா கவர்ந்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்கள்

    இதனிடையே சித்ரா கடந்த 9-ந் தேதி நட்சத்திர ஓட்டலில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் அத்தொடரில் அவருக்கு பதிலாக காவியா என்பவர் தற்போது முல்லையாக நடித்து வருகிறார். 

    இந்நிலையில் இத்தொடரை இந்தியில் பாண்டியா ஸ்டோர் என்ற பெயரில்  ரீமேக் செய்துள்ளனர். இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளில் பிரபலமான சீரியல்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளன. இருப்பினும் தமிழ் சீரியல் ஒன்று இந்தியில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதன்முறை, இது சின்னத்திரை உலகில் பெருமையாக பார்க்கப்படுகிறது.
    சூது கவ்வும் 2-பாகத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ஹாலிவுட் படங்களை போன்று தமிழிலும் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வந்துள்ளன. எந்திரன், பில்லா, சாமி, வேலையில்லா பட்டதாரி, அரண்மனை, சாமி, சண்டக்கோழி, உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. காஞ்சனா, சிங்கம் ஆகிய படங்கள் 3 பாகங்களாக வந்தன.

    இந்நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. இப்படத்தை சிவி குமார் தயாரிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய நலன் குமாரசாமி இப்படத்தை இயக்கவில்லையாம். அவருக்கு பதிலாக யங் மங் சங் படத்தை இயக்கிய அர்ஜுன் இப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

    சத்யராஜ்

    அதேபோல் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பிரபல டப்பிங் கலைஞரும், பிகில், மாநகரம், கைதி போன்ற படங்களில் நடித்தவருமான அருண் அலெக்சாண்டர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
    2020-ம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு மோசமான ஆண்டாக அமைந்துள்ளது. கொரோனா தாக்கம் ஒருபுறம் இருந்தாலும், பிரபலங்களின் எதிர்பாராத மரணங்கள் மற்ற ஆண்டுகளை விட இந்தாண்டு சற்று அதிகம் என்றே கூறலாம். அந்தவகையில், சேதுராமன், எஸ்.பி.பி., வடிவேல் பாலாஜி, சித்ரா, தவசி என பலரின் மரணங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது பிரபல டப்பிங் கலைஞரும், நடிகருமான அருண் அலெக்சாண்டர் மரணமடைந்துள்ளார். 

    உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 48. கடந்த 10 ஆண்டுகளாக  டப்பிங் கலைஞராக பணியாற்றி வந்த இவர், தமிழில் கோலமாவு கோகிலா, பிகில், மாநகரம், கைதி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    ×