என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    மாநாடு படக்குழு வெளியிட்ட போஸ்டர்

    ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டரை வருகிற பொங்கலன்று (ஜனவரி 14) மாலை 4.05 மணிக்கு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநாடு படக்குழுவின் இந்த திடீர் அறிவிப்பு சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. அதே தினத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    சிட்னி மைதானத்தில் பிக்பாஸ் ஆரிக்கு ஆதரவு தெரிவித்து பதாகையுடன் ரசிகர்கள் போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன், கடந்த அக்டோபர் மாதம் 4-ந் தேதி தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு வாரமே மீதமுள்ள நிலையில், ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ, கேபி ஆகிய 6 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் ஆரி தான் பிக்பாஸ் டைட்டிலை ஜெயிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆரி ரசிகர்கள்

    ஏனெனில் அவருக்கான ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் “பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்... கடவுள் இருக்கான் குமாரு” என்ற வசனங்கள் அடங்கிய பதாகையுடன் ஆரி ரசிகர்கள் போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    படப்பிடிப்பின் போது நடிகை நமீதா கிணற்றில் விழுந்ததை பார்த்து பதறிப்போன கிராம மக்கள் அவரை காப்பாற்ற ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் நமீதா. கவர்ச்சி வேடங்களில் கலக்கிய நமீதா உடல் எடை ஏறியதால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நமீதா, பெளவ் வெளவ் என்ற படத்தை தயாரிப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.

    ஆர்.எல்.ரவி, மேத்யூ ஸ்கேரியா ஆகியோர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம் அருகே உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பை பார்க்க அருகில் உள்ள கிராம மக்கள் திரண்டு நின்றனர். 

    நமீதா

    ஒரு கிணற்றின் அருகில் நமீதா நடந்து சென்றபோது, அவர் கையில் வைத்திருந்த செல்போன் கிணற்றுக்குள் தவறி விழுந்தது. உடனே பதற்றத்தில் அதை தாவிப் பிடிக்க முயன்ற நமீதா கிணற்றுக்குள் விழுந்தார். இதை பார்த்து பதறிப்போன மக்கள் நமீதாவை காப்பாற்ற கிணற்றின் அருகே ஓடினார்கள். அவர்களை படக்குழுவினர் தடுத்து நிறுத்தினர். 

    அதன்பிறகு தான் அதுவும் படப்பிடிப்பு என தெரிய வந்தது. அது படத்தின் ஒரு காட்சி என்பதை மக்களுக்கு புரியவைத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இருப்பினும் பக்கத்து கிராமங்களுக்கு படப்பிடிப்பில் நமீதா கிணற்றில் தவறி விழுந்து விட்டதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் காதலர் தினத்தையொட்டி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

    ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிறது. கடந்தாண்டு மே 1-ம் தேதி, இப்படம் ரிலீசாவதாக இருந்தது. கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. 

    தனுஷ்

    இந்நிலையில், இப்படத்தை வருகிற பிப்ரவரி மாதம் காதலர் தினத்தையொட்டி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பிரபல பாடகி சுனிதா, ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ராம் வீரபனேனி என்பவரை தற்போது 2-வது திருமணம் செய்து கொண்டார்.
    பிரபல சினிமா பின்னணி பாடகி சுனிதா. இவர் தமிழில் விஜய்யின் பத்ரி படத்தில் இடம்பெற்ற காதல் சொல்வது... என்ற பாடலை பாடி பிரபலமானார். காதல் ரோஜாவே உள்ளிட்ட சில படங்களிலும் பாடி இருக்கிறார். இளையராஜா இசையிலும் பாடி உள்ளார். தெலுங்கில் ஏராளமான படங்களில் பாடி உள்ளார்.

    மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்தும் பல பாடல்கள் பாடி இருக்கிறார். சில நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார். படங்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். சுனிதாவுக்கு 19 வயதிலேயே திருமணம் முடிந்தது. கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    பாடகி சுனிதாவின் திருமண புகைப்படம்

    இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ராம் வீரபனேனி என்பவரை தற்போது சுனிதா 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் ஐதராபாத் அருகே உள்ள அம்மாபள்ளி ஶ்ரீ சீதாராம கோவிலில் நடந்தது. ஏராளமான திரைப்பிரபலங்கள் இதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ராம் வீரபனேனியும் சில வருடங்களுக்கு முன்பு மனைவியை விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகை லதா, எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜியுடன் "சிவகாமியின் செல்வன்'' என்ற படத்தில் மட்டுமே நடித்தார்.
    நடிகை லதா, எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜியுடன் "சிவகாமியின் செல்வன்'' என்ற படத்தில் மட்டுமே நடித்தார்.

    இதுபற்றி லதா கூறியதாவது:-

    "15 வயதில் நடிக்க வந்து விட்டாலும் என் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் எம்.ஜி.ஆர். எனக்கு போன் செய்து வாழ்த்துவதுண்டு. என் 18-வது பிறந்த நாளன்றும் காலையிலேயே போனில் வாழ்த்தினார். "மதியம் ஆபீசுக்கு வரமுடியுமா?'' என்று கேட்டார்.

    போனேன். என்னைப் பார்த்ததும், "உங்கம்மாவுக்கு நான் பண்ணின வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். இப்ப நான் ஒண்ணு கேக்கறேன். செய்வியா?'' என்று கேட்டார்.

    அவர் கேட்ட கேள்வி எனக்குப் புரியவில்லை. அவரே விளக்கினார். "லதா! உனக்கு 18 வயது பிறந்து விட்டது. இப்போது நீ மேஜராகி விட்டாய். உங்கம்மா உன் நடிப்பு தொடர்பாக முன்பு போட்டுக் கொடுத்திருந்த காண்டிராக்ட் இனி செல்லுபடியாகாது. இப்போது நான் போட்டிருக்கும் புதிய காண்டிராக்டில் கையெழுத்து போடுவாயா?'' என்று விளக்கி என் பதிலை எதிர்பார்த்தார்.

    நான் எதுவும் பேசாமல், அவரிடம் இருந்த காண்டிராக்ட் பேப்பரை வாங்கி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.

    என்ன ஏதென்று கூட கேட்காமல் நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தது, அவருக்கு மிக ஆச்சரியமாக இருந்திருக்கும். ஆனாலும், பட உலகத்தில் அவர் என்னை அவரது படங்களில் ஜோடியாக நடிக்க வைத்திராவிட்டால் நான் ஏது?

    ஆனால் புது ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததால், மற்ற நடிகர்கள் படங்களில் நடிக்க கேட்டு வந்த வாய்ப்புகளை நான் ஏற்க முடியாமல் போயிற்று. சிவாஜி படத்தில் கூட "டாக்டர் சிவா'', "அவன்தான் மனிதன்'' என்று என்னைத் தேடி வந்த 2 படங்களில் நடிக்க முடியாமல் போயிற்று.

    ஆனாலும், எம்.ஜி.ஆர். என்னிடம், மற்றவர்கள் படங்களில் நடிக்கக் கூடாது என்று ஒருபோதும் சொன்னதில்லை. "என்னிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு நடி. அப்படிச் செய்தால் படப்பிடிப்பு தேதிகள் இடிக்காமல் இருக்கும்'' என்றுதான் சொல்லியிருந்தார்.

    சிவாஜியுடன் ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அப்போதுதான் சிவாஜி நடிக்கும் "சிவகாமியின் செல்வன்'' படம் தயாராக இருந்த நேரம். படத்துக்கு 2 கதாநாயகிகள். ஒரு கதாநாயகி வாணிஸ்ரீ. இன்னொரு கதாநாயகியின் கேரக்டர் படத்தின் பிற்பகுதியில்தான் வரும் என்றார்கள். அதாவது பெரிய சிவாஜியின் மனைவி வாணிஸ்ரீ. அவரின் வாரிசாக உருவாகும் சிவாஜிக்கு யாரைப் போடலாம் என்று பரிசீலித்துக் கொண்டிருந்தார்கள்.

    இந்த தகவல் என் காதுக்கு வந்ததும் இந்த கேரக்டரையாவது ஏற்று நடிப்போமே என்று தோன்றியது. அதோடு மிகக்குறைந்த நாட்களே கால்ஷீட் கேட்டார்கள். அதனால் சிவாஜி படத்தில் நடிக்கும் ஆர்வத்தில் அந்த கேரக்டரில் நடிக்க `ஓ.கே' சொல்லிவிட்டேன்.

    செட்டில் என்னை ரொம்ப மரியாதையாக நடத்தினார், சிவாஜி. "அண்ணனுடன் (எம்.ஜி.ஆர்) நடிக்கிறீங்க. என் கூட இது முதல் படம். நடிப்பில் எந்த மாதிரி சந்தேகம்னாலும் தயங்காம கேளுங்க'' என்று சொன்னவர், "உங்க அப்பா என்னோட நல்ல நண்பர் தெரியுமா?'' என்றும் சகஜமாக பேசி, பதட்டமில்லாமல் நடிக்க வைத்தார். ஆனாலும் தொடர்ந்து அவரது படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமையாமலே போய்விட்டது.''

    இவ்வாறு லதா கூறினார்.

    எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சரான நேரத்தில் நடிகர் சங்க அரங்கத்தின் திறப்பு விழா நடந்தது. எம்.ஜி.ஆர். தலைமையில், சிவாஜி முன்னிலையில் நடந்த இந்த விழாவில் லதாவின் நடனம் இடம் பெற்றது.

    அதுபற்றி லதா கூறியதாவது:-

    "நடிகர் சங்க விழாவில் உன் நடனம் முத்தாய்ப்பாக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருந்தார். 45 நிமிட நேரம் எனது நடனத்துக்கு ஒதுக்கியிருந்தார்கள். எனவே புராணக்கதையான மகாபாரதக் கதையை எடுத்துக்கொண்டு அதில் வருகிற திரவுபதி போன்ற கேரக்டர்களை `மோனோ' ஆக்டிங்கில் வெளிப்படுத்தி நடனமாடினேன்.

    இந்த நடனத்துக்காக நான் ரிகர்சல் பார்த்தபோது காலில் ஒரு ஆணி குத்திவிட்டது. மறுநாளே நடன நிகழ்ச்சி என்பதால் வலியைப் பொறுத்துக்கொண்டு ரிகர்சலை முடித்தேன்.

    மறுநாள் நிகழ்ச்சியின்போது மேடையில் ஆடும்போது காலில் இருந்து ரத்தம் கொட்டுகிறது. மேடை முழுக்க ரத்தம் கோடுகளைப் போல காணப்பட்டது. முந்தினநாள் என் காலில் ஆணி குத்தியிருந்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும்.

    எனவே, மேடையில் நான் ஆடியபோது மற்றவர்கள் கரகோஷம் செய்து கொண்டிருக்க, எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் இறுக்கமாக இருந்தது.

    நடனம் முடிந்ததும் மேடையேறி என்னைப் பாராட்டியவர், காலில் ஆணி குத்திய நிலையில் நான் நடனமாடியதை குறிப்பிட்டார். "கலை மீது எத்தகைய பற்று இருந்தால், இப்படி காலெல்லாம் ரத்தம் ஒழுக நடனமாடமுடியும்'' என்று அவர் பேசியபோது, அரங்கு முழுக்க ஒரு கணம் அமைதி. மறுகணம் அரங்கே அதிர்ந்து போகும் அளவுக்கு கரகோஷம். நெகிழ்ந்து போனேன்.

    நிகழ்ச்சி முடிந்ததும், மேக்கப் ரூமுக்கு வந்து என்னைப் பாராட்டிய சிவாஜி, "நடனம் ரொம்ப நன்றாக இருந்தது. அதோடு அண்ணன் (எம்.ஜி.ஆர்) சொன்ன மாதிரி தொழிலில் ஈர்ப்பு இருந்தால் மட்டுமே வலியைப் பொறுத்துக் கொண்டு ஆடமுடியும்'' என்று பாராட்டினார்.

    இரு பெரிய திலகங்களின் பாராட்டும், என் கால் வலிக்கு மிகப்பெரிய ஒத்தடமாக அமைந்தது.''

    இவ்வாறு லதா கூறினார்.

    தமிழில் எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே நடித்து வந்த நேரத்தில், தெலுங்குப் படங்களில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணமராஜ×, சோபன்பாபு ஆகியோருடன் லதா நடிக்கவே செய்தார். இதில் பல படங்கள் `ஹிட்' படங்கள்.

    "சிரித்து வாழவேண்டும்'' என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த நேரத்தில், அந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் என்.டி.ராமராவுடன் சேர்ந்து நடித்தார். (மும்மொழிப் படத்தில் கதாநாயகி)

    "சிவகாமியின் செல்வன்'' படத்தில் சிவாஜியும், லதாவும். இவர்கள் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான்.

    "வட்டத்துக்குள் சதுரம்'' என்ற படத்தில் சுமித்ரா, லதா.
    டிக்கெட்டின் விலை ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது எனக்கு எப்போதும் புரிந்தது இல்லை என நடிகர் அரவிந்த் சாமி டுவிட் செய்துள்ளார்.
    விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் ஜனவரி 13-ந்தேதி வெளியாகவுள்ளது. முதலில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு, பின்னர் அதை ரத்து செய்துள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதே வேளையில், வழக்கம்போல் டிக்கெட்கள் அதிக விலைக்கு விற்கத் தொடங்கியுள்ளனர். டிக்கெட் விற்பனை விவகாரம் தொடர்பாக, முதன் முறையாக ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி. 

    அரவிந்த்சாமியின் டுவிட்டர் பதிவு

    இது தொடர்பாகத் தனது டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: "வெவ்வேறு செலவில் தயாரிக்கப்படும் வெவ்வேறு தயாரிப்புகள், வெவ்வேறு தரத்தில் இருக்கும் திரையரங்குகளில், வெவ்வேறு ரியல் எஸ்டேட் மதிப்பு இருக்கும் பகுதிகளில் திரையிடப்படும்போது திரைப்பட டிக்கெட்டின் விலை ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது எனக்கு எப்போதும் புரிந்தது இல்லை". இவ்வாறு அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.
    கின்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் முன்னோட்டம்.
    'வத்திக்குச்சி' படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் அடுத்ததாக இயக்கவுள்ள படம் ‘டிரைவர் ஜமுனா’. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக, எஸ்.பி.செளத்ரி மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் தயாராக உள்ளது. இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். கிரைம்  த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. 

    டிரைவர் ஜமுனா படக்குழு

    இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி  டிரைவராக நடிக்கிறார். அவருடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்றைய கால கட்டத்தில், தினசரி வாழ்க்கையில், கால் டாக்ஸி டிரைவர்களை கடந்து போய் வருகிறோம். ஒரு நடுத்தர குடும்பத்து பெண், கால் டாக்ஸி டிரைவரை, மையமாக  கொண்டு கிரைம் திரில்லர் படமாக இது உருவாக உள்ளதாக படக்குழு தெரிவித்து உள்ளது. 
    ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்டிற்காக காத்திருப்பதாக அஜித் ரசிகர் ஒருவர் ஆட்டோவின் பின்னால் எழுதி உள்ளார்.
    அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இப்படம் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதற்கு பின், எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் படக்குழு வெளியிடாமல் உள்ளது. குறிப்பாக இப்படத்தில் அஜித்தை தவிர யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைக்கூட இதுவரை தெரிவிக்கவில்லை. 

    இதனால் சமூக வலைதளங்களில் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். இதுவரை எந்த அப்டேட்டும் தராத போனி கபூரை கண்டித்து போஸ்டர் ஒட்டிய சம்பவங்களும் அரங்கேறின. இவை எல்லாத்துக்கும் மேல், கடந்த வாரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

    அஜித்

    இந்நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் தனது ஆட்டோவின் பின்புறம் ‘வெயிட்டிங் ஃபார் வலிமை அப்டேட்’ என எழுதி, படத்தின் மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    டுவிட்டரில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பதிவிட்ட புகைப்படமும், அதன் பின்னணியும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    இந்தி சினிமாவின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் டுவிட்டரில் 4.5 கோடி ரசிகர்களை பெற்றதையொட்டி, அவரது ரசிகர் ஜாஸ்மின் என்பவர் வாழ்த்து புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்தார்.  அந்த புகைப்படத்தில் அமிதாப், தனது தந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகிறார். இந்தப் புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ள அமிதாப் பச்சன், அந்த புகைப்படத்தின் பின்னணியை விளக்கியுள்ளார். 

    அமிதாப் கூறியிருப்பதாவது, ‘கூலி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பு தளத்தில் எனக்கு விபத்து ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பியபோது, என்னை பார்க்க வந்த தந்தை உடைந்து, கண்ணீர்விட்டு அழுதார். அப்போது, அவரது காலில் விழுந்து ஆசி பெற்ற புகைப்படம் இது. தந்தையிடம் இருக்கும் சிறுவன் அபிஷேக் பச்சன். இதுவரை கூலி திரைப்படம் பார்க்கவில்லை. இந்த வலியுடன் இனியும் அந்த படத்தை பார்க்கமாட்டேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    அமிதாப் பச்சனின் டுவிட்டர் பதிவு

    1982ம் ஆண்டு கூலி படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அமிதாப் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  மூன்றுக்கு மேற்பட்ட இடங்களில் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. அந்த ஆபரேஷன் செய்யும்போது அமிதாப்புக்கு வேறொருவரின் ரத்தம் கொடுக்கப்பட்டது. 

    அந்த நபருக்கு இருந்த ஹெபடைடீஸ் பி என்ற கல்லீரல் நோய், அமிதாப்புக்கும் தொற்றிக்கொண்டது. இதனால் இன்றும் கல்லீரல் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வளவு சோகம் நிறைந்த நினைவலைகளைக் கொண்டுள்ளார். அமிதாப்புக்கு வாழ்த்துகளை தெரிவித்து வரும் ரசிகர்கள், அவரின் நினைவுகளைக் கேட்டு தங்களின் சோகத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
    ஒரே சட்டைக்குள் நாயகன் - நாயகி இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூகவலைதளங்களில் பரபரப்பாகி உள்ளது.
    தமிழ் சினிமாவில் சில படங்கள் போஸ்டரிலேயே பரபரப்பை ஏற்படுத்தும். அப்படி நாயகன் - நாயகி இருவரும் ஒரே சட்டைக்குள் இருக்கும் படம் வெளியாகி அது சமூகவலைதளங்களில் பரபரப்பாகி உள்ளது. பழகிய நாட்கள் என்ற படத்தின் போஸ்டர் அது.  மீரான் என்ற புதுமுகம் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மேகனா நடித்துள்ளார். 

    மேலும் இப்படத்தில் பிரபல நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ், இயக்குனர் ஸ்ரீநாத், வின்சென்ட் ராய், சுஜாதா, நெல்லை சிவா, சிவக்குமார், மங்கி ரவி ஆகியோர் நடித்து உள்ளனர்.இளம் வயதில் ஏற்படும் காதல் எவ்வாறு முடிவுறுகிறது. அதே பக்குவப்பட்ட காதல் அவர்களின் வாழ்வியலை எவ்வாறு உறுதிப்படுத்துகிறது என்பதை கூறும் காதல் கதை இந்த படம். 

    மீரான், மேகனா

    இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம்தேவ் இயக்கி உள்ளார். ஜான் ஏ. அலெக்ஸிஸ் - ஷேக் மீரா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிலிப் விஜயக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரே சட்டைக்குள் இருவரும் இருக்கும் படத்தை பார்த்த ரசிகர்கள் ‘யார் அந்த தையல்காரர்?’ என்று கேட்டு கிண்டல் செய்து வருகிறார்கள்.
    நடிகர் ஜெயராமின் மகனும், வளர்ந்து வரும் இளம் நடிகருமான காளிதாஸை நடிகர் விஜய் நேரில் பாராட்டி உள்ளார்.
    இயக்குநர்கள் வெற்றி மாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கதைக்கருவை மையமாக வைத்து "பாவக்கதைகள்" என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கினார்கள். ஓடிடி தளத்தில் வெளியாகிய இந்தப் படம், ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. சாதிப் பெருமை, குடும்ப கௌரவம் ஆகியவற்றால் ஏற்படும் தீமைகள் மற்றும் இழப்புகள் குறித்து பேசும்படியாக இதன் ஒவ்வொரு கதையும் அமைந்திருந்தது. 

    அதிலும் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சாந்தனு, காளிதாஸ் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'தங்கம்' பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மூன்றாம் பாலினத்தவர் பற்றிய இந்தக் கதை, பார்வையாளர் மனதை உருக்கியது. குறிப்பாக மூன்றாம் பாலினத்தவராக நடித்த நடிகர் காளிதாஸ் ஜெயராம் ரசிகர்களிடம் சிறப்பான பாராட்டுகளைப் பெற்றார். 

    காளிதாஸ் ஜெயராமின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில் தற்போது காளிதாஸை நடிகர் விஜய் பாராட்டி இருக்கிறார். சமீபத்தில் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள காளிதாஸ், "இதைவிட எந்த விஷயமும் சிறப்பாக இருக்க முடியாது என்று நினைத்தபோது... மாணவனை சந்தித்த மாஸ்டர். விஜய் சார் உங்கள் நேரத்தை எனக்காக ஒதுக்கியதற்கு நன்றி" என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    ×