என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாக உள்ள ‘டான்’ படத்தின் முன்னோட்டம்.
    சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தை இயக்க உள்ளார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரியும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்க உள்ளனர்

    டான் படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். கல்லூரி பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது.
    சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய நடிகை பூஜா ஹெக்டேவிடம், நிர்வாண புகைப்படத்தை பதிவிடுமாறு ஒருவர் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
    தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது பிரபாஸுடன் ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

    பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பதிவு

    இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார் பூஜா ஹெக்டே. அப்போது ரசிகர்கள் கேட்கும் புகைப்படங்களை பதிவிடுவதாக தெரிவித்திருந்தார். அதில் ரசிகர் ஒருவர் தங்களது நிர்வாண புகைப்படத்தை பதிவிடுமாறு கேட்டிருந்தார். இதற்கு தனது கால்கள் மட்டும் தெரியும் வகையில் ஒரு புகைப்படத்தை பதிவிட்ட பூஜா ஹெக்டே “வெறும் கால்கள்” என குறிப்பிட்டு அவருக்கு நெத்தியடி பதில் கொடுத்தார். 
    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
    கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். இவர் தற்போது இயக்கியுள்ள டாக்டர் படம் வருகிற மார்ச் 26-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதையடுத்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை இயக்க உள்ளார் நெல்சன். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதமே வெளியிடப்பட்டது.

    விஜய்

    இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தற்போது டாக்டர் படத்தின் வெளியீட்டு பணிகளில் பிசியாக இருக்கும் நெல்சன், அந்தப் படம் ரிலீசான பின்னரே தளபதி 65 படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளாராம். 

    மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை இரண்டே மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். அதன்படி ஜூன் அல்லது ஜுலை மாதத்தில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டால், இந்த ஆண்டே தளபதி 65 படம் ரிலீசாக வாய்ப்புள்ளது. 
    விவசாயிகள் போராட்டம் குறித்த இந்திய பிரபலங்களின் நிலைப்பாட்டை நடிகை டாப்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
    டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஹாலிவுட் பாப் பாடகி ரிஹானா, நடிகை மியா கலிபா உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் டுவிட் செய்து இருந்தனர். 

    இதனிடையே விவசாயிகள் போராட்டம் குறித்து சர்வதேச பிரபலங்கள் கருத்து தெரிவிப்பது இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக இருப்பதாக இந்திய பிரபலங்களான கங்கனா ரனாவத், அக்‌ஷய் குமார், விராட் கோலி, ரோகித் சர்மா, சச்சின் உள்ளிட்ட பலர் டுவிட் செய்திருந்தனர். 

    இந்நிலையில் இந்திய பிரபலங்களின் இந்த நிலைப்பாட்டை நடிகை டாப்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஒரு டுவிட் உங்கள் ஒற்றுமையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

    டாப்சியின் டுவிட்டர் பதிவு

    ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் நீங்கள்தான் உங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு மற்றவர்களுக்கு பாடம் எடுக்காதீர்கள்” என பதிவிட்டுள்ளார். டாப்சியின் இந்த டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
    அஜித்தை நேரில் சந்தித்த ரசிகர் ஒருவர் அவரிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
    அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இப்படம் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதற்கு பின், எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் படக்குழு வெளியிடாமல் உள்ளது. குறிப்பாக இப்படத்தில் அஜித்தை தவிர யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைக்கூட இதுவரை தெரிவிக்கவில்லை. 

    இதுவரை எந்த அப்டேட்டும் தராத தயாரிப்பாளர் போனி கபூரை கண்டித்து போஸ்டர் ஒட்டிய சம்பவங்களும் அரங்கேறின. இவை எல்லாத்துக்கும் மேல், தற்போது அஜித்திடமே ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்டுள்ளார். 

    அஜித்

    சமீபத்தில் அஜித், இந்தியா முழுதும் சுமார் 10,000 கி.மீ தூரம் பைக்கிலேயே பயணம் செய்தார். அந்த பயணத்தின் போது ரசிகர்கள் பலர் அவரை சந்தித்து அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். 

    அப்போது ரசிகர் ஒருவர் அஜித்திடம் வலிமை அப்டேட் கேட்டாராம். இதைக்கேட்டு சிரித்த அஜித் ‘மிக விரைவில்’ என கூறிவிட்டு சென்றதாக அந்த ரசிகர் தெரிவித்துள்ளார். 
    பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கிய ராதா மோகன், அடுத்ததாக இயக்கும் படத்தில் வாணி போஜன் ஹீரோயினாக நடிக்கிறார்.
    ‘அபியும் நானும்’, ‘மொழி’, ‘பயணம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் ராதா மோகன். இவர் அடுத்ததாக, வைபவ் - வாணி போஜன் நடிக்கும் இந்த முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

    மங்கி மேன் கம்பெனி இப்படத்தைத் தயாரிக்கிறது. பிரேம்ஜி இசையமைக்கும் இப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.

    வாணி போஜன், வைபவ்

    படம் குறித்து இயக்குநர் ராதாமோகன் கூறுகையில், ''ஓடிடியில் இது எனது முதல் படம். மிகச்சிறந்த முறையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்து அனைவரும் அற்புதமாக நடிக்கிறார்கள். வைபவ், வாணிபோஜன், கருணாகரன் மற்றும் என் நண்பர் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோருடன் இப்படத்தில் கை கோர்ப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி’' என்றார்.
    மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்த நடிகர் குரு என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.
    விஜய், விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடித்த படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. படம் வெளியான 16 நாட்களில் 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அண்மையில் ஓடிடி-யில் வெளியிடப்பட்ட இப்படம் அதிலும் அதிக பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

    குருவின் திருமண புகைப்படம்

    இந்நிலையில், மாஸ்டர் படத்தில் நடித்திருந்த குரு என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இவர் தனது நீண்ட நாள் காதலியான கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கோவிலில் நடைபெற்றது. குருவிற்கு விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    நடிகை திரிஷா நடித்துள்ள திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள இவர், மலையாளத்தில் அறிமுகமான படம் தான் ‘ஹே ஜூட்’. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் திரிஷா, நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஷ்யாம் பிரசாத் இயக்கியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

    நிவின் பாலி, திரிஷா

    இந்நிலையில், இப்படத்தை தற்போது தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். அதுவும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். இப்படம் வருகிற பிப்ரவரி 5-ந் தேதி ஓடிடி-யில் வெளியாக உள்ளது. நடிகை திரிஷா நடித்துள்ள படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த இரண்டு படங்களிலும் பெரிய பிளஸ்சாக அமைந்தது ஏ.ஆர்.ரகுமானின் இசை தான். அதனால் சிம்பு - கவுதம் மேனன் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணிக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. 

    ஏ.ஆர்.ரகுமான்

    கடந்த சில தினங்களுக்கு முன் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாகவும், அப்படத்தை ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், அப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. 
    தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நித்யா மேனன், காதல் தோல்வி குறித்து தெரிவித்துள்ளார்.
    அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வருபவர் நடிகை நித்யாமேனன். இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் வெப்பம், மெர்சல், ஓ கே கண்மணி, சைக்கோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அடுத்ததாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் தி அயர்ன் லேடி படத்தில் நடிக்கிறார்.

    இந்நிலையில், நடிகை நித்யா மேனன் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: “என் மீது வரும் புகார்களையும் விமர்சனங்களையும் கண்டுகொள்ள மாட்டேன். எந்த விஷயம் ஆனாலும் ஒளிவு மறைவு இல்லாமல் நேராக எதிரில் பேசுவதும், தெளிவாக சொல்வதும்தான் எனது பழக்கம். எதற்கும் தயங்க மாட்டேன். எனது முதல் காதல் தோல்வியில் முடிந்தது. 

    நித்யா மேனன்

    அதன்பிறகு கொஞ்ச நாட்கள் ஆண்களையே நான் வெறுத்தேன். இனிமேல் காதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. யாருக்காகவும் என்னை நான் மாற்றிக்கொள்வது சுத்தமாக பிடிக்காது. எனக்கு பிடித்த மாதிரி வாழத்தான் விரும்புவேன். நிஜ வாழ்க்கையில் சாதாரண பெண்ணாகத்தான் யோசிப்பேனே தவிர நான் ஒரு நடிகை என்றோ, மற்றவர்களை விட வித்தியாசமானவள் என்றோ, ஏதோ ஆகாயத்தில் இருந்து குதித்தவள் என்றோ எப்போதும் நினைக்க மாட்டேன்.” இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.
    மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளரும், அவருக்கு மாற்றாக படங்களில் டூப் போட்டு நடித்தவருமான கே.பி.ராமகிருஷ்ணன் காலமானார்.
    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர் கே.பி.ராமகிருஷ்ணன். சினிமாவில் சண்டைப்பயிற்சி கலைஞராகவும், எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த அனைத்து படங்களிலும் அவருக்கு டூப் போட்டு நடித்தவர் இவர்தான். ஒரு சில படங்களில் நம்பியாருக்கும் டூப் போட்டு நடித்தார். 

    இவர் தனது கோபாலபுர இல்லத்தில், கடந்த டிசம்பர் 27ம் தேதி மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தார். இதில், அவரது தலையில் அடிபட்டு, மூளையில் ரத்தக் கட்டு ஏற்பட்டதால் சுயநினைவை இழந்தார். இதையடுத்து மயிலாப்பூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

    கே.பி.ராமகிருஷ்ணன்

    அங்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், கடந்த ஜனவரி 1ந் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்த கே.பி.ராமகிருஷ்ணன், சுயநினைவு திரும்பாமலேயே நேற்று உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. மறைந்த கே.பி.ராமகிருஷ்ணனுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவரது மனைவி கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார்.
    தண்ணீர் பஞ்சத்தை மையமாக வைத்து பாலசந்தர் உருவாக்கிய "தண்ணீர் தண்ணீர்'' படத்துக்கு மத்திய அரசின் பரிசு கிடைத்தது. ஆனால் மாநில அரசின் பரிசு கிடைக்கவில்லை.
    தண்ணீர் பஞ்சத்தை மையமாக வைத்து பாலசந்தர் உருவாக்கிய "தண்ணீர் தண்ணீர்'' படத்துக்கு மத்திய அரசின் பரிசு கிடைத்தது. ஆனால் மாநில அரசின் பரிசு கிடைக்கவில்லை.

    கமலஹாசனையும், ஸ்ரீதேவியையும் வைத்து "வறுமையின் நிறம் சிவப்பு'' என்ற படத்தை 1980-ல் பாலசந்தர் உருவாக்கினார். கருத்தாழம் மிக்க படம்.

    பொதுவாக, பாடல் காட்சிகளை சிறப்பாகவும், புதுமையாகவும் படமாக்க வேண்டும் என்பதில், பாலசந்தர் அதிகம் சிரமம் எடுத்துக்கொள்வார். உதாரணமாக, அவள் ஒரு தொடர் கதையில் "கடவுள் அமைத்து வைத்த மேடை...'' என்ற பாடல் காட்சி புதுமையானது. பாடலில் சிங்கம் கர்ஜிப்பது, யானை பிளிறுவது போன்ற சத்தங்கள் வரும். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட, கமலஹாசன் பிரமாதமாக நடித்திருப்பார். பாடல், இசை, நடிப்பு, டைரக்ஷன் எல்லாம் சிறப்பாக அமைந்த காட்சி அது.

    "அவர்கள்'' படத்தில் பேசும் பொம்மையுடன் கமலஹாசன் பாடும் பாடலும் இவ்வாறே பெரும் பாராட்டுதலைப் பெற்றது.

    "வறுமையின் நிறம் சிவப்பு'' படத்தில் மறக்க முடியாத ஒரு பாடல் காட்சி:-

    பாடலுக்கான மெட்டை (எஸ்.ஜானகியின் குரலில்) இசை அமைப்பாளர் போல ஒவ்வொரு வரியாக ஸ்ரீதேவி பாடிக்காட்ட, "சிப்பி இருக்குது, முத்து இருக்குது'' என்ற பாடல் வரிகளை சொல்லிக் கொண்டே வருவார், கமலஹாசன்.

    இசை, நடிப்பு, டைரக்ஷன் மூன்றும், திரிவேணி சங்கமம் போல் அமைந்த அற்புதக்காட்சி அது.

    இதையடுத்து பாலசந்தர் எடுத்த படம் "தண்ணீர் தண்ணீர்''

    அப்போது (1981) தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருந்தது. அதை மையமாக வைத்து கோமல்சுவாமி நாதன் கதை- வசனம் எழுதி, நாடகமாக நடத்தியதுதான் "தண்ணீர் தண்ணீர்.'' அதற்கு திரைக்கதை எழுதி, டைரக்ட் செய்தார், பாலசந்தர்.

    படத்தின் கதாநாயகி சரிதா. பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்தனர்.

    அப்போது தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தார்.

    தண்ணீர் பிரச்சினை என்பதால், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும், வசனங்களும் அரசாங்கத்தை தாக்குவது போல் இருப்பதாக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கருதினார்கள்.

    இதுபற்றி பாலசந்தர் கூறியிருப்பதாவது:-

    "படம் வெற்றிகரமாக ஓடியது. படத்தில் அரசை தாறுமாறாக தாக்கி இருப்பதாக, எம்.ஜி.ஆருக்கு தகவல் போயிற்று.

    "இந்தப் படத்துக்கு சென்சாரில் எப்படி அனுமதி கொடுத்தார்கள்?'' என்று எம்.ஜி.ஆர். கூறியதாக எனக்கு தெரியவந்தது.

    "படத்தின் முடிவில், எல்லோரும் துப்பாக்கி எடுத்துக்கொண்டு வன்முறை பக்கம் திரும்புவதாக காட்டப்பட்டிருக்கிறது'' என்று பலர் குற்றம் சாட்டினார்கள்.

    ஒரு புரட்சிக்காரன் எப்படி உருவாக்கப்படுகிறான் என்பதை காட்டுவதற்காக எடுக்கப்பட்ட காட்சி அது. எல்லோரும் தீவிரவாதியாக மாறவேண்டும் என்று சொன்ன காட்சி அல்ல. அரசு பற்றிய விமர்சனங்களும் நாசூக்காக இருக்கும்.

    படத்தைப்பற்றி வாதப்பிரதி வாதங்கள் நடந்தன. "துப்பாக்கி தூக்கச் சொல்கிறார், பாலசந்தர்'' என்று முணுமுணுக்கப்பட்டதாலும், தணிக்கைக் குழுவுக்கு அரசு சென்றதாலும், அந்தக் கடைசி காட்சியில் சில மாறுதல்கள் செய்தேன்.

    அந்த ஆண்டு விருதுக்காக, மத்திய மாநில அரசுகளுக்கு "தண்ணீர் தண்ணீர்'' அனுப்பப்பட்டது.

    மாநில அரசின் விருது கிடைக்கவில்லை. ஆனால், சிறந்த மாநில மொழிப்படம் என்றும், தேசிய அளவிலான சிறந்த திரைக்கதை என்றும் இரண்டு பரிசுகளை மத்திய அரசு வழங்கியது.

    "தண்ணீர் தண்ணீர்'' படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதும், சிறந்த நடிகைக்கான விருதும் (சரிதாவுக்கு) வழங்க மாநில தேர்வுக்குழு முடிவு செய்திருப்பதாக, ஆரம்பத்தில் எனக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்தன. ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானபோது, எந்த பரிசும் கிடைக்கவில்லை.

    ஆனால், "வறுமையின் நிறம் சிவப்பு'' படத்துக்கு மாநில அரசின் விருது கிடைத்தது.

    பரிசளிப்பு விழா எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது.

    விருது வழங்கும் விழாவில், எம்.ஜி.ஆர். முன்னிலையில் நான் பேசியது, இன்றும் நினைவில் இருக்கிறது. "என் மீது அரசுக்கு கோபம் இருக்கலாம். தண்ணீர் தண்ணீர் படத்தால் ஏற்பட்ட அந்தக் கோபத்தின் காரணமாக, இந்தப் படத்துக்கும் விருது தரப்படமாட்டாது என்று எண்ணினேன். அதற்கு மாறாக, எம்.ஜி.ஆர். கையால் இப்போது விருது வாங்கி இருக்கிறேன். இது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று குறிப்பிட்டேன்.

    எம்.ஜி.ஆர். பேசும்போது, என் பேச்சுக்கு பதிலளித்தார். "அந்தந்த நேரத்தில் எது நல்ல படம் என்று எண்ணுகிறோமோ, அதைத்தான் தேர்வு செய்வோமே தவிர, ஏதோ ஒரு காரணத்துக்காக பழி வாங்கும் எண்ணமோ, திறமையானவர்களை ஒதுக்கி வைத்து விடும் எண்ணமோ கிடையாது'' என்று குறிப்பிட்டார்.

    எம்.ஜி.ஆரின் "தெய்வத்தாய்'' படத்துக்கு வசனம் எழுதியதன் மூலம்தான் திரை உலகுக்கு வந்தேன். "எம்.ஜி.ஆர். படத்துக்கு பாலசந்தர் வசனம் எழுதுகிறார்'' என்ற மதிப்பும், மரியாதையும் திரை உலகில் எனக்கு ஏற்பட காரணமாக இருந்தவர் அவர். தனது அரசாங்கத்தை விமர்சித்து படம் வந்தாலும், அதை பொருட்படுத்தாமல் என்னை வாழ்த்தியது கண்டு நெகிழ்ந்து போனேன்.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
    ×