என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதி ஆகியோர் சட்ட விரோதமாக பணம் சம்பாதித்தது தொடர்பாக போலீசார் தகவல்களை திரட்டி குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளனர்.
    பெங்களூருவில் நடந்த போதைப்பொருள் விற்பனை மற்றும் கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர். ராகிணி, சஞ்சனா ஆகியோர் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

    இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பான வழக்கில் 2900 பக்க குற்றப்பத்திரிக்கை தயார் செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதி ஆகியோர் சேர்த்திருக்கும் சொத்துக்கள் மற்றும் சட்ட விரோதமாக பணம் சம்பாதித்து இருப்பது தொடர்பாக போலீசார் தகவல்களை திரட்டி அந்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிகிறது. 

    ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி

    அதன்படி நடிகை ராகிணிதிவேதி கடந்த 2 ஆண்டுகளில் ரூ.6 கோடி சொத்து சேர்த்து இருப்பதாகவும், நடிகை சஞ்சனா கல்ராணி ரூ.14 கோடி சொத்து சேர்த்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    அதே நேரத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் பெரிய பட்ஜெட் படங்களில் எதுவும் நடிக்கவில்லை என்றும், சினிமா மூலம் அவர்களுக்கு பெரிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது.

    மேலும் கடந்த 2 ஆண்டுகளில் போதைப்பொருள் விற்பனை, விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது மற்றும் அதில் கலந்து கொள்பவர்களிடம் பணம் வசூலித்தது உள்பட சட்டவிரோதமாக பணம் சம்பாதித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சட்டவிரோத வருமானம் தற்போது நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு பெரும் பின்னடைவாக இருப்பதாக கருதப்படுகிறது. இந்த குற்றப்பத்திரிகையில் 180 சாட்சிகள் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
    ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கும், படம் வெளியாக பிரார்த்தனை செய்தவர்களுக்கும் எஸ்.ஜே.சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
    செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. கடந்த 2016-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம், பைனான்ஸ் பிரச்சினை காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருந்தது. 

    இதனிடையே இப்படம் மார்ச் 5-ந் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டு, ரிலீசுக்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் பேரில், இப்பட வெளியீட்டிற்கு நீதிமன்றம் தடைவிதித்தது. இதனால் படம் திட்டமிட்டபடி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது.

    எஸ்.ஜே.சூர்யாவின் டுவிட்டர் பதிவு

    இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதால், தற்போது படத்திற்கான தடை விலக்கப்பட்டுள்ளதாக படத்தின் நாயகன் எஸ்.ஜே.சூர்யா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது: “ரேடியன்ஸ் மீடியா மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் இடையேயான பிரச்சினை தீர்க்கப்பட்டது. தற்போது தான் நீதிமன்றம் தடை விலகலை வழங்கியது. இப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கும், படம் வெளியாக பிரார்த்தனை செய்தவர்களுக்கும் நன்றி. நம்ம படம் உண்மையாவே ரிலீஸ் ஆகுதுங்க,” என எஸ்.ஜே.சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.

    கர்ணன் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான ‘கண்டா வரச் சொல்லுங்க’ மற்றும் ‘பண்டாரத்தி புராணம்’ ஆகிய இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன.

    தனுஷின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், இப்படத்தின் டீசர் குறித்த முக்கிய அப்டேட்டை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, கர்ணன் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் இந்தவார இறுதியில் கர்ணன் பட டீசர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    முகமூடி படத்திற்கு பின் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த பூஜா ஹெக்டே, தற்போது ‘தளபதி 65’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது பிரபாஸுடன் ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

    முகமூடி படத்திற்கு பின் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த பூஜா ஹெக்டே, தற்போது ‘தளபதி 65’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிக்க நடிகை பூஜா ஹெக்டேவுக்கு 3.5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    பூஜா ஹெக்டே

    ‘தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். விரைவில் இப்படம் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ள ஸ்ரேயா கோஷல் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.
    பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இந்திய மொழி அனைத்திலும் பாடி வருகிறார். அவருடைய மயக்கும் குரலுக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் செம பிசியாகப் பாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.

    கணவருடன் ஸ்ரேயா கோஷல்

    தமிழில் இளையராஜா, அனிருத், ஏ.ஆர்.ரகுமான், டி.இமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ள ஸ்ரேயா கோஷல் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். இந்நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டு அழகிய புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
    கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த அருண் பாண்டியன், அன்பிற்கினியாள் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த இவர், தற்போது அன்பிற்கினியாள் என்கிற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தந்தை மகள் பாச உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஹீரோயினாக நடித்துள்ளார். இது மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற ஹெலன் படத்தின் ரீமேக் ஆகும். அன்பிற்கினியாள் படம் நாளை ரிலீசாக உள்ளது.

    அருண் பாண்டியன்

    இந்நிலையில், நடிகர் அருண் பாண்டியன் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி டார்லிங், 100, கூர்கா போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன், அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் அருண் பாண்டியன் நடிக்க உள்ளாராம். இப்படத்தில் அவர் நடிகர் அதர்வாவுக்கு தந்தையாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் தொடங்கவுள்ளது.
    தன்னை பற்றி தொடர்ந்து அவதூறாகவும், ஆபாசமாகவும் கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவரின் ஐடி-யை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளார் பிரியா வாரியர்.
    மலையாளத்தில் 2017-ல் வெளியான ஒரு அடார் லவ் படம் மூலம் பிரபலமானவர் பிரியா வாரியர். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் அவர் கண்ணடிப்பது சமூக வலைத்தளத்தை அதிர வைத்தது. இதனால் பிரியா வாரியர் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். தொடர்ந்து பட வாய்ப்புகளும் குவிந்தன. மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 

    சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் பிரியா வாரியர், ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் ரசிகர்களின் கமெண்ட்டுகளுக்கும் அவ்வப்போது பதிலளித்து வருகிறார். 

    பிரியா வாரியர்

    இந்நிலையில், தன்னை பற்றி தொடர்ந்து அவதூறாகவும், ஆபாசமாகவும் கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவரின் ஐடி-யை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்த பிரியா வாரியர், ஏன் நீ உன்னுடைய உண்மையான ஐடி-யில் இருந்து கமெண்ட் செய்யாமல், போலி ஐடி-யில் இருந்து பேசுகிறாய்? உனக்கு தைரியம் இல்லையா? என பதிலடி கொடுத்துள்ளார்.
    திருமணத்திற்கு தயாராக இருப்பதால், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்து பும்ரா விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இந்திய அணியின் முன்னணி் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். தனிப்பட்ட காரணத்திற்காக 4-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு, பும்ரா கேட்டுக்கொண்டதை அடுத்து அவருக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. 

    பும்ரா விடுப்பு எடுத்ததற்கான காரணம் அண்மையில் வெளியாகின. அதன்படி அவர் தனது திருமணத்திற்கு தயாராவதால் விடுப்பு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளையில், பும்ரா யாரை திருமணம் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

    பும்ரா, அனுபமா பரமேஸ்வரன்

    இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பும்ராவின் காதலி என கிசுகிசுக்கப்பட்ட நடிகை அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘இனிய விடுமுறை எனக்கு’ என பதிவிட்டுள்ளார். இதனால் பும்ரா இவரைத் தான் திருமணம் செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் பேச்சு அடிபடுகிறது. 
    அறிமுக இயக்குனர் சஜிமோன் பிரபாகரன் இயக்கத்தில் உருவாகி வரும் மலையன்குஞ்சு எனும் மலையாள படத்தில் நடித்த போது, நடிகர் பஹத் பாசில் விபத்தில் சிக்கினார்.
    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பஹத் பாசில். நடிகை நஸ்ரியாவின் கணவரான இவர் தமிழிலும் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், மலையன்குஞ்சு எனும் மலையாள படத்தில் நடித்த போது, நடிகர் பஹத் பாசில் விபத்தில் சிக்கி உள்ளார். அறிமுக இயக்குனர் சஜிமோன் பிரபாகரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வந்தது. அதில் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது, நடிகர் பஹத் பாசில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காயமடைந்தார்.

    பஹத் பாசில்

    அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டத்தையடுத்து, படக்குழுவினர் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சில நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளனர். இதனால் மலையன்குஞ்சு படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    ஒவ்வொரு படத்துக்குமே கதாபாத்திரத்துக்கு ஏற்றமாதிரி தோற்றத்தை மாற்றிக்கொள்ள கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பதாக நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.
    ‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறிய அவர், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார். 

    அவர் அளித்த பேட்டி வருமாறு: “நான் ஆரம்பத்தில் உடல் எடை அதிகமாகி பருமனாக இருந்தேன். இப்போது உடல் மெலிந்து இருக்கிறேன். எனது மெலிந்த தோற்றத்தை பார்த்து பலரும் அழகியாக மாறிவிட்டதாக பாராட்டுகிறார்கள். இந்த அதிசயம் எப்படி நடந்தது என்றும் கேட்கின்றனர். முதலில் தமிழ் படங்களில் சாதாரண பெண் போன்ற கதாபாத்திரங்களில் தான் நடித்தேன். அதற்கேற்ற உடல் தோற்றம் எனக்கு இருந்தது. 

    அஞ்சலி

    ஆனால் நிசப்தம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தபோது உடல் எடையை கணிசமாக குறைக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார். இதனால் கஷ்டப்பட்டு எடையை குறைத்தேன். ஒவ்வொரு படத்துக்குமே கதாபாத்திரத்துக்கு ஏற்றமாதிரி தோற்றத்தை மாற்றிக்கொள்ள கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறேன். 

    நிசப்தம் படத்துக்காக தோற்றத்தை மாற்றிய பிறகு என்னை பார்த்தவர்கள் நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்று பாராட்ட ஆரம்பித்துவிட்டனர். நான் அழகாக இருக்கிறேன் என்று சொல்லாதவர்களே இல்லை. அதனால் அந்த தோற்றத்தை அப்படியே தக்க வைத்துக்கொண்டு வருகிறேன். இது நிசப்தம் படம் எனக்கு கொடுத்த பரிசு”. இவ்வாறு அஞ்சலி கூறினார்.
    கண்ணதாசனிடம் வாலியை வசனகர்த்தா மா.லட்சுமணன் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.
    கண்ணதாசனிடம் வாலியை வசனகர்த்தா மா.லட்சுமணன் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.

    "தெரியுமே! திருச்சி வானொலியில் நாடகம் எல்லாம் எழுதிக் கொண்டிருந்த வாலிதானே நீங்கள்?'' என்று கேட்டார், கண்ணதாசன்.

    அவருடைய ஞாபகசக்தியை எண்ணி வாலி வியந்தார். இருவருக்கும் காபி கொண்டுவரச்சொல்லி தன் கையாலேயே கொடுத்தார், கண்ணதாசன்.

    "நான் ஒரு தீவிர ஆஸ்திகன்... நீங்களும் இப்படி ஆஸ்திகனா மாறிவிட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்'' என்று வாலி கூற, "நான் எப்பவுமே ஆஸ்திகன்தான். ஜுபிடர் பிக்சர்சில் இருக்கிறபோது, விபூதி குங்குமத்தோடு இருப்பேன்'' என்றார், கண்ணதாசன்.

    வாலி, கண்ணதாசனைப் பற்றி எழுதிக் கொண்டு போயிருந்த ஒரு கவிதையைப் படித்தார்.

    "காட்டுக்குள் தேனீக்கள் கூட்டுக்குள் வைத்ததை, பாட்டுக்குள் வைத்தவனே!'' என்று தொடங்கும் அந்தப் பாடலை வாலி பாடிக்காட்ட, கண்ணதாசன் மகிழ்ந்தார்.

    "நாம் அடிக்கடி சந்திக்கலாம்...'' என்று கண்ணதாசன் கூறினார்.

    ஆனால் காலம், கண்ணதாசனையும், வாலியையும் எதிர் எதிர் அணியில் நிறுத்தி தொழில் புரிய வைத்தது.

    இந்தியில் மிகப்பெரிய வெற்றிப்படமான "தீதார்'' படத்தின் கதையை "நீங்காத நினைவு'' என்ற பெயரில் பத்மா பிலிம்சார் படமாக எடுத்தார்கள். இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளராக கே.வி.மகாதேவனும், இயக்குனராக தாதாமிராசியும் பணியாற்றினர்.

    இந்தப் படத்தின் அதிபர் சுலைமானிடம் வாலியை வசனகர்த்தா `மா.ரா.'' அறிமுகப்படுத்தினார். சுலைமானுக்கு வாலியின் பாடல் பிடித்திருந்தது.

    அதைத்தொடர்ந்து, மகாதேவனை வாலி சந்தித்தார். அந்தக் காலத்தில், எந்த இசை அமைப்பாளரும் ஒரு புதிய பாடல் ஆசிரியரை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கேற்ப, வாலியிடம் மகாதேவன் இறுக்கமாகவே இருந்தார்.

    வாலியை அவர் உதறவும் இல்லை; உற்சாகப்படுத்தவும் இல்லை. ஆயினும், பட அதிபர் சுலைமானும், வசன கர்த்தா "மா.ரா.''வும் வாலிக்கு பக்க பலமாக இருந்ததால், "நீங்காத நினைவு'' படத்தில் வாலியின் பாடல்கள் இடம் பெற்றன.

    (ஆரம்பத்தில் வாலியை முழு மனதுடன் மகாதேவன் வரவேற்கவில்லை என்றாலும், பிற்காலத்தில் வாலியின் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு இசை அமைத்தார்.)

    இந்தக் காலக்கட்டத்தில், வாலியின் வாழ்க்கையில் எதிர்பாராத பெரிய திருப்பம் ஏற்பட்டது.

    முக்தா பிலிம்சார் அப்போது "இதயத்தில் நீ'' என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். முக்தா சீனிவாசனிடம் "நீங்காத நினைவு'' படத்தயாரிப்பாளர் சுலைமானும், வசனகர்த்தா "மா.ரா.''வும் வாலியைப் பற்றி கூறினார்கள். இதன் விளைவாக, வாலிக்கு அப்படத்தில் பாட்டு எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

    அதன் பிறகு நடந்தது பற்றி வாலி கூறுகிறார்:

    "என் ஆனந்தத்திற்கு எல்லையேயில்லை. ஏனெனில் அந்தப் படத்தின் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. இவர்களிடம் பாட்டெழுதும் வாய்ப்புக்காகத்தானே நான் இத்தனை காலம் தவமிருந்தேன்!

    1963 ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஒரு மத்தியான வேளையில் முக்தா பிலிம்ஸ் மாடியிலுள்ள சின்ன அறையில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், ராமமூர்த்திக்கும் நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன்.

    நான் ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்திலும், எஸ்.எஸ்.ஆர். படத்திலும் பாடல்கள் எழுதியிருப்பதையெல்லாம் விஸ்வநாதனிடம் விவரித்துச் சொன்னார் முக்தா சீனிவாசன்.

    "நல்ல கவிஞர். பாட்டைப் பாருங்கள். பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒத்துவராது என்று தோன்றினால் நான் உங்களை வற்புறுத்தமாட்டேன்'' என்றெல்லாம் தெளிவாகச் சொன்னார் முக்தா சீனிவாசன்.

    எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நான் ஒரு வணக்கத்தைப் போட்டேன்.

    "ஏதாவது பல்லவி எழுதிக்கொடுங்கள்'' என்றார், விஸ்வநாதன். பாட்டுக்கான காட்சி விளக்கத்தை இயக்குனர் முக்தா சீனிவாசன் சொன்னார்.

    உடனே நான் ஒரு பல்லவியை எழுதி விஸ்வநாதனிடம் நீட்டினேன்.

    "பூவரையும் பூவைக்குப் பூமாலை போடவா?

    பொன்மகளே! வாழ்கவென்று பாமாலை போடவா?''

    - என்பதுதான் அந்தப் பல்லவி.

    "பூவைக்கு என்பதெல்லாம், டிïனுக்கு சரியாக வராதே...'' என்றார் எம்.எஸ்.வி.

    உடனே `பூங்கொடியே' என்று மாற்றிக் கொடுத்தேன்.

    ஒரு சிட்டிகை பொடியை எடுத்து மூக்கில் உறிஞ்சினார், விஸ்வநாதன். அப்போதெல்லாம் அவருக்குப் பொடி போடும் பழக்கமுண்டு.

    நான் எழுதிக் கொடுத்த பல்லவிக்கு ஐந்தே நிமிடங்களில் -ஐந்து விதமாக மெட்டமைத்துப் பாடியதைக் கேட்டு நான் அசந்து போனேன்.

    "சரணத்திற்கு, நான் கொடுக்கும் மெட்டுக்குத்தான் நீங்கள் பாட்டு எழுதவேண்டும்'' என்று விஸ்வநாதன் சரணத்திற்கான மெட்டை வாசித்தார்.

    விஸ்வநாதன் கொடுத்த மெட்டிற்கு கால்மணி நேரத்தில் நான்கைந்து சரணங்களை எழுதி அவரிடம் நீட்டினேன்.

    சரணங்களை வாங்கியவர், அவற்றைப் பாடாமல் திரும்பத் திரும்ப இரண்டு மூன்று முறை மனதிற்குள் படித்துப் பார்த்தார் விஸ்வநாதன்.

    பிறகு ஒரே ஒரு கேள்விதான் என்னை கேட்டார்:

    "இவ்வளவு நாளா எங்கே இருந்தீங்க?'' என்பதுதான் அந்த கேள்வி.

    நான் கண்கலங்கி மவுனி ஆனேன்.

    சரணங்களை உடனே `மளமள'வென்று பாடினார்.

    "சீனு அண்ணா! அடுத்த சிச்சுவேஷனையும், இவர்கிட்ட சொல்லுங்க...'' என்றார் விசு.

    சொன்னார் சீனிவாசன்.

    உடனே நான் எழுதினேன்:

    `ஒடிவது போல் இடையிருக்கும்

    இருக்கட்டுமே! - அது

    ஒய்யார நடை நடக்கும்

    நடக்கட்டுமே!

    சுடுவது போல் கண் சிவக்கும்

    சிவக்கட்டுமே! - அது

    சுட்டுவிட்டால் கவி பிறக்கும்

    பிறக்கட்டுமே!

    விஸ்வநாதன், மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போனார். உடனே விதவிதமான மெட்டமைத்துப் பாடிக்காட்டினார். வழக்கம்போல் அவர் கொடுத்த மெட்டுக்கு நான் சரணங்களை எழுதி முடித்தேன்.

    பிற்பகல் 3 மணியிலிருந்து 4 1/2 மணிக்குள் இரண்டு பாடல்களும் நிறைவடைந்தன.

    விஸ்வநாதன் அடுத்த கம்பெனிக்குப்புறப்பட்டுவிட்டார். போகும்போது, முக்தா சீனிவாசனைத் தனியாக அழைத்துக் காதில் ஏதோ சொல்லிவிட்டுப் போனார்.

    `என்ன சொன்னாரோ?' என்று நான் பதை பதைத்துக்கொண்டே சீனிவாசனிடம் கேட்டேன்!

    "உன்னை வைத்தே மிச்சப் பாடல்களையும் எழுதலாம் என்று சொல்லிவிட்டுப் போனாரய்யா! இன்னியோடு உன் தரித்திரம் ஒழிந்தது'' என்றார் முக்தா.

    எனக்கு நா எழவில்லை. கண்களில் நீர் கோத்து விழிப்படலம் மறைக்க நின்றேன்.

    முக்தா சீனிவாசன் என் கண் முன்னால் எனக்குக் கடவுளாகவே காட்சியளித்தார். வறுமையில் வாடி நித்தநித்தம் செத்துக் கொண்டிருந்த எனக்கு வாழ்வுப் பிச்சை போட்ட முக்தா சீனிவாசனை நான் மூச்சுள்ளளவும் மறப்பதற்கில்லை''

    இவ்வாறு வாலி கூறினார்.
    வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் முன்னோட்டம்.
    சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிப்பில் உருவாகும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இப்படத்தை லாபம் பட இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார். விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் முதல் படம் இதுவாகும். 

    மேகா ஆகாஷ், விஜய் சேதுபதி

    அதேபோல் இயக்குனர்கள் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். நடிகைகள் கனிகா, ரித்விகா ஆகியோர் முக்கிய வேடங்களில் வருகின்றனர். 
    ×