என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.
    மலையாளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இப்படத்தை தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். இதற்கான ரீமேக் உரிமையை இயக்குனர் ஆர்.கண்ணன் கைப்பற்றி உள்ளார். இப்படத்தை அவரே இயக்கவும் உள்ளார். பெயரிடப்படாத இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

    படக்குழுவினருடன் ஐஸ்வர்யா ராஜேஷ்

    இந்நிலையில், இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் இயக்குனர் ஆர்.கண்ணன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.
    மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் கோலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன.
    தமிழில் வெற்றி பெற்ற படங்களை தெலுங்கிலும், இந்தியிலும் ரீமேக் செய்கிறார்கள். இதுபோல் பிறமொழிகளில் வரவேற்பு பெற்ற  படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்படுகின்றன. மலையாளத்தில் 2019-ல் வெளியான ஹெலன் படத்தை தமிழில் அன்பிற்கினியாள் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். இதில் அருண்பாண்டியன் தனது மகள் கீர்த்தி பாண்டியனுடன் நடிக்கிறார். 

    இந்தியில் ஆயுஷ்மன் குரானா நடித்து 2018-ல் திரைக்கு வந்த அந்தாதுன் படம் தமிழில் பிரசாந்த், சிம்ரன், கே.எஸ்.ரவிக்குமார் நடிக்க அந்தகன் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ரீமேக் ஆகிறது. 

    கன்னடத்தில் ரிஷாப் ஷெட்டி, ஹரிப்பிரியா ஆகியோர் நடித்து 2019-ல் திரைக்கு வந்த பெல்பாட்டம் படம் தமிழில் அதே பெயரிலேயே கிருஷ்ணா, மகிமா நம்பியார் நடிக்க ரீமேக் ஆகிறது. மலையாளத்தில் வெற்றி பெற்ற ஆண்டிராய்டு குஞ்சப்பன் படம் தமிழில் கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் தர்ஷன், லாஸ்லியா நடிக்க தயாராகிறது. 

    கூகுள் குட்டப்பன் பட போஸ்டர்

    இந்தியில் ஆயுஷ்மன் குரானா நடித்த பதாய் ஹோ படம் தமிழில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்க வீட்ல விசேஷங்க என்ற பெயரில் தயாராக உள்ளது. மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அய்யப்பனும் கோஷியும்’ படமும் தமிழில் ரீமேக் ஆகிறது.
    ஒரு காலத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
    தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. 

    தற்போது அவர் கைவசம் `மஹா' என்கிற படம் மட்டும் உள்ளது. இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து அவருக்கு பெரிதாக பட வாய்ப்பு இல்லை.

    ஹன்சிகா

    இதனால் அவர் ஆல்பம் பாடல்களில் நடித்து அதனை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றி வருகிறார். இவர் நடித்த ‘பூட்டி ஷேக்’, ‘மாஸா’ போன்ற ஆல்பம் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பட வாய்ப்பு இல்லாததால் தொடர்ந்து இசை ஆல்பங்களில் நடிக்க ஹன்சிகா திட்டமிட்டு உள்ளாராம்.
    ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.
    சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி, அடுத்ததாக அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். 

    நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

    அருண் விஜய், ஹரி

    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் அருண் விஜய், விஜயகுமார், ஹரி, பிரியா பவானி சங்கர் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பை பழனி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
    மலையாளத்தில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிபெற்ற ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் தமிழ் ரீமேக்கை பிரபல தயாரிப்பாளர் இயக்க உள்ளாராம்.
    கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தேசம் என்று கூறப்படும் கேரள மண்ணில் தயாரான சில படங்கள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், மலையாளத்தில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் தான் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பிஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். 

    இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை பைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கினார். இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் சசிகுமாரும், சரத்குமாரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    பைவ் ஸ்டார் கதிரேசன்

    இந்நிலையில், அப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன், ‘அய்யப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக்கை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து ‘அய்யப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக்கை இயக்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    நடிகை டாப்சி, இயக்குனர் அனுராக் கஷ்யப் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
    தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா–2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்சி, தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வருகிறார். அங்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறார்.

    இந்நிலையில், நடிகை டாப்சிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் பிரபல பாலிவுட் இயக்குனர்களான அனுராக் கஷ்யப் மற்றும் விகாஷ் ஆகியோருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறதாம்.

    அனுராக் கஷ்யப், டாப்சி, விகாஷ்

    மும்பை மற்றும் புனேவில் உள்ள மூவருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். விகாஷும், அனுராக் கஷ்யப்பும் இணைந்து நடத்தி வரும் பட தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான பாந்தம் பிலிம்ஸ் நிறுவனத்துடன் தொடர்பில் இருந்ததால் டாப்சிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
    ‘சந்திரமுகி 2’ திரைப்படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், ராகவா லாரன்ஸ் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாகவும், இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார் என்றும் கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது. இதையடுத்து அப்படம் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகாமல் இருந்ததால், அப்படம் கைவிடப்பட்டதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

    இந்நிலையில் அதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். ‘சந்திரமுகி 2’ திரைப்படம் கைவிடப்பட்டதாக பரவும் தகவல் உண்மையில்லை, அது வெறும் வதந்தி எனக் கூறியுள்ள லாரன்ஸ், பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி திரைப்படம் திட்டமிட்டபடி உருவாகும் என உறுதிபடக் கூறியுள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கும் ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக 50-வது நாளை எட்டியுள்ளதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், 50 சதவீத இருக்கைகள் அனுமதியுடன் நவம்பர் மாதமே மீண்டும் திறக்கப்பட்டாலும், பெரிய படங்கள் எதுவும் ரிலீசாகாததால் களையிழந்து காணப்பட்டன. அதற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் பொங்கலுக்கு ரிலீசான படம் தான் மாஸ்டர். 

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரிக் குவித்தது. இப்படம் திரையரங்குகளில் வெளியான 16 நாட்களில் ஓடிடியில் வெளியிடப்பட்ட போதிலும் நிறைய இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடின. 

    இந்நிலையில், மாஸ்டர் படம் வெற்றிகரமாக 50வது நாளை எட்டியுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். உலகளவில் ரூ.263 கோடி வசூல் செய்துள்ள இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.217 கோடி வசூலித்துள்ளது.  குறிப்பாக தமிழ்நட்டில் மட்டும் ரூ.145 கோடி வசூல் செய்துள்ளது.

    விஜய்

    மேலும் 50-வது நாளில் அதிக திரையரங்குகளில் ஓடும் தமிழ் திரைப்படம் என்கிற சாதனையையும் மாஸ்டர் படைத்துள்ளது. இப்படம் 156 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதற்கு முன் சந்திரமுகி திரைப்படம் 50-வது நாளில் 134 திரையரங்குகளில் ஓடியதே சாதனையாக இருந்தது. தற்போது மாஸ்டர் அதை முறியடித்துள்ளது.
    பவன் கல்யாணுக்கு 4-வது மனைவியாக ரெடி என பிக்பாஸ் பிரபலம் ஒருவர் கூறியது டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் பவன் கல்யாண். டோலிவுட்டில் பவர் ஸ்டாராக இருக்கும் இவர், கடந்த 1997-ம் ஆண்டு நந்தினி என்பவரை முதலில் திருமணம் செய்துகொண்டார்.  கருத்து வேறுபாடு காரணமாக 2007-ல் அவரை விவாகரத்து செய்தார்.

    இதையடுத்து 2009-ம் ஆண்டு 'ஜானி' படத்தில் நடித்த ரேணு தேசாயை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட பவன் கல்யாண், 2012-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார். பின்னர் 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலிய நடிகையான அன்னா லெஸ்னேவாவை 3-வது திருமணம் செய்துகொண்ட பவன் கல்யாண், தற்போது அவருடன் இணைந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகையும், பிக்பாஸ் பிரபலமும் ஆன அஷூ ரெட்டி, பவன் கல்யாணுக்கு 4-வது மனைவியாக ரெடி எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பவன் கல்யாணின் தீவிர ரசிகையான இவர் சமீபத்தில் அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், ‘எப்பொழுதுமே என் முதல் காதல் நீங்கள் தான் பவன் கல்யாண்’ என குறிப்பிட்டிருந்தார்.

    அஷூ ரெட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவு

    அஷு ரெட்டியின் இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள், பவன் கல்யாணை திருமணம் செய்து கொண்டு அவருக்கு 4-வது மனைவியாக நீங்கள் தயாரா என்று கேட்டனர். அதற்கு அஷு ரெட்டியோ கொஞ்சம் கூட யோசிக்காமல் சட்டென, நான் ரெடி என்று பதில் அளித்தார்.
    நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
    விஜய் நடித்த மாஸ்டர் படம் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தியேட்டர்களில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படம் கொரோனா அச்சத்துக்கு இடையில் ரசிகர்களை தைரியமாக திரையரங்குகளுக்கு வரவைத்ததாக தியேட்டர் அதிபர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 

    இந்த படத்துக்கு பிறகு நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை எடுத்து பிரபலமான நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்க விஜய் தயாராகி உள்ளார். இது அவருக்கு 65-வது படம். அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி தேர்வு நடக்கிறது. பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா மந்தனாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

    விஜய்

    இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. ரஷ்யாவில் பெரும்பகுதி காட்சியை படமாக்க திட்டமிட்டு உள்ளனர். இந்த நிலையில் விஜய்யின் 65-வது படம் அரசியல் கதையம்சத்தில் தயாராவதாகவும் விஜய் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் புதிய தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.
    வாலி கஷ்டப்பட்ட காலத்தில் கண்ணதாசனின் உதவியாளராக வேலை பார்க்கக்கூடிய வாய்ப்பு வந்தது. அதை ஏற்க வாலி மறுத்துவிட்டார்.
    வாலி கஷ்டப்பட்ட காலத்தில் கண்ணதாசனின் உதவியாளராக வேலை பார்க்கக்கூடிய வாய்ப்பு வந்தது. அதை ஏற்க வாலி மறுத்துவிட்டார்.

    "நல்லவன் வாழ்வான்'' படத்துக்குப் பிறகு, அண்ணா கதை, வசனம் எழுதி, ப.நீலகண்டன் இயக்கிய "எதையும் தாங்கும் இதயம்'' படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.

    "உன் அன்னை முகம் என்றெண்ணி - நீ என்னை முகம் பார்க்கின்றாய்! என் பிள்ளை முகம் என்றெண்ணி - நான் உன்னை முகம் பார்க்கின்றேன்'' என்பதுதான் அந்தப்பாடல்.

    கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் நடித்த படம் இது.

    இந்தப் படத்துக்குப் பிறகும் வாலிக்குப் பெரிய வாய்ப்பு எதுவும் வரவில்லை.

    வாலி சிரமப்படும் போதெல்லாம் அவருக்கு உதவி செய்த சிலருள் இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் ஒருவர்.

    ஒரு நாள் அவர் திடீரென்று வாலியைத் தேடி வந்தார்.

    "வாலி! இனிமே நீ இரண்டு வேளை வயிறாரச் சாப்பிடலாம். உனக்கு மாதம் 300 ரூபாய் கிடைக்கிற மாதிரி ஒரு ஏற்பாடு பண்ணிட்டேன்... ஏறு, என் வண்டீல...'' என்று கையைப்பிடித்து இழுத்தார்.

    "அண்ணே, எனக்கு ஆபீஸ் வேலை வேணாம்ணே.... பாட்டு எழுதற வேலைதான் வேணும்!'' என்று வாலி சொன்னார்.

    "பாட்டு எழுதுற வேலைதாண்டா... கண்ணதாசன் பாட்டு எழுதச் சொல்லுவாரு... அதை நீ உடனே ஒழுங்காய்ப் பேப்பரில் எழுதணும். கவிஞர், உன்னை அசிஸ்டெண்டா வெச்சுக்க ஒத்துக்கிட்டாரு... உனக்கு அவர் மாதம் 300 ரூபாய் சம்பளம் தந்திடுவாரு...'' என்று வெங்கடேஷ் கூறினார்.

    உடனே வாலி, "அண்ணே! கண்ணதாசன் கடைக்கு, எதிர்க்கடை விரிக்க நான் வந்திருக்கிறேன். அவர்கிட்டேயே உதவியாளனாகச் சேர்ந்தா, என் தனித்தன்மை காணாமல் போய்விடும்... டெய்லர் கிட்ட வேலைக்குச் சேர்ந்தா காலமெல்லாம் காஜாதான் எடுக்கணுமே தவிர, மெஷின்ல ஏத்தமாட்டாங்க...'' என்றேன்.

    ஜி.கே.வி.யின் முகம் சிவந்து போயிற்று.

    "நீ உருப்படமாட்டேடா'' என்று கோபமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

    இதுகுறித்து வாலி எழுதியிருப்பதாவது:-

    "கண்ணதாசனின் கீழ் பணியாற்றுவது கேவலம் என்று நான் எண்ணவில்லை. அது எள் முனையளவு கூட, என் முன்னேற்றத்திற்கு உதவாது என்பதால்தான் அந்த வாய்ப்பை நான் விலக்கினேன்.

    ஒரு கவிஞன் தனக்கென்று -ஒரு முகவரியோடு இருத்தல் மிகமிக அவசியமானது. நம்மிடம் இருக்கும் தமிழ், நயாபைசா அளவுதான் என்றிருந்தாலும்கூட... அதை ரூபாயாக்கி முன்னேற வேண்டும் எனும் முனைப்பு இல்லாது போயின் நமக்கென்று ஒரு ஸ்தானத்தை சமூகம் வழங்காது.

    விஸ்வநாதன் -ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் இவர்களது முக தரிசனமே கிட்டாத நிலையில், கோடம்பாக்கம் ஒரு தொலைதூரக் கனவாகவே ஆகிவிட்டது எனக்கு. தந்தை மறைந்து போனார்; தாயோ பம்பாயில் நோய்ப்படுக்கையில் இருக்கிறாள். எனக்காக நானே அழுது கொள்ள வேண்டுமே தவிர, ஈரம் துடைப்பார் எவருமில்லை.

    இந்த லட்சணத்தில் சினிமாவை விடாமல் பிடித்துக்கொண்டு தொங்குவது, புத்திசாலித்தனமல்ல என்று புரிந்து கொண்டேன்.

    மதுரையில் டி.வி.எஸ். அலுவலகத்தில் மிகப்பெரிய பதவியில் என் நண்பர் ஒருவர் இருந்தார். அவருக்கு வேலை கேட்டு ஒரு லெட்டர் எழுதினேன்.

    அடுத்த வாரமே வந்து வேலையில் சேரச் சொல்லி அவர் பதில் எழுதியிருந்தார்.

    சென்னைக்கு ஒரு பெரிய வணக்கத்தைப் போட்டுவிட்டு, மதுரைக்குப் போய்விடலாம் என்று முடிவு கட்டினேன்.

    கைவசம் இருந்த நீலப் பெட்டியையும், சிகப்பு ஜமுக்காளத்தையும் தூக்கி கொண்டு மறுநாள் மதுரைக்கு புறப்பட இருந்தேன்.

    அப்போதுதான் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் என் அறைக்கதவை தட்டினார்.

    ஊரைவிட்டே நான் போவதாக இருக்கும் விஷயத்தை அவரிடம் சொல்லாமல், "சமீபத்தில் நீங்கள் பாடின நல்ல பாட்டு ஏதாவது இருந்தால் பாடிக்காட்டுங்க...'' என்று சொன்னேன்.

    அவர் சிறிது சிந்தித்துவிட்டு வெளியாக இருக்கும், `சுமை தாங்கி' என்னும் படத்தில், கண்ணதாசன் எழுதி, விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்த ஒரு பாடலை முழுவதும் எனக்குப் பாடிக் காண்பித்தார்.

    பாட்டு வரிகள் என் செவியில் பாயப்பாய, மதுரைக்குப் பயணமாவதை ரத்து செய்து, சென்னையிலேயே தங்கிவிடுவது என்று முடிவு கட்டினேன்.

    ஆம்! ஒரு சினிமாப்பாட்டு என் திசையை மாற்றியது; என் எதிர்காலத்தை நிர்ணயித்தது. நான் தொடர்ந்து போராடுவதற்கான தெம்பையும், தெளிவையும் என்னுள் தோற்றுவித்தது. சோர்ந்து போன என் சுவாசப் பையில் பிராண வாயுவை நிரப்பி, எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்து என்னைப் புதுமனிதனாக்கியது.

    `சுமை தாங்கி' படத்தில் இடம் பெற்று பின்னாளில் மிகமிகப் பிரபலமான அந்தப்பாடல், கண்ணதாசன் எனக்குச் செய்த கீதோபதேசமாகவே அமைந்தது.

    எந்தத் துறையிலும் முட்டி மோதி முயற்சித்து முன்னுக்கு வரமாட்டாது, மனதொடிந்த எவரும் இந்தப் பாட்டை மந்திரம் போல் மனனம் செய்யலாம். அவ்வளவு அருமையான, ஆழமான, அர்த்தமான - அதே நேரத்தில் மிகமிக எளிமையான பாடல்.

    பாடல் இதுதான்:

    `மயக்கமா? கலக்கமா?

    மனதிலே குழப்பமா?

    வாழ்க்கையில் நடுக்கமா?

    `வாழ்க்கையென்றால் ஆயிரமிருக்கும்;

    வாசல் தோறும் வேதனையிருக்கும்;

    வந்த துன்பம் எதுவென்றாலும்

    வாடி நின்றால் ஓடுவதில்லை;

    எதையும் தாங்கும் இதயமிருந்தால் -

    இறுதிவரைக்கும் அமைதியிருக்கும்!'

    `ஏழை மனதை மாளிகை யாக்கு;

    இரவும் பகலும் காவியம் பாடு;

    நாளைப் பொழுதை இறைவனுக் களித்து,

    நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு;

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி -

    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!'

    கண்ணதாசன் எழுதிய இந்த பாடலை, வரி வரியாக மனதிற்குள் சொல்லிப் பாருங்கள். வாழ்க்கையின் உண்மை விளங்கும்.

    இவ்வாறு வாலி கூறியுள்ளார்.

    வாலி சென்னைக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆகியிருந்தும், அதுவரை கண்ணதாசனை சந்திக்கவில்லை. அவரை உடனே சந்திக்க வேண்டும் என்று ஆவல் எழுந்தது.

    அதன்படி, அடுத்த நாளே சென்று கண்ணதாசனை சந்தித்தார்.
    பாலா அரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் நிஷாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தின் முன்னோட்டம்.
    பாலா அரனின் இயக்கத்தில், அறிமுக நாயகன் நிஷாந்த் நடிக்கும் ஒரு டார்க் காமெடி படம் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’. ஹெட் மீடியா ஒர்க்ஸ் சார்பாக விக்னேஷ் செல்வராஜ் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவையோடு ஜனரஞ்சகமாக தற்கால சூழலுக்கு ஏற்ற வகையில் படமாக்கி இருப்பதாக இயக்குனர் பாலா அரன் தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு இப்படத்தை எடுத்துள்ளனர். 

    பன்றிக்கு நன்றி சொல்லி படக்குழு

    இப்படத்திற்கு விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேன் விகாஷ் இசை அமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ராம்-சதீஷ் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் எடிட்டிங்கில் ஆயிரம் பொற்காசுகள் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஓம் பிலிம்ஸ் மற்றும் ஸ்ரீ பிலிம்ஸ் வெளியிடுகிறது. இத்திரைப்படத்தின் கதைக்களம் தமிழ் திரையுலகில் அரிதான புதையல் வேட்டையை மையமாக கொண்டது. 
    ×