என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரேணிகுண்டா, பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்.
    ரேணிகுண்டா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இதன்பின்னர், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், பொருளாதாரத்தில் நலிவடைந்த தீப்பெட்டி கணேசன், பல்வேறு சிறு தொழில்களை செய்து வந்தார்.

    கடந்தாண்டு, கொரோனா ஊரடங்கு காலத்தில், பால் வாங்கக் கூட காசு இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறி இவர் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து கவிஞர் சினேகன் இவருக்கு உதவிக்கரம் நீட்டினார்.

    இந்நிலையில், உடல்நலக்குறைவால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இயக்குனர் சீனுராமசாமி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

    தீப்பெட்டி கணேசன்

    இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது: “எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன், தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன்.  அன்புநிறை இதய அஞ்சலி கணேசா” என பதிவிட்டுள்ளார்.


    பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு பணம் திரட்டுவதற்காக இளையராஜா வேலைக்குச் சென்றார். ஒரு நாளைக்கு சம்பளம் ஒரு ரூபாய்!
    பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு பணம் திரட்டுவதற்காக இளையராஜா வேலைக்குச் சென்றார். ஒரு நாளைக்கு சம்பளம் ஒரு ரூபாய்!

    எட்டாவது வகுப்புக்கு மேல் படிக்க முடியாது என்று ஊரின் பிரபல ஜோதிடர்கள் சொன்னதும், நொந்து போனார் இளையராஜா. ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் ஜோதிடர்களிடம் `வார்த்தைப்போர்' செய்தார்.

    அதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    நான் எட்டாவதை தாண்டமாட்டேன் என்று என் ஜாதகத்தை கணித்து ஜோதிடர்கள் சொன்னதும், அவர்கள் சொன்னதில் நம்பிக்கை ஏற்படாமல் "சரியாக பாருங்கள். என் ஜாதகத்தில் அப்படியா இருக்கிறது?'' என்று தாஜா செய்து கேட்டேன்.

    ஆனால் ஜோதிடர்களோ என்னைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், "உனக்கு எட்டாம் வகுப்புக்கு மேல் படிப்பே இல்லை'' என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள்.

    எனக்கு கோபம் வந்துவிட்டது. அவர்களிடம் வாதம் செய்யத் தொடங்கினேன். "உங்களுக்கு சிலப்பதிகாரத்தில் வரும் இளங்கோவடிகளைத் தெரியுமா? அவர் சேரன் செங்குட்டுவனுக்கு இளையவர். `மூத்தவன் இருக்க இளையவனுக்குத்தான் பட்டம் சூட்டப்படும்' என்று ஜோதிடம் சொன்னவர்களிடம் "உங்கள் ஜோதிடத்தை இப்போதே பொய்யாக்கிக் காட்டுகிறேன்'' என்றவர், அந்த நிமிடத்திலேயே துறவி ஆகிவிட்டார். அவர் துறவி ஆனதால், சேரன் செங்குட்டுவனுக்கே பட்டம் சூட்டப்பட்டது. அதேபோல் உங்கள் ஜோதிடத்தை நானும் பொய்யாக்கிக் காட்டுகிறேன்'' என்று சவால் விடுகிற தொனியில் பேசினேன்.

    எட்டாம் வகுப்பில் முழுப் பரீட்சை எழுதுவதற்கு முன்னதாக ஒரு சின்ன சோதனை. பரீட்சையை உத்தமபாளையத்தில் எழுதவேண்டும் என்றார்கள். அங்கே ஒரு ஆஸ்டலில் தங்கி மூன்று நாட்கள் பரீட்சை எழுதவேண்டும். உணவிற்காக ஒரு குறிப்பிட்ட தொகை கட்டவேண்டியிருந்தது. பணம் கட்ட வேண்டிய கடைசி நாளும் வந்தது. ஆனால் அம்மாவால் பணம் புரட்ட முடியவில்லை.

    இந்த இக்கட்டான நேரத்தில், அக்கா கமலம்தான் அவரது தாலியை விற்று பணம் கொடுத்தார்; அதுவும் அத்தானுக்கு (அக்காவின் கணவர்) தெரியாமல்.

    அக்கா தாலியை விற்றது கூட எனக்கு அந்த நேரத்தில் பெரிதாகத் தெரியவில்லை. ஜோதிடத்தை பொய்யாக்கப் போகிறோம் என்பதுதான் பெரிதாகத் தெரிந்தது.

    இப்போது நினைத்தால் அக்காவின் அன்பும், உயர்ந்த பண்பும் எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. உயர்ந்த பண்புகள் கல்வியால் மட்டுமே வருவதில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அக்காவின் அன்றைய தியாகத்துக்கு எதை ஈடாகக் கொடுக்க முடியும்? எதைக் கொடுத்தாலும் ஈடாக முடியாத அந்த அன்பை வெறும் வார்த்தைகளில் விவரித்து விடமுடியாதுதான்.''

    - இப்படியாக எட்டாம் வகுப்பு தேர்வை எழுதி முடித்த இளையராஜாவுக்கு ஒன்பதாவது வகுப்பில் சேர முடியாத சோதனை ஏற்பட்டது.

    அதுபற்றி அவரே கூறுகிறார்:

    "ஒன்பதாம் வகுப்பில் சேர, தேவாரத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு போனேன். பள்ளியில் சேரவேண்டுமானால் `ஸ்பெஷல் பீஸ்' 25 ரூபாய் கட்டவேண்டும் என்றார்கள். அம்மாவிடம் சொன்னேன். அம்மாவும் யார் யாரிடமோ கேட்டுப் பார்த்தும் அந்த நேரத்தில் எதுவும்

    நடக்கவில்லை.பள்ளிக்கூடம் தொடங்கிவிட்டது. ஒரு மாதம் ஆனது. பணம் கிடைக்கவில்லை. இரண்டு மாதமானது. பணம் புரட்ட முடியாத அம்மாவின் முகம் எனக்குள்ளும் கவலை ஏற்படுத்தியது. இதே நிலை மூன்றாவது மாதமும் நீடித்தபோது, "சரி! இந்த வருடம் நாம் ஸ்கூலுக்குப் போக, அந்த ஸ்கூல் விரும்பவில்லை போலும்'' என்று நினைத்துக் கொண்டேன். அப்படி நினைத்தபோதே, ஜோதிடர்கள் சொன்னதும் நினைவுக்கு வர, "இனி அந்த ஜோதிடர்கள் முகத்தில் எப்படி விழிப்பேன்?'' என்றும் வருத்தப்படத் தொடங்கினேன்.

    இந்த நேரத்தில் அத்தானும் அக்காளும் வைகை அணையில் இருந்தார்கள். மிலிட்டரியில் இருந்த அத்தான் அங்கிருந்து வந்து வைகை அணைப் பகுதியில் டிரைவராக இருந்தார்.

    அக்கா நினைப்பு வந்ததும் ஐடியா வந்து விட்டது. வைகை அணையில் மட்டும் எனக்கொரு வேலை கிடைத்தால் ஒரு வருடம் வேலை பார்த்து, ஒரு வருட சம்பளத்தை வைத்துக்கொண்டு அடுத்த வருடமாவது படிப்பைத் தொடரலாம் என்று நினைத்தேன்.

    அம்மாவிடம் ஓடிவந்தேன். விஷயத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி, "நான் வைகை அணை போய் அத்தானைப் பார்க்கட்டுமா?'' என்று கேட்டேன்.

    அம்மாவுக்கும் என் ஆர்வம் புரிந்தது. படிக்க ஆசைப்படும் பிள்ளையை அதற்கொரு புதிய வழி கிடைக்கும்போது எந்தத் தாய்தான் தடுப்பார்? "போய்வா மகனே'' என்றார், அம்மா.

    என் வாழ்வைத்தேடி முதல் பயணம். வைகை அணை எப்படி இருக்குமோ என்ற கற்பனையுடன் புறப்பட்டேன். அத்தான் மூலமாக வேலை கிடைப்பதில் சிரமம் எதுவும் இல்லை.

    வைகை அணையின் கரையிலும், கீழே பூங்காவிற்கு மேலுள்ள புல்வெளிகளிலும் தண்ணீர்க் குழாயை பிடித்தபடி தண்ணீர் ஊற்ற வேண்டும். நாளொன்றுக்கு ஒரு ரூபாய் சம்பளம்! வாரா வாரம் சம்பளமாக ஏழு ரூபாய் கொடுத்து விடுவார்கள் என்றார்கள்.

    அரை டிராயர், அரைக்கை சட்டை, குள்ளமான கறுப்பு உருவம். தண்ணீர் பாய்ச்சும்போது சும்மா இருக்க முடியாது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பாட்டுப்பாடியபடியே தண்ணீர் பாய்ச்சுவேன்.

    பொதுவாகவே சத்தம் போட்டுப் பாடுவது எனக்கும் பாஸ்கருக்கும் பழக்கம். அக்கம் பக்கம் போவோர், வருவோர் என்னை வேடிக்கை பார்த்தார்கள். நானோ விடாப்பிடியாக பாடியபடியே வேலையைத் தொடர்ந்தேன்.

    ஒரு வாரம் முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை ஆபீசுக்குப் போய் சம்பளம் வாங்கினேன்.

    ஏழு புத்தம் புதிய ஒரு ரூபாய் நோட்டுக்கள். மணக்க, மணக்க! அடேயப்பா, வான மண்டலத்தில் சஞ்சரித்தேன். பறந்தேன் என்று கூட சொல்லலாம்.

    ஏழு ரூபாய் கையில் கிடைத்த அந்த நொடியில் ஏற்பட்ட ஆனந்தத்தை இன்றுவரை வேறு எந்தப் பணமும் எனக்குத் தரவில்லை.

    இப்படி 25 நாட்கள் வேலை செய்தால் 25 ரூபாய் வந்துவிடும். அப்புறமாய் போய் ஸ்கூலில் சேர்ந்து விடலாமா என்று கூட யோசித்தேன்.

    ஆனால் 4 மாத பாடம் நடந்திருக்குமே, என்ன செய்வது?

    சரி! ஒரேயடியாக அடுத்த வருடம் படிப்பை தொடரலாம். எனக்குள் ஒரு முடிவுக்கு வந்து வேலையைத் தொடர்ந்தேன்.

    இப்படிச் சொன்ன இளையராஜா, ஒருநாள் தண்ணீர் பாய்ச்சும் நேரத்தில் பாடிக்கொண்டே பணியைத் தொடர அப்போது அந்த வழியாக வந்த வைகை அணையின் சீப் என்ஜினீயர் காதுக்கும் அந்தப் பாட்டு எட்டியது.
    அறிமுக இயக்குனர் விக்டர் இம்மானுவேல் இயக்கத்தில் விக்டர், இலக்கியா நடிப்பில் உருவாகி வரும் ‘மரபு’ படத்தின் முன்னோட்டம்.
    அறிமுக இயக்குனர் விக்டர் இம்மானுவேலின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மரபு’. விக்டர் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இலக்கியா நடிக்கிறார். மேலும் ஆனந்த் பாபு வில்லனாக நடித்துள்ளார். சவுந்தர்யன் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக மகேஷும், ஸ்டண்ட் இயக்குனராக ஜாகுவார் தங்கமும் பணியாற்றுகின்றனர்.

    படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது: “ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும், உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல்லது பழக்கவழக்கம், நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து அல்லது தலைமுறை தலைமுறையாக வந்த சிறப்பு அல்லது வழிவழியாகச் சந்ததிகளிடம் தொடரும் ஒன்று என்று சுருக்கமாக கூறலாம். 

    இலக்கியா, விக்டர்

    அதேவேளை மரபு என்ற சொல்லும் பலரால் பாவிக்கப் படுகின்றன, அறிவுடையோர் எந்தப் பொருளை அல்லது அவர்கள் மேற்கொண்ட செயல்களை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ, அதே முறைப்படி வழங்குதல் அல்லது பின்பற்றுதல் மரபாகும். ஆனால் தற்போது தனது மரபுசார் பண்புகளை மறந்து வாழ்வில் அற்ப விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம் மரபு”. இவ்வாறு அவர் கூறினார். 
    எஸ்.பிரான்சிஸ் இயக்கத்தில் நிகேஷ் ராம், பெர்லின், கோவை சரளா, தம்பி ராமய்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் மைக்கேல்பட்டி ராஜா படத்தின் விமர்சனம்.
    மைக்கேல்பட்டியில் இருக்கும் நிகேஷ் ராம், ஊரில் நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்பதால் அப்பா சுந்தர்ராஜனின் கோபத்துக்கு ஆளாகிறார். தவறே செய்ய முடியாத நாட்டுக்கு அனுப்புகிறேன் என்று சுந்தர்ராஜன் அவரை அரபு நாட்டுக்கு அனுப்புகிறார். 

    அங்கே வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் எடுக்கும் நிகேஷ் ராமை, ஒரு பேய் தொல்லை செய்கிறது. யார் அந்த பேய்? நிகேஷ் ராமுக்கும் அந்த பேய்க்கும் என்ன தொடர்பு? என்பதை கலகலப்பாக சொல்லி இருக்கிறார்கள்.

    மைக்கேல்பட்டி ராஜா விமர்சனம்

    நாயகனாக நிகேஷ் ராம் காதல், பாசம், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டிய கதாபாத்திரம். ஊரில் இருக்கும்போது இயல்பாக வருபவர், அரபு நாட்டுக்கு சென்ற பிறகு காமெடியில் அசத்துகிறார். தம்பி ராமய்யா, மொட்ட ராஜேந்திரன், அம்பானி சங்கருடன் சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டி ரசிக்க வைக்கிறது. 

    அரபு அழகு பதுமையாக வரும் பெர்லின் தமிழுக்கு நல்ல வரவு. கதையின் திருப்புமுனை பாத்திரம் என்பதை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். 

    தம்பி ராமய்யா, கோவை சரளா, ஆர்.சுந்தர்ராஜன், ரவி மரியா, மொட்ட ராஜேந்திரன் என கதாபாத்திர தேர்விலேயே கலகலப்பாக்கி விட்டார் இயக்குனர் பிரான்சிஸ். கலகலப்பான குடும்ப படமாக அமைந்துள்ளது. அரபு நாட்டுக்கு சுற்றுலா சென்ற திருப்தி, காட்சிகளில் ஏற்படுகிறது. கிளைமாக்ஸில் உணர்வுபூர்வமாக முடித்துள்ளார்கள்.

    மைக்கேல்பட்டி ராஜா விமர்சனம்

    சுதீப், அஷ்வமித்திரா கூட்டணியின் இசை, கமர்சியல் படத்துக்கான இசையை அளித்துள்ளது. மனோஜ் பிள்ளையின் ஒளிப்பதிவில் மைக்கேல்பட்டி கிராமத்தின் பசுமை, அரபு நாட்டின் செழுமை இரண்டுமே சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. பாலைவன காட்சிகள் பிரம்மிக்க வைக்கின்றன. ராஜா முகம்மதுவின் படத்தொகுப்பும் கச்சிதம்.

    மொத்தத்தில் ‘மைக்கேல்பட்டி ராஜா’ கலகலப்பு.
    விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடல், யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏகோபித்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக இதில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. 

    இந்நிலையில், வாத்தி கம்மிங் பாடல் வீடியோ, யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக #VaathiComing100MViews என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்டாக்கி உள்ளனர். ஏற்கனவே வாத்தி கம்மிங் பாடலின் லிரிக்கல் வீடியோவும் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.

    மாஸ்டர் பட போஸ்டர்

    இதுவரை எந்த ஒரு பாடலின் லிரிக்கல் வீடியோவும், வீடியோ பாடலும் தனித்தனியே 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்ததில்லை. தற்போது வாத்தி கம்மிங் பாடல் அந்த உச்சத்தை தொட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனை கமலுக்கு பதில் பிரபல நடிகர் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.

    வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால், பிக்பாஸ் 4 நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. பின்னர் அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16-ந் தேதி வரை ‘பிக்பாஸ் 4’ நடைபெற்றது.

    சிம்பு

    ஆனால் இந்தாண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சி வழக்கம்போல் ஜூன் மாதமே தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். 

    இந்நிலையில், இந்தாண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க மாட்டார் என கூறப்படுகிறது. அவர் அரசியலில் பிசியாக உள்ளதால், அவருக்கு பதில் நடிகர் சிம்பு ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    பிரபல நடிகரின் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதால், அவர் நடிக்க இருந்த வில்லன் வேடத்தில் பஹத் பாசில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
    சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். 

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    பஹத் பாசில், அல்லு அர்ஜுன்

    இப்படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்தார். பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகினார். இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

    இந்நிலையில், புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஒப்பந்தமாகி உள்ளார். அவர் தெலுங்கில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
    பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘சுல்தான்’ திரைப்படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார்.
    ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சுல்தான் படக்குழு வெளியிட்ட போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி சுல்தான் படத்தின் டிரெய்லர் வருகிற மார்ச் 24-ந் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுல்தான் திரைப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ராகவா லாரன்ஸ் இயக்கிய ‘காஞ்சனா 3’ படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ஒருவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    கொரோனா தொற்றில் நடிகர், நடிகைகளும் சிக்குகிறார்கள். ஏற்கனவே நடிகர்கள் அமிதாப்பச்சன், சூர்யா, சரத்குமார், விஷால், பிருதிவிராஜ், அபிஷேக் பச்சன், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தமன்னா, ராய் லட்சுமி, நிக்கி கல்ராணி, சுமலதா, ஐஸ்வர்யா அர்ஜுன், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர்.

    இந்நிலையில், ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை நிக்கி தம்போலி தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

    நிக்கி தம்போலி

    இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மேலும் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மருத்துவரின் ஆலோசனைப்படி தற்போது நான் சிகிச்சை எடுத்து வருகிறேன். விரைவில் குணமாகிவிடும் என்று எதிர்பார்க்கிறேன். உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
    நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் உதவியால் படித்த மாணவியை பார்த்து நடிகர் கார்த்தி நெகிழ்ந்து போனாராம்.
    2012-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுவில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற கோவை மாணவி ஒருவர், தீ விபத்தொன்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தொடர்ந்து படிக்க விரும்பியதை அறிந்த நடிகர் சூர்யா, அம்மாணவி தீ காயங்களில் இருந்து ஓரளவு குணமடைந்த பின், அகரம் அறக்கட்டளை மூலம்,  சென்னையில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருச்சியில் ஒரு தனியார் கல்லூரியிலும் பொறியியல் படிக்க வைத்துள்ளார். 

    பொறியியல் படிப்பை நிறைவு செய்த அந்த பெண், தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே பணியாற்றி வருகிறார். அந்த மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சூர்யாவின் தம்பியும், நடிகருமான கார்த்தி பங்கேற்றார். அவரை அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயின்ற பெண் வரவேற்றார். தங்கள் அறக்கட்டளை மூலம் படித்து உயர்ந்த அந்தப் பெண்ணை நடிகர் கார்த்தி நெகிழ்ந்து பாராட்டினார். 
    அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது நடிகர் கார்த்திக்கிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
    மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரும், நடிகருமான கார்த்திக் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    கார்த்திக்

    நடிகர் கார்த்திக் நடிப்பில் தற்போது தீ இவன் என்ற படம் உருவாகி உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் இப்படத்தில் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ளார். டி.எம் ஜெயமுருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுதவிர தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் அந்தகன் படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார், தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.
    கொரோனா ஊரடங்கில் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கிய நடிகை வனிதா விஜயகுமார், சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறி தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த வனிதா, தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். 

    அனல் காற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்துக்கான தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து ‘2 கே அழகானது காதல்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தொடர்ந்து பிரசாந்தின் அந்தகன் படத்திலும் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. 

    வனிதா

    அடுத்ததாக வசந்தபாலன் இயக்கும் படத்தில் நடிக்கவும் வனிதாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். நடிகை வனிதா படங்களில் அடுத்தடுத்து நடிக்க தொடங்கி இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளத்தில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
    ×