என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக இருக்கும் சாந்தனு, தன்னை பற்றி சமூக வலைத்தளத்தில் வந்த கிண்டல் பதிவுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13 பொங்கல் அன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியானது.
இப்படம் வெளியான பிறகு சமூக வலைத்தளத்தில் சில நெட்டிசன்கள் சாந்தனுவின் கதாபாத்திரத்தை ட்ரோல் செய்யும் பதிவுகளை வெளியிட்டு வந்தனர். தற்போது தேசிய விருது பற்றின ஒரு ட்ரோலுக்கு நடிகர் சாந்தனு பதிலளித்துள்ளார்.
அவர் கூறும் பொழுது "ஒருவரை இப்படி கேலி கிண்டல் செய்யும் பொழுது சிலருக்கு அற்பமான மகிழ்ச்சி கிடைக்கிறது போல. இந்த கிண்டல்களை பார்த்து எனக்கு சோர்வாகிவிட்டது. ஆனாலும் என் மீது தெரிந்தோ தெரியாமலோ கற்களை வீசும் அனைவருக்கும் எனது நன்றிகள். நீங்களே சொல்லிட்டீங்க நடக்காமல் போய்விடுமோ. ஒரு நாள் நிச்சயம் இது நடக்கும் அப்பொழுது எனது பதில் இதுவாகத்தான் இருக்கும். அன்புடன் பார்கவ்" என்று பெருந்தமையுடன் கூறியுள்ளார்.
The smallest joy one gets from trolling another🙂Tired of this troll but thanks to all d stones thrown at me for knowingly or unknowingly sending out vibes into d universe...
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) March 25, 2021
நீங்களே சொல்லீட்டிங்க, நடக்காம போயிடுமா?
This WILL happen one day&my reply will be a “😊”
Love- Bhargav pic.twitter.com/EhhNFv079E
பிரபல நடிகரின் படத்தில் சாய் பல்லவி நடிக்க மறுத்ததால், அவருக்கு பதில் நித்யா மேனன் ஒப்பந்தமாகி உள்ளார்.
மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பிஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய, தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். அதே போல் தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை, தயாரிப்பாளர் சூர்யதேவர நாகவம்சி வாங்கியுள்ளார்.

இந்த படத்தில் பிஜூமேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் ராணா நடிக்க உள்ளார். இதில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
அதேபோல் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அவர் நடிக்க மறுத்ததால் தற்போது நித்யா மேனனை ஒப்பந்தம் செய்துள்ளனர். நடிகை நித்யா மேனன், பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
செ.ஹரி உத்ரா இயக்கத்தில் புதுமுகம் சரத், ஐரா நடிப்பில் உருவாகி வரும் ‘நம்பர் 6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ படத்தின் முன்னோட்டம்.
தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்து விடவும், கல்தா ஆகிய படங்களை இயக்கியவர், செ.ஹரி உத்ரா. இவர், ‘நம்பர் 6, வாத்தியார் கால் பந்தாட்ட குழு’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.
விளையாட்டில் எவ்வாறு அரசியல் புகுத்தப்படுகிறது? என்பதே திரைக்கதை. 90 சதவீத சம்பவங்கள் இரவில் நடைபெறுகின்றன. கதாநாயகன் புதுமுகம் சரத். கதாநாயகி ஐரா. சேவார தீனா, ப்ரீத்தி சங்கர், உசா, செ.ஹரி உத்ரா ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நிஜ கால்பந்து வீரர்கள் சிலர், படத்தில் நடிக்கிறார்கள். பெரும்பகுதி காட்சிகள் மதுரை, பரமக்குடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம் பகுதிகளில் படமாக்கப்படுகின்றன.
அஜித் ஹீரோவாக நடிக்கும் வலிமை படத்தை எச்.வினோத் இயக்குகிறார், இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
அஜித்-எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ரஜினி உடன் ‘காலா’ படத்தில் நடித்துள்ளார். வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார்.
இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. அதனை ஸ்பெயின் நாட்டில் படமாக்க உள்ளனர். ஸ்பெயின் அரசின் அனுமதிக்காக படக்குழு காத்திருக்கின்றனர்.

அனுமதி கிடைக்க தாமதமாவதால், கடந்த சில நாட்களாக, வலிமை படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறதாம். அதேபோல் நடிகர் அஜித் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே 1-ந் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா நடிப்பில் உருவாகி உள்ள சுல்தான் படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது.
கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது.
அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த டிரெய்லருக்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் பாடல்களுக்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ள நிலையில், டிரெய்லருக்கு மட்டும் யுவன் இசையமைத்திருந்தது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. சமீபத்திய தகவல் படி சுல்தான் படத்திற்கும், யுவன் தான் பின்னணி இசை அமைத்திருப்பதாக கூறப்படுகிறது. பிரம்மாண்ட பட்ஜெட் படம் என்பதால் அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளர், பின்னணி இசை அமைத்தால் படத்திற்கு பலமாக இருக்கும் எனக்கருதி படக்குழு இந்த முடிவை எடுத்தார்களாம்.
ஊரடங்கு விதிமுறைகளை மீறி 50 குழந்தைகளுடன் சினிமா படப்பிடிப்பு நடத்தியதாக இயக்குனரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை சிந்துப்பட்டி கைலாசநாதர் கோவில் தாமரைக்குளத்தில் படப்பிடிப்பு நடப்பதாக திடியன் கிராம நிர்வாக அதிகாரி பிரபாகருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அவர் உடனடியாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்த்தார். அப்போது அங்கு 50 குழந்தைகளுடன் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது.
பிரபாகர், இதுதொடர்பாக இயக்குனர் செந்தில்குமார் (வயது 51) என்பவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியது தெரியவந்தது.
இதுதொடர்பாக சிந்துப்பட்டி போலீசில் அவர் புகார் செய்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
செந்தில்குமார் ஒரு சில டாகுமெண்டரி சினிமா படங்களை எடுத்து உள்ளார். தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றுக்காக திடியன் தாமரைக்குளத்தில் படப்பிடிப்பு நடத்தியதாக தெரிவித்து உள்ளார். அவர் போலீசார் உள்பட யாரிடமும் அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது.
எனவே சிந்துப்பட்டி போலீசார் ஊரடங்கு விதிமுறைகளை மீறி 50 குழந்தைகளுடன் சினிமா படப்பிடிப்பு நடத்தியதாக இயக்குனர் செந்தில்குமாரை கைது செய்தனர்.
பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால், ஜோயா ஹுசைன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘காடன்’ படத்தின் விமர்சனம்.
தங்களுக்கு சொந்தமான காட்டை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விடுகின்றனர் ராணாவின் குடும்பத்தினர். சிறுவயதில் இருந்தே அந்த காட்டில் வளரும் ராணா, அந்த காட்டின் பாதுகாவலராக இருக்கிறார். சரளமாக ஆங்கிலமும் பேசி அசத்துகிறார். அந்தக் காட்டுக்குள் வாழும் யானைகள், புலிகள் ஆகியவற்றுக்கு அவர் பாதுகாப்பாக விளங்குகிறார்.
அந்தக் காட்டை அழித்து ஒரு குடியிருப்பை உருவாக்க ரியல் எஸ்டேட் நிறுவனம் முயல்கிறது. காட்டை அழித்து குடியிருப்பு கட்டினால் வனவிலங்குகள் வாழ்விடத்தை இழக்கும் அபாயம் ஏற்படும் என்பதனால் ராணா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதையடுத்து என்ன ஆனது?. இதனை ராணா தடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

காடனாக நடித்துள்ள ராணா, கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வனத்துக்கும், விலங்குக்கும், மனிதனுக்கும் உள்ள உறவை தன் நடிப்பின் மூலம் மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
யானைப் பாகனாக நடித்துள்ள விஷ்ணு விஷால் குறைந்த அளவிலான காட்சிகளே வந்தாலும், கொடுத்த வேலைகளை கச்சிதமாக செய்திருக்கிறார். இவருக்கும் ஜோயா ஹுசைனுக்கும் இடையிலான காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன. பத்திரிகையாளராக வரும் ஸ்ரேயா பில்கனோகரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இயக்குனர் பிரபு சாலமன், அசாமின் காசியாபாத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். காடுகள் அழிக்கப்பட்டால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை சொல்லியுள்ள விதம் அருமை. காடுகளின் முக்கியத்துவத்தை பற்றி சொல்ல முயற்சித்துள்ள இயக்குனர், திரைக்கதையில் சற்று சுவாரஸ்யத்தை கூட்டியிருந்தால், காடன் இன்னும் சிறப்பானதாக இருந்திருக்கும்.

ஏ.ஆர்.அசோக்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம், காடுகளின் எழில் கொஞ்சும் அழகை நேர்த்தியாக காட்சிப்படுத்தி உள்ளார். ஷாந்தனு மொய்த்ராவின் இசையில் பாடல் இனிமை. பின்னணி இசையின் மூலம் காட்சிகளுக்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளார். ரசூல் பூக்குட்டியின் ஒலிக்கலவையும் சிறப்பாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘காடன்’ காட்டின் காதலன்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 60 படத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்து வருகின்றனர்.
‘கோப்ரா’, ‘துருவநட்சத்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள விக்ரம், தற்போது ‘சியான் 60’ படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் விக்ரமுடன் அவருடைய மகன் துருவ் இணைந்து நடிக்கிறார். மேலும் விக்ரம் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் பாபிசிம்ஹா நடிக்கிறார்.
இந்த படத்துக்கு அனிருத் இசையமைப்பார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர் மாற்றப்பட்டு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அனிருத் விலகியதற்கான காரணம் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், அவர் விலகியதற்கான காரணம் தெரியவந்துள்ளது. அது என்னவெனில், அனிருத் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பட வேலைகளில், பிஸியாக இருப்பதால், அவரால் ‘சியான்-60’ படத்தில் பணிபுரிய முடியவில்லையாம். அதனால்தான் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அரசியலில் ஈடுபட விருப்பமா என்பது குறித்து நடிகை கங்கனா ரணாவத் சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை, ‘தலைவி’ என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி உள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இதன் இந்தி பதிப்பின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது.
இதில் கங்கனா ரணாவத் கலந்து கொண்டு பேசியதாவது: “நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை பற்றி நான் பேசி வருகிறேன். விவசாயிகள் போராட்டம் குறித்தும் கருத்து தெரிவித்தேன். இதையெல்லாம் வைத்து எனக்கு அரசியலில் ஈடுபட ஆசை வந்துவிட்டது என்று பேசுகிறார்கள். எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. அரசியல்வாதியாகவும் விரும்பவில்லை.

ஒரு சாதாரண பெண்ணாகத்தான் எனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறேன். எனது பேச்சுக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. நான் நேர்மையாக பேசுகிறேன். நேர்மையாக இருப்பது பிடிக்காததால் என்னை அவதூறாக பேசுகிறார்கள். என் மனதில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் வெளிப்படையாக பேசுவதை சிலர் தீவிரமாக எடுத்துக் கொள்கின்றனர்”. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழில் அற்புத தீவு, தலை எழுத்து, 7-ம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பக்ரு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா மீண்டும் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மராட்டியத்தில் அதிகமானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தி நடிகர் நடிகைகள் பலர் கொரோனா தொற்றில் சிக்கி வருகிறார்கள். இரு தினங்களுக்கு முன்பு இந்தி நடிகர்கள் அமீர்கான், கார்த்திக் ஆர்யன், மாதவன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் பக்ருவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழில் அற்புத தீவு, தலை எழுத்து, 7-ம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பக்ரு. மலையாளத்தில் அதிக படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.

இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் பக்ரு வெளியிட்டுள்ள பதிவில், ''எனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி இருக்கிறேன். தற்போது வீட்டில் தனிமையில் இருக்கிறேன். விரைவில் பணிக்கு திரும்புவேன். அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள், முக கவசத்தை தவறாமல் அணியுங்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள்'' என்று கூறியுள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாக உள்ள ‘தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்க உள்ளார், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில், தளபதி 65 படத்தில் மற்றுமொரு ஹீரோயினும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த இன்னொரு ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழு தரப்பில் இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. தளபதி 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும், 2015-ல் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் நெருக்கமாகி 6 வருடமாக காதலித்து வருகிறார்கள்
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் தமிழ் பட உலகில் பரபரப்பாக பேசப்படும் காதல் ஜோடியாக வலம் வருகிறார்கள். 2015-ல் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் நெருக்கமாகி 6 வருடமாக காதலித்து வருகிறார்கள். ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறார்கள். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ரசிகர்களும் வலைத்தளத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த வருடத்தில் அவர்களது திருமணம் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த படத்தில் விக்னேஷ் சிவன் மார்பில் நயன்தாரா சாய்ந்து இருக்கிறார். நயன்தாராவின் கையில் பிளாட்டினம் மோதிரம் பளிச்சிடுகிறது.

அந்த மோதிர புகைப்படத்தின் கீழ், “விரலோடு உயிர்கூட கோர்த்து'' என்ற பதிவையும் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை வைத்து நயன்தாரா கையில் அணிந்து இருப்பது நிச்சயதார்த்த மோதிரம் என்றும் விக்னேஷ் சிவனுக்கும் அவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தின் கீழ் நிச்சயதார்த்தம் முடிந்த இருவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். ஆனாலும் நிச்சயதார்த்தம் நடந்ததா? என்பதை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. நயன்தாரா தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.






