என் மலர்
சினிமா செய்திகள்
பிரபல நடிகர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து நடிகை அனுஷ்கா தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு செய்துள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் வேதம். தமிழில் இந்தப்படம் வானம் என்கிற பெயரில் சிம்பு, பரத், அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது. தமிழ், தெலுங்கு இரண்டு படத்திலும் ஒரே கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்திருந்தார்.
வேதம் படத்தில் ராமு என்கிற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் நாகையா அழுத்தமான நடிப்பை கொடுத்திருந்தார். மேலும் அனுஷ்கா நடித்த பாகமதி உள்ளிட்ட படங்களிலும் நாகையா நடித்திருந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வேதம் நாகையா சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் தொடர்ந்து இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகை அனுஷ்கா தனது சமூக வலைத்தள பக்கத்தில், “நல்ல ஆத்மா நம்மை விட்டு சென்றது. அவர் நிச்சயம் சொர்க்கத்திற்குச் செல்வார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று பகிர்ந்துள்ளார்.
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாநகரம், கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்தை கமலை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்க உள்ளார்.

இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் வலிமையுடன் திரும்பி வருவேன் என்று அவர் கூறியுள்ளார்.
அட்டகத்தி படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் தினேஷ் தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அட்டகத்தி. இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த தினேஷ், அப்படம் முதல் ‘அட்டகத்தி’ தினேஷ் என அழைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து குக்கூ, விசாரணை, கபாலி, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்களில் நடித்திருந்தார். தினேஷ் நடிப்பில் நானும் சிங்கிள் தான் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் அட்டகத்தி தினேஷ் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். “வயிறுடா” என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரையும் தினேஷ் வெளியிட்டுள்ளார். இப்படம் பற்றிய முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்.
தமிழில் ஈசன், மங்காத்தா, கோவா, மேயாதமான் படங்களில் நடித்து பிரபலமான வைபவ், தற்போது பபூனாக மாறி இருக்கிறார்.
ஈசன், மங்காத்தா, கோவா, மேயாதமான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வைபவ். மேலும் நடிப்பில் ‘காட்டேரி’, ஆலம்பனா உள்ளிட்ட படங்கள் உருவாகியுள்ளது. தற்போது பபூன் என்ற படத்திலும் வைபவ் நடித்துள்ளார். இப்படத்தை அசோக் வீரப்பன் என்பவர் இயக்கியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.
முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தனது கணவருடன் சேர்ந்து கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் சமீபத்தில் கொரோனா காலக்கட்டத்தின் போது, கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். நண்பர்கள் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்பட்டார்கள்.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “இந்த ஹோலி உங்களுக்கும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அன்பு, நேர்மறை எண்ணம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தரும்”என்று கூறியுள்ளார்.

காஜல் அகர்வால் நடிப்பில் 'லைவ் டெலிகாஸ்ட்’ வெப் சீரிஸ் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. அடுத்ததாக கமலுடன் இந்தியன் 2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா ஆகிய படங்களில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யா, நீதிமன்றத்தில் ஆஜராகி வருத்தம் தெரிவித்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
பாலாவின் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா இணைந்து நடித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் ‘அவன் இவன்’. இந்த படத்தை கல்பாத்தி அகோரம் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் குறித்தும் அவதூறாக விமர்சித்ததாக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தார் தீர்த்தபதிராஜா மகன் சங்கர் ஆத்மஜன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது. ஆர்யா, இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று அம்பை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது. தற்போது ஆர்யா நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்துள்ளார். இதனால், அவர் மீது போடப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்து இருக்கும் பவித்ரா லட்சுமியின் வீட்டில் நடந்த விசேஷத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதில் பவித்ரா லட்சுமி என்பவர் கலந்துக் கொண்டு கவனம் பெற்று வருகிறார்.
சமீபத்தில் பவித்ரா லட்சுமி, பட்டு புடவை கட்டி தொடை தெரியும் அளவிற்கு கத்தரிகோலால் வெட்டி கிழிந்திருக்கும் படி போட்டோஷூட் ஒன்றை எடுத்து வெளியிட்டிருந்தார். இது சமூக வலைத்தளத்தில் வைரலானது.

பவித்ரா செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். கோகோ என்று பெயர் வைத்திருக்கும் செல்லப்பிராணியின் முதல் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் பவித்ரா. நாய்க்கு பிங்க் நிற ஆடை அணியச் செய்து போட்டோஷூட்டையும் எடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
புதுமுக இயக்குநர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகி இருக்கும் டைனோசர்ஸ் படத்தின் முன்னோட்டம்.
புதுமுக இயக்குநர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'டைனோசர்ஸ்'. இவர் இயக்குநர் சுராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இது ஒரு கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளதாம்.
இதுவரை சிறுத்தை, புலி, சிங்கம் என்ற வார்த்தைகள் தான் படப்பெயர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் 'டைனோசர்ஸ்' என்று ஏன் வைத்திருக்கிறார்கள் என்பது படம் பார்க்கும் போது புரியும் என்கிறார்கள் படக்குழுவினர். படத்தின் கதைக்களமும் பின்புலமும் பிரமாண்ட தன்மை கொண்டவையாம்.
இந்தப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், ஸ்ரீனி, சாய்பிரியா, யாமினி சந்தர் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல சினிமா தயாரிப்பாளர்கள் பத்து பேரும் முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்றிருக்கிறார்கள். இப்படி இப்படத்தில் 130 பேர் நடித்துள்ளார்களாம்.
அகில், இஷாரா நாயர், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் வெளியாகி இருக்கும் எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா படத்தின் விமர்சனம்.
நாயகன் அகில், கிராமத்தில் வசித்து வருகிறார். எப்படியாவது சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். அதே ஊரைச் சேர்ந்த மொட்டை ராஜேந்திரனும் நாயகனுக்கு உதவியாக இருக்கிறார். அந்த சமயத்தில் நாயகன் அகிலுக்கு பட வாய்ப்பு வருகிறது. அந்த படத்திற்காக நடிப்பு பயிற்சியும் எடுக்கிறார் அகில். அந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் செய்யும் சூழ்ச்சியால், அகில் அப்படத்தில் இருந்து நீக்கப்படுகிறார்.
இதனால் மனமுடைந்து போகும் நாயகன் அகில், மீண்டும் தன் கிராமத்துக்கே சென்று விடுகிறார். அகிலை ஹீரோவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் மொட்டை ராஜேந்திரன், நாமே ஏன் படம் எடுக்க கூடாது என ஐடியா கொடுக்கிறார். இதையடுத்து என்ன ஆனது, இவர்கள் படம் எடுத்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் அகில், கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். நடிப்பிலும் ஸ்கோர் செய்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக இஷாரா நாயர், கிருஷ்ண பிரியா, சஹானா ஆகியோர் நடித்துள்ளனர். அழகு பதுமையுடன் இருக்கும் மூவரும், சில காட்சிகளே வந்தாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
மொட்டை ராஜேந்திரனை இந்தப் படத்தில் புதுவிதமாக காட்டி உள்ளனர். பல படங்களில் வில்லனாகவும், காமெடியனாகவும் நடித்த இவர், இந்தப் படத்தில் குணச்சித்திர வேடத்தில் திறம்பட நடித்துள்ளார். யோகிபாபு ஒரு சில காட்சிகளில் வந்து தனக்குரிய பாணியில் சிரிக்க வைத்துள்ளார்.

புதுமுக இயக்குனர் கெவின் இயக்கி உள்ளார். படத்தில் சுவாரஸ்யம் குறைவாக உள்ளது பின்னடைவு. கிளைமாக்ஸ் ரசிக்கும்படியாக அமைத்த அவர் திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.
வர்சன் மற்றும் ஜேடனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். ரஹீம் பாபுவின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ சுவாரஸ்யம் குறைவு.
ஆர்யா, விஷால் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து நடிக்கும் எனிமி படத்தை ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா, விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து ‘எனிமி’ படத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக மிர்ணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக கடந்த மாதம் படக்குழு துபாய் சென்றிருந்தது. அங்கு அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. 30 நாட்களாக துபாயில் நடைபெற்று வந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த உள்ளனர்.
80-களில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக களமிறங்க இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் ஜொலித்தவர் ராமராஜன். தற்போது பல வருட இடைவெளிக்குப்பின், மீண்டும் படம் இயக்க உள்ளதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: “நான் கதாநாயகனாக 44 படங்களில் நடித்து இருக்கிறேன். 5 படங்களை இயக்கி உள்ளேன். இந்த 49 படங்களும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதையம்சம் கொண்டதாகவே இருந்தன. நான் இயக்க இருக்கும் புதிய படமும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதையம்சம் கொண்டதாகவே இருக்கும்.

எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், பெண்களுக்கு எதிராக படம் எடுக்க மாட்டேன். அதுபோல் நான் கடைசி வரை ஜெயலலிதாவின் தொண்டனாகவே இருப்பேன். தற்போது நான் தயார் செய்து கொண்டிருக்கும் கதை விஜய்சேதுபதிக்கு பொருத்தமாக இருக்கும். மேலும் சில கதைகளும் என்னிடம் உள்ளன”. இவ்வாறு ராமராஜன் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்து, தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘துருவங்கள் பதினாறு’.
இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘துருவங்கள் பதினாறு’. இந்த படத்தில் ரகுமான், யாஷிகா உள்பட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து கார்த்திக் நரேன் நரகாசூரன், மாஃபியா ஆகிய படங்களை இயக்கினார். தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘டி43’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. இந்த படத்தில் ரகுமான் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க உள்ளார். அதுமட்டுமின்றி நடிகை பரினிதி சோப்ராவும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.






