என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ரம்யா பாண்டியன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி வருகிறது.


இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் கொரோனா முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டார். மேலும் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்த பொன்னம்பலம், தனது கிட்னியை மாற்ற உதவிய சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் பொன்னம்பலம். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பொன்னம்பலம் கலந்துக் கொண்டார். சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பொன்னம்பலம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வீடியோ வைரலானது.
இதையடுத்து பலரிடம் உதவி கேட்டார். சரத்குமார், கமல் உள்ளிட்ட பலர் பொன்னம்பலத்திற்கு உதவி செய்தனர். இந்நிலையில் தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் சிரஞ்சீவி பொன்னம்பலத்தின் கிட்னியை மாற்ற உதவி செய்திருக்கிறார். இதற்கு நடிகர் பொன்னம்பலம் வீடியோ வெளியீடு சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
தெலுங்கில் ஸ்ருதிஹாசன் நடித்த வக்கீல் சாப் படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. விஜய்சேதுபதியுடன் நடித்துள்ள லாபம் திரைக்கு வர தயாராக உள்ளது. தெலுங்கு, கன்னட மொழியில் தயாராகும் சலார் படத்திலும் நடிக்கிறார்.

கொரோனா ஊரடங்கில் மும்பையில் சொந்தமாக வாங்கிய வீட்டில் தங்கி இருக்கிறார். காதலர் சாந்தனு ஹரிசராவுடன் இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். ஸ்ருதிஹாசன் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

கொரோனாவால் உலகின் மற்ற பகுதிகளை இழக்கிறேன். இனிமேல் பயணங்களை புதிய அனுபவமாகவோ ஆரோக்கியமாகவோ எடுத்துக்கொள்ள முடியாது. உலகின் மீது இரக்கமும், புரிதல் தன்மையும் கொண்டு இருக்க வேண்டிய காலம் இது. தற்போதைய சூழ்நிலையில் எல்லோரும் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கிறோம். மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டும். போர்காலத்தில் செயல்படுவதுபோன்று செயல்பட வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’’ என்றார்.
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், திவ்யான்ஷா கௌஷிக், யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள ‘டக்கர்’ படத்தின் முன்னோட்டம்.
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘டக்கர்’. நடிகர் சித்தார்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கி உள்ளார். சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். இப்படத்தில், அப்பா மகன் என இரண்டு ரோல்களில் கலக்கலாக நடித்திருக்கிறார் யோகிபாபு. திரையில் அப்பா, மகன் என இரு தோற்றங்களில் அவர் வரும்போது அரங்கம் அதிரும் என்கிறார் இயக்குநர்.

திவ்யான்ஷா, சித்தார்த்
இரண்டு வேறு வேறு, கோபம் கொப்பளிக்கும் மனநிலை கொண்ட இருவரும் சந்திக்கும் போது, அவர்களது அளவுக்கு அதிகமான ஈகோ மனநிலையால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக சொல்லும் கதைதான் “டக்கர்”. வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். கௌதம் ஜி.ஏ. படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார்.
கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பாடல் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவர் இசையில் ஏற்கனவே வெளியான ‘ரகிடா ரகிடா’ மற்றும் ‘புஜ்ஜி’ ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக ‘நேத்து’ என்கிற ரொமாண்டிக் பாடலை வெளியிட உள்ளனர்.

ஜகமே தந்திரம் படக்குழு வெளியிட்ட போஸ்டர்
நாளை காலை 11 மணிக்கு இப்பாடல் வெளியிடப்பட உள்ளது. இப்பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளதோடு, பாடல் வரிகளையும் எழுதியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் இப்பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஐதராபாத்தில் தங்கியிருந்தபோது, நடிகர் ரஜினிகாந்த், பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவுடன் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்றது. படப்பிடிப்பிற்காக சுமார் ஒரு மாத காலம் அங்கு தங்கியிருந்த ரஜினி, கடந்த வாரம் சென்னை திரும்பினார். ஐதராபாத்தில் தங்கியிருந்தபோது, நடிகர் ரஜினிகாந்த், பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவுடன் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.

ரஜினிகாந்த், மோகன்பாபு
மோகன்பாபுவின் மகனும், நடிகருமான விஷ்ணு மஞ்சு தான் இந்த போட்டோஷூட்டை எடுத்துள்ளார். இதன் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷ்ணு, ‘ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்’ என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்தும், தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும் நீண்ட கால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
The OGs. Original Gangsters! @rajinikanth@themohanbabu and then goofy Vishnu Manchu pic.twitter.com/2eUoaKDo5Q
— Vishnu Manchu (@iVishnuManchu) May 21, 2021
ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’. சாந்தனு ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்து உள்ளார். மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் போஸ்டர்
இந்நிலையில், ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து முன்னணி ஓடிடி தளத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் வந்த டவ்தே புயலால் மும்பையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கால்பந்து மைதானம் செட் ஒன்று கடுமையாக சேதமடைந்துள்ளது.
இந்தியில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மைதான்’. இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. நடிகர் அஜய் தேவ்கான், சையத் அப்துல் ரஹீமாக நடிக்கிறார். இந்தியில் தயாராகும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட உள்ளது.

சேதமடைந்த மைதான் பட செட்டின் புகைப்படம்
இந்நிலையில், மைதான் படத்துக்காக மும்பையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கால்பந்து மைதானம் செட் ஒன்று, அண்மையில் வந்த டவ்தே புயலால் கடுமையாக சேதமடைந்துள்ளது. புயல் தாக்கிய சமயத்தில் 40க்கும் மேற்பட்டோர் அந்த செட்டில் பணியாற்றி வந்துள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் இதனால் 2 கோடி ரூபாய் வரை தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மைதான் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், தற்போது தமிழில் அஜித் நடிக்கும் வலிமை படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தீவிர பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், கா/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் இவர், துருவ நட்சத்திரம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் பாக்ஸிங் பயிற்சி செய்தபோது எடுத்த புகைப்படம்
இந்நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீட்டிலேயே இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தீவிர பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடில்லாமல் சாலையோரம் வசிப்பவர்களுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அஜித் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் அஜித் ரசிகர்கள், ‘பசித்தால் எடுத்துக்கொள்’ என்ற பதாகையுடன் கூடிய தள்ளுவண்டியில் சாப்பாடு, தண்ணீர் பாட்டில்கள், வாழைப்பழங்கள், பிஸ்கட் ஆகியவற்றை நிரப்பி, தேவைப்படுபவர்கள் எடுத்துச் செல்லும் விதமாக அந்தவண்டியை சாலையோரம் நிறுத்திவைத்துள்ளனர்.

குறிப்பாக வீடில்லாமல் சாலையோரம் வசிப்பவர்களுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அஜித் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அஜித் ரசிகர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜனகராஜ் தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார்.
1980, 90-களில் காமெடியில் மட்டுமில்லாது, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் ஜனகராஜ். இவர் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து பிரபலமானார். சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி இருந்த ஜனகராஜ், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் 96 படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து சாருஹாசனுடன் இணைந்து தாதா 87 படத்தில் நடித்தார்.

நடிகர் ஜனகராஜின் டுவிட்டர் பதிவு
இந்நிலையில், நடிகர் ஜனகராஜ் சமூக வலைதளமான டுவிட்டரில் இணைந்துள்ளார். அவர் தனது 66-வது பிறந்தநாளன்று டுவிட்டரில் இணைந்ததை அடுத்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். மேலும் அவரை டுவிட்டரில் பாலோ செய்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் குறைந்த பிறகு அவர் மேலும் சில படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தாமதமாவதால், ‘தளபதி 65’ படக்குழு ரிலீஸ் பிளானை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

விஜய்
இப்படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழு, தற்போது கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தாமதமாவதால், ரிலீஸ் பிளானை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்திய தகவல்படி தளபதி 65 படத்தை அடுத்தாண்டு தமிழ் புத்தாண்டன்று வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.






