என் மலர்
சினிமா செய்திகள்
இசையமைப்பாளரும் இயக்குனருமான எஸ்.எஸ்.குமரன், நோ கொரோனா மூவ்மென்ட்’ என்கிற பெயரில் ஒரு விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
கடந்த வருடம் தொடங்கிய கொரோனா தாக்கம், இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலையாக உருமாறி மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை கொடுத்து வருகிறது. ஒரு பக்கம் தடுப்பூசி, மருந்துகள் என அரசு தரப்பில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும் இன்னொரு பக்கம் ஒவ்வொரு தனி நபரும் இந்த சூழலில் சுய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியதும் அவசியம். குறிப்பாக வெளியில் செல்லும்போது எப்போதும் முக கவசம் அணிதல் என்பது, ஒரு அனிச்சை செயலாகவே நமக்குள் நடந்திட வேண்டும். இது கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்தவிதமாக பொது இடங்களில் முக கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இசையமைப்பாளரும் இயக்குனருமான எஸ்.எஸ்.குமரன், நோ கொரோனா மூவ்மென்ட்’ என்கிற பெயரில் ஒரு விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

தெருவில் சுற்றும் பிச்சைக்காரர் ஒருவர் கூட, முக கவசம் அணிய வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் உணர்த்தும் விதமாக இந்த குறும்படம் தயாராகியுள்ளது. இந்த குறும்படத்தை சாய் வில்லேஜ் ட்ரஸ்ட் என்கிற தன்னார்வ அமைப்புடன் சேர்ந்து உருவாக்கியுள்ளார் எஸ்.எஸ்.குமரன். இந்த குறும்படத்தை நடிகர்கள் சுஹாசினி மணிரத்னம் & காளி வெங்கட் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் 10லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த குறும்படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.
சசி இயக்கிய பூ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் எஸ்.எஸ்.குமரன். களவாணி படத்தின் வெற்றிக்கு பக்கபலமான பாடல்களை கொடுத்தவர். தேநீர் விடுதி, கேரள நாட்டிளம் பெண்களுடனே ஆகிய படங்களின் மூலம் ஒரு இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தியவர். இந்த கொரோனா காலகட்டத்தில் மக்கள் தங்கள் சுய பாதுகாப்பில் சிறிதளவு அலட்சியம் காட்டினாலும் கூட, அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதை வலியுறுத்தும் விதமாகத்தான் இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார்.
ராஜேஷ் வீரமணி இயக்கத்தில் பிரவீன், வினோத் கிஷன், ப்ரீத்தி நடிப்பில் உருவாகி இருக்கும் லாகின் படத்தின் முன்னோட்டம்.
ஜே.எப்.எல். புரொடக்ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் 'லாகின்'. இப்படத்தில் நாயகர்களாக அப்புச்சி கிராமம் படத்தில் நடித்த பிரவீனும், அந்தகாரம் படத்தில் நடித்த வினோத் கிஷனும் நடிக்கிறார்கள். நாயகியாக ப்ரீத்தி நடிக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விபின் இசையமைக்கிறார். ராம் கிஷன் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி ராஜேஷ் வீரமணி இயக்கி இருக்கிறார்.
சாப்ட்வேரில் வேலை பார்க்கும் நண்பர்கள் இரண்டு பேர், தங்களுக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த தொழில்நுட்பம் அவர்கள் வாழ்க்கையில் விளையாட ஆரம்பிக்கிறது. அந்த விளையாட்டின் விளைவை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.

ப்ரீத்தி
இன்றைய சூழ்நிலையில் ஏதேதோ தேவைகளுக்காக லாகின் பண்ணிகிட்டே இருக்கிறோம், லாகின் செய்து உள்ளே சென்று தெரியாத விஷயங்களையும் தவறான விஷயங்களையும் செய்தோமேயானால் ஏற்படும் விளைவை பற்றியே லாகின் படம் சொல்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமலின் விக்ரம் படத்தை இயக்க உள்ளார்.
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
அதேபோல் நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் குறைந்த பின் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இப்படத்தில் நடிகர் கமல் போலீஸ் வேடத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது பஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் பஹத் பாசில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும், நடிகர் விஜய் சேதுபதி தாதாவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விக்ரம் பட நடிகை ஒருவர், கணவரை கன்னத்தில் அறைவதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி. விக்ரம் நடித்த சாமுராய், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன், மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஐஸ்வர்யாராயின் தால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கு, இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.
கடந்த 2013-ம் ஆண்டு, ரோகித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயர் வைத்துள்ளனர்.

அனிதா ஹசானந்தனி
இந்நிலையில், நடிகை அனிதா, ‘அனைத்து மனைவிகளும் விரும்பும் ஒரு மேஜிக்’ என்று கூறி தனது கணவரை கன்னத்தில் அறைவதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். தயவு செய்து இதை வீட்டில் செய்து பார்க்கவும் என அந்த பதிவில் அனிதா குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனிகா, சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
‘என்னை அறிந்தால்’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களிலும் அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் ரசிகர்களிடம் நன்கு பரிச்சயமானார். பின்னர் நானும் ரவுடிதான், மிருதன் போன்ற தமிழ் படங்களிலும் நடித்த இவர், கவுதம் மேனன் இயக்கிய குயின் வெப் தொடரில், இளம் வயது ஜெயலலிதாவாக திறம்பட நடித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனிகா, அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய அனிகாவிடம் ரசிகர் ஒருவர், ‘உங்களுடைய தீவிர ரசிகர் ஒருவர் உங்களை காதலிப்பதாகக் கூறி, நீங்கள் காதலை ஏற்கவில்லை என்றால் தற்கொலை செய்துக் கொள்வேன் என்று சொன்னால் என்ன செய்வீர்கள் என கேள்வி எழுப்பி இருந்தார்.

அனிகா
அதற்கு பதிலளித்த அனிகா, ‘உண்மையில் அப்படி ஒரு நிலைமை தனக்கு ஏற்கனவே ஏற்பட்டதாக கூறினார். காதலிப்பதாக சொல்லி தனக்கு ஒரு மெயில் வந்ததாகவும், அந்த மெயிலை பார்க்கவே தனக்கு பயமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் அதை அப்படியே விட்டுவிட்டதாக அனிகா கூறியுள்ளார்.
‘நாளை சிரிக்க, சிறக்க இன்று உள்ளிருப்போம் உறவே’ என்ற விழிப்புணர்வு பதிவை நடிகர் பார்த்திபன் வெளியிட்டு இருந்தார்
தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க அரசு 2 வாரங்கள் ஊரடங்கு பிறப்பித்தும் அடங்கவில்லை. இதையடுத்து இன்று முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கை அறிவித்து உள்ளது. இந்த ஊரடங்கில் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்று பிரபலங்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘நாளை சிரிக்க, சிறக்க இன்று உள்ளிருப்போம் உறவே' என்ற விழிப்புணர்வு பதிவை வெளியிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்து ரசிகர் ஒருவர் வெளியிட்ட பதிவில், “உள்ளிருந்தா உணவு யாரு தருவாங்க'' என்று கேள்வி எழுப்பினார். இது வலைத்தளத்தில் பரபரப்பானது.

இதையடுத்து அந்த ரசிகருக்கு பதில் அளித்து பார்த்திபன் மீண்டும் வெளியிட்டுள்ள பதிவில், “சரியான செருப்படி கேள்வி. கொரோனாவை குறைவான மிருகமாக்கி விடுகிறது பசி. இருந்தாலும் உள் இருந்தா உணவை உண்ண நாமிருப்போம் நாளை. இல்லையெனில் நம்மை உண்ண மண்ணிருக்கும்” என்று தன் ஸ்டைலில் பதிலளித்துள்ளார்.
என்னை தேற்றிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் வாழ்நாள் நன்றிகளை உரித்தாக்குகிறேன் என அருண்ராஜா காமராஜ் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர், பாடலாசிரியர், நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். அவரின் மனைவி சிந்துஜா கடந்த வாரம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
இந்நிலையில் மறைந்த தனது மனைவி குறித்து அருண்ராஜா காமராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “என் விழிகளின் வழியே அவளின் சுவாசம் நசுக்கி எறிப்பட்டதைக் கண்ட நொடி முதல், நமைச் சுற்றி பரவிக்கிடக்கும் அப்பேராபத்தின் தீவிரம் எனையும் இறுக்கி சுழற்றி இழுத்துக்கொள்ள துடித்தது.
எத்தனை உள்ளங்கள் உதவிகள் அன்புள்ள ஆறுதல்கள், பிரார்த்தனைகள், அலைச்சல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மீட்டு விட போராடியும் நச்சு அவள் நாசியினுள் புகுந்து சுவாசத்தை உருக்குலைத்து இயக்கத்தை முடக்கி, இன்று இன்னும் எத்தனை எத்தனை உயிர்கள் கிடைக்கும் என்று அவளையும் என்னை விட்டுப் பிரித்துவிட்டு சென்றது.

சிந்துஜா, அருண்ராஜா காமராஜ்
நச்சு பாசமறியாது, ஏழ்மையறியாது, அத்யாவசிய அநாவசியங்கள் அறியாது. இவையெலாம் நமக்கான வாழ்க்கைக்கான அளவீடுகளே அன்றி நச்சுகிருமியின் முன் நாம் அனைவரும் சமமே. சக மனிதர்களோடு, மனிதத்தோடு வெறுப்பு, வன்மம், காழ்ப்பு இதை வளர்த்துக் கொள்ள மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டு அதையே ஓர் வாழ்வியலாக்கி வழிந்து ஓடிக் கொண்டிருக்கிறோமோ என்ற சுயபரிசோதனைகளை மேற்கொண்டோமென்றால் இந்த நச்சு நம் பொது எதிரியாகி இந்த போர்க்களம் தன் தீர்வை நோக்கி நகரலாம்.
இங்கே அசட்டு தைரியங்களும், அர்த்தமற்ற பயங்களுமே உயிர்வேட்டை ஆடிக்கொண்டு இருக்கிறது. என்னை தேற்றிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என்னையும் என் துணைவியாரையும் மீட்டு எடுக்கப் போராடிய அத்துனை முன்கள போர்வீரர்களும் என் வாழ்நாள் நன்றிகளை உரித்தாக்குகிறேன். நன்றிகள்.
எனை சுற்றி ஒருவர் கூட நச்சின் கோரத்தில் நசுக்கப்படவில்லை என்பதே இழந்த ஒவ்வோர் இழப்புகளின் ஆன்மா சாந்தியடைவதற்கான வழி. மீண்டும் பல கோடி வாழ்நாள் நன்றிகள். இவ்வாறு அருண்ராஜா காமராஜ் பதிவிட்டுள்ளார்.
குரங்குகள் கஷ்டப்படுவதை அறிந்த புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர், அவற்றின் தாகத்தைப் போக்க தண்ணீர் தொட்டி ஒன்றை அமைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் வசித்து வருகின்றன. அந்த வழியாக வாகனத்தில் செல்பவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் தினம்தோறும் அங்குள்ள குரங்குகளுக்கு உணவு, பழங்கள் போன்றவற்றை வழங்கி வந்தனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் அங்குள்ள குரங்குகள் தண்ணீர் மற்றும் உணவு இன்றி தவித்து வந்தன.

விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கிய பழங்களை உண்ணும் குரங்குகள்
இந்நிலையில், குரங்குகள் கஷ்டப்படுவதை அறிந்த புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர், அந்தக் கோவில் அருகே தண்ணீர் தொட்டி ஒன்றை அமைத்துள்ளனர். மேலும் அந்த தண்ணீர் தொட்டி அருகே பழங்கள், உணவுகளை வைப்பதற்கு ஒரு மேடையும் அமைத்து, அதன்மூலம் குரங்குகளுக்கு தினந்தோறும் தண்ணீர், உணவுப் பொருட்கள் மற்றும் பழங்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கி வருகின்றனர். அவர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தாமதமாவதால், வலிமை படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக வெளிநாடுகளில் படமாக்க வேண்டிய சண்டை காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது. இந்த காட்சிகளை எடுத்து விட்டு ‘டப்பிங், எடிட்டிங், ரீ ரிக்கார்டிங், கிராபிக்ஸ்’ உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை தொடங்க இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு படத்தை முடக்கி உள்ளது.
இதனால் திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக்கை மே 1-ந் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்த படக்குழு, பின்னர் அதனை கொரோனாவால் தள்ளிவைத்துவிட்டனர். ஆகஸ்டு மாதம் வலிமை படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்து இருந்தனர்.

ரஜினி, அஜித்
தற்போதைய நிலையில் அதற்கு வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. ஆதலால் வலிமை படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகிறார்களாம். ரஜினியின் அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வலிமை படமும் அந்த ரேஸில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்போனில் மர்ம நபர்கள் அடிக்கடி தொடர்பு கொண்டு தவறாக பேசி தொல்லை கொடுத்ததால், பிக்பாஸ் பிரபலம் ஒருவர் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
பிரபல தெலுங்கு சினிமா பின்னணி பாடகி மதுப்பிரியா. இவர் டக்கரங்கா தூரங்கா, சாய்பல்லவி, வருண் தேஜ் நடித்த பிடா, டச் சேசி சுடு, நேலா டிக்கட், சாக்ஷியம் மற்றும் தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் சரிலேறு நீகவரு உள்ளிட்ட படங்களில் பாடல்கள் பாடி உள்ளார். ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். மதுபிரியாவுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவுகள் வெளிவந்தன.

மதுப்பிரியா
செல்போனிலும் மர்ம நபர்கள் அடிக்கடி தொடர்பு கொண்டு தவறாக பேசி தொல்லை கொடுத்தனர். இதனால் அதிர்ச்சியான மதுப்பிரியா ஐதராபாத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். தனக்கு எதிரான அவதூறு பதிவுகள் மற்றும் செல்போன் எண்களையும் போலீசில் வழங்கினார். போலீசார் 509 மற்றும் 354 பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
முன்னதாக லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடித்து இருந்த காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லட்சுமி படமும் ஓ.டி.டி.யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஊரடங்கால் திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட்டு வருகிறார்கள். முன்னணி கதாநாயகர்கள் படங்களும் ஓ.டி.டி.யில் வருகின்றன. இந்த நிலையில் அக்ஷய்குமார் நடித்துள்ள ‘பெல்பாட்டம்’ இந்தி படமும் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
1980-களில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் தயாராகி உள்ளது. ரஞ்சித் எம்.திவாரி இயக்கி உள்ளார். கியூமா குரோஷி, வாணி கபூர், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘பெல்பாட்டம்’ படத்தை தியேட்டரில் வெளியிட முடிவு செய்து இருந்தனர். ஆனால் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் ஓ.டி.டி.யில் வருகிறது.

சூர்யவன்சி, பெல்பாட்டம் படத்தின் போஸ்டர்கள்
இதேபோல் அக்ஷய் குமார் நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள ‘சூர்யவன்சி’ படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தை ரோகித் ஷெட்டி இயக்கி உள்ளார். இதில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடித்துள்ளார். ஏற்கனவே லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடித்து இருந்த காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லட்சுமி படமும் ஓ.டி.டி.யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தி பேமிலி மேன்-2 என்ற இந்தி வெப் தொடர் ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மத்திய மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு தடைகோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தி பேமிலி மேன்-2 என்ற இந்தி வெப் தொடர் ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி இந்த கடிதத்தை எழுதி இருக்கின்றேன். இந்தி மொழியில் வெளியாகும் இந்த தொடரின் முன்னோட்டக் காட்சிகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றது.
தமிழர்களை பயங்கரவாதிகள் ஆகவும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகள் உடன் தொடர்பு கொண்டவர்களாகவும் சித்தரித்து இருக்கின்றார்கள். தமிழ் ஈழ விடுதலைப்போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த ஈழப் போராளிகளையும் கொச்சைப்படுத்தி இருக்கின்றனர்.

வைகோ
ராணுவ சீருடை அணிந்த சமந்தா என்ற தமிழ் பெண் பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாக காட்சிகள் இருக்கின்றன. இத்தகையக் காட்சிகளைக் கொண்ட இந்த தொடர் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது; தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றது. எனவே இந்த தொடரை எதிர்த்து தமிழ்நாட்டில் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன.
அமேசான் ஓ.டி.டி. தளத்தில் இந்த தொடரை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்பதைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். தி பேமிலி மேன்-2 தொடர் ஒளிபரப்பைத் தடை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






