என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    படத்தின் பட்ஜெட், தான் எதிர்பார்த்ததைவிட அதிகரித்துக் கொண்டே போவதால் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக போனிகபூர் தெரிவித்துள்ளார்.
    இந்தியில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மைதான்’. இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. நடிகர் அஜய் தேவ்கான், சையத் அப்துல் ரஹீமாக நடிக்கிறார். இந்தியில் தயாராகும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட உள்ளது.

    மைதான் படத்துக்காக ரூ.2 கோடி செலவில் மும்பையில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கால்பந்து மைதான செட் ஒன்று சமீபத்தில் வீசிய டவ்தே புயலில் சிக்கி முழுவதுமாக சேதமடைந்தது. இதனால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: “மைதான் படத்தை நினைத்தாலே எனக்கு மன அழுத்தம், வேதனைதான் வருகிறது. இந்தப் படத்தை எப்படி முடிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. அதைப் பற்றி நினைத்தாலே எனக்கு அழுகை தான் வருகிறது. 

    போனி கபூர், புயலால் சேதமடைந்த மைதான் பட செட்டின் புகைப்படம்
    போனி கபூர், புயலால் சேதமடைந்த மைதான் பட செட்டின் புகைப்படம்

    படத்தின் பட்ஜெட் நான் எதிர்பார்த்ததைவிட அதிகரித்துக் கொண்டே போவதால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆறுதல் தரும் விஷயம் ஒன்றே ஒன்றுதான். அதிர்ஷ்டவசமாக அந்த செட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மீண்டும் புதிதாக செட் போட வேண்டும் என்றால் அதற்கு கோடிக்கணக்கில் செலவாகும்” என போனிகபூர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
    வாலி எழுதிய "அம்மா என்றால் அன்பு'' என்ற பாடலை, அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார்
    வாலி எழுதிய "அம்மா என்றால் அன்பு'' என்ற பாடலை, அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார்.

    இதுபற்றி வாலி கூறியிருப்பதாவது:-

    "அடிமைப்பெண்'' படத்துக்காக, "அம்மா என்றால் அன்பு'' என்னும் பாடல் எழுதியிருந்தேன்.

    "வாலி! இந்தப்பாட்டை அம்முவை (ஜெயலலிதா) பாட வைக்கலாம் என்றிருக்கிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.

    "ரொம்ப சந்தோஷம்'' என்று நான் சொல்லிவிட்டு, மேற்கொண்டு ஒரு விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் விளக்கினேன்.

    "அண்ணே! பிற்காலத்தில் இவங்களை நீங்க படத்திலே பாட வைப்பீங்கன்னுதான், ஏற்கனவே நான் தீர்க்கதரிசனமாக சொல்லி வைத்திருக்கிறேனே... கவிஞன் வாக்கு பொய்க்காது'' என்றேன்.

    "எப்படி? எப்படி?'' என்று எம்.ஜி.ஆர். ஆர்வமாகக் கேட்டார்.

    `அரசகட்டளை' திரைப்படத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களுக்காக நான் எழுதியிருந்த பாடலை அவருக்கு நினைவூட்டினேன்.

    அந்தப் பாடலின் வரிகள் இவைதான்:

    `என்னைப் பாட வைத்தவன் ஒருவன்; என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்!'

    - இதை நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். மகிழ்ந்து சிரித்து, "வாழ்க! வாழ்க! உங்கள் வாக்கு எப்போதும் இப்படி பலிக்கட்டும்'' என்றார்.

    "அம்மா என்றால் அன்பு'' என்ற பாட்டை கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் ஜெயலலிதா பாட, "அடிமைப்பெண்'' படத்தில் அப்பாடல் இடம் பெற்று பெரும் புகழ் பெற்றது.''

    இவ்வாறு வாலி கூறினார்.

    ஆரம்ப காலத்தில் வாலிக்கு மதுப்பழக்கம் இருந்தது. அதை விட்டுவிடும்படி எம்.ஜி.ஆர். சிலமுறை கூறியும், அந்த பழக்கம் தொடர்ந்தது.

    1978-ல் ஒருநாள் எம்.ஜி.ஆரும், வாலியும் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். விமானப் பணிப்பெண் ஒரு தட்டில் சாக்லேட் கொண்டு வந்தார். அதில் ஒரு சாக்லெட்டை எடுத்து, வாலியிடம் கொடுத்தார், எம்.ஜி.ஆர்.

    "என்னண்ணே விசேஷம்? எதுக்கு சாக்லேட்?'' என்று கேட்டார், வாலி.

    "நேற்றுதான் ஒரு சந்தோஷ சமாசாரம் கேள்விப்பட்டேன். அந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் உங்களுக்கு இனிப்பு கொடுத்தேன்'' என்று கூறினார், எம்.ஜி.ஆர்.

    "என்ன சந்தோஷ சமாசாரம்?'' என்று வாலி கேட்டார்.

    "நீங்க மது அருந்துறதை விட்டுட்டீங்கன்னு நேற்றுதான் கேள்விப்பட்டேன். ஏழெட்டு மாதமா அந்தப்பீடையைக் கையால் தொடறதில்லையாமே நீங்க? இது எனக்கு சந்தோஷ சமாசாரம்தானே!'' என்று கூறிய எம்.ஜி.ஆர்., "உங்க உடம்பு உங்களுக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழுக்குத்தேவை'' என்றார்.

    கண் கலங்கி விட்டார், வாலி.

    எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, அவருடன் வாலி, மதுரை முத்து ஆகியோர் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, "கவிஞர்கள் வாக்கு பலிக்குமா?'' என்ற கேள்வி எழுந்தது.

    கவிஞர்களின் வாக்கு பலிக்கும் என்பதற்கு, பல உதாரணங்களை கூறினார், எம்.ஜி.ஆர்.

    அப்போது எம்.ஜி.ஆரிடம் மதுரை முத்து கூறினார்:

    "உங்களுக்காக வாலி எழுதின பாடல் அத்தனையும் பலிச்சிருக்கு.

    "நினைத்தேன் வந்தாய், நூறு வயது!'' என்று எழுதினாரு. குண்டடிபட்டுப் படுத்திருந்த நீங்க நல்லபடியாகப் பொழச்சு வந்தீங்க.

    "நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்...'' என்று "எங்க வீட்டு பிள்ளை''யிலே வாலி எழுதினாரு. நீங்க இப்போது ஆணையிடுகிற இடத்திலே இருக்கீங்க.

    "அன்னமிட்ட கை'' என்று உங்கள் கையைப் புகழ்ந்து எழுதினாரு. சத்துணவு திட்டத்தில் இப்போது நீங்கள் குழந்தைகளுக்கு அன்னமிடுகிறீர்கள்.''

    - இவ்வாறு முத்து கூறியபோது, வாலி குறுக்கிட்டார்.

    "அண்ணே! நான் சொன்னதெல்லாம் பலிச்சுதுன்னா அந்தப் பெருமை எல்லாம் நம் அண்ணனை (எம்.ஜி.ஆர்)தான் சாரும். ஏனென்றால், அவர் பாடியதால்தான், அந்தப் பாட்டுக்கெல்லாம் அவ்வளவு சக்தி வந்து பலிச்சிது'' என்றார்.

    அப்போது, முத்துவைப் பார்த்து எம்.ஜி.ஆர்., "என்னைப் பற்றி வாலி எழுதிய எல்லாப் பாட்டும் பலிச்சுது. ஆனால் ஒரு பாட்டுதான் பலிக்கவில்லை'' என்றார்.

    எந்தப்பாட்டை எம்.ஜி.ஆர். குறிப்பிடுகிறார் என்று, வாலிக்குப் புரியவில்லை.

    பிறகு எம்.ஜி.ஆரே சொன்னார்:

    "எனக்கொரு மகன் பிறப்பான்! அவன் என்னைப்போலவே இருப்பான். தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்' என்று பாட்டு எழுதினீர்களே! அந்தப் பாட்டைத்தான் சொல்கிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.

    வாலியின் முகம் வருத்தத்தால் வாடியது. எனினும், தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டு, "அண்ணே! நாட்டில் உள்ள சின்னஞ்சிறார்கள் அனைவருமே, உங்களுடைய செல்வங்களாக இருக்கிறார்கள். அப்படி இருப்பதால், உங்களுக்கு தனியாக ஒரு வாரிசு அமைவதை இறைவனே விரும்பவில்லை. அதனால்தான் இந்தப்பாட்டு பலிக்காமல் போய்விட்டது'' என்று கூறினார்.

    மதுரை முத்துவும், வாலி சொன்னதை ஆமோதித்தார்.

    எம்.ஜி.ஆர். புன்னகை புரிந்தார்.
    முத்து பட வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர், 26 வருடங்கள் ஆகியும் ரஜினியுடன் இன்னும் நடிக்க முடிய வில்லை என்று சோகமாக கூறியுள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் முத்து. இந்த படத்தில் ரஜினிகாந்த்தின் நண்பராக நடித்திருந்தவர் சரத்பாபு.

    முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது நடிகர் ஜெயராம் தானாம். ரஜினிகாந்த்தை கைநீட்டி அடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் இந்த படத்தை வேண்டாம் என நிராகரித்துள்ளார்.

    ரஜினி - ஜெயராம்

    முத்து படம் வெளியாகி 26 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை என்று பேட்டி ஒன்றில் வருத்தப்பட்டு பேசியுள்ளார் ஜெயராம்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் அனுஷ்காவின் ரசிகர்கள், காஜல் அகர்வால் மீது கோபப்பட்டு வருகிறார்கள்.
    காஜல் அகர்வாலும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவும் காதலித்து வந்தனர். காதலை வீட்டில் சொல்லி பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணம் மும்பையில் இருக்கும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரமாண்டமாக நடந்தது. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 

    காஜல் அகர்வாலின் பதிவு

    காஜலின் திருமண புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் அனுஷ்கா. காஜலின் திருமணம் முடிந்த மறுநாள் வாழ்த்தியிருந்தார் அனுஷ்கா. அந்த ட்வீட்டுக்கு காஜல் 7 மாதங்கள் கழித்து இப்போது தான் பதில் அளித்திருக்கிறார். இதை பார்த்த அனுஷ்கா ரசிகர்கள் காஜல் மீது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
    தமிழ் பண்பாட்டை இழிவுப்படுத்தும் கருத்துக்களை கொண்ட இந்த தொடர் ஒளிபரப்புக்கு ஏற்றதாக கருத முடியாது".


    நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.

    இந்நிலையில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் நிறுத்தவோ, தடை செய்யவோ உடனடி நடவடிக்கை தேவை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு, தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரகாஷ் ஜவடேகர்


    "ஈழ தமிழர்கள், தமிழக தமிழர்களின் உணர்வுகளை இந்த தொடர் பெருமளவு புண்படுத்தி உள்ளது".

    "தமிழ் பண்பாட்டை இழிவுப்படுத்தும் கருத்துக்களை கொண்ட இந்த தொடர் ஒளிபரப்புக்கு ஏற்றதாக கருத முடியாது".

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் தனது சகோதரர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக் கூறி இருக்கிறார்.
    தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிரஞ்சீவிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    சகோதரர்களுடன் சிரஞ்சீவி

    இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி தனது சகோதரர்கள் பவன் கல்யாண், நாகபாபு ஆகியோருடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இன்று (மே 24) சர்வதேச சகோதரர் தினத்தில் சிரஞ்சீவி வெளியிட்டுள்ள இந்த கருப்பு-வெள்ளை புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
    வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் வாடிவாசல் படத்தின் புதிய அப்டேட்டை கொடுத்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.
    சூர்யா நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் வாடிவாசல். சமீபத்தின் இதன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் வேலைகள் நின்றுள்ள நிலையில் இப்படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தற்போது அப்டேட் கொடுத்துள்ளார்.

    ஜிவி பிரகாஷின் பதிவு

    தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், விரைவில் படத்தின் அப்டேட்டை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். மற்றும் சிறப்பான எதிர்பார்க்காத அறிவிப்புகள் வெளியிடப்பட காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    அப்புச்சி கிராமம் படத்தில் நடித்த பிரவீனும், அந்தகாரம் படத்தில் நடித்த வினோத் கிஷனும் லாகின் செய்து ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள்.
    ஜே.எப்.எல். புரொடக்ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் 'லாகின்'. இப்படத்தில் நாயகர்களாக அப்புச்சி கிராமம் படத்தில் நடித்த பிரவீனும், அந்தகாரம் படத்தில் நடித்த வினோத் கிஷனும் நடிக்கிறார்கள். நாயகியாக ப்ரீத்தி நடிக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விபின் இசையமைக்கிறார். ராம் கிஷன் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி ராஜேஷ் வீரமணி இயக்கி இருக்கிறார்.

    சாப்ட்வேரில் வேலை பார்க்கும் நண்பர்கள் இரண்டு பேர், தங்களுக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த தொழில்நுட்பம் அவர்கள் வாழ்க்கையில் விளையாட ஆரம்பிக்கிறது. அந்த விளையாட்டின் விளைவை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.

    இன்றைய சூழ்நிலையில் ஏதேதோ தேவைகளுக்காக லாகின் பண்ணிகிட்டே இருக்கிறோம், லாகின் செய்து உள்ளே சென்று தெரியாத விஷயங்களையும் தவறான விஷயங்களையும் செய்தோமேயானால் ஏற்படும் விளைவை பற்றியே லாகின் படம் சொல்கிறது.

    பிரீத்தி
    நாயகி ப்ரீத்தி
    இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் நோ மட்டும் சொல்லாத என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.

    டெக்னாலஜியை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரை விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
    கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் ஜோதிகாவின் இடத்தை ரம்யா கிருஷ்ணன் பிடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் எதிர்பார்த்ததை விட அளவுக்கதிகமான வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

    ரம்யா கிருஷ்ணன்

    தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் ஜோதிகா, சலார் படத்தில் பிரபாஸுக்கு சகோதரியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் இது ஜோதிகா தரப்பில் மறுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் பிரபல நடிகை ஒருவர் மீண்டும் இணைய ஆசை இருப்பதாக கூறியிருக்கிறார்.
    விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். வசூல் சாதனை செய்த இப்படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். 

    இந்நிலையில் ‘மாஸ்டர்’ படக்குழுவினரோடு மீண்டும் இணைவதில் ஆர்வத்துடன் இருப்பதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, விஜய்யுடன் நான் நடித்த முதல் படம் மாஸ்டர். விஜய் போன்றதொரு புகழ்பெற்ற நடிகருடன் நடிக்கும் ஆர்வம் பெரிய அளவில் இருந்தது. விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் போன்ற திறமைசாலிகளுடன் பணியாற்றியது நல்ல அனுபவத்தை தந்தது. 

    விஜய் மாளவிகா மோகனன்
    விஜய் - மாளவிகா மோகனன்

    நாங்கள் அனைவரும் படப்பிடிப்பில் பல மணிநேரம் ஒன்றாக செலவழித்தோம். எனது சினிமா வாழ்க்கையில் இது ஒரு மைக்கல். மீண்டும் இதே படக்குழுவினரோடு இணையவேண்டும்’. இவ்வாறு தனது விருப்பத்தை, மாளவிகா தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள்.
    தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    தனது சொந்த செலவில் 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அதையடுத்து நடிகை ஜெயசித்ரா 200க்கு மேற்பட்ட நடிகர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

    சிவகார்த்திகேயன் - ஐஸ்வர்யா ராஜேஷ்

    இந்நிலையில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து வாடும் நடிகர்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய். ஒரு லட்சமும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூபாய். 50 ஆயிரமும், நடிகை லதா 25 ஆயிரமும் நடிகர் விக்னேஷ் 10 ஆயிரமும் வழங்கியுள்ளனர். இவை அனைத்தும் நேரடியாக நடிகர் சங்க வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது.
    இசையமைப்பாளரும் இயக்குனருமான எஸ்.எஸ்.குமரன், நோ கொரோனா மூவ்மென்ட்’ என்கிற பெயரில் ஒரு விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
    கடந்த வருடம் தொடங்கிய கொரோனா தாக்கம், இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலையாக உருமாறி மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை கொடுத்து வருகிறது. ஒரு பக்கம் தடுப்பூசி, மருந்துகள் என அரசு தரப்பில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும் இன்னொரு பக்கம் ஒவ்வொரு தனி நபரும் இந்த சூழலில் சுய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியதும் அவசியம். குறிப்பாக வெளியில் செல்லும்போது எப்போதும் முக கவசம் அணிதல் என்பது, ஒரு அனிச்சை செயலாகவே நமக்குள் நடந்திட வேண்டும். இது கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    அந்தவிதமாக பொது இடங்களில் முக கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இசையமைப்பாளரும் இயக்குனருமான எஸ்.எஸ்.குமரன், நோ கொரோனா மூவ்மென்ட்’ என்கிற பெயரில் ஒரு விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். 

    குறும்படம்

    தெருவில் சுற்றும் பிச்சைக்காரர் ஒருவர் கூட, முக கவசம் அணிய வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் உணர்த்தும் விதமாக இந்த குறும்படம் தயாராகியுள்ளது. இந்த குறும்படத்தை சாய் வில்லேஜ் ட்ரஸ்ட் என்கிற தன்னார்வ அமைப்புடன் சேர்ந்து உருவாக்கியுள்ளார் எஸ்.எஸ்.குமரன். இந்த குறும்படத்தை நடிகர்கள் சுஹாசினி மணிரத்னம் & காளி வெங்கட் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் 10லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த குறும்படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

    சசி இயக்கிய பூ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் எஸ்.எஸ்.குமரன். களவாணி படத்தின் வெற்றிக்கு பக்கபலமான பாடல்களை கொடுத்தவர். தேநீர் விடுதி, கேரள நாட்டிளம் பெண்களுடனே ஆகிய படங்களின் மூலம் ஒரு இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தியவர். இந்த கொரோனா காலகட்டத்தில் மக்கள் தங்கள் சுய பாதுகாப்பில் சிறிதளவு அலட்சியம் காட்டினாலும் கூட, அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதை வலியுறுத்தும் விதமாகத்தான் இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார்.

    ×