என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரஜினியுடன் காலா, அஜித்துடன் வலிமை போன்ற படங்களில் நடித்துள்ள ஹூமா குரேஷி, ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்துள்ளார்.
    பிரபல பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி, பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஆர்மி ஆப் தி டெத் படத்தின் போஸ்டர்
    ஆர்மி ஆப் தி டெட் படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், நடிகை ஹூமா குரேஷி, ‘ஆர்மி ஆப் தி டெட்’ படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தை ஜாக் ஷிண்டர் இயக்கி உள்ளார். இது ஜாம்பி வகை படமாகும். ஏற்கனவே பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனா, டிம்பிள் கபாடியா, அமைரா தஸ்தூர், ஐஸ்வர்யா சோனார் ஆகியோர் ஹாலிவுட்டுக்கு சென்ற நிலையில், தற்போது ஹூமா குரேஷியும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.
    கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

    ஆனால், பொதுமக்கள் சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அலட்சியம் காட்டுகிறார்கள். இதனால் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் தடுப்பூசி தொடர்பாக நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: “சமீப காலமாக சில வேதனையான விஷயங்களைக் கேள்விப்படுகிறேன். யாருமே சரியாக தடுப்பூசி போட்டுக் கொள்வதில்லை. செல்போன் வந்த பிறகு, நமக்கு நாமே மருத்துவர் ஆகிவிட்டோம். அக்கம்பக்கத்தினர், சொந்தக்காரர்கள், நண்பர்கள் என அனைவருமே மருத்துவர்கள் ஆகிவிட்டார்கள். அது எப்படி?.

    சத்யராஜ்
    சத்யராஜ்

    மருத்துவத்துக்கு படித்தவர்கள் தான் மருத்துவராக இருக்க முடியும். அதனால் தடுப்பூசி பற்றி ஏதேனும் குழப்பம் இருந்தால், தெரிந்த மருத்துவரை அணுகுங்கள். அவர்கள் சரியான அறிவுரை வழங்குவார்கள். நம்ம உடம்புக்கு ஒன்றும் வராது என்று காலரை தூக்கிவிட்டுக் கொண்டு, இது சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட உடம்பு என்பது எல்லாம் இருந்துட்டு போகட்டும். 

    ஆனாலும், நமது உடம்பைப் பற்றி நம்மை விட மருத்துவர்களுக்கு தான் நன்றாகத் தெரியும். அதற்குத்தான் அவர்கள் மருத்துவத்துக்கு படித்துள்ளார்கள். நான் சொல்வதைக் கூட கேட்காதீர்கள். நான் என்ன மருத்துவரா?

    சமீபத்தில் கேட்கும் விஷயம் எல்லாம் மனவேதனையை தருகிறது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி, கிருமி நாசினி மூலம் கையை சுத்தப்படுத்துவது எல்லாம் அனைவரும் செய்கிறார்கள். ஆனால், இந்த தடுப்பூசி விஷயத்தில் பெரிய குழப்பம் இருக்கிறது. தயவுசெய்து மருத்துவர்களை அணுகி அறிவுரையை பெற்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்”. இவ்வாறு சத்யராஜ் தெரிவித்துள்ளார்.


    15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா வந்ததாக மாஸ்டர் பட பிரபலம் தெரிவித்துள்ளார்.
    வைபவ் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரத்ன குமார். இதையடுத்து அமலாபாலின் ‘ஆடை’ படத்தை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதுதவிர, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.

    இந்நிலையில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில், தனது குடும்பத்தினர் 14 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் ரத்ன குமார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தேரினர்.

    ரத்ன குமாரின் டுவிட்டர் பதிவு
    ரத்ன குமாரின் டுவிட்டர் பதிவு

    கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். இயக்குனர் ரத்னகுமாரின் இந்த பதிவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
    சிம்புவின் மாநாடு படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் வெங்கட் பிரபு, அடுத்ததாக இயக்கும் படத்தில் 3 ஹீரோயின்கள் நடிக்க உள்ளார்களாம்.
    சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு. தற்போது சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தை இயக்கி வரும் வெங்கட்பிரபு, அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் டி.முருகானந்தத்தின் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிட்டார். இது அவர் இயக்கத்தில் உருவாகும் 10வது திரைப்படம் ஆகும்.

    ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே
    ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே

    இந்நிலையில், அப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வெங்கட் பிரபுவின் 10-வது படத்தில் நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்க உள்ளதாகவும், கொரோனா பரவல் குறைந்த பின் படப்பிடிப்பை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்களாம். 
    பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அமிதாப் பச்சன், மும்பையில் ரூ.31 கோடி மதிப்பிலான சொகுசு வீட்டை வாங்கி உள்ளார்.
    இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மும்பை ஜூகுவில் உள்ள ஜல்சா பங்களா வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அந்தேரி மேற்கு ஓஷிவாராவில் உள்ள அட்லாண்டிஸ் என்ற 34 சொகுசு அடுக்குமாடி கட்டிடத்தில் புதிதாக வீடு ஒன்று வாங்கி உள்ளார். இதன் விலை ரூ.31 கோடி ஆகும். இது 5 ஆயிரத்து 704 சதுர அடியில் இரண்டடுக்கு வகையை சேர்ந்த வீடு ஆகும். 

    அமிதாப் பச்சன்
    அமிதாப் பச்சன்

    இதில் 6 வாகனங்களை நிறுத்த நவீன முறையில் வசதி உள்ளது. இதற்காக முத்திரைத்தாள் கட்டணமாக ரூ.62 லட்சத்தை அமிதாப் பச்சன் செலுத்தி உள்ளார். அவருக்கு ஏற்கனவே 4 பங்களா வீடுகள் இருக்கும் நிலையில், தற்போது 5-வதாக புதிய வீடு வாங்கி உள்ளார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்கனவே கவர்ச்சி நடிகை சன்னி லியோனும் ஒரு வீடு வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சமூக வலைதளத்தில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி, பாடகி சின்மயி சொல்வது பொய் என்று பதிவிட்டுள்ளார்.
    கவிஞர் வைரமுத்து மீது தொடர்ந்து மீடூ புகார் தெரிவித்து வரும் பாடகி சின்மயி, சமீபத்தில் அவருக்கு கேரளாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான ஓ.என்.வி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 

    இதனிடையே நெட்டிசன் ஒருவர் சின்மயியிடம், ஏன் வைரமுத்துவை உங்கள் திருமணத்திற்கு அழைத்தீர்கள், ஏன் அவரது காலில் விழுந்தீர்கள் என புகைப்படத்தை வெளியிட்டு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சின்மயி, கூப்பிட சொல்லி டார்ச்சர் பண்ணுனதே அவர் மகன் தான் என பதிலளித்தார்.

    மதன் கார்க்கியின் டுவிட்டர் பதிவு
    மதன் கார்க்கியின் டுவிட்டர் பதிவு

    சின்மயி அளித்த பதில் குறித்து வைரமுத்துவின் மகனிடம் நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு மதன் கார்க்கி கூறியதாவது: “இது மேலும் ஒரு பொய். அவர் என் தந்தையை தன் திருமணத்திற்கு அழைக்க விரும்பினார். ஆனால் என் தந்தை அவர் மீது அதிருப்தியில் இருந்ததால், அபாயின்ட்மென்ட் கொடுக்க மறுத்துவிட்டார். 

    அதனால் அவரிடம் அபாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுக்குமாறு என்னிடம் கேட்டார். நானும் வாங்கிக் கொடுத்தேன். அவரின் வீட்டிற்கு சின்மயி தனியாக சென்று, அவரது பாதங்களை தொட்டு ஆசி வாங்கி, திருமணத்திற்கு வரவேற்றதாக” மதன் கார்க்கி கூறினார்.
    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால், விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாம்.
    தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 

    இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஷ்வந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    எப்.ஐ.ஆர் படத்தின் போஸ்டர்
    எப்.ஐ.ஆர் படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், ‘எப்.ஐ.ஆர்’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
    நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார்.
    நடிகர் விஜய், மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. கொரோனா தீவிரம் குறைந்ததும் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளதாகவும் தகவல் பரவி வந்தது.

    இந்நிலையில், இயக்குனர் வம்சி பைடி பல்லி சமீபத்திய பேட்டியில் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளதாகவும், கொரோனா பரவல் குறைந்த பின் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் இயக்குனர் வம்சி தெரிவித்துள்ளார்.

    வம்சி பைடி பல்லி, விஜய்
    வம்சி பைடி பல்லி, விஜய்

    இயக்குனர் வம்சி ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, ஜூனியர் என்.டி.ஆர் நடித்த பிருந்தாவனம், பிரபாஸின் முன்னா ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஷிவானி, ரீல்ஸ் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
    தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.

    சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தினமும் கலர்புல்லான புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதோடு நடன வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

    ஷிவானி

    அந்தவகையில் தற்போது, நடிகை ஷிவானி, ரீமிக்ஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரீல்ஸ் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘லாக்டவுன்ல ரொம்ப போர் அடிக்குது, சரி நம்மளும் ஒரு ரீல்ஸ போடுவோம்’ என அந்த பதிவில் ஷிவானி குறிப்பிட்டுள்ளார். வைரலாகி வரும் இந்த ரீல்ஸ் வீடியோவை, ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளதாக ஷிவானி தெரிவித்துள்ளார்.


    சிவகுமாரை தன் சொந்தத் தம்பி போல சிவாஜிகணேசன் கருதினார். இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளது வழக்கம்.
    சிவகுமாரை தன் சொந்தத் தம்பி போல சிவாஜிகணேசன் கருதினார். இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளது வழக்கம்.

    1970 முதல் 7 ஆண்டுகள் மேஜர் சுந்தர்ராஜனுடன் நாடகங்களில் நடித்து வந்தார், சிவகுமார். "அப்பாவி'' என்ற நாடகம், ஆயிரம் தடவை மேடை ஏறியது. 1000-வது நாடகத்துக்கு சிவாஜி தலைமை தாங்கினார்.

    நாடகத்தைப் பார்த்தபின் சிவகுமாரிடம், "கவுண்டா! இத்தனை நாள் எங்கேடா ஒளிச்சு வச்சிருந்தே இம்புட்டுத் திறமையை! கல்யாணம் பண்ணினதும் வீரம் வந்துடுச்சா?'' என்று தமாஷாகக் கூறினார்.

    சிவகுமார் குணச்சித்திர வேடத்தில் நடித்த படம் "இனி ஒரு சுதந்திரம்.'' இது 1987-ல் வெளிவந்தது. சிவகுமாரின் 154-வது படம்.

    இந்தப்படம் சிவாஜிக்குப் போட்டுக் காட்டப்பட்டது. படம் பார்த்து முடிந்து வெளியே வந்த சிவாஜி, "படத்தைப் பார்த்தேன். பிரமாதமா பண்ணி இருக்கே. `கப்பலோட்டிய தமிழன்'லே உயிரைக் கொடுத்து நடித்தேன். தமிழ்நாட்டு மக்கள் எனக்குப் பட்டை நாமத்தைப் போட்டுட்டாங்க. உனக்குக் குழச்சிக்கிட்டு இருக்காங்க'' என்று சிவகுமாரிடம் சொன்னார்.

    "சிவாஜி சொன்னது மாதிரி எனக்கும் நாமம் போடப்பட்டது'' என்று கூறுகிறார், சிவகுமார்.

    சிவாஜியுடன் பழகிய சில நாட்களை நினைவு கூர்ந்த சிவகுமார் நெஞ்சம் நெகிழ கூறியதாவது:-

    "உறுதிமொழி படப்பிடிப்பு. நானும் பிரபுவும் தேக்கடியில் நடித்துக் கொண்டிருந்தோம். அங்கே ஒரு நாள் சிவாஜி குடும்பத்துடன் வந்திருந்தார். எங்கள் வீட்டிலிருந்து என் மனைவி, குழந்தைகள் எல்லாம் வந்திருந்தனர். சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டோம். அப்படியே என் தோள் மீது கைபோட்டபடி தனியே நடந்த சிவாஜி, "கவுண்டரே! சிவாஜிகணேசன் தேக்கடிக்கு கெஸ்ட்டா வந்திருக்கேண்டா'' என்று குரல் தழுதழுக்கச் சொன்னார்.

    "அண்ணே, என்ன பேச்சு பேசுறீங்க! நீங்க சாப்பிட்டு மிச்சமான சோற்றைத்தான் நாங்க சாப்பிடுறோம். நீங்கள் மிதித்த புல்லுலதான் நாங்க விளையாடுகிறோம். எந்தக் கொம்பனும் இந்தத் தமிழ் மண்ணுல உங்க சாதனையை முறியடிச்சிட முடியாது'' என்றேன்.

    "அப்படியா நினைக்கிறே?''

    "இது என் தாய் மேல் சத்தியம்! தொழில் மேல் சத்தியம்'' என்றேன்.

    "எல்லாரும் அப்படி நினைப்பாங்களா?'' சிவாஜியின் கேள்வி என்னைக் கலங்கச் செய்து விட்டது.

    தேக்கடியில் ஓட்டல் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள், என் மகள் பிருந்தா. அப்போது அங்கே சிவாஜி வந்தார். "குட் மார்னிங் அங்கிள்'' என்று சொன்னாள்.

    "நான் உனக்கு அங்கிள் இல்லம்மா. உங்கப்பன் என் தம்பி! நான் உன் பெரியப்பன்'' என்றார். அது முதல் சிவாஜியை பிருந்தா, "பெரியப்பா'' என்றுதான் அன்போடு அழைப்பாள்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு, சிங்கப்பூர் கலை நிகழ்ச்சியில் சிவாஜி மயங்கி விழுந்து விட்டார். "ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் ஊசலாடுகிறது'' என்றும், ஒரு கட்டத்தில் "சிவாஜி இறந்து விட்டார். உடல் விமானத்தில் வருகிறது'' என்றெல்லாம் செய்திகள். எனக்கு இதயமே ஒரு நொடி நின்று விட்டதுபோல் ஆகிவிட்டது. "பெரியப்பா சாகமாட்டாருப்பா! அவர் கம்பீரமாகத் திரும்பி வருவார் பாருங்க'' என்றாள், பிருந்தா.

    "மகளே, உன் வாய் முகூர்த்தம் பலிச்சுட்டா, ஒரு பூச்செண்டு தர்றேன், அதை உன் கையாலேயே பெரியப்பாவுக்குக் கொடுத்துடு'' என்றேன்.

    அதேபோல் புது ரத்தம், புதுப்பொலிவுடன் ஒரு மாத ஓய்வுக்குப் பின் திரும்பி வந்தார். குடும்பத்துடன் போய்ப் பார்த்தேன். அவர் அருகில் ஒரு நாற்காலி - உட்காரச் சொன்னார். நான் தரையில் அமர்ந்தேன். என் தலையைத் தடவிவிட்டபடி சிவாஜி சொன்னார்:

    "நாமெல்லாம் `முன்னொருகால நடிகர்கள்'டா சிவா! எல்லாம் முடிஞ்சுப் போச்சு. நம்மை யாரு ஞாபகம் வச்சிருக்கா? சிங்கப்பூர்ல பாரு, அஞ்சாயிரம் பேர் கூடியிருக்காங்க. இருபது அடிக்கு முப்பது அடி திரையில் கட்டபொம்மன் காட்சியைப் போடுறான். அஞ்சாயிரம் பேரும் அடிக்கிறான் விசில்.

    "தங்கப்பதுமை... `ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே' போட்டா... அவனவன் சாமி ஆடறான். `தங்கப்பதக்கம்' அரங்கமே குலுங்குது!

    "சிவா! வாட் ஏ பைன் மூவ்மெண்ட்! உங்க அண்ணன் ஏன்டா அப்ப சாகல? எதுக்காகடா உயிரோட வந்தேன்?''

    இப்படி சொல்லும்போது சிவாஜிக்கும் எனக்கும் கண்களில் நீர் முட்டித் தளும்பியது.

    நூறு வயது வாழணும்னு ஆசை இருந்தா கூட, ஒரு கலைஞனுக்கு எப்படி முடிவு வரவேண்டும் என்று அவர் கற்பனை செய்து வைத்திருந்தார்.

    1981-ல் முத்துராமன் ஊட்டியில் இறந்தபோது, அவரது உடலை நானும் திருப்பூர் மணி படக்குழுவும் சென்னைக்கு எடுத்து வந்தோம். அதிகாலை 4 மணி. முத்துராமன் வீட்டு வாசலில் சிவாஜியும் முன்னாள் டி.ஜி.பி. பரமகுருவும் காத்திருந்தார்கள். "கவுண்டரே, தேவனுக்கு (முத்துராமன்) நல்ல சாவுடா! கொஞ்ச நாளா படமில்லாம வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். ஷூட்டிங் போன இடத்துல உடற்பயிற்சிக்காக ஓடிக்கிட்டிருக்கும்போது உயிர் போறது வீர மரணம். உனக்குத் தெரியுமா? நம்ம நடிக ஜாதியில ஒருத்தர், விஸ்வநாததாஸ் - மேடையில முருகன் வேஷம் கட்டி மயில்மேல் வள்ளி தெய்வானைக்கு நடுவுல உட்கார்ந்திருக்கும்போது செத்துப் போயிட்டார். எவ்வளவு கொடுத்து வைத்த சாவு. சாவுன்னா, அப்படி வரணும்'' என்றார்.

    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை!

    மனிதர்கள் பிறக்கலாம், இறக்கலாம். ஆனால், தமிழ் உள்ளளவும் தமிழ் சினிமா உள்ளளவும் அந்த ஒரு உலக மகா கலைஞனின் சாதனையை யாரும் மறந்திட முடியாது!''

    இவ்வாறு சிவகுமார் கூறினார்.

    கலைஞர் மு.கருணாநிதியுடன் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி சிவகுமார் கூறியதாவது:-

    "1980-களின் கடைசியில், "பாசப்பறவைகள்'', "பாடாத தேனீக்கள்'' என்று இரண்டு படங்களில் கலைஞர் அவர்களின் வசனங்களைப் பேசி நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்தக் காலக்கட்டங்களில், அடுக்கு மொழி வசனம், இரண்டு வரி வசனமாகச் சுருங்கிவிட்டது.

    படத்தின் வெற்றி விழாக்களில், சிவாஜிக்கு அவர் எழுதிய நீண்ட வசனங்களை பேசிக்காட்டி மகிழ வைத்திருக்கிறேன்.

    துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி ஆகியோருடன் கலைஞர் என் இல்லம் வந்து 90 நிமிடங்கள் என் ஓவியங்களை கண்டு களித்திருக்கிறார்.

    என் புத்தகத்துக்கு வாழ்த்துரை எழுதிக் கொடுத்தார். நான் ஓட்ட என் காரில் அவர் சவாரி செய்திருக்கிறார்.

    அவரது தமிழ்ப்பற்றும், நினைவாற்றலும் எப்போதும் என்னை பிரமிக்க வைக்கும்.''

    இவ்வாறு சிவகுமார் குறிப்பிட்டார்.
    ராதாமோகன் இயக்கத்தில் வைபவ், வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், ரியா சுமன், மயில்சாமி, சச்சு நடிப்பில் ஜீ5 தளத்தில் வெளியாகி இருக்கும் மலேசியா டூ அம்னீசியா படத்தின் விமர்சனம்.
    வைபவ்வும் வாணி போஜனும் கணவன் மனைவி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. வைபவ்வுக்கு பெங்களூருவில் ரகசிய காதலியாக ரியா சுமன் இருக்கிறார். மலேசியாவுக்கு அலுவலக வேலையாக செல்வதாக சொல்லி பெங்களூருக்கு ரியாவை பார்க்க வைபவ் செல்கிறார். அவர் செல்வதாக சொன்ன மலேசிய விமானம் மாயமானதாக செய்தி வருகிறது. பெங்களூருவில் இருந்து வரும் வைபவ் நண்பன் கருணாகரன் உதவியுடன் எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.

    வைபவ்வுக்கு அனைத்து உணர்வுகளையும் காட்ட வேண்டிய கதாபாத்திரம். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கரை பார்த்து டாங்லீ என்று சொல்லும்போது எல்லாம் கைதட்டி சிரிக்க வைக்கிறார். கருணாகரன் யோசனைப்படி அம்னீசியா வந்தவராக நடிக்கும் காட்சிகளில் எல்லாம் வைபவ் வெளுத்து வாங்குகிறார். வாணி போஜனின் அன்பை பார்த்து தன் தவறை உணரும் காட்சியில் நெகிழ்ச்சியான நடிப்பு.

    விமர்சனம்

    வைபவ்வுக்கு இணையான கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர். துப்பறியும் நிபுணராக வைபவ், கருணாகரன் கூட்டணி மீது சந்தேகபடும் காட்சிகளில் அனுபவ நடிப்பு. அந்த இறுதிக்காட்சி திருப்பத்தில் அபார நடிப்பு. அப்பாவி மனைவியாக வாணி போஜன் கணவருக்காக உருகும் இடங்களில் அசத்துகிறார். 

    எம்.எஸ்.பாஸ்கரிடம் கோபம் கொள்ளும் கடைசிக் காட்சியில் கண்கலங்க வைக்கிறார். கருணாகரன் வைபவ்வுக்கான மூளையாக செயல்பட்டு கதையை கலகலப்பாக நகர்த்துகிறார். ஆங்காங்கே இவர் அடிக்கும் ஒன்லைன் பஞ்ச் வசனங்கள் வெடி சிரிப்பு.

    விமர்சனம்

    மொழி, அபியும் நானும், காற்றின் மொழி உள்ளிட்ட படங்கள் மூலம் அனைவரும் ரசிக்கும் வகையில் நகைச்சுவை கலந்த உணர்வுபூர்வமான படங்களை இயக்கி புகழ்பெற்ற ராதாமோகன் இயக்கத்தில் மீண்டும் அப்படி ஒரு படைப்பு. இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

    பிரேம்ஜி அமரனின் இசையில் பாடலும் பிண்ணனி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவில் உயர்தர வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வருகிறார்.
    குடும்பத்துடன் பார்த்து ரசித்து சிரித்து மகிழும் வகையில் ஒரு பொழுதுபோக்கு படமாக அமைந்திருக்கிறது. 

    மொத்தத்தில் 'மலேசியா டூ அம்னீசியா' காமெடி டூர்.
    ஜகமே தந்திரம் படத்தை இயக்கி இருக்கும் கார்த்திக் சுப்புராஜின் புதிய அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஜகமே தந்திரம்'. இந்த படத்தில் ஐஷ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    ஜகமே தந்திரம் படத்தின் அறிவிப்பு

    இந்த படத்தில் ரகிட ரகிட, புஜ்ஜி, நேத்து ஆகிய பாடல்கள் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் ஜூன் 1 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்து இருக்கிறார். இதை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
    ×