என் மலர்
சினிமா செய்திகள்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூஜா ஹெக்டே, அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
நடிகை பூஜா ஹெக்டே, கடந்த 2012-ம் ஆண்டு, மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தியில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமான அவர், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் மூலம் 9 ஆண்டுகள் கழித்து தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் பூஜா ஹெக்டே. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பூஜா ஹெக்டே
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், விஜய் குறித்து ஒரு வார்த்தையில் கூறுமாறு கேட்டார். இதற்கு பதிலளித்த பூஜா ஹெக்டே, “அவரைப் பற்றி கூற ஒரு வார்த்தை போதாது. இருந்தாலும் முயற்சி செய்கிறேன்... இனிமையானவர்” என தெரிவித்தார்.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் சசிகுமார், இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாம்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எம்.ஜி.ஆர்.மகன். சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, மிருணாளினி மற்றும் பலர் நடிப்பில் தயாராகியுள்ள இப்படத்தின் மூலம் பிரபல பின்னணிப் பாடகர் அந்தோணிதாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இப்படத்தை கடந்த ஏப்ரல் மாதமே வெளியிட திட்டமிட்டு இருந்தனர். அந்த சமயத்தில் கொரோனா இரண்டாவது வேகமாக பரவியதால், ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாகி வருவதால், எம்.ஜி.ஆர்.மகன் படக்குழு ரிலீஸ் பிளானை மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எம்.ஜி.ஆர்.மகன் படத்தின் போஸ்டர்
அதன்படி இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இப்படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சூர்யாவின் ‘ஜெய் பீம்’, ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’, அருண்விஜய்யின் ‘வா டீல்’, விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனிமி’ ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சசிகுமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.
நடிகர் சூர்யாவும், இயக்குனர் பாலாவும் நீண்ட இடைவெளிக்கு பின் இணையும் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதுவரை அவர் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
அடுத்ததாக நடிகர் சூர்யா தயாரிக்க உள்ள படத்தை பாலா இயக்க உள்ளார். அப்படத்தில் அதர்வா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற டிசம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தில் நடிகர் சூர்யாவும் கெஸ்ட் ரோலில் நடிப்பார் என கூறப்படுகிறது.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ திரைப்படம், வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.
கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் வினய் வில்லனாகவும், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
அண்மையில் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

சிவகார்த்திகேயன், விஜய்
அந்த வகையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் பட சாதனையை முறியடித்துள்ளது டாக்டர். இந்த ஆண்டு அமெரிக்காவில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக மாஸ்டர் இருந்து வந்த நிலையில், தற்போது டாக்டர் படம் அதனை முறியடித்து உள்ளது. அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் டாக்டர் திரைப்படம் 4 லட்சத்து 40 ஆயிரம் டாலர் வசூலித்துள்ளது. இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் 4 லட்சத்து 39 ஆயிரம் டாலர் வசூலித்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகரும், இயக்குனருமான ராமராஜன், அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்காக தன்னை தயார்படுத்தி வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் ஜொலித்தவர் ராமராஜன். கடந்த சில ஆண்டுகளாக அவர் சினிமாவை விட்டு விலகி இருப்பதால், அவ்வப்போது அவரது உடல்நிலை பற்றி சில வதந்திகள் பரவி வருகின்றன. அந்த வகையில் தற்போதும் அவரது உடல்நிலை பற்றி சமூகவலைதளங்களில் வதந்தி பரவின. இதற்கு ராமராஜன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அவர் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமராஜனைப் பற்றி தற்சமயம் தவறான வதந்தியை பரப்பி வருகின்றார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம். அவர் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார்.

2 படங்களுக்கு தனது கதையைத் தந்துள்ள ராமராஜன், அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்காகவும் தன்னை தயார்படுத்தி வருகிறார். நடிகர் ராமராஜன் உடல் நலத்துடனும், மனவலிமையுடனும் இருக்கிறார். விரைவில் அவர், தான் நடிக்கும் படத்தின் துவக்க விழாவில் கலந்து கொள்வார்'” என தெரிவித்துள்ளனர்.
நடிகை சவுஜன்யா, கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார்.
குடகு மாவட்டத்தை சேர்ந்தவர் சவுஜன்யா என்ற சவி மாரப்பா (வயது 25). நடிகையான இவர், கன்னட சினிமா படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் கன்னட சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி இவர் தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.
அவர் தற்கொலை செய்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தனது மகளை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு இருப்பதாகவும், காதலன் விவேக் மீது சந்தேகம் இருப்பதாகவும் சவுஜன்யாவின் தந்தை குற்றச்சாட்டு கூறி இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சவுஜன்யா எழுதி வைத்திருந்த கடிதத்திலும் சொந்த காரணங்களுக்காக தற்கொலை முடிவை எடுத்திருப்பதாக கூறி இருந்தார். ஆனால் காதலன் மீது தந்தை குற்றச்சாட்டு கூறி இருந்ததால், சவுஜன்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருந்தனர்.

சவுஜன்யா
இந்நிலையில், சவுஜன்யா தற்கொலை செய்திருப்பதாகவும், அவர் கொலை செய்யப்படவில்லை என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியாகி உள்ளது. இதனை போலீசாரும் உறுதி செய்திருக்கிறார்கள். இதனால் நடிகை சவுஜன்யாவின் மரணத்தில் இருந்த சந்தேகம் தீர்ந்துள்ளது. அதே நேரத்தில் நடிகர் விவேக்குக்கு, சவுஜன்யாவின் மரணத்திற்கும் தொடர்பு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர். சமந்தா கவர்ச்சியாக நடிப்பது நாகசைதன்யா குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என்றும் இதனாலேயே திருமண உறவை முறித்துக் கொண்டார்கள் என்றும் கூறப்படுகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்திருந்த சமந்தா, விவாகரத்துக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.
ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள அவர், தற்போது மேலும் 3 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதில் ஒன்று பாலிவுட் படம். அவர் நடிக்கும் முதல் பாலிவுட் படம் இதுவாகும்.

மேலும் அவர் நடிக்க உள்ள மற்ற இரண்டு படங்களும் சமந்தாவை முன்னிலைப்படுத்தி கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படங்களாக தயாராகின்றன. அதில் ஒரு படத்தை ஷாந்தா ரூபன் இயக்குகிறார். மற்றொரு படத்தை ஹரி, ஹரிஷ் ஆகியோர் இணைந்து இயக்க இருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராக உள்ளன.
ஆர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘டெடி’ படத்தின் இயக்குனர் சக்தி சவுந்தரராஜனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டு உள்ளது.
ஆர்யா, சாயிஷா நடிப்பில் கடந்த மார்ச் மாதம் ஓடிடியில் வெளியான படம் ‘டெடி’. சக்தி சவுந்தரராஜன் இயக்கியிருந்த இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருந்தார். ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார்.
இப்படத்தில் இடம்பெறும் டெடி என்கிற பொம்மை கதாபாத்திரம் குழந்தைகள் ரசிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்ததால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. விரைவில் இப்படத்தின் 2-ம் பாகமும் உருவாக உள்ளது.

ஞானவேல்ராஜா, சக்தி சவுந்தரராஜன்
இந்நிலையில், டெடி படத்தின் இயக்குனர் சக்தி சவுந்தரராஜனுக்கு, தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா கார் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார். டெடி படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக அவர் இவ்வாறு செய்துள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் சக்தி சவுந்தரராஜன், தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியான ‘அரண்மனை 3’ திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அரண்மனை 3’. ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். சி.சத்யா இசையமைத்துள்ள இப்படத்திற்கு செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார். அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

ராஷி கன்னா, ஆர்யா
பண்டிகை தின விடுமுறையில் வெளியானதால் இப்படம் வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. அரண்மனை படத்தின் முதல் இரண்டு பாகங்களைப் போல் இந்த படத்திற்கும் வரவேற்பு கிடைத்து வருவதால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் சாண்டி, சுருதி செல்வம் நடிப்பில் உருவாகி உள்ள ‘மூணு முப்பத்தி மூணு’ படத்தின் முன்னோட்டம்.
பிரபல நடன இயக்குனரான சாண்டி இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘3:33’. டி.ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள இப்படத்தை நம்பிக்கை சந்துரு இயக்கி உள்ளார். இதில் சுருதி, ரமா, ரேஷ்மா, மைம் கோபி, சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நகைச்சுவை கலந்த பேய் படமாக உருவாகியுள்ள இதில் பாடல்கள் இல்லையாம். சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஹர்ஷ்வர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார்.

சாண்டி
படத்தை பற்றி இயக்குனர் நம்பிக்கை சந்துரு கூறியதாவது: வழக்கமான பேய் படங்களை விட முற்றிலும் மாறுபட்டு திக்... திக்... என திகில் கலந்த படம் இது. திக் திக் என காட்சிக்கு காட்சி திகில் அதிகரித்துக்கொண்டே போகும். படத்துக்காக மாங்காடு அருகே ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து, அதை பேய் பங்களாவாக மாற்றினோம். பெரும்பகுதி காட்சிகள் அந்த பங்களாவுக்குள்ளேயே படமாக்கப்பட்டன. படத்தை இயக்கியிருப்பதுடன், டாக்டர் வேடத்தில் நடித்தும் இருக்கிறேன்” என்கிறார்.
சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறுவதாக, அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்றைய தினம் ரஜினியின் ‘அண்ணாத்த’ படமும் ரிலீசாக உள்ளது. இதனால் இந்த இரண்டு படங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மாநாடு படம் தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறுவதாக, அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரையுலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்... நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்குக் காத்திருக்கிறேன். ‘மாநாடு’ முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்துவிட அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது.
யாரோடும் போட்டி என்பதல்ல... ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைப் பார்ப்பது வழக்கம், அதைக் கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக வர முடிவெடுத்தோம்.
போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. அப்படி பார்ப்பது வியாபார புத்திசாலித்தனமுமல்ல. நமது மாநாடு படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது. அதன்மீது மிகப்பெரிய நம்பிக்கையும் உள்ளது. வந்து பார்ப்போம் என இறங்கிவிடலாம்தான். ஆனால் என்னை நம்பி படம் வியாபார ஓப்பந்தம் செய்துகொண்டவர்கள் பாதிக்கப்படக்கூடாது.

சுரேஷ் காமாட்சி வெளியிட்ட அறிக்கை
அதேபோல் வினியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டிற்காக பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும். நட்டமடையக்கூடாது. சில காரணங்களுக்காக ஏன் என் படமும், அதன் வெற்றியும் பலியாக வேண்டும்? ஆதலால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாக உள்ளது.
நவம்பர் 25-ந் தேதி படம் வெளியாகும். மாநாடு தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியேறுகிறது. வெளியாகும் படங்கள் வெற்றி பெற வாழ்த்துகள். பொறுமையாக எங்கள் முடிவை ஏற்கப்போகும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, அவ்வப்போது ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.
தனுஷ் - செல்வராகவன் கூட்டணிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர்கள் கூட்டணியில் வெளியான ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்த இவர்கள், தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்துக்கு ‘நானே வருவேன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

யோகிபாபு, நானே வருவேன் படத்தின் போஸ்டர்
இந்நிலையில், ‘நானே வருவேன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே தனுஷுடன் கர்ணன் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ள யோகிபாபு, செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.






