என் மலர்
நீங்கள் தேடியது "MGR Magan"
பொன்ராம் இயக்கத்தில் சத்யராஜ், சசிகுமார், சமுத்திரகனி, மிர்ணாளினி ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் எம்.ஜி.ஆர்.மகன் படத்தின் விமர்சனம்.
கிராமத்தில் வைத்தியராக இருக்கிறார் சத்யராஜ். இவர் மருத்துவத்திற்கு பயன்படும் மூலிகை நிறைந்த ஒரு மலையை பழ.கருப்பையா என்பவர் விலைக்கு வாங்குகிறார். இதனால் சத்யராஜூக்கும், பழ கருப்பையாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இவர்களுடைய பிரச்சனை நீதிமன்றம் வரை செல்கிறது.
இந்த வழக்கில் வெற்றி பெறுவதற்காக சத்யராஜ் தனது மகன் சசிகுமாரை வக்கீலுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அவரோ 12ஆம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைகிரார். இதனால் ஆத்திரம் அடைந்த சத்யராஜ் தன் மகன் சசிகுமாரை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்.

அதன்பின் இருவருக்கும் இடையே சில சில தகராறுகளும், பிரச்சினைகளும் ஏற்படுகிறது. கடைசியில் அந்த மூலிகை மலையை சத்யராஜ் கைப்பற்றினாரா? தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார், தன்னுடைய வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மிர்ணாளினி ரவி கொடுத்த வேலையை செய்திருக்கிறார். சத்யராஜ் காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறார். சசிகுமாரின் மாமாவாக வரும் சமுத்திரகனி காமெடியில் அசத்தி இருக்கிறார். குறிப்பாக இவருக்கு பெண் பார்க்க செல்லும் காட்சி ரசிக்க வைக்கிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம், தன் படங்கள் பாணியிலேயே இப்படத்தையும் இயக்கி இருக்கிறார். வழக்கம்போல் தந்தைக்கும் மகனுக்கு இடையே நடக்கும் பிரச்சனை, வாக்குவாதம், கடைசியில் தந்தைக்காக மகன் போராடுவது என்று பல படங்களில் பார்த்த கதையை கொஞ்சம் கூட மாற்றாமல் இயக்கியிருக்கிறார். தந்தை - மகன் பாச கதையாக இருந்தாலும் திரைக்கதையில் வித்தியாசம் காண்பித்து இருக்கலாம்.
அந்தோனி தாசன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ பழமையானவன்.






