என் மலர்
சினிமா செய்திகள்
பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி ரிலீசாக உள்ளது.
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

ராதே ஷ்யாம் படத்தின் போஸ்டர்
இந்நிலையில், ‘ராதே ஷ்யாம்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 23-ந் தேதி நடிகர் பிரபாஸின் பிறந்தநாளன்று காலை 11.16 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இப்படத்தில் பிரபாஸ் நடித்துள்ள விக்ரமாதித்யா என்கிற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் விதமாக இந்த டீசர் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி ரிலீசாக உள்ளது.
நமீதா மாரிமுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின், தற்போது முதன்முறையாக தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 3-ந் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் நமீதா மாரிமுத்து என்கிற திருநங்கையும் ஒருவர். தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்துகொண்டது இதுவே முதன்முறை.
இந்நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து, தான் கடந்து வந்த கஷ்டங்கள் குறித்து பேசியது காண்போரை கண்கலங்க வைத்தது. இதன்மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நமீதா, அந்நிகழ்ச்சியில் இறுதி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மருத்துவ காரணங்களுக்காக ஒரே வாரத்தில் வெளியேறினார்.

நமீதா மாரிமுத்து
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின், தற்போது முதன்முறையாக தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில், அவர் ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு வழங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நமீதா மாரிமுத்துவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்ததாக வெற்றிமாறன், பாலா ஆகியோர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது ‘ஜெய் பீம்’ திரைப்படம் உருவாகி உள்ளது. ஞானவேல் இயக்கியுள்ள இப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.
இதையடுத்து தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. இதுதவிர பாலா இயக்க உள்ள புதிய படத்திலும் கெஸ்ட் ரோலில் நடிப்பதோடு, அப்படத்தை தயாரிக்கவும் உள்ளார்.

சூர்யா, ஜிவி பிரகாஷ்
சூர்யாவின் நடிப்பில் உருவாக உள்ள இந்த இரண்டு படங்களுக்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சூர்யா - ஜிவி பிரகாஷ் கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது அவர்கள் இருவரும் அடுத்தடுத்து 2 படங்களில் இணைந்து பணியாற்ற உள்ளதால், ரசிகர்களிடையே அப்படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் அருண் விஜய், அக்னிச்சிறகுகள், பார்டர், வா டீல், பாக்ஸர், சினம், யானை, ஓ மை டாக் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகர் விஜயகுமாரின் மகனான அருண்குமார், 1995-ல் வெளியான ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், முன்னணி நாயகனாக உயர முடியாமல் போராடி வந்தார். இதையடுத்து அவர் தனது பெயரை அருண் விஜய் என்று மாற்றிக் கொண்டார்.
அதன்பிறகு அவருக்கு நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் அமையத் தொடங்கின. குறிப்பாக, கவுதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த பின், அவர் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீச ஆரம்பித்தது. தொடர்ந்து அவர் நடித்த ‘தடம்’, ‘குற்றம் 23’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘மாஃபியா’ ஆகிய படங்களின் வெற்றி, அருண் விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தன.

சுசீந்திரன்
தற்போது அக்னிச்சிறகுகள், பார்டர், வா டீல், பாக்ஸர், சினம், யானை, ஓ மை டாக் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள அருண்விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பிரபல இயக்குனர் சுசீந்திரன் உடன் அவர் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் சுசீந்திரன், வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு, ஜீவா என பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக அழகர்சாமியின் குதிரை படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழில் கடந்த 2017-ல் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘திருட்டுப்பயலே 2’ படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுசி கணேசன். இவர் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘பைவ் ஸ்டார்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து விரும்புகிறேன், திருட்டுப்பயலே, கந்தசாமி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘திருட்டுப்பயலே 2’. கடந்த 2017-ல் வெளியாகி வரவேற்பை பெற்ற இப்படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், திருட்டுப்பயலே 2 படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகி உள்ளது. இந்த படத்தையும் சுசிகணேசனே இயக்கி உள்ளார். இதன் இந்தி பதிப்புக்கு ‘தில் ஹே கிரே’ என்று பெயரிட்டுள்ளனர்.

சுசி கணேசன்
இதில் பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வினித்குமார் சிங் நடிக்கிறார். அமலாபால் வேடத்தில் ஊர்வசி ரவ்துலா நடிக்கிறார். மேலும் பிரசன்னா நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் அக்சய் ஓப்ராய் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் மூலம் நடிகை சீதா பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிறையில் இருந்து விடுதலை ஆனதும் ஏழைகளின் நலனுக்காகவும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவேன் என ஆர்யன் கான் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், சொகுசு கப்பலில் நடந்த போதை விருந்தில் கலந்துகொண்டதன் காரணமாக கடந்த மாதம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும், தொண்டு நிறுவனத்தினரும் கவுன்சிலிங் அளித்ததாக கூறப்படுகிறது.
அவர்களிடம் ‘சிறையிலிருந்து விடுதலையான பிறகு, நீங்கள் பெருமைப்படும் படியான நல்ல பணிகளை செய்வேன்’ என்று ஆர்யன் கான் உறுதி அளித்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன் கான்
மேலும் ஏழைகளின் நலனுக்காகவும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவேன் என்றும் தீய வழிகளில் இனி செல்ல மாட்டேன் எனவும் கவுன்சிலிங்கின் போது ஆர்யன் கான் தெரிவித்தாராம். ஆர்யன் கானுக்கு ஏற்கனவே ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அவரது ஜாமீன் மனு மீது விசாரணை நடக்க உள்ளது.
ஆர்யா நடிப்பில் ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியான ‘அரண்மனை 3’ திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அரண்மனை 3’. ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். சி.சத்யா இசையமைத்துள்ள இப்படத்திற்கு செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார். அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

அரண்மனை படத்தின் முதல் பாகத்தையும் உதயநிதி தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டிருந்தார். இப்படத்தின் வெற்றியை போல், 3வது பாகமும் வெற்றி பெற்றுள்ளதால் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கோவிலில் சாமி தரிசனம் செய்து இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். மேலும் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்து வாக்குல இரண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் மஹாராஷ்டிராவில் உள்ள ஸ்ரீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர். அதோடு, மும்பையிலுள்ள சித்தி விநாயகர், மஹாலட்சுமி கோவில், மும்பதேவி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டுள்ளனர்.

இந்தப் புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகர் அஜித், இந்தியாவையும், பாகிஸ்தானையும் இணைக்கும் வாகா எல்லைக்கு பயணம் செய்து இருக்கிறார்.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.
பொங்கல் தினத்தையொட்டு அடுத்த ஆண்டு ‘வலிமை’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததால் அஜித் சமீபத்தில் டெல்லி உள்ளிட வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் வாகா எல்லைக்கு பைக்கில் பயணம் செய்து இருக்கிறார். எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் அஜித் உற்சாகமுடன் உரையாடி அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். மேலும் தேசிய கொடியுடன் வாகா எல்லையில் அஜித் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ருத்ரன் படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் ராகவா லாரன்ஸ், பிரபல பாடலை ரீமிக்ஸ் செய்து நடித்துள்ளார்.
பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன் தயாரித்து இயக்கும் படம் “ருத்ரன்”. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பலரின் கவனத்தை ஈர்த்த இப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டும் வகையில் வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர்.

ருத்ரன் படக்குழுவினர்
ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குனராக ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார். “ருத்ரன்” படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் சிபிராஜ், நிகிலா விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ரங்கா படத்தின் முன்னோட்டம்.
பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கும் படம் `ரங்கா'. சிபிராஜ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு ராம் ஜீவன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு அர்வி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
படம் குறித்து தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா கூறியதாவது: “சிபிராஜ் - நிகிலா விமல் நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்துள்ளது. இயக்குனர் வினோத்தின் யோசனைப்படி, படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி உள்ளனர். முக்கியமான காட்சிகளை, காஷ்மீரில் யாரும் கண்டிராத இடங்களில் படமாக்கி இருப்பதாகவும், உடல் ரீதியாகவும் மிக சிரமப்பட்டோம்.

நிகிலா விமல், சிபிராஜ்
அவலாஞ்சி எனப்படும் பனி புயல் எங்களை மிரட்டியது, துரத்தியது. சற்றும் சளைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு இடையே படப்பிடிப்பை முடித்ததாக கூறினார். காதல் காட்சிகள் மிக சிறப்பாக வந்து உள்ளன. சண்டை இயக்குனர் திலீப் சுப்புராயன் மற்றும் அவருடைய குழுவினர் அந்த பனி பிரதேசத்தையே தங்கள் சண்டை காட்சி அமைப்புகளால் தீப்பிழம்பு ஆக்கினார்கள் என்றால் மிகை ஆகாது” என்றார்.
பிக்பாஸ் பிரபலம் ஒருவர், பட்டியலின சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் யுவிகா சவுத்ரி. இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தினமும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் கடந்த மே மாதம் பட்டியலின சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து, இவர் வெளியிட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பியது. நடிகை யுவிகா சவுதிரி மீது போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

யுவிகா சவுத்ரி
இந்நிலையில், இந்த வழக்கில் நடிகை யுவிகா சவுத்ரியை அரியானா போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டதை அடுத்து ஜாமீன் கோரி அவர், அரியானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகை யுவிகா சவுத்ரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நடிகை யுவிகா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.






