என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் நரேன், சூர்யாவுக்கு குரல் கொடுத்தது பெருமிதம் என்று கூறியிருக்கிறார்.
    சூர்யா நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 'ஜெய்பீம்'. இந்தப் படம் தமிழ் மொழியில் பெற்ற அதே வரவேறப்பை மலையாளத்திலும் பெற்றுள்ளது. மலையாளத்தில் சூர்யாவுக்கு டப்பிங் குரல் கொடுத்திருப்பவர் நடிகர் நரேன். அந்த அனுபவத்தை பற்றி கூறும்போது, 'மிகப் பெரிய ஸ்டாரான சூர்யா சாருக்கு குரல் கொடுப்பதில் பெருமிதமடைகிறேன். பெரும் வெற்றி பெற்ற 'சூரரைப்போற்று' படத்துக்கும் நான் தான் டப்பிங் பேசினேன்.

    நரேன்

    'ஜெய்பீம்' படத்துக்கும் டப்பிங் பேச அழைத்தபோது ஒப்புக்கொண்டேன். ஆனால் நான் நினைத்த மாதிரி இல்லாமல் மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது. சூர்யா சாரின் நடிப்பு, வசன உச்சரிப்பு மிக நுட்பமாக இருந்ததால் பிரேம் பை பிரேம் கவனித்து பேசியது புது அனுபவமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அதுமட்டுமல்ல, இந்த அனுபவம் சினிமாவை மேலும் கற்றுக்கொள்ள உதவியாக இருந்தது. மலையாளத்தில் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வாய்ப்பு அளித்த சிபு பற்றும் ஜாலி ஆகியோருக்கு நன்றி’ என்றார்.
    சமீபத்தில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், சூர்யாவின் வீட்டுக்கு தூப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. பா.ம.க. சார்பில் அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இதனால் நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். இதன்பேரில் தியாகராயநகர் ஆற்காடு சாலையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு நேற்று இரவில் இருந்து துப்பாக்கி ஏந்திய 5 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    சூர்யா
    சூர்யாவின் வீடு

    சூர்யாவுக்கு தனிப்பட்ட முறையில் துப்பாக்கியுடன் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். அவர் வெளியில் செல்லும் போது அந்த போலீசார் உடன் செல்வார்கள் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    நடிகர் புனித் ராஜ்குமார் நடத்திய மைசூரு சக்திதாமா இல்ல குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
    பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு புகழஞ்சலி கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நடிகர் புனித் ராஜ்குமாரின் இறப்பு செய்தியை என்னால் ஏற்கவே முடியவில்லை. அவர் மிக திறமையான நடிகர். புனித் ராஜ்குமார் இறந்த பிறகு 2 நாட்கள் எனக்கு தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன். எனக்கு சொந்த வீடு இல்லை. வீடு வாங்க வேண்டும் என்று சிறிது பணத்தை சேமித்து வைத்துள்ளேன். வீடு பின்பு கூட வாங்கிக்கொள்ள முடியும். புனித் ராஜ்குமார் நடத்திய சக்திதாமா அனாதை இல்ல குழந்தைகளின் கல்வி செலவை நான் ஏற்கிறேன்.

    விஷால்
    விஷால்

    இதற்கு அவரது குடும்பத்தினர் அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்கிறேன். புனித் விட்டு சென்ற நல்ல பணிகளை நாம் தொடர வேண்டும். அதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். அனைவருக்கும் இதயம் உள்ளது. ஆனால் நல்ல பணிகளை ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருப்பது இல்லை. அவர் சமூக சேவைகளை வெளியில் தெரியாமல் செய்துள்ளார். நான் விளம்பரத்திற்காக இந்த கல்வி செலவை ஏற்பதாக கூறவில்லை. உள்ளபடியே அவரது இந்த நல்ல சேவையை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை செய்கிறேன்.

    இவ்வாறு விஷால் பேசினார்.
    கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து, விக்ரம் நடிக்க இருக்கும் புதிய படத்தின் இயக்குனர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
    கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்துள்ள விக்ரம் அடுத்தபடியாக பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கிய பா.ரஞ்சித் தற்போது நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர குதிரைவால், ரைட்டர் போன்ற படங்களையும் தயாரித்து வருகிறார்.

    விக்ரம்
    விக்ரம் - பா ரஞ்சித்

    இந்த நிலையில் நட்சத்திரம் நகர்கிறது படப்பிடிப்பு முடிந்ததும் விக்ரம் நடிக்கும் 61வது படத்தை பா.ரஞ்சித் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
    புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜவம்சம் படத்தின் முன்னோட்டம்.
    நடிகர் சசிகுமாரின் அடுத்த படம் ராஜவம்சம். இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். 

    மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக தயாராகிறது. இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டி.டிராஜா தயாரித்துள்ளார். நவம்பர் 26 ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
    சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெய் பீம் படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் இயக்குனர் அமீர் படக்குழுவினருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அது தொடர்பான அறிக்கையை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக 'ஜெய் பீம்' படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரி வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் மூலம் நேற்று சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    அமீர்
    அமீர்

    இந்நிலையில் இயக்குனர் அமீர், ஜெய் பீம் படக்குழுவினருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சமூகநீதியை நிலைநாட்ட வற்பறுத்தும் திரைப்படைப்புகளையும், அதை மிகுந்த சிரமத்துடன் உருவாக்கும் படைப்பாளிகளையும் காக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல ஒரு நல்ல சமூகத்தின் கடமையும் கூட. அந்த வகையில் “ஜெய்பீம்” படக்குழுவினருடன் எப்போதும் நான்…

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    'ஜெய் பீம்' பட விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அது தொடர்பான அறிக்கையை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக 'ஜெய் பீம்' படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரி வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் மூலம் நேற்று சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    சகோதரர் அன்புமணிக்கு வணக்கம்,

    இன்று பேசப்படும் ஏற்றத்தாழ்வு, சமூக நீதி போன்றவற்றை யாரும் பேசத் துணியாத காலகட்டத்தில் ஒரு களப் போராளியாக, படைப்பாளியாக நின்று திரைப்பதிவாக்கம் செய்த உரிமையில் உங்களுக்கு உங்கள் பாரதிராஜா எழுதுகிறேன். திரைத்துறை என்பது எல்லாவற்றையும் பேசக்கூடியது. கல்வி, காதல், மோகம், சரி, தவறு, சமூக சீர்திருத்தம் இப்படி மனித வர்க்கம் சந்திக்கும் எல்லா நிகழ்வுகளையும் படம்பிடித்து மக்களிடமே முன் வைக்கும் ஒரு இயங்குதளம்.

    பெரும்பாலும் சினிமா என்ற இயங்குதளம் மக்களை நல்வழிப்படுத்தவே முயற்சிக்கும். அதனால்தான் கதாநாயகன் நல்லவனாக சித்தரிக்கப்படுகிறான். பல சமூக, அரசியல் மாற்றங்களின் பங்களிப்பாக சினிமா இருந்திருக்கிறது.

    பல வாழ்க்கைப் படைப்புகள் நம் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அது மக்கள் முன்னிலையில் வைக்கப்படும்போது உண்மை எது? தவறு எது? எனத் தெரிந்தே அவர்கள் அதை வரவேற்றோ, புறந்தள்ளியோ வருகின்றனர்.

    அப்படி ஒரு படைப்பாக வரவேற்கப்பட்டதே 'ஜெய்பீம்'. அன்பு பிள்ளைகள் சூர்யா-ஜோதிகாவால் தயாரிக்கப்பட்டு தம்பி ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த படம்.

    கடந்த கால சம்பவங்களைப் படமாக்கும் போது.. அதை படமாகப் பார்த்துவிட்டு சமூக மாற்றத்திற்கு அது எவ்வகையில் பயனாகும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். அதில் பூதக்கண்ணாடியை அணிந்துகொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காக பேசாமல் முடங்கிவிடும்.

    இன்றைய எளியோர்களின் சமத்துவ அதிகாரத்திற்காக அன்றே பேசியது நாங்கள்தான். அன்று என் படம் 'வேதம் புதிது' முடக்க முயற்சித்தபோது புரட்சித்தலைவர் உடன் நின்றார். அந்த படைப்பு எத்தகைய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தியது? அது போன்றதொரு படைப்புதான் 'ஜெய் பீம்' படமும். இதை படைப்பாக மட்டுமே பார்க்க முயன்றால் நீங்களும், உங்கள் தந்தையும் போராடும் அதே எளியவர்களுக்கான போராட்டம்தான் இது.

    தம்பி சூர்யாவைப் பொருத்தவரையில் யாரையும் காயப்படுத்தும் தன்மை கொண்டவரல்ல. கல்வி, எளியவர்களுக்கான உதவி என நகர்ந்துகொண்டிருப்பவர். ஒரு இயக்குநரின் சேகரிப்பிற்கு தன்னையும் தன் நிழலையும் தந்து உதவியுள்ளவர். அவருக்கு எல்லோரும் சமம். யாரையும் ஏற்ற இறக்கத்தோடு கண்காணிப்பவரல்ல. தன்னால் எங்கேனும் ஒரு மாற்றம் நிகழுமா? எனப் பார்ப்பவர்.

    சூர்யா

    அவரை ஒரு சமூகத்திற்கு எதிரானவராக சித்தரிப்பதும் அவர் மீதான வன்மத்தையும் வன்முறையை ஏவிவிடுவதும் மிகத்தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். ஒரு படைப்பின் சுதந்திரத்தை அதன்படியே விட்டுவிடுவது இன்னும் அதிகமான நல்ல படைப்புகளைக் கொண்டுவர உதவும்.

    சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் இருக்கின்றன. சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளது. தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே.

    நடுவண் அரசு, மாநில அரசு, சார்ந்திருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனைகள் போன்ற எத்தனையோ இடங்களில் உங்களின் குரல் ஒலிக்கட்டும். எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள். யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை.

    இப்படியே போனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. வம்படியாக திணித்தோ, திரித்தோ அப்படத்தில் எந்த கருத்துருவாக்கமும் செய்யவில்லை.

    நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது. திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்களை எப்போதும் செவிகொடுத்து கேட்கும் மனநிலையில் உள்ள மனிதனுடன் ஏன் தேவையற்ற வார்த்தைப் போர்? ஒரு அலைபேசியில் முடிந்திருக்க வேண்டியதும் சிறு தவறுகளைச் சுட்டிக் காட்டித் தீர்க்க வேண்டியதுமான இப்பிரச்சனையை எதிர்காற்றில் பற்றியெரியும் நெருப்புத் துகளாக்கியது ஏன் எனப் புரியவில்லை.

    எதுவாக இருந்தாலும், எங்களோடு பேசுங்கள். சரியென்றால் சரிசெய்துகொள்ளும் நண்பர்கள் நாங்கள். எப்போதும் நட்போடு பயணப்படுவோம். நன்றி!

    எப்போதும் உங்கள் நட்புறவையே விரும்பும் பாரதிராஜா.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்த நடிகர் சோனு சூட், தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
    தமிழில் சந்திரமுகி, அருந்ததி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சோனு சூட். இந்தியில் பிரபல வில்லன் நடிகராக இருக்கிறார். சோனுசூட் கொரோனா ஊரடங்கில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பஸ், ரெயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். வெளிநாட்டில் தவித்த மாணவ, மாணவிகளை விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வந்தார். கொரோனாவால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்தார்.

    அவரது இதுபோன்ற சேவைகளை பாராட்டும் விதமாக தெலுங்கானாவில் சோனுசூட்டுக்கு கோவில் கட்டினர். இந்த நிலையில் தனது சகோதரி மாளவிகா அரசியலில் ஈடுபட இருப்பதாக சோனுசூட் அறிவித்து உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘எனது சகோதரி மாளவிகா மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் சேர்வதற்கு ஆர்வமாக இருக்கிறார். பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் மோகா தொகுதியில் அவர் போட்டியிடுவார்” என்றார். 

    சோனு சூட்

    இதுபோல் சோனுசூட்டும் அரசியலில் ஈடுபட இருக்கிறார். பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமான நடிகர் கணேஷ் வெங்கட்ராம், தற்போது இணையத்தொடர்களில் நடித்து இருக்கிறார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமான நடிகர் கணேஷ் வெங்கட்ராம், எப்போதுமே மாடர்ன் கதபாத்திரங்களில் நடித்து வந்தார். ஆனாலும் பெரிய அங்கீகாரம் கிடைக்காமலிருந்தது. இப்போது முழுக்க, முழுக்க கிராமத்துப் பாணியிலான கதைகளைத் தேர்வு செய்து நடிக்க இருக்கிறார். 

    இரண்டு இணையத் தொடர்களில் கிராமத்துக் கதை அமைப்பில் நடிக்கிறார். இது பற்றிக் கூறும்போது, கிராமம் தான் தமிழ்நாட்டின் ஆத்மா என்பது புரிந்தது. அதனால் கிராமத்து லுக்கிற்கு மாற முடிவு செய்து தாடி வளர்த்தேன். முழுக்க என்னைக் கிராமத்தானாக மாற்றிக்கொண்டு, இரண்டு இணையத்தொடர்களில் நடிக்கிறேன்.

    கணேஷ்

    இந்தத் தொடர்கள் பிற இயக்குநர்களை என்னை வித்தியாசமான கதாபாத்திரங்களில் யோசித்துப் பார்க்க பேருதவியாக இருக்கும். பொதுவாகவே நடிகர்கள் தன்னை புதிது புதிதாக மாற்றிக்கொள்வது மிக முக்கியம். ஒரு கலைஞனுக்கு இந்த மாற்றம் அவசியம் என்றார்.
    தமிழில் பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்து வரும் யுவன் ஷங்கர் ராஜா, தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் படத்தில் ஒரு பாடலை பாடி இருக்கிறார்.
    யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் திரைப்படத்திலிருந்து இதயத்தை தொடும் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். அதே பொருள் தரும் வரிகள், ஆனால் முற்றிலும் வித்தியாசமான இசையில் உருவாகியுள்ள இதன் இந்தி பதிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

    பிரபாஸ்

    சமீபத்தில் நடிகர் பிரபாஸின் பிறந்த நாளில் ராதே ஷியாமின் டீசர் வெளியிடப்பட்டது. ஜனவரி 14, 2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரமாண்டமான முறையில் திரையரங்குகளில் வெளியாகிறது ராதே ஷியாம். பன்மொழிப் படமான ராதே ஷியாமை ராதா கிருஷ்ணகுமார் இயக்க யூவி கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்காக வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர். 
    பிரபல நடிகை ஒருவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜீவா நடிக்கும் புதிய படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
    தமிழில் அஜித் ஜோடியாக உன்னைத்தேடி படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் மாளவிகா. கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு, வாழ மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் ஆகிய பாடல்களில் மாளவிகாவின் நடனம் பேசப்பட்டது.

    திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்த மாளவிகா கர்ப்பமானதும் சினிமாவை விட்டு விலகினார். தற்போது 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஜீவா, சிவா நடிக்கும் கோல்மால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

    மாளவிகா
    மாளவிகா

    மீண்டும் நடிப்பது குறித்து மாளவிகா கூறும்போது, ‘‘நான் கடைசியாக விஜய்யின் குருவி படத்தில் நடித்தேன். முதல் குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் தாயானேன். அதனால் குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தினேன். மீண்டும் நடிப்பதாக இருந்தால் நல்ல கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அப்போதுதான் கோல்மால் பட வாய்ப்பு கிடைத்தது. இதில் ஜீவாவின் பாஸாக நடிக்கிறேன். நல்ல கதாபாத்திரம். 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
    பிரபல காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், பள்ளிகளில் நடக்கும் பாலியல் தொல்லை குறித்து ஆவேசமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    கோவையில் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தி வருகிறார்கள்.

    பாலியல் தொல்லை சம்பவங்களை பிரபல குணசித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதற்கு முன்பு சென்னையில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை. மற்றுமொரு தனியார் பள்ளியில் சின்னஞ்சிறு மழலைகளை ஒரு ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் வீடியோ. தற்போது கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் அந்த மாணவி தாள முடியாத மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை. என்ன நடக்கிறது பள்ளிகளில்? குழந்தைகள் படிப்பதா இல்லையா?

    எம்.எஸ்.பாஸ்கர்

    சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை விட செய்தே ஆக வேண்டிய கட்டாயம் தற்போகடுமையான தண்டனை வழங்கப்பட்டே ஆகவேண்டும்து ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட கயவர்களுக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராகக்கூடாது. அந்த வக்கிரபுத்தி கொண்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டே ஆகவேண்டும். அதுவும் விரைவாக. இதுவே என் வேண்டுகோள்” என்று கூறி உள்ளார்.
    ×