என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    ஹூண்டாய் நிறுவனத்தின் என் லைன் பெர்பார்மன்ஸ் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது சக்திவாய்ந்த என் லைன் ரக மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. என் லைன் மாடல்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் கார்களின் சக்திவாய்ந்த வேரியண்ட் ஆகும். 

    முன்னதாக பலமுறை என் லைன் மாடல் இந்திய சந்தையில் சோதனை செய்யப்படும் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில், ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடல் புது ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அதன்படி இந்த கார் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்ததாக கூறப்படுகிறது.

     ஹூண்டாய் ஐ20 என் லைன்

    பெரிய அலாய் வீல்கள், பின்புறம் டூயல் எக்சாஸ்ட் டிப்கள், வடிவம் மற்றும் தோற்றத்தில் ஐ20 என் லைன் சற்றே வித்தியாசமாக இருக்கிறது. இதன் முன்புறம் பெரிய கிரில், ரிவைஸ்டு பம்ப்பர், பெரிய ஏர் இன்டேக், முன்புற கிரிலில் என் லைன் பேட்ஜிங் கொண்டிருக்கிறது.

    புதிய ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது 120 பிஹெச்பி பவர், 172 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. என்ஜின் மற்றும் பவர்டிரெயின் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 
    ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் மாடல் குளோபல் கிராஷ் டெஸ்ட்டில் பெற்ற புள்ளி விவரங்கள் வெளியாகி இருக்கிறது.


    இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரெனால்ட் டிரைபர் மாடல் குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட்டில் பெற்ற புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ் மற்றும் இபிடி, சீட் பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

     ரெனால்ட் டிரைபர் கிராஷ் டெஸ்ட் புள்ளி விவரம்

    குளோபல் என்கேப் வெளியிட்டு இருக்கும் அறிக்கையின்படி ரெனால்ட் டிரைபர் கிராஷ் டெஸ்டில் பெரியவர்கள் அமர்ந்து இருக்கும் போது நடத்தப்பட்ட சோதனையில் 17-க்கு 11.62 புள்ளிகளை பெற்று இருக்கிறது. இதற்கு நான்கு நட்சத்திர குறியீடுகள் வழங்கப்பட்டு இருக்கிறது.  

    சிறுவர்கள் அமர்ந்து இருக்கும் போது நடத்தப்பட்ட சோதனையில் 49-க்கு 27 புள்ளிகளை பெற்றது. இதற்கு மூன்று நட்சத்திர குறியீடுகள் வழங்கப்பட்டன. 7 பேர் பயணிக்கக்கூடிய டிரைபர் மாடலில் கூடுதல் பொருட்களை ஏற்றி சோதனை செய்யும் திறன் கொண்டிருக்கவில்லை. 
    டொயோட்டா நிறுவனத்தின் ஹிலக்ஸ் மாடல் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் மாடல்கள் உருவாக்கப்பட்ட ஐஎம்வி 2 பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.


    டொயோட்டா நிறுவனத்தின் ஹிலக்ஸ் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதன் வெளியீடு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதுதவிர டொயோட்டா ஹிலக்ஸ் விலை கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.

     டொயோட்டா ஹிலக்ஸ்

    5.3 மீட்டர்கள் நீளமாக இருக்கும் டொயோட்டா ஹிலக்ஸ் ஐஎம்வி-2 பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. டொயோட்டாவின் பார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா மாடல்களும் இதே பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டவை ஆகும். ஹிலக்ஸ் மாடலில் 2.4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. 

    இது 150 பிஹெச்பி பவர் வழங்குகிறது. மேலும் இது ரியர்-வீல் டிரைவ் கொண்டிருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல்களில் 2.8 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 208 பிஹெச்பி பவர், 4-வீல் டிரைவ் கொண்டிருக்கும் என தெரிகிறது.
    மாருதி சுசுகி நிறுவனம் மே மாதத்தில் விற்பனை செய்த வாகன விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.


    மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் மே மாதத்தில் மட்டும் 46,555 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதில் 33,771 யூனிட்கள் உள்நாட்டிலும், 11,262 யூனிட்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு மே மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது  இது 151 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

     மாருதி சுசுகி கார்

    எனினும், ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது மே மாத விற்பனை சரிவடைந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் 1,59,691 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. பயணிகள் வாகனங்கள் பிரிவில் மாருதி சுசுகி மினி, காம்பேக்ட் மாடல்களில் ஆல்டோ, எஸ் பிரெஸ்ஸோ, வேகன் ஆர், செலரியோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிசையர் மாடல்களை விற்பனை செய்கிறது.

    இவை மட்டும் மே மாதத்தில் 25,103 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. யுடிலிட்டி வாகனங்கள் மற்றும் வேன்கள் பிரிவில் ஜிப்சி, எர்டிகா, எஸ் கிராஸ், எக்ஸ்எல்6, விட்டாரா பிரெஸ்ஸா, ஈகோ போன்ற மாடல்கள் 7451 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 
    யமஹா நிறுவனத்தின் இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலை திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது.


    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது FZ25 மற்றும் FZS25 மோட்டார்சைக்கிள்கள் விலையை திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது. புது விலை குறைப்பை தொடர்ந்து இரு மாடல்கள் விலை முறையே ரூ. 1,34,800 மற்றும் ரூ. 1,53,600 என மாறி இருக்கிறது. இவை முந்தைய விலையை விட ரூ. 18,800 மற்றும் ரூ. 19,300 வரை குறைவு ஆகும். 

     யமஹா மோட்டார்சைக்கிள்

    FZ25 சீரிஸ் உற்பத்தி செலவீனங்களை ஓரளவு குறைத்து இருப்பதாக யமஹா வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. செலவீனங்கள் குறைக்கப்பட்டதால், விலை குறைப்பு அறிவிக்கப்படுவதாக யமஹா தெரிவித்துள்ளது. 

    யமஹா FZ25 சீரிஸ் மாடல்களில் 249சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 20.5 பிஹெச்பி  பவர், 20.1 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 
    உலகில் கொரோனா தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பெரும் பணக்காரர்கள் அதை வாங்க கோடிகளை கொட்டிக்கொடுக்கின்றனர்.

    கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலகின் பல்வேறு நாடுகள் மீண்டு வரத்துவங்கி உள்ளன. இந்த நிலையில், ஆடம்பர வாகனங்கள் விற்பனை இதுவரை இல்லாத அளவு அதிகரித்து இருக்கிறது. லம்போர்கினி, பெராரி மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் என முன்னணி நிறுவனங்கள் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.

    கடந்த ஆண்டு வாகனங்கள் விற்பனை பெரும் சரிவை சந்தித்தது. உலகின் பெரும் பணக்காரர்களுக்கு இருந்த ஒரே கவலை, வெளியில் பழையபடி சுற்ற முடியாதது தான். இவர்கள் தங்களின் செலவீனங்களை ஒத்திவைத்தனர் என சந்தை ஆய்வு நிறுவனத்தின் பெலிப் முனோஸ் தெரிவித்தார். 

     லம்போர்கினி கார்

    2020 இறுதி காலாண்டில் ஆடம்பர கார்களின் விற்பனை அதிகரிக்க துவங்கியது. வோக்ஸ்வேகன் குழுமத்தின் லம்போர்கினி நிறுவனம் தனது வரலாற்றிலேயே முதல் முறையாக 2019 ஆண்டில் 7430 வாகனங்களை விற்பனை செய்தது. இத்தாலி நாட்டை சேர்ந்த லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் எஸ்யுவி மாடல் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

    இதே போன்று மற்ற முன்னணி நிறுவன மாடல்களும் இதுவரை இல்லாத அளவு முன்பதிவு செய்யப்படுகின்றன. உலகின் பல்வேறு நாடுகளில் ஆடம்பர வாகனங்கள் விற்பனை வெகுவாக அதிகரிக்க துவங்கி உள்ளது.
    ரெனால்ட் நிசான் சென்னை உற்பத்தி ஆலையில் மீண்டும் பணிகள் துவங்கப்பட இருக்கின்றன.


    ரெனால்ட் மற்றும் நிசான் உற்பத்தி ஆலை பணிகள் விரைவில் துவங்கப்பட இருக்கிறது. இம்முறை பணிகள் சுழற்சி அடிப்படையில் பணிகள் நடைபெற இருக்கிறது. சில தினங்களாக ஆலையில் பணியாற்றும் ஊழியர்கள் கொரோனா அச்சம் காரணமாக பணிக்கு திரும்ப மாட்டோம் என அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுதவிர கொரோனா கட்டுப்பாட்டு விதிகளான சமூக இடைவெளி ஆலையில் பின்பற்ற இயலாது என ஊழியர்கள் குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்து மெட்ராஸ் உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஆலையை சோதனை செய்ய உத்தரவிட்டு இருக்கிறது.   

     நிசான் கார்

    ரெனால்ட் நிசான் ஆட்டோமோடிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆலையில் சோதனை நடத்த மூத்த அதிகாரிகளை அங்கு அனுப்ப தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக ரெனால்ட் நிசான் தெரிவித்துள்ளது.

    மேலும் ஆலையில் பணிகளை மீண்டும் துவங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ரெனால்ட் நிசான் தெரிவித்துள்ளது. இம்முறை பணிகள் படிப்படியாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊழியர்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதாக அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய X7 டார்க் ஷேடோ எடிஷன் மாடல் இந்திய விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் X7 டார்க் ஷேடோ லிமிடெட் எடிஷன் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. புதிய டார்க் ஷேடோ லிமிடெட் எடிஷன் விலை ரூ. 2.02 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் சர்வதேச சந்தையிலேயே மொத்தம் 500 யூனிட்கள் தான் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

    லிமிடெட் எடிஷன் பிரீமியம் எஸ்யுவி மாடலை வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலமாகவே முன்பதிவு செய்யலாம். புதிய X7 டார்க் ஷேடோ எடிஷன் விலை X7 ஸ்டான்டர்டு மாடலை விட ரூ. 90 லட்சம் அதிகம் ஆகும். இந்த மாடல் அமெரிக்காவில் உள்ள ஸ்பார்டன்பர்க் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் இந்த மாடல் CBU முறையில் இங்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

     பிஎம்டபிள்யூ X7 டார்க் ஷேடோ எடிஷன்

    பிஎம்டபிள்யூ X7 டார்க் ஷேடோ M50d வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், லிமிடெட் எடிஷன் மாடலில் பல்வேறு காஸ்மெடிக் அப்கிரேடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

    பிஎம்டபிள்யூ எக்ஸ்7 டார்க் ஷேடோ எடிஷன் மாடலில் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் உள்ளது. இது 261 பிஹெச்பி பவர், 620 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன்  பெட்ரோல் என்ஜின் 335 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், பேடில் ஷிப்டர்கள் உள்ளன.

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.4 நொடிகளில் எட்டிவிடும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோமீட்டர்கள் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் அடாப்டிவ் 2 ஆக்சைல் ஏர் சஸ்பென்ஷன் உள்ளது. 
    மஹிந்திரா நிறுவன கார் மாடல்களில் இந்த வேரியண்ட்களை தான் அதிக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்கின்றனர் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.


    இந்தியாவில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பயன்பாட்டு வாகனங்களில் டீசல் என்ஜின் மாடல்களே அதிக பிரபலமாக இருந்து வந்தன. ஆனால் இந்த மோகம் சமீப காலங்களில் குறைய துவங்கி இருக்கிறது. பிஎஸ் 6 புகை விதிகள் அமலாகி இருப்பதை தொடர்ந்து பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் கொண்ட மாடல்களை பலர் வாங்க துவங்கியுள்ளனர்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வும் இந்த மாற்றத்திற்கு காரணமாக பார்க்கப்படுகின்றன. 2020-21 நிதியாண்டில் மஹிந்திரா நிறுவனம் 1,55,540 யூனிட்களை விற்பனை செய்தது. மொத்த விற்பனையில் 19,061 யூனிட்கள் பெட்ரோல் மாடல்கள் ஆகும். மீதமுள்ள 1,36,469 யூனிட்கள் டீசல் மாடல்கள் ஆகும். 

     மஹிந்திரா கார்

    அதாவது மஹிந்திரா நிறுவன வாகனங்கள் விற்பனையில் 12 சதவீதம் பெட்ரோல் மாடல்களாகவும், 88 சதவீதம் டீசல் மாடல்களாகவும் இருந்தது. 2021 நிதியாண்டில் முதல் முறையாக மஹிந்திராவின் பெட்ரோல் வாகனங்கள் விற்பனை 10 சதவீதத்தை கடந்துள்ளது. 

    கடந்த நிதியாண்டில் KUV100NXT பெட்ரோல் வேரியண்ட் விற்பனை குறைந்தது. ஆனாலும், 2021 நிதியாண்டில் XUV300 பெட்ரோல் வேரியண்ட் விற்பனை அதிகரித்து இருக்கிறது. சமீபத்தில் மஹிந்திரா அறிமுகம் செய்த தார் மாடலும் பெட்ரோல் வேரியண்ட் அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது.
    ஜாவா நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் தாய் நிறுவனமான கிளாசிக் லெஜண்ட்ஸ் இந்தியாவில் தனது பணிகளை முடுக்கிவிட திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் மாநிலங்களில் இவற்றை துரிதப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    கடுமையான நெருக்கடி காலக்கட்டத்திலும் கிளாசிக் லெஜண்ட்ஸ் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வந்தது. சிறப்பான பணியாட்கள் மூலம்தான் இது சாத்தியமானது. ஏற்கனவே வாகனத்தை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரியை சரியாக மேற்கொள்ள இது அடித்தளமாக அமைந்துள்ளது என கிளாசிக் லெஜண்ட்ஸ் தெரிவித்துள்ளது.

    ஊரடங்கில் தளர்வுகள் பெறும் மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஜாவா மோட்டார்சைக்கிள் விநியோகம் துரிதப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பிப்ரவரி 2021 வாக்கில் ஜாவா பார்டி டு ஸ்போர்ட்ஸ் ஸ்டிரைப் மாடல் புது கிராபிக்ஸ், சிறு காஸ்மெடிக் மாற்றங்கள், அலாய் வீல், டியூப்லெஸ் டையர்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. 

     ஜாவா மோட்டார்சைக்கிள்

    வாகனங்களில் மாற்றம் செய்ததால், வாகன விற்பனை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. பார்டி டூ மாடலுக்கான முன்பதிவு மற்றும் காத்திருப்பு காலம் அதிகரித்து இருக்கிறது. விரைவில் இந்த மாடலுக்கான விநியோகம் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    தற்போது நாடு முழுக்க சுமார் 175 ஜாவா விற்பனை மையங்கள் சுமார் 150-க்கும் அதிக நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கை 275 ஆகவும், அடுத்த 12 மாதங்களில் இது 500 ஆகவும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    லெக்சஸ் நிறுவனத்தின் எல்சி கன்வெர்டிபில் மாடல் 12 மணி நேரங்கள் உறைபனியில் நிறுத்தப்பட்டு, பின் இயக்க முயற்சி செய்யப்பட்டது.


    லெக்சஸ் எல்சி கன்வெர்டிபில் மாடல் நீல நிற வானம் மற்றும் சூரிய வெளிச்சத்தை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் லெக்சஸ் சோதனை ஒன்றை செய்து பார்க்க முடிவு செய்தது. 

    காரின் உறுதித்தன்மையை நிரூபிக்க லெக்சஸ் மிகவும் விசித்திர சோதனையை எல்சி கன்வெர்டிபில் மாடலில் மேற்கொண்டது. அதன்படி லெக்சஸ் எல்சி கன்வெர்டிபில் 12 மணி நேரம் உறைபனியில் நிறுத்தப்பட்டது. இதற்கென தொழில்துறை நிறுவனங்களில் உள்ள கருவிகள் பயன்படுத்தப்பட்டன. 

     லெக்சஸ் எல்சி கன்வெர்டிபில்

    லெக்சஸ் எல்சி கன்வெர்டிபில் மாடலில் உள்ள நான்கடுக்கு ரூப் திறக்கப்பட்ட நிலையில், உறைபனியில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக காரின் உள்புறம் முழுமையாக குளிரூட்டப்பட்டது. குளிர்ந்த நிலையில், காரின் ஹீட்டெட் சீட், ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவை இயங்கும் என லெக்சஸ் நிறுவன மூத்த பொறியாளர் தெரிவித்தார்.

    உறைபனியில் இருந்து எடுக்கப்பட்டதும், கார் இயக்கப்பட்டது. இதற்கான சோதனை பகுதி அதிக வளைவுகள், உயரமான பகுதி, தாழ்வான பகுதிகளை கொண்டிருந்தது. உறைபனியில் இருந்து எடுக்கப்பட்ட பின் காரை முதல் முறை ஸ்டார்ட் செய்ததுமே, என்ஜின் ஆன் ஆனது.
    கொரோனா அச்சம் காரணமாக ரெனால்ட் - நிசான் நிறுவன ஊழியர்கள் பணிக்கு வர மறுத்துள்ளனர்.


    ரெனால்ட் - நிசான் ஆலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் கொரோனா அச்சம் காரணமாக பணிக்கு வரமாட்டோம் என தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து நிறுவனத்திற்கு ஊழியர்கள் நலசங்க தலைவர் கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. 

     ரெனால்ட் கார் - கோப்புப்படம்

    கொரோனா அச்சம் காரணமாக மே 31 ஆம் தேதி பணிக்கு வருவது ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்காது என கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. முன்னதாக போர்டு மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்படும் ஆலை பணிகளை ஒரு வாரத்திற்கு நிறுத்துவதாக கடந்தவாரம் அறிவித்தன. 

    ஊழியர்கள் தரப்பு வாதம் குறித்து நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்னையை சுற்றி பணியாற்றி வரும் சுமார் நூற்றுக்கும் அதிகமான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    ×