தமிழ்நாடு செய்திகள்

அண்ணாமலையை முதலமைச்சர் அரியணையில் அமர்த்துவது எனது கடமை- சரத்குமார்

Published On 2025-03-01 07:56 IST   |   Update On 2025-03-01 07:56:00 IST
  • மத்திய அரசு கொடுத்த நிதியை தமிழக அரசு எதற்கெல்லாம் பயன்படுத்தியுள்ளது என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
  • 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. தயார்ப்படுத்தி கொண்டிருக்கிறது.

பெரம்பலூர்:

பெரம்பலூரில் நடந்த சமத்துவ விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு இன்னும் வரையறுக்கப்படவில்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. தி.மு.க. தலைமையிலான தமிழக அரசால் தமிழ் மொழி வளர்க்கப்படவில்லை. மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை. தார் ஊற்றி அழித்தாலும் நாட்டில் 70 கோடி மக்கள் பேசும் இந்தி மொழியை அழிக்க முடியாது. பழமையான தமிழ் மொழியையும் யாராலும் அழிக்க முடியாது. மத்திய அரசு எந்தவொரு சிறந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் எதிர்ப்பது என்று தி.மு.க. எடுத்துக்கொள்கிறது. அது போல் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் எதிர்க்கிறது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை மறைக்க பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துகிறது. அதனை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு கொடுத்த நிதியை தமிழக அரசு எதற்கெல்லாம் பயன்படுத்தியுள்ளது என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. தயார்ப்படுத்தி கொண்டிருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் மாநில தலைவரும், தேசிய தலைவர்களும் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவேன். பா.ஜ.க மாநில தலைவராக மீண்டும் அண்ணாமலை வரும்போது அவரை முதலமைச்சர் அரியணையில் அமர்த்துவது எனது கடமையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News