'ஓம் பிர்லாவின் பொய்கதையை அம்பலப்படுத்தியுள்ளார் கிரண் ரிஜிஜூ' - ஜோதிமணி
- இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவானதற்கு காரணம், முக்கிய தேசிய விவகாரங்களில் பேச எதிர்க்கட்சிகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் உரிமை மறுக்கப்பட்டதுதான்.
- காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண்கள், எம்.பி.க்கள். உறுதியானவர்கள், அச்சமற்றவர்கள், அமைதியானவர்கள்.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, "காங்கிரஸ் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களின் மிகத் தரக்குறைவான நடத்தையைக் கண்டு பெருமை கொள்கிறது!! நாங்கள் அனைத்து பாஜக எம்.பி.க்களையும் தடுத்து நிறுத்தி, பெண் எம்.பி.க்களை காங்கிரஸ் எம்.பி.க்களை எதிர்கொள்ள அனுமதிக்காமல் இருந்திருந்தால், நிலவரம் அங்கு மோசமான காட்சியாக மாறியிருக்கும். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் காப்பதில் எங்களுக்கு மிகுந்த அக்கறை உள்ளது." என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வீடியோவை மறுபகிர்வு செய்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,
"அன்பார்ந்த கிரண் ரிஜ்ஜுஜு அவர்களே வீடியோவை வெளியிட்டதற்கு நன்றி. அது நாடாளுமன்ற மரபுக்கு உட்பட்டதல்ல என்றாலும், அது எங்கள் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், பெண்கள் எம்.பி.க்களாகிய நாங்கள் பதாகைகளை பிடித்துக்கொண்டு, ஆளுங்கட்சியினருடன் அமைதியாக உரையாடியதை தெளிவாக காண முடிகிறது. இதற்குப் பயந்தே பிரதமர் நாடாளுமன்றம் வரவில்லை என்று நீங்கள் சொல்வது பிரதமரின் பயத்தையும், பலவீனத்தையுமே காட்டுகிறது.
நாங்கள் யாரையும் மிரட்டவில்லை. வன்முறையிலும் ஈடுபடவில்லை. "எதிர்பாராத சம்பவம் திட்டமிடப்பட்டது" என்ற பொய்யான குற்றச்சாட்டையும், பிரதமரை தாக்க முயன்றதாக பெண்கள் எம்.பி.க்கள் மீது பரப்பப்பட்ட அரசுக்கு ஆதரவான ஊடக கதைகளையும் இந்த வீடியோ முற்றிலும் பொய்யென நிரூபிக்கிறது. அந்த பொய் கதை இப்போது முழுமையாக உடைந்துவிட்டது.
இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவானதற்கு காரணம், முக்கிய தேசிய விவகாரங்களில் பேச எதிர்க்கட்சிகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் உரிமை மறுக்கப்பட்டதுதான். தேசிய பாதுகாப்பு குறைபாடுகள், எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமரின் மௌனம், இந்தியாவின் நலன்களுக்கு எதிரான இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் போன்ற முக்கிய விஷயங்களில் பேச அனுமதி வழங்கப்படவில்லை.
நாங்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.க்கள். உறுதியானவர்கள், அச்சமற்றவர்கள், அமைதியானவர்கள். எந்த மிரட்டலும், எந்த பொய்யான கதையும் எங்களை மௌனமாக்க முடியாது. மேலும், பாராளுமன்றத்தின் மரியாதை மற்றும் புனிதம் குறித்த தங்கள் தீடீர் அக்கறைக்கு நன்றி. உங்கள் அபாரமான நகைச்சுவை உணர்வைப் பாராட்டுகிறேன்!
எங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியதற்கு மீண்டும் மனப்பூர்வமான நன்றிகள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.