தமிழ்நாடு செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள் கைது - CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம்

Published On 2025-08-14 13:58 IST   |   Update On 2025-08-14 13:58:00 IST
  • தமிழ்நாடு அரசு உடனடியாக போராடும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும்.
  • கைது செய்யப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களை விடுதலை செய்ய வேண்டும்.

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், கைது செய்துள்ளவர்களை விடுதலை செய்யவும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் சிபிஐ(எம்) கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பணி நிரந்தரம், தனியார்மய எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிய தூய்மை பணியாளர்கள் மிகக் கடுமையாக தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு வெவ்வேறு மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இரவோடு இரவாக காவல்துறை நடத்திய இந்த 'அப்புறப்படுத்துதல்' முற்றிலும் சட்டத்திற்கும், நியாயத்திற்கும் புறம்பானது மட்டுமல்ல, மனித உரிமை மீறலுமாகும்.

ஒரு ஜனநாயக நாட்டில் தங்களுடைய கோரிக்கைகளுக்காக தொழிலாளர்கள் போராடுகிற போது காவல்துறை, நீதிமன்றம், நிர்வாகம் இவற்றின் அணுகுமுறையும் அரசின் அணுகுமுறையும் எளிய மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும்; சட்டத்திற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

ஆனால், இந்த பிரச்சனையில் மேற்கண்ட அனைத்து அரசு அமைப்புகளும் மூர்க்கத்தனமாகவே இதை கையாண்டுள்ளது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்தவர்களை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்துவதும், அதைக் கேள்வி கேட்க சென்றால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக சொல்லி நம்பர் பிளேட் இல்லாத காவல் வாகனத்தில் ஏற்றி சுற்றிக்கொண்டே அலைவதும் நாகரீக சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய நடவடிக்கைகள்.

தமிழ்நாடு அரசு உடனடியாக போராடும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். போராட்டத்திற்கு ஆதரவாக பேசியவர்களையும், ஆதரவு தெரிவிக்க வந்தவர்களையும் காவல்துறையினர் தாக்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. சம்பந்தப்பட்ட காவலர்கள் மீதும், தாக்குவதற்கு உத்தாவிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், உடனடியான மற்றும் நேரடி தலையீட்டின் மூலம் தூய்மை பணியாளர்களின் பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வு காண வேண்டும். அத்துமீறி நடந்து கொண்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக இன்று மாலை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News