தமிழ்நாடு செய்திகள்

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மாணவி படுகொலை: செல்வப்பெருந்தகை கண்டனம் | Thoothukudi

Published On 2026-03-12 13:05 IST   |   Update On 2026-03-12 13:05:00 IST
  • பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அதிகம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
  • குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை வழங்கவேண்டும்

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17வயது அரசு பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பாதுகாப்பாக இருக்க வேண்டிய சமூகத்தில் இவ்வாறான மனிதாபிமானமற்ற செயல்கள் நடைபெறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்த சம்பவம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அதிகம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் இத்தகைய குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அரசு தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் உடனடியாக வழங்க வேண்டும்.

மேலும், பெண்கள் மற்றும் மாணவிகள் பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்க அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய கொடூர சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதவாறு கடுமையான கண்காணிப்பும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதி செய்யப்பட வேண்டும்.

தூத்துக்குடி மாணவிக்கு நடந்த இந்த மனிதநேயமற்ற பாலியல் பலாத்காரச் சம்பவத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News