தமிழ்நாடு செய்திகள்

Manamadurai விசாரணை கைதி உயிரிழப்பு விவகாரம் - இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

Published On 2026-03-12 12:01 IST   |   Update On 2026-03-12 12:51:00 IST
  • ஆகாஷ் டெல்சன் வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • சிவங்கை எஸ்.பி. அலுவலக இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாள் மீது புகார் எழுந்தது.

சிவகங்கை:

மானாமதுரையை சேர்ந்த விசாரணை கைதி ஆகாஷ் டெல்சன் உயிரிழப்பு தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கைதி இறப்பதற்கு முன் மானாமதுரை நீதிபதி அப்சல் பாத்திமாவிடம் வாக்குமூலம் அளித்தார். இந்த அறிக்கை நேற்று கோர்ட்டில் தாக்கல் செய்யபட்டது.

அதில், சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஆகாஷ் டெல்சன் கடந்த 6-ந்தேதி சீருடையில் இல்லாத 10 பேர் என்னை அழைத்து சென்றனர். பின்னர் 4 போலீஸ்காரர்களிடம் என்னை ஒப்படைத்தனர். அவர்கள் எனது கால்களை கற்களுக்கு இடையில் வைத்து ஈரமான சாக்கை சுற்றி இரும்புக் கம்பியால் தாக்கினர்.

இதில் ரத்தம் வடிந்து எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர் பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது என்று கூற வேண்டும் என போலீசார் மிரட்டினர் என குறிப்பிடப்பட்டிருந்தார். மாஜிஸ்திரேட்டின் இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆகாஷ் டெல்சன் வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக சிவங்கை எஸ்.பி. அலுவலக இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாள் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், நிர்வாக நடவடிக்கையாக அவரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றியுள்ளதாக காவல் துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு பதிலாக மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளராக சாகுல் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News