தமிழ்நாடு செய்திகள்

Iran War | ஏற்றுமதி செய்ய முடியாமல் கோவில்பட்டி கடலை மிட்டாய் தேக்கம் - உற்பத்தியாளர்கள் கவலை

Published On 2026-03-12 11:05 IST   |   Update On 2026-03-12 11:05:00 IST
  • கோவில்பட்டி சுற்று வட்டார பகுதியில், 120 கடலை மிட்டாய் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.
  • ஏற்றுமதி தடைபட்டிருப்பதால் தொழிலாளர்கள் முற்றிலுமாக பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

கோவில்பட்டி:

கடலை மிட்டாய் என்றாலே அது கோவில்பட்டி தான். சந்தையில் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு என்று தனி மவுசு உண்டு. அதிலும் புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்ற பின்னர் வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என அனைத்து இடங் களிலும் கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை அதிகரித்துள்ளது. கோவில்பட்டி சுற்று வட்டார பகுதியில், 120 கடலை மிட்டாய் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 2020-ம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்ற பிறகு வெளிநாடுகளுக்கு அதிக அளவு நாள்தோறும் கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக 70 சதவீதம் வளைகுடா நாடுகளுக்கு தான் அதிகமாக ஏற்றுமதி செய்து வருகின்றனர். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஓமன், பஹ்ரைன் போன்ற நாடுகளுக்கு விமானம் மற்றும் கப்பல் மூலமாக கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான கோவில்பட்டி கடலை மிட்டாய் தேக்கமடைந்துள்ளன.

இது குறித்து கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் செயலாளர் கண்ணன் கூறியதாவது:-

வளைகுடா நாடுகளுக்குத்தான் அதிகளவில் கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்து வருகிறோம். வளைகுடா நாடுகளில் நடைபெறும் போர் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்வது தடை பெற்றிருக்கிறது. ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள் கொடுத்தவர்கள் அதனை தற்போது ரத்து செய்து வருகின்றனர். இதனால் கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தி முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெட்ரோலிய பொருட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதால், பிபி கவர், பிளாஸ்டிக் ஜார் உள்ளிட்டவற்றின் விலைகளும் உயர்ந்துள்ளது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். ஏற்கனவே கடலை பருப்பின் விலை ஏற்றம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வரும்போது ஏற்றுமதி முடக்கம் என்பது மேலும் எங்களது தொழிலை பாதிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவில்பட்டி கடலை மிட்டாய் மட்டுமின்றி கோவில்பட்டி பகுதியில் தயாரிக்கப்படும் பல்வேறு இனிப்பு மற்றும் கார வகைகளும் கோவில்பட்டி கடலை மிட்டாய் உடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏற்றுமதி தடைபட்டிருப்பதால் தொழிலாளர்கள் முற்றிலுமாக பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

Tags:    

Similar News