அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிரதமர் ஏன் வரவில்லை?- டி.ஆர்.பாலு கேள்வி
- பயங்கரவாதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தினேன்.
- மதவாதம் குறித்து பேசும் பா.ஜ.க. இந்த விவகாரத்தை மத ரீதியாக அணுகாமல் நியாயமான முறையில் அணுக வேண்டும்.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் பற்றி விளக்கம் அளிப்பதற்காக அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு இன்று அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற நூலக கட்டிடத்தில் உள்ள கமிட்டி அறையில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் இக்கூட்டம் நடந்தது.
இதில் உள்துறை மந்திரி அமித்ஷா, மற்றும் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர், ஜே.பி.நட்டா, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு தி.மு.க. எம்.பி., டி.ஆர்.பாலு கூறியதாவது:-
* பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு ஆதரிக்கிறது.
* பயங்கரவாதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தினேன்.
* நாட்டின் பாதுகாப்பு குறித்து பேசும் நிகழ்வில் பிரதமர் பங்கேற்கவில்லை.
* அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிரதமர் ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பினோம்.
* மதவாதம் குறித்து பேசும் பா.ஜ.க. இந்த விவகாரத்தை மத ரீதியாக அணுகாமல் நியாயமான முறையில் அணுக வேண்டும் என்று தெரிவித்தார்.