இந்தியா

கேரளாவில் அனுமதியின்றி கொடி, பதாகைகள்- பா.ஜ.கவிற்கு ரூ.19 லட்சம் அபராதம் விதித்த திருவனந்தபுரம் மாநகராட்சி

Published On 2026-01-24 17:26 IST   |   Update On 2026-01-24 17:26:00 IST
  • பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு இடங்களில் கொடி மற்றும் பதாகைகளை அமைத்திருந்தனர்.
  • பா.ஜ.க. நகர, மாவட்ட தலைவர்களுக்கு அபராத அறிவிப்பும் அனுப்பப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து, புதிய ரெயில் இயக்கத்தை தொடங்கி வைத்ததோடு, பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இதையொட்டி அவரை வரவேற்று பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு இடங்களில் கொடி மற்றும் பதாகைகளை அமைத்திருந்தனர். இது தற்போது பிரச்சினைக்குரியதாக மாறி உள்ளது.

கொடி மற்றும் பதாகைகள் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டன. இந்த நிலையில் தம்பானூர், கண்டோன்மென்ட் மற்றும் அருங்காட்சியக போலீசில் மாநகராட்சி இது தொடர்பாக புகாரும் அளித்துள்ளது. அதன்பேரில் கண்டடோன்மென்ட் போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

கேரளாவில் முதல்முறையாக உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாரதிய ஜனதா கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு அந்தக் கட்சியை சேர்ந்தவர் மேயராக உள்ள சூழலில், இந்த புகார் கொடுக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அனுமதியின்றி பொது இடங்களில் நெகிழ்வு பலகைகள், கொடிகள் மற்றும் பதாகைகளை வைத்ததற்காக, பா.ஜ.க. நகர மாவட்டக் குழுவிற்கு திருவனந்தபுரம் மாநகராட்சி ரூ.19.7 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

இது பற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாகைகளை 2 மணி நேரத்திற்குள் அகற்றுமாறு பாரதிய ஜனதா நிர்வாகிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டது. இருப்பினும், நடைபாதைகளின் குறுக்கே அமைக்கப்பட்ட பலகைகளை அகற்றுவதைத் தவிர, கட்சியிடமிருந்து குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் தான் தற்போது அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. பதாகைகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை பின்பற்றத் தவறியதால், பா.ஜ.க. நகர, மாவட்ட தலைவர்களுக்கு அபராத அறிவிப்பும் அனுப்பப்பட்டது என்றார்.

இதற்கிடையில் பதாகைகள் வைக்கப்பட்டது தொடர்பாக கேரள ஐகோர்ட்டும் அதிருப்தி தெரிவித்து இருந்தது. தெளிவான நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், மாநிலம் முழுவதும் பொது இடங்களில் அங்கீகரிக்கப்படாத பலகைகள் மற்றும் கொடிகள் தொடர்ந்து நிறுவப்படுவது குறித்து வேதனை தெரிவித்ததது.

இது தொடர்பாக மாநகராட்சி வக்கீல் கூறுகையில், புகார்கள் வந்தவுடன், பொறுப்பான நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது உட்பட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இருப்பினும், வெறும் வார்த்தைகள் மட்டும் போதாது. தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் பொது இடங்களை அபகரிக்கும் வளர்ந்து வரும் கலாச்சாரம் மாற வேண்டும் என்றும் ஐகோர்ட்டு குறிப்பிட்டது.

Tags:    

Similar News