வர்த்தக ஒப்பந்தங்கள் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது- பிரதமர் மோடி பேச்சு
- இது ஒரு வளர்ந்த இந்தியாவை நோக்கிய திசையை வழங்குவதற்கான ஒரு உறுதிமொழிப் பத்திரம் ஆகும்.
- உலகில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா.
புதுடெல்லி:
மத்திய அரசின் 18-வது ரோஜ்கர் மேளா திட்டத்தில் 61 ஆயிரம் இளைஞர்களுக்கு பிரதமர் மோடி இன்று பணி நியமன கடிதங்களை மின்னணு முறையில் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
புத்தாண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியின் புதியஅத்தியாயத்தைத் தொடங்குகிறது. இந்த நேரம் அரசியலமைப்பு சட்டத்தின் மீதான உங்கள் பொறுப்புகளுக்கு மேலும் நெருக்கமாக கொண்டு வருகிறது.
ஜனவரி 24-ந்தேதி அன்று நமது அரசியலமைப்புச் சட்டம் 'ஜன கன மன' தேசிய கீதமாகவும், 'வந்தே மாதரம்' தேசியப் பாடலாகவும் ஏற்றுக்கொண்டது. இந்த நியமனக் கடிதம், ஒரு வகையில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு அழைப்பு கடிதமாகும். இது ஒரு வளர்ந்த இந்தியாவை நோக்கிய திசையை வழங்குவதற்கான ஒரு உறுதிமொழிப் பத்திரம் ஆகும்.
கடந்த 5 முதல் 7 ஆண்டுகளில், நீங்கள் ஒரு அரசு அலுவலகம் மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ அரசுடன் தொடர்பு கொண்டபோது, உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் அல்லது நீங்கள் கவனித்த குறைகள் அனைத்தையும் பற்றி யோசித்துப் பாருங்கள். இப்போது அரசாங்கத்தில் உங்கள் பதவிக் காலத்தில் உங்களுக்குத் தொந்தரவு அளித்த அந்த விஷயங்கள் வேறு யாரையும் தொந்தரவு செய்யாமல் இருப்பதை உறுதி செய்வது உங்கள் பொறுப்பு. அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், உங்கள் மட்டத்தில் சிறிய சீர்திருத்தங்களை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
பல நாடுகளுடன் இந்தியா வர்த்தகம் மற்றும் இடம்பெயர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறது. இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வருகின்றன.
உலகில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா. எனது அரசாங்கம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வாழ்க்கையையும், வணிகத்தையும் எளிதாக்கும் நோக்கில் இந்தியா சீர்திருத்த எக்ஸ்பிரசில் ஏறியுள்ளது என்றார்.