ஜெயிலில் இருந்து வெளியே வந்த கணவனை காரில் அழைத்து சென்று கொன்ற மனைவி
- கணவரை கொலை செய்தால் ரூ.2 லட்சம் தருவதாக தெரிவித்து ரூ.1 லட்சத்தை முன்பணமாக கொடுத்தார்.
- காரை பின் தொடர்ந்து வந்த கூலிப்படையினர் லாலு ஸ்ரீனுவை குண்டு கட்டாக தூக்கி காரில் போட்டனர்
தெலுங்கானா மாநிலம் பெத்தரவிடு அடுத்த டோர்னாலினாவை சேர்ந்தவர் லாலு ஸ்ரீனு (வயது 38). லாரி டிரைவர். இவரது மனைவி ஜான்சி. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
லாலு ஸ்ரீனு லாரி ஓட்டும்போது கஞ்சா, மது உள்ளிட்ட பல்வேறு தீய பழக்கங்களுக்கு அடிமையானார். கஞ்சா விற்பனை செய்ததாக போலீசார் லாலு ஸ்ரீனுவை கைது செய்து ஓங்கோல் ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஜான்சிக்கு தனது தம்பியின் நண்பரான ஜிம்மிடோர்னாவை சேர்ந்த கார் டிரைவர் சூர்ய நாராயணா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரிய வந்தது. ஜெயிலில் உள்ள கணவரை பார்ப்பதற்காக தனது தம்பியுடன் ஜான்சி ஜெயிலுக்கு சென்றார்.
அப்போது லாலு ஸ்ரீனு மனைவியையும், அவரது தம்பியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். கணவர் ஜெயிலிலிருந்து வெளியே வந்தவுடன் தங்களை கொலை செய்து விடுவார் என அச்சம் அடைந்தனர். இதனால் ஜெயிலில் இருந்து கணவர் வெளியே வரும்போது முந்திக்கொண்டு கொலை செய்து விட வேண்டும் என ஜான்சி, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்.
குண்டூரை சேர்ந்த 4 பேர் கொண்ட கூலிபடையினரிடம் கணவரை கொலை செய்தால் ரூ.2 லட்சம் தருவதாக தெரிவித்து ரூ.1 லட்சத்தை முன்பணமாக கொடுத்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் லாலு ஸ்ரீனு ஜெயிலிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அவரை அழைத்து வர தனது தம்பியுடன், ஜான்சி ஜெயில் வாசலில் காரில் காத்திருந்தார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த கணவரை காரில் அழைத்து சென்றனர்.
அவர்களது காரை பின் தொடர்ந்து சூரிய நாராயணா மற்றும் கூலிப்படையினர் வந்தனர். சிமகுத்தி பொடிலியா ஆகிய 2 இடங்களில் கொலை செய்ய முயன்றனர். இவர்களது திட்டம் கைகூடவில்லை.
இதையடுத்து சிறுநீர் கழிக்க வேண்டுமென லாலு ஸ்ரீனு காரில் இருந்து இறங்கினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஜான்சியும் அவரது தம்பியும் பின்புறமாக சென்று கணவரின் கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவினர்.
காரை பின் தொடர்ந்து வந்த கூலிப்படையினர் லாலு ஸ்ரீனுவை குண்டு கட்டாக தூக்கி காரில் போட்டனர். அப்போது ஜான்சி தனது தம்பியுடன் சேர்ந்து கத்தியை எடுத்து கணவரின் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து லாலு ஸ்ரீனு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்காதலன் சூரிய நாராயணா மற்றும் கூலிப்படையினர் நீங்கள் இருவரும் போலீசில் சரணடைந்து விடுங்கள் நாங்கள் உங்களை ஜாமீனில் எடுக்கிறோம் என்று தெரிவித்தனர்.
அதன்படி ஜான்சியும், அவரது தம்பியும் போலீசில் சரணடைந்தனர். போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்காதலன் சத்திய நாராயணா மற்றும் கூலிப்படையினருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர்.