இந்தியா

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்

Published On 2023-05-13 02:30 GMT   |   Update On 2023-05-13 15:01 GMT
  • வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
  • ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.

பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், மதியம் 2 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

2023-05-13 15:01 GMT

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நந்தினி பிராண்டு இனிப்பு வகைகளை கட்சி தலைவர்களுக்கு கொடுத்து, காங்கிரஸ் கட்சி வெற்றியை கொண்டாடினார்.

2023-05-13 14:45 GMT

கர்நாடக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் டி.கே.சிவகுமார் அறிவிப்பு.

2023-05-13 14:37 GMT

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து செய்தியில், “ஜனநாயகத்தின் எதிரிகள் ஜனநாயகத்தாலே வீழத்தப்படும் பொழுது அது கட்சிகளை கடந்து தேசமே கொண்டாடும் வெற்றியாக மாறுகிறது. தேசத்திற்கு கொண்டாட்டத்தை பரிசளித்த கர்நாடக மக்களுக்கு வாழ்த்துகள்,” என்று தெரிவித்துள்ளார். 

2023-05-13 14:18 GMT

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே “இது மிகப்பெரிய வெற்றி. இதன் மூலம் நாட்டிற்கே புதிய சக்தி கிடைத்திருக்கிறது. பாஜக எப்போதும் காங்கிரஸ் இல்லாத பாரதம் என்று கூறி வந்தது. தற்போது உண்மை என்னவென்றால் பாஜக இல்லாத தென்னிந்தியா உருவாகி இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார். 

2023-05-13 13:58 GMT

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து அம்மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் வெளியே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

2023-05-13 13:39 GMT

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர், மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, பாஜக வேட்பாளர் வி சோமன்னாவை 46 ஆயிரத்து 163 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். 

2023-05-13 13:36 GMT

கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து செய்தியில், “கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்திக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடகா மக்களின் எதிர்பார்ப்புகளை காங்கிரஸ் கட்சி பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார். 

2023-05-13 13:26 GMT

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, “வெறுப்பு அரசியலுக்கு எதிரான வெற்றி இது. மதச்சார்பற்ற வாக்காளர்கள் ஒன்றிணைந்தால், 2024 தேர்தலில் மோடியை எளிதில் வெளியேற்றிட முடியும்,” என்று காங்கிரஸ் தலைவர் ஏகே அந்தோனி தெரிவித்தார்.

2023-05-13 13:22 GMT

கர்நாடக மக்கள் வெறுப்பு அரசியலை நிராகரித்ததற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். 

2023-05-13 13:07 GMT

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் டிகே சிவகுமார் மற்றும் சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர், மல்லிகார்ஜூனே கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News