இந்தியா

பாஜகவுக்கு தேர்தல் பத்திர நன்கொடை, காங்கிரசுக்கு வங்கி கணக்கு முடக்கம் - சோனியா காந்தி விமர்சனம்

Published On 2024-03-21 10:05 GMT   |   Update On 2024-03-21 10:05 GMT
  • காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன
  • தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை சுதந்திரமாக செயல்பட வேண்டும்

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் முடக்கப்பட்டுள்ளது அந்த கட்சிக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சோனியா காந்தி, "ஒருபுறம், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு பெரும் தொகை நன்கொடையாக வந்துள்ளது. மறுபுறம், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சிக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு, தேர்தல் செலவுகள் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த சவாலான சூழ்நிலையிலும் தேர்தல் பரப்புரையை திறம்பட செய்ய எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம்

இது நமது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகும். ஜனநாயகத்தை முடக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது என்று அவர் பேசினார்.

பின்னர் பேசிய கார்கே, "தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை சுதந்திரமாக செயல்பட வேண்டும். நியாயமான, நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் களம் சமமாக இருக்க வேண்டும். கணக்கில் வராத கட்டுக் கட்டான பணம் பாஜகவுக்கு சென்றுள்ளது. ஒரே கட்சி எல்லாவற்றையும் கைக்குள் வைத்துக்கொள்ள முயற்சித்து செயல்படுகிறது.

தேர்தல் பத்திரத்தின் மூலம், 55% நிதியை பாஜக பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி வெறும் 11% மட்டுமே பெற்றிருக்கிறது. இந்நிலையில் தான், எங்கள் வங்கி கணக்குகளையும் முடக்கி, அபாயகரமான விளையாட்டை பாஜக விளையாடியிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News