அஜித் பவார் மரணத்தில் அரசியல் வேண்டாம்- சரத் பவார் வேண்டுகோள்
- அஜித் பவாருடன் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
- மகாராஷ்டிர மாநில அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையில் இருந்து தனி விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். பாராமதியில் தரையிறங்கும்போது, தரையில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது. அஜித் பவாருடன் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
அவரது மறைவுக்கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஜித் பவாரின் இறுதிச் சடங்கு நாளை முழு அரசு மரியாதையுடன் நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா கலந்து கொள்ள இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அவருக்கு பார்த் மற்றும் ஜெய் என இரண்டு மகன்கள் உள்ளனர். மகாராஷ்டிர மாநில அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், அஜித் பவார் மரண விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என சரத் பவார் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"அஜித் பவாரின் விமான விபத்து முற்றிலும் எதிர்பாராத ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து மட்டுமே. இதை அரசியலாக்க வேண்டாம்.
இது மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பு. இதை ஈடுசெய்வது கடினம். சிலர் இதை அரசியலாக்க முயற்சிப்பது, எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது" என்றார்.