காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது: 2 துப்பாக்கிகள், 4 வெடிகுண்டுகள் பறிமுதல்
- சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
- ராணுவத்தினர் சோபியான் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளை வேட்டையாட பாதுகாப்பு படையினர் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.
பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் பகுதிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது. கடந்த 2 வாரங்களில் இந்த சோதனை மூலம் 6 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
2 பேர் கைது:
இந்நிலையில் காஷ்மீரில் தெற்கு பகுதியில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகளவு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து அந்த மாவட்டம் முழுவதும் சோதனை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நேற்று ராணுவத்தினரும், உள்ளூர் போலீசாரும் இணைந்து சோபியான் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர். அப்போது டி.கே.போரா என்ற பகுதியில் பாதுகாப்பு படையினரிடம் 2 பேர் சிக்கினார்கள்.
பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்:
அவர்களது உடமைகளை போலீசார் ஆய்வு செய்த போது அவர்கள் இருவரும் ஏராளமான வெடி பொருட் கள், ஆயுதங்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட் டது. அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 4 வெடி குண்டுகள், 43 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அவர்கள் சில ஆவணங்கள் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் இருவரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.