null
உடல் ஆரோக்கியத்திற்கும் பளபளப்புக்கும் உதவும் 5 எண்ணெய்கள்!
- எண்ணெய் சருமம் உள்ளவர்களும் பாதாம் எண்ணெய்யை பயன்படுத்தலாம்
- பூப்பெய்தும் பெண்களை வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிக்க சொல்வார்கள்.
பலரும் சருமம் பளபளப்பாக, மென்மையாக, ஈரப்பதத்துடன் இருக்க பாடிலோஷன்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவை அனைத்தும் பல விளைவுகளையும் கொண்டுள்ளன என்பதை அறிய மறுக்கின்றனர். பாடி லோஷன்களுக்கு பதில் எண்ணெய்யை சருமத்திற்கு பயன்படுத்துவது அவ்வளவு நன்மை பயக்கும். அதனால்தான் நமது பாட்டி எல்லாம் எண்ணெய் குளியல் எடுக்க சொல்வர். எண்ணெய் குளியல், எண்ணெய் பயன்பாடு ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் பல்வேறு நன்மைகளை தரவல்லது. பாடி லோஷன்களுக்கு மாறாக உங்களுக்கு முழுமையான உடல் பளபளப்பை தரும் 5 எண்ணெய் வகைகளை பார்ப்போம்.
தேங்காய் எண்ணெய்
நெடுங்காலமாகவே தேங்காய் எண்ணெய்யை அழகு, ஆரோக்கியம், ஆகாரம் என பல செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தி வருகிறோம். அதன் நற்குணங்கள் அனைத்தும் நாம் அறிந்தவையே. தேங்காய் எண்ணெய் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளால் நிரம்பியுள்ளது. இது சருமத்தில் ஆழமாக ஊடுருவி மென்மையையும், பளபளப்பையும் இயற்கையாகவே தருகிறது. சிறந்த பலன்கிடைக்க தேங்காய் எண்ணெய்யை சிறிது சூடுபடுத்தி பயன்படுத்தலாம். வெயிலில் சென்றுவந்த பிறகு அல்லது சருமம் வறட்சியாக, சோர்வாக உணரும்போது தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.
நல்லெண்ணெய்
நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது மந்தமான, வறண்ட சருமத்திற்கு நல்ல பலன் கொடுக்கும். நல்லெண்ணெய்யை உணவில் சேர்த்துக்கொள்வது இன்னும் பலனளிக்கும். பொதுவாக பூப்பெய்தும் பெண்களை வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிக்க சொல்வார்கள். இடுப்பு எலும்புகள் பலம் அடையும் என்று. அவ்வளவு நன்மைகள் கொண்டது நல்லெண்ணெய். நல்லெண்ணைய்யை லேசாக சூடாக்கி ஒரு 10 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தை உறுதியாகவும், ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் காட்டும்.
பாதாம் எண்ணெய்
எண்ணெய் பசையை அதிகம் விரும்பாதவர்கள், எண்ணெய் சருமம் உள்ளவர்களும் பாதாம் எண்ணெய்யை பயன்படுத்தலாம். பாதாம் எண்ணெய் மற்ற எண்ணெய்களைப் போல கனமாக இருக்காது. இது மென்மையாகவும், சருமத்தால் விரைவாக உறிஞ்சப்படும் தன்மையும் கொண்டது, இதனால் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களும் பயன்படுத்தலாம். இதில் வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது, இது உங்கள் சருமத்தின் நிறத்தை சமன் செய்து நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவி இரவுமுழுவதும் அப்படியே விடலாம். பழுப்பு நிற கோடுகள், கருமையான திட்டுகளை இது நீக்கும். வேண்டுமானால் பாதாம் எண்ணெயுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம்.
பாதாம் & ஆர்கன் எண்ணெயில் அதிகம் ஒட்டும்தன்மை இருக்காது
ஆர்கன் எண்ணெய்
ஆர்கன் மரத்தின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு தாவர எண்ணெய்தான் ஆர்கன் எண்ணெய். இது திரவ தங்கம் என்று அழைக்கப்படுகிறது. பிசுபிசுத்தன்மையை வெறுப்பவர்களுக்கு இதுவும் நல்ல தேர்வாகும். இதில் வைட்டமின் ஈ மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் சருமத்தை எண்ணெய் பசையின்றி பளபளப்பாக்குகின்றன. இதனை குளித்தபிறகு இரண்டு, மூன்று சொட்டுகள் முகத்தில் தடவினால் போதும். எண்ணெய் பசை இருப்பதுபோல் முகத்தில் தெரியாது. இது நல்ல வாசனை கொடுப்பதோடு மென்மையான, பளபளப்பான தன்மையை சருமத்திற்கு அளிக்கிறது.
கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெயில் ஒமேகா-3 அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அவை சருமத்தை பிரகாசமாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மசாஜ் செய்ய, குறிப்பாக குளிர்காலத்தில், உடலை சூடாகவும், சருமத்தை மிருதுவாகவும் வைத்திருக்க, இது பல காலமாகப் பயன்படுத்தப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறை கடுகு எண்ணெய்யை பயன்படுத்தினால், உங்கள் சருமம் வலுவாகவும், மென்மையாகவும் இருக்கும். இதன் வாசனை பிடிக்காதவர்கள் ஜாஸ்மீன் அல்லது லாவெண்டர் எண்ணெய்யை இரண்டு, மூன்று சொட்டுகள் சேர்த்து பயன்படுத்துங்கள்.