null
இனிக்கும் தேனில் இவ்வளவு அழகு நன்மைகளா! அப்படியே தடவலாம்...
- பச்சைத்தேனை அப்படியே முகத்தில் தடவலாம்!
- ஒவ்வாமை உள்ளவர்கள் தேன் பயன்பாட்டை தவிர்க்கலாம்.
சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை பராமரிப்பதில் அனைவருமே அதிக கவனம் செலுத்துகிறோம். இதற்காக பலரும் கடையில் விற்கும் அழகுசாதனப் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஒருசிலர் வீட்டு வைத்தியங்களயே கையாளுகின்றனர். அதாவது இயற்கையில் கிடைக்கும் பொருட்களை வைத்தே தங்கள் சருமத்தை பராமரித்து வருகின்றனர். அதில் தேனும் அடங்கும். சிலர் முகத்திற்கு தேனை பயன்படுத்துவர். ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? யாரெல்லாம் பயன்படுத்தவேண்டும் போன்ற தகவல்களை பெரும்பாலானோர் அறிந்திருப்பதில்லை. அந்தவகையில் தேனை எவ்வாறு பயன்படுத்தலாம்? அது சருமத்திற்கு அளிக்கும் பலன்கள் என்ன? பார்க்கலாம்...
தோலழற்சிக்கு எதிராக செயல்படும் தேன்...
வறட்சி, அரிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நாள்பட்ட தோல் நோயான அடோபிக் டெர்மடிடிஸ், சொரியாசிஸ், நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ் (தோலில் பரவும் பாக்டீரியா தொற்று), புண்கள் போன்ற அனைத்துவிதமான தோல்நோய்களுக்கும் பச்சை தேன் பலனளிக்கும். தேனில் சருமத்திற்கு நன்மை பயக்கும் பைட்டோ கெமிக்கல்கள் நிரம்பியுள்ளன. பைட்டோ கெமிக்கல்களுக்கு ஆக்ஸிஜனேற்ற (antioxidant) மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இவை தோலழற்சி போன்ற தொற்றுகளுக்கு எதிராக செயல்படுகின்றன. மேலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், புற்றுநோய் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரித்தல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. அதிலும் குறிப்பாக மனுகா தேன் (மனுகா மரத்தின் பூக்களில் இருந்து தேனீக்களால் எடுக்கப்படுவது) முகத்தில் உள்ள நுண்ணிய கோடுகள், சுருக்கங்கள், கரும்புள்ளிகள், ஹைப்பர் பிக்மென்டேஷன், வறட்சி போன்றவற்றை தடுத்து தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும் என ஆய்வுகள் காட்டுகின்றன. தேன் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைக்கவும், முகத்தை பிரகாசமாக்கவும் உதவும். தேனில் உள்ள உரித்தல் பண்புகள் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும். இது உங்கள் சருமத்தை பிரகாசமாகக் காட்ட உதவும். அதுபோல முகத்தில் உள்ள வடுக்களை மறையச்செய்யும்.
பச்சைத்தேனை அப்படியே முகத்தில் தடவலாம்
தேனை எப்படி பயன்படுத்தலாம்?
பச்சைத்தேனை அப்படியே முகத்திற்கு பயன்படுத்தலாம். ஆனால் அது கடைகளில் வாங்கியதாக இருக்கக்கூடாது. அதாவது சில தேன்கள் வெறும் சர்க்கரைக்கரைசலாக உள்ளன. இயற்கையான தேன்தான் சருமம் மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லப்பலனைத் தரும். அப்படிப்பட்ட பச்சைத்தேனை அப்படியே முகத்தில் தடவலாம். அதன் பிசுபிசுத்தன்மை பிடிக்காதவர்கள், தேனை தண்ணீரில் நீர்த்துப்போகச் செய்து அதன் பிசுபிசுப்புத்தன்மையை குறைத்து முகத்தில் பயன்படுத்தலாம். சில நிமிடங்கள் முகத்தில் தேனைவிட்டு, பின்னர் முகத்தை கழுவலாம். தேனை மற்ற பொருட்கள் உடனும் கலந்து பயன்படுத்தலாம். தக்காளி, கற்றாழை, இலவங்கப்பட்டை தூள் ஆகியவற்றுடன் தேனை சேர்த்து முகத்திற்கு பயன்படுத்தலாம். மூன்று பங்கு தேன் மற்றும் ஒரு பங்கு தூய இலவங்கப்பட்டை தூளை ஒன்றாக கலக்கவேண்டும். இந்த கலவையை கொஞ்சம் சூடாக்கி, முகத்தில் தடவி 8 முதல் 10 நிமிடங்கள் உலரவிடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். இது முகப்பருவை நீக்க உதவி நல்ல பலனை அளிக்கும். ஆனால் ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் இலவங்கப்பட்டையை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். மேலும் தேன் பயன்படுத்துவதையும் தவிர்க்கலாம். மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு பின்னர் பயன்படுத்தலாம். அதுபோல தேனை முகத்தில் தடவிக்கொண்டே தூங்ககூடாது. காரணம் முகத்தில் இருக்கும் தேன் தூசி மற்றும் பிற குப்பைகளை ஈர்க்கும். இது செயலில் உள்ள முகப்பருவை மோசமாக்கும். தூசிகள் தோல் அரிப்புக்கு வழிவகுக்கும். இதை தொடர்ந்து செய்வது சரும பிரச்சனைகளை உண்டாக்கும்.