null
அழகில் ஜொலிக்க வேண்டுமா? இந்த ஒன்று போதும்!
- அன்பின் வழியது வருவது அனைத்துமே அழகானதுதான்.
- யாரை பார்த்தால் நம் முகம் பூக்கிறதோ அவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள்.
நான், என் முகம், என் சருமம் பார்ப்பதற்கு அழகாக, பொலிவாக தெரியவேண்டும் என பலரும் நினைப்போம். இதற்கு பொருட்செலவு, பணச்செலவு, நேரச்செலவு என அனைத்தையும் செய்வோம். ஆனால் எதற்கு இவ்வளவு மெனக்கெடல்கள்? பொருட்செலவு? பணச்செலவு? நம் முகத்தில் மாற்றத்தை உண்டாக்குவதுதான் உண்மையான அழகா? உண்மையில் எது அழகு? பார்ப்போம்.
"அழகு என்பது ஒருவரின் பார்வையில்தான் உள்ளது". ஆம், நாம் பலமுறை புத்தகங்களில் அல்லது பேச்சாளர்களால் அல்லது ஏதோ ஒருவகையில் கேள்விப்பட்டிருக்கும் இந்த சொற்றொடர் உண்மையில் அழகு என்பது நாம் ஒருவரை பார்க்கும் விதத்தில்தான் உள்ளது. ஒருவரை அப்படியே அவராகவே ஏற்றுக்கொள்வதில்தான் உள்ளது. இந்த சமூகத்தில் அழகு என்றால் அளவு உள்ளது. அதாவது முகம் உட்பட உதடு, மூக்கு, உடல்வாகு என அனைத்திற்கும் ஒரு அளவு உள்ளது. அது இந்த அளவில் இருந்தால்தான் அழகு என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நிறமும். தமிழர்களின் நிறமே, ஏன் இந்தியர்களின் நிறமே கருப்புதான் எனக்கூறுவார்கள். ஆனால் அவர்களுக்கே வெள்ளையாக வேண்டும் என்பதுதான் ஆசை. வெள்ளையாக இருப்பதுதான் இங்கு அழகு. அழகென்றால் இப்படித்தான் இருக்கும் என ஒரு இலக்கணம் இந்த சமூகத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த இலக்கணத்தை தாண்டிய அழகு எது? இந்த கேள்வியை ஒரு 10 பொதுமக்களிடம் முன்வைத்தால், அவர்கள் அனைவரிடத்திலும் இருந்து பத்து பதில்கள் வரும்.
ஒவ்வொரு பதிலும் ஒவ்வொன்றாக இருக்கும்போது அவர்களின் புரிதல்கள், பார்வைகள் வேறுபட்டது என்பது நமக்குத் தெரியும். ஆம், உண்மையில் அனைவரின் பார்வையும் வேறுபட்டது. எல்லோருடைய கண்களுக்கும் நாம் அழகாக தெரிவோமா என்றால் இல்லை. சமூகத்தின் அழகு இலக்கண வரையறைப்படி இருக்கும் ஒருவரை அனைவருக்கும் பிடிக்காது. அந்த இலக்கணத்தை விரும்புபவர்களுக்கு மட்டும்தான் அவர்களை பிடிக்கும். அப்போது எப்படி நம்மை பிடிக்கும்? எதனால் நம்மை பிடிக்கும்? எதுதான் அழகு?
குழந்தைகளின் புன்னகையும் ஒரு அழகுதான்
உலகில் படைக்கப்பட்ட அனைத்துமே அழகுதான். நான், நீங்கள், உங்களைச் சுற்றியுள்ளவர்கள், எழில் கொஞ்சும் இயற்கை வளம், தெரியாதோரின் கருணை, காரணமே இன்றி அழுத்தத்தில் சாலையில் தனியாக நடந்து செல்லும் நம் மனதை புன்னகைக்க வைக்கும் குழந்தை, என்றோ ஓர்நாள் தடவியதற்காக பார்க்கும்போதெல்லாம் வாலாட்டும் நாய்க்குட்டி, பாதையை அறிந்து பயணம் செய்யும் நமக்கு பயணத்தின்போது வழிசொல்லி "பத்திரமாக செல்" எனக்கூறும் யாரென்றே தெரியாத நரைவிழுந்த மூதாட்டி, அம்மாவின் தலையில் இருக்கும் கனகாம்பரம் என அடுக்கிக்கொண்டே போகலாம். இவையனைத்தும்தான் அழகு. ஆறுதல் தரும் அன்பை உமிழும் அனைவருமே அழகானவர்கள்தான். அவர்களின் வார்த்தைகள்தான் அழகானவை. அன்பின் வழியது வருவது அனைத்துமே அழகானதுதான்.
யாரை பார்த்தால் நம் முகம் பூக்கிறதோ அவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள். பிடித்த பெண்கள் அனைவரும் ஆண்களின் கண்களுக்கு தேவதைதான். பிடித்த ஆண்கள் அனைவரும் பெண்களுக்கு இளமாறன்தான். மொத்தமாக அகமும், அகத்தின்வழி நாம் ஒருவருக்கு அளிக்கும் புன்னகையும்தான் உண்மையான அழகு. இறுதியாக, நீங்கள் அழகாக தெரியவேண்டும் என்றால் எதுவும் செய்யவேண்டாம், புன்னகையை மற்றவருக்கு பரிசளியுங்கள்.