அழகுக் குறிப்புகள்
null

சருமத்தை பளபளப்பாக்க வீட்டுக்குள்ளேயே ஒரு பியூட்டி பார்லர்!

Published On 2025-11-08 12:15 IST   |   Update On 2025-11-08 12:15:00 IST
  • வெளியே செல்வதற்கு முன் கை, கால்களில் தேங்காய் எண்ணெயை தடவிக்கொண்டு செல்லலாம்.
  • நம் வீட்டில் இருக்கும் பொருட்களை எந்த அளவு, எதனோடு பயன்படுத்தினால் சருமத்தில் மாற்றம் நிகழும்?

அழகு நிலையங்களுக்கு செல்ல இயலாதோர் பலரும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே தங்கள் சருமத்தை மெருகூட்ட நினைப்பார்கள். ஆனால் பலருக்கும் அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும்? எந்த பொருளோடு சேர்த்து பயன்படுத்த வேண்டும்? என்பது தெரியாது. அவர்களுக்கான பதிவுதான் இது. நம் வீட்டில் இருக்கும் பொருட்களை எந்த அளவு, எதனோடு பயன்படுத்தினால் சருமத்தில் மாற்றம் நிகழும்? அதனுடைய விளைவுகள் என்ன? என்பதைப் பார்க்கலாம்.  

தேன், எலுமிச்சை

ஒரு தேக்கரண்டி தேனில், இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் எலுமிச்சை சாறுவிட்டு, அதை நன்றாக கலந்து, அந்த கலவையை முகத்தில் தடவலாம். இதை நன்றாக முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 அல்லது 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள். முகத்தில் நல்ல பொலிவு உண்டாகும். 

பக்கவிளைவுகள்: 

எலுமிச்சை சாறு சரும எரிச்சல், வறட்சி மற்றும் சூரிய ஒளிக்கு அதிக உணர்திறனை ஏற்படுத்தும். தேன் சிவத்தல் அல்லது அரிப்பையும் ஏற்படுத்தும். ஒவ்வாமை உள்ளவர்கள் ஆலோசனை செய்து பின்னர் பயன்படுத்தலாம். 

கற்றாழை ஜெல்

தினமும் முகத்திற்கு கற்றாழை பயன்படுத்தவும். இது சருமத்தை ஆற்றவும், எரிச்சலை குணப்படுத்தவும், சருமத்தை ஈரப்பதமாக்கவும் உதவும். முகத்தில் அதிகப்படியாக இருக்கும் எண்ணெய்ப்பசையை குறைக்கும்.

பக்க விளைவுகள்:

கற்றாழை முகத்திற்கு நல்லது. ஆனால் சிலருக்கு அரிப்பு, சிவத்தல் அல்லது எரியும் உணர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. 

மஞ்சள், தயிர்

1 தேக்கரண்டி தயிரில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் இட்டு, அதனை நன்றாக பேஸ்ட் போல அரைத்து சாப்பிடவும். இது வீக்கத்தை குணப்படுத்தவும், பளபளப்பான மற்றும் தெளிவான சருமத்திற்கு உதவும். முகத்திற்கும் பயன்படுத்தலாம். பேஸ்ட்டை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவுங்கள்.

பக்க விளைவுகள்:

அதிக மஞ்சள் பயன்பாடு சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தும். மேலும் எரிச்சல் மற்றும் சருமத்தில் நிறமாற்றத்தை ஏற்படுத்தும். 


உங்களது சருமத்திற்கு ஒவ்வாமையை ஏற்படுத்தாத பொருட்களை மட்டும் பயன்படுத்துங்கள்

வெள்ளரிக்காய், ரோஸ் வாட்டர்

1/2 வெள்ளரிக்காயை அரைத்து அதன் சாற்றை வடிகட்டி, ரோஸ் வாட்டருடன் கலக்கவேண்டும். இதனை வெள்ளை பருத்தி துணியால் எடுத்து முகத்தில் தடவலாம். அல்லது கைகளாலும் மெதுவாக தடவலாம். 10-15 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். 

தேங்காய் எண்ணெய்

உள்ளங்கையில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, முகம் மற்றும் கை, கால்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். தேங்காய் எண்ணெயில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சரும சேதத்தை சரிசெய்யவும், இயற்கையான பளபளப்பை அதிகரிக்கவும் உதவும். முக வறட்சியை போக்கும்.

பக்க விளைவுகள்:

முகப்பரு உள்ளவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். ஏனெனில் சருமத்துளைகளை அடைத்து முகப்பரு வெடிப்புக்கு தூண்டுகிறது. 

பப்பாளி, தேன்

பழுத்த பப்பாளியை மசித்து, 1 டீஸ்பூன் தேன் சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக தடவுங்கள். 10-15 நிமிடங்கள் அப்படியேவிட்டு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். பப்பாளியில் உள்ள நொதிகள் இறந்த சரும செல்களை நீக்கி, பளபளப்பான சருமத்திற்கு வழிவகுக்கும்.

பக்க விளைவுகள்:

பப்பாளியை அதிகமாகப் பயன்படுத்துவது உணர்திறன் வாய்ந்த சருமத்தை எரிச்சலடையச் செய்து, அரிப்பு அல்லது சொறியை ஏற்படுத்தும். 

கடலைமாவு, பால்

1 டீஸ்பூன் கடலைமாவுடன், 1 டீஸ்பூன் பால்சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு நன்கு கலந்துவிட்டு, முகத்தில் ஃபேஸ்பேக்காக போடலாம். இதனை அப்படியே 10-15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். கடலைமாவும், பாலும் முகத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கும்.

பக்க விளைவுகள்:

ஏற்கனவே வறண்ட அல்லது உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு கடலை மாவு வறட்சியை கொடுக்கும். இதனால் தோல் உரிய தொடங்கும். 

வாழைப்பழம், தேன்

ஒரு வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதனுடன் தேனை சேர்த்து நன்கு கலந்துவிட்டு முகத்தில் தடவுங்கள். இதனை 10-15 நிமிடங்கள் அப்படியேவிட்டு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். இது முகத்திற்கு நீரேற்றம் மற்றும் ஊட்டச்சத்தை அளித்து, சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.

பக்க விளைவுகள்:

அதிகமாக வாழைப்பழம் பயன்படுத்தும்போது முகத்தில் வறட்சி ஏற்படும்.  

வீட்டு வைத்தியம் பொதுவாக பாதுகாப்பானதுதான். ஆனால் சில பொருட்கள் சில ஒவ்வாமை மற்றும்  எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் உங்கள் சருமத்திற்கு சரிவருமா என மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு பிறகு பயன்படுத்துங்கள்.

Tags:    

Similar News