null
அழுகுசாதனப் பொருட்கள் இல்லாமல் சருமத்தை பளபளப்பாக வெச்சிக்கணுமா?... இதை செய்தாலே போதும்!
- அழகு என்பது சருமம் வெள்ளையாக இருப்பதல்ல.
- உடல் ஆரோக்கியமே சரும அழகுக்கு வழிவகுக்கும்.
பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் உட்பட பலரும் சரும அழகை கூட்ட, பராமரிக்க பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுபவர். சிலர் அழகு நிலையங்களுக்கு செல்வர். சிலர் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சருமத்திற்கு அழகை கூட்டுவர். ஆனால் இதுபோல மெனக்கெடல்கள் எதுவும் இல்லாமலேயே சருமத்தை அழகாக வைத்திருக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? அதற்கு என்ன செய்யவேண்டும்? பார்க்கலாம்.
நீரேற்றம்...
ஆரோக்கியமான மற்றும் அழகான சருமம் வேண்டுமென்றால் உடலுக்கு நீரேற்றம் என்பது மிக அவசியமான ஒன்று. உடல் நீரேற்றத்தோடு இருக்கும்போது, சருமத்தின் தோற்றத்தை மங்கச்செய்யும் மாசுகளை திறம்பட நீக்கும். மேலும் உடல் எப்போதும் ஹைட்ரேட்டாக இருப்பதால், வறட்சி தடுக்கப்பட்டு, முக சுருக்கங்கள் இல்லாமல் எப்போதும் முகம் குண்டாக, மென்மையாக காட்சியளிக்கும். நீர் உங்கள் சருமத்தின் இயற்கையான நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது. இது சருமத்திற்கு இளமை மற்றும் பிரகாசமான பளபளப்பைக் கொடுக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடியுங்கள்.
கிளென்சிங்
பளபளப்பான சருமத்தைப் பெறுவதற்கு மென்மையான சுத்திகரிப்பு என்பது முக்கியம். லேசான அதாவது அதிக பாதிப்பில்லாத க்ளென்சர்களை பயன்படுத்தும்போது, அது சருமத்தின் இயற்கையான எண்ணெய் பசையை நீக்காமல், அழுக்கு, மாசுக்களை நீக்கும். கடுமையான ரசாயனங்கள் கொண்ட க்ளென்சர்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்யும். இதனால் வீக்கம் மற்றும் முன்கூட்டியே வயதான தன்மை ஏற்படும். ஒரு மென்மையான க்ளென்சர் சருமத்தின் pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இந்த சமநிலை கூடுதல் எண்ணெய் உற்பத்தியைத் தடுக்கிறது. இது பளபளப்பான சருமத்திற்கு வழிவகுக்கிறது.
எக்ஸ்ஃபோலியேஷன்
முகத்தில் உள்ள இறந்த செல்கள் சருமத்தின் நிறத்தை மங்கச் செய்து சருமத்தை சீரற்றதாகத் தோன்றச் செய்யும். சரும பராமரிப்பில் எக்ஸ்ஃபோலியேட்டிற்கு (exfoliate) முக்கிய பங்கு உண்டு. எக்ஸ்ஃபோலியேட் என்பது சருமத்தில் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை வளர செய்யும் ஒரு முறையாகும். இறந்த சரும செல்கள் அகற்றப்படும்போது முகத்திற்கு பொலிவான தோற்றம் கிடைக்கும்.
சருமம் பளபளக்க தண்ணீர் அவசியம்
சரிவிகித உணவு
ஒரு சரிவிகித உணவுமுறை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. நாம் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற அனைத்து வகை உணவுகளையும் எடுத்துக்கொள்ளும்போது நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்சிஜனேற்றிகள் அனைத்தும் கிடைக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் சேதமடைந்த சரும செல்களை சரிசெய்யவும், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிப்புற அழுத்தங்களிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. மேலும் ஒரு நல்ல உணவுமுறை ஹார்மோன் ஒழுங்குமுறைக்கும் உதவும். ஆரோக்கியமான உடல்நலமே சருமத்தை பிரகாசிக்க செய்யும்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி பளபளப்பான சருமத்தைப் பெற உதவும். நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது, உங்கள் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை சரும செல்களுக்கு வழங்குகிறது. இந்த ரத்த ஓட்ட மேம்பாடு சரும பராமரிப்பிற்கு உதவுகிறது. ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தை ஊக்குவிக்கிறது. முக்கியமாக உடற்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மன அழுத்தம் முகப்பரு மற்றும் முன்கூட்டிய வயதானது போன்ற தோல் பிரச்சினைகளுக்கு பங்களிக்கும். உடற்பயிற்சி செய்வது வியர்வையை ஏற்படுத்தும். இது சருமத்தை சுத்தப்படுத்தவும், மாசுகளை நீக்கவும், பளபளப்பான மற்றும் இளமையான தோற்றத்தை ஊக்குவிக்கவும் உதவும். ஒட்டுமொத்தமாக, வழக்கமான உடற்பயிற்சியே உங்கள் சரும ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும்.
மேற்கூறியவை போல நாம் தினசரி எடுத்துக்கொள்ளவேண்டிய தண்ணீர், உணவு போன்றவற்றை சரியாக எடுத்தாலே உடலும், சருமமும் ஆரோக்கியமாக, அழகாக இருக்கும்.