என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • 5ஜி மொபைல் வைத்திருப்போர் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
    • ரூ. 199 விலையில் கிடைக்கும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகின்றன.

    ஜியோ நிறுவனம் நெட்ஃப்ளிக்ஸ் உடன் இணைந்து புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 1099 மற்றும் ரூ. 1,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரண்டு புதிய சலுகைகளும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவுடன் வழங்கப்படுகின்றன. இவற்றில் முறையே ரூ. 149 மற்றும் ரூ. 199 விலையில் கிடைக்கும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகின்றன.

    இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 5ஜி டேட்டா மற்றும் பல்வேறு பலன்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ரூ. 1099 ஜியோ சலுகையுடன் நெட்ஃப்ளிக்ஸ் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இதில் பயனர்கள் நெட்ஃப்ளிக்ஸ் நிகழ்ச்சிகள், தொடர்கள் மற்றும் திரைப்படங்களை 480 பிக்சல் ரெசல்யூஷனில் பார்க்க முடியும்.

     

    இந்த சலுகையில் வழங்கப்படும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தா கொண்டு ஒற்றை மொபைல் சாதனம் அதாவது ஆண்ட்ராய்டு, ஐபோன் அல்லது டேப்லெட் உள்ளிட்டவைகளில் மட்டுமே தரவுகளை பார்க்க முடியும். மற்ற பலன்களை பொருத்தவரை 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எஸ்.எஸ்., அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இத்துடன் 5ஜி மொபைல் வைத்திருப்போர் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த வசதி ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ் வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

    ஜியோ ரூ. 1499 சலுகையிலும் நெட்ஃப்ளிக்ஸ் பேசிக் சந்தா வழங்கப்படுகிறது. இதில் பயனர்கள் விரும்பிய நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை 720 பிக்சல் தரத்தில் கண்டுகளிக்க முடியும். முந்தைய பேசிக் திட்டத்தை போன்றே இந்த சந்தாவிலும் பயனர்கள் ஒரு சமயத்தில் ஒரே சாதனத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

    ஆனால், இதில் மொபைல் போன், டேப்லெட்கள், லேப்டாப் மற்றும் டி.வி. போன்ற சாதனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் மற்ற பலன்களை பொருத்தவரை 3 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன.

    • அவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த அம்சம் உதவுகிறது.
    • அதற்கு பதில் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம் என்று எலான் மஸ்க் அறிவிப்பு.

    எலான் மஸ்க்-இன் எக்ஸ் (முன்னதாக டுவிட்டர்) சமூக வலைதளத்தில் பயனர்கள் மற்றவர்களை பிளாக் (Block) செய்வதற்கான வசதி விரைவில் நீக்கப்பட இருக்கிறது. எக்ஸ் தளத்தின் புதிய உரிமையாளர் இதுபற்றி தகவல் தெரிவித்து இருக்கிறார். ஒருவர் பிளாக் அல்லது அன்-மியூட் செய்வது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த எலான் மஸ்க் இந்த தகவலை தெரிவித்தார்.

    "மெசேஜ்களில் வழங்கப்பட்டு இருப்பதை தவிர்த்து, தனி அம்சமாக இருக்கும் பிளாக் நீக்கப்பட இருக்கிறது. இந்த அம்சத்தில் எந்த அர்த்தமும் இல்லை," என்று எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். டுவிட்டர் தளத்தில் மற்ற அக்கவுன்ட்களுடன் எப்படி உரையாடுகின்றீர்கள் என்பதை சிறப்பாக கட்டுப்படுத்த பிளாக் அம்சம் உதவும் என்று அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

     

    இந்த அம்சம் கொண்டு பயனர்கள் குறிப்பிட்ட அக்கவுன்ட்கள் தங்களை தொடர்பு கொள்வது, டுவீட்களை பார்ப்பது மற்றும் ஃபாளோ செய்வது உள்ளிட்டவைகளை தடுக்க செய்கிறது. தளத்தில் தங்களை யாரேனும் தவறாக தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது, அவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த அம்சம் உதவுகிறது.

    எக்ஸ் தளத்தில் பயனர்கள் பிளாக் செய்வதற்கு பதிலாக, மியூட் (mute) அம்சத்தை பயன்படுத்தலாம் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். புதிய அறிவிப்பின் படி பயனர்கள் தொடர்ந்து அக்கவுன்ட்களை மியூட் செய்யவும், மெசேஜ்களில் பிளாக் செய்யவும் முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • மனித கண்ணுக்கு இணையான திறன் கொண்ட சென்சாரை உருவாக்கி வருவதாக தெரிவித்து இருந்தது.
    • புதிய சாம்சங் சென்சார் கேலக்ஸி S26 அல்ட்ரா மாடலில் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் 200MP கேமரா வழங்கியதை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் நான்கு புதிய கேமரா சென்சார்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 440MP சென்சாரும் இடம்பெற்று இருக்கிறது. எனினும், இந்த சென்சார் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    புதிய கேமரா சென்சார் பற்றி டிப்ஸ்டர் ரெவக்னஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் நான்கு வெவ்வேறு கேமரா சென்சார்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதில் 50MP ISOCELL GN6 சென்சார், 1.6 மைக்ரான் பிக்சல்கள், 0.7 மைக்ரான் பிக்சல்கள் கொண்ட 200MP HP7 சென்சார், 320MP சென்சார் மற்றும் 440MP HU1 சென்சார் உள்ளிட்டவை அடங்கும்.

     

    440MP கேமரா சென்சார் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் இது ஆட்டோமோடிவ் அல்லது தொழில்துறை பயன்பாடுகளுக்காக உருவாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக 2020 வாக்கில் மனித கண்ணுக்கு இணையான திறன் கொண்ட சென்சாரை உருவாக்கி வருவதாக சாம்சங் தெரிவித்து இருந்தது.

    அதிக விவரங்கள் வெளியாகாத நிலையில், 320MP சென்சார் சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ரா மாடலில் வழங்கப்படும் என்று தெரிகிறது. மீடியாடெக் நிறுவனத்தின் டிமென்சிட்டி 9200 பிராசஸர் அதிகபட்சம் 320MP கேமரா சென்சாரை சப்போர்ட் செய்யும் என்பதால், இது கிட்டத்தட்ட பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S25 அல்ட்ரா மாடலில் 0.7 மைக்ரான் பிக்சல்கள் கொண்ட 200MP HP7 சென்சாரை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சென்சார் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் உள்ள 200MP சென்சாரை போன்றதாகும். ஆனால், இதில் அளவில் பெரிய பிக்சல்கள் வழங்கப்படுகின்றன. புதிய 50MP ISOCELL GN6 சென்சார் சாம்சங் நிறுவனத்தின் முதல் 1-இன்ச் கேமராவாக இருக்கும் என்று தெரிகிறது.

    • புதிய வசதியை மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்தார்.
    • வீடியோக்களை ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதி விரைவில் வழங்கப்படுகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதி வழங்கப்பட்டு வருகிறது. படிப்படியாக வழங்கப்படும் நிலையில், இந்த அம்சம் அடுத்த சில வாரங்களில் அனைவருக்கும் கிடைத்துவிடும் என்று தெரிகிறது. புதிய அப்டேட் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் செயலி மூலமாகவே அதிக தரமுள்ள புகைப்படங்களை அனுப்பிட முடியும்.

    புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். வெர்ஷன்களில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வசதியை வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் பயனர்களும் பயன்படுத்த முடியும். இதற்காக செயலியில் சிறியதாக "HD" என்ற ஐகான் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியில் வீடியோக்களையும் ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதி விரைவில் வழங்கப்படும் என்று மெட்டா தெரிவித்து இருக்கிறது.

     

    புகைப்படங்களை ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதியை மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்தார். ஃபேஸ்புக் பதிவின் மூலம் புதிய அம்சத்தை அறிவித்த மார்க் ஜூக்கர்பர்க் இத்துடன் புகைப்படம் ஒன்றையும் இணைத்து இருந்தார். அதில் HD ஐகான் தெளிவாக இடம்பெற்று இருந்தது.

    முன்னதாக இந்த அம்சம் டெஸ்டிங்கில் இருந்து வந்த நிலையில், தற்போது அனைவருக்குமான அப்டேட்டில் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்தில் இருந்து புகைப்படங்களை ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதியை வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் டெஸ்டிங் செய்து வந்தது. இந்த அம்சம் மூலம் புகைப்படங்களை அதிக தரத்தில் பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் இவ்வாறு செய்யும் போது, அதிக டேட்டா மற்றும் சாதனத்தில் மெமரி அதிகளவில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • அவான்ட் பார் 520 சவுன்ட்பார் மாடல் தெளிவான மற்றும் சக்திவாய்ந்த சவுன்ட் வெளிப்படுத்துகிறது.
    • புதிய போட் அவான்ட் பார் 520 மாடலின் விலை ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    போட் நிறுவனம் அவான்ட் 520 பெயரில் புதிய சவுன்ட்பார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக போட் ஃபிளாஷ் பிளஸ் மற்றும் ஸ்டார்ம் பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரூ. 2 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் புதிய சவன்ட்பார் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.

    புதிய அவான்ட் பார் 520 சவுன்ட்பார் மாடல் தெளிவான மற்றும் சக்திவாய்ந்த சவுன்ட் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 16 வாட் பவர், டூயல் பேசிவ் டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள 2.0 சேனல் ஸ்டீரியோ சவுன்ட் செட்டப் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இந்த சவுன்ட்பார் ப்ளூடூத் 5.0 மூலம் வயர்லெஸ் கனெக்ட் வசதி கொண்டிருக்கிறது.

     

    இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இது அதிநவீன டிசைன் அழகான தோற்றம் கொண்டிருக்கிறது. போட் அவான்ட் பார் 520 மாடலை ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர்களுடன் ப்ளூடூத், AUX, யு.எஸ்.பி. மூலம் கனெக்ட் செய்து கொள்ள முடியும்.

    புதிய போட் அவான்ட் பார் 520 சவுன்ட்பார் விலை இந்திய சந்தையில் ரூ. 1,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் போட் வலைதளங்களில் நடைபெறுகிறது.

    • ஐபோன் 14 ப்ரோ மாடலில் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
    • ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் அதிவேக சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய ஐபோன் 15 மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என்றும், இதன் டாப் எண்ட் மாடல்களில் அதிநவீன பிராசஸர், மேம்பட்ட பேட்டரி பேக்கப் மற்றும் கேமரா சார்ந்த புதிய அம்சங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தெரிகிறது.

    ஐரோப்பிய யூனியன் பிறப்பித்து இருக்கும் புதிய கட்டுப்பாடுகள் காரணமாகத்தான் ஆப்பிள் நிறுவனம் யு.எஸ்.பி. டைப் சி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் 35 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     

    இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் புதிய ஐபோன் மாடல் முந்தைய வெர்ஷனை விட அதிவேக சார்ஜிங் வசதியை கொண்டிருக்கும். தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஐபோன் 14 ப்ரோ மாடலில் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், ஐபோன் 14 மாடலில் 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் 35 வாட் பவர் அடாப்டரை அறிமுகம் செய்தது.

    இதன் மூலம் தற்போது வெளியாகி இருக்கும் தகவல் உண்மையாகும் பட்சத்தில் 35 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் மட்டுமே பிரத்யேக அம்சமாக வழங்கப்படும் என்று தெரிகிறது.

    Photo Courtesy: 9To5Mac

    • விவோ V29e ஒட்டுமொத்த தோற்றம் பிரீமியம் டிசைன் கொண்டிருக்கிறது.
    • விவோ V29e ஸ்மார்ட்போன் ரெட் மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    விவோ இந்தியா நிறுவனம் தனது புதிய V29e ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மேலும் புதிய விவோ V29e மாடலுக்கான டீசர்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறது. இத்துடன் மைக்ரோசைட் ஒன்றையும் உருவாக்கி இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் டிசைன் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    தற்போதைய அறிவிப்பின் படி விவோ V29e மாடல் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 28-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் அறிமுக நிகழ்வு மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. அறிமுக நிகழ்வு சமூக வலைதளங்களில் நேரலை செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டை தொடர்ந்து விவோ V29e விற்பனை ப்ளிப்கார்ட், விவோ அதிகாரப்பூர்வ வலைதளங்கள் மற்றும் ரிடெயில் விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது.

    விவோ V29e ஸ்மார்ட்போன் ரெட் மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் 3D வளைந்த டிஸ்ப்ளே, டூயல் டோன் ரியர் டிசைன், நிறம் மாறும் தீம் வழங்கப்பட்டு இருக்கிறது. விவோ V29e ஒட்டுமொத்த தோற்றம் பிரீமியம் டிசைன் கொண்டிருக்கிறது. இந்த மாடல் விவோ V29 சீரிசில் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் மாடல் ஆகும்.

    புதிய விவோ V29e மாடலை தொடர்ந்து, விவோ V29 மற்றும் V29 ப்ரோ மாடல்களும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. தற்போதைய டீசர்களின் படி விவோ V29e மாடலில் 64MP பிரைமரி கேமரா, OIS, 50MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த விவரங்கள் தவிர விவோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனின் விலை பற்றிய தகவல்களையும் சூசகமாக தெரிவித்துள்ளது.

    அதன்படி விவோ V29e மாடலில் மெல்லிய 3D வளைந்த ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் இதன் விலை ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்கி ரூ. 30 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில் விவோ V29e விலை ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    • விங்ஸ் ஃபுளோபட்ஸ் 100 ஸ்மார்ட் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது.
    • இந்த இயர்பட்ஸ் கேமிங் மோடில் அதிகபட்சம் 40ms வரையிலான லோ-லேடன்சி மோட் வசதியை வழங்குகிறது.

    விங்ஸ் லைஃப்ஸ்டைல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்- ஃபுளோபட்ஸ் 100-ஐ அறிமுகம் செய்தது. புதிய மாடல் அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஃபுளோபட்ஸ் 200 மாடலினை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    இந்த இயர்பட்ஸ் டிஜிட்டல் பேட்டரி டிஸ்ப்ளே, ப்ளூடூத் 5.3 மற்றும் AAC கோடெக் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் 13 மில்லிமீட்டர் ஹை-ஃபிடிலிட்டி டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 50 மணி நேரத்திற்கான பிளேடைம் வழங்குகிறது. இதில் உள்ள இயர்பட்ஸ் ஒவ்வொன்றும் பத்து மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகின்றன.

     

    யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் விங்ஸ் ஃபுளோபட்ஸ் 100 ஸ்மார்ட் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இது ஒட்டுமொத்த ஆடியோ அனுபவத்தை மேம்படுத்துகிறது. இத்துடன் கேமிங் மோடில் அதிகபட்சம் 40ms வரையிலான லோ-லேடன்சி மோட் வசதியை வழங்குகிறது.

    புதிய விங்ஸ் ஃபுளோபட்ஸ் 100 மாடல் அறிமுக சலுகையாக ரூ. 899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இயர்பட்ஸ்: புளூ, பிளாக் மற்றும் வைட் என மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விற்பனை அமேசான் வலைதளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

    • புதிய மாடல்கள் ஐபோன் 14,1 மற்றும் ஐபோன் 14, 9 என்று குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.
    • ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் இருந்து ஆப்பிள் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கும் என்று தகவல்.

    ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் இருந்தே, ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களில் லைட்னிங் போர்ட்-ஐ சார்ஜிங் செய்வதற்கு வழங்கி வருகிறது. இந்த நிலை, விரைவில் மாறிவிடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் இருந்து ஆப்பிள் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    எனினும், கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன்களிலும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபோன் 15 மாடல்கள் மட்டுமின்றி, பல்வேறு பழைய ஐபோன் மாடல்களிலும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட இருப்பதாக ஆப்பிள் டெவலப்பர் மற்றும் எழுத்தாளரான ஆரோன் தெரிவித்து இருக்கிறார்.

     

    டி.வி. ஒ.எஸ். பீட்டா வெர்ஷன்களில் ஆரோன் இரண்டு ஐபோன் மாடல்களை கண்டறிந்து இருக்கிறார். இவை ஏற்கனவே இடம்பெற்று இருந்த நான்கு ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை விட வித்தியாசமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய மாடல்கள் ஐபோன் 14,1 மற்றும் ஐபோன் 14, 9 என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும், இவை ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களின் யு.எஸ்.பி. டைப் சி வெர்ஷனாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    தற்போதைய சூழலில் ஆப்பிள் நிறுவனம் பழைய ஐபோன்களை ரிமேக் செய்து யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்குமா என்றால், அதற்கு அதிக சாத்தியம் இல்லை என்றே கூற வேண்டும். எனினும், ஐரோப்பிய யூனியனின் சமீபத்திய விதிகளின் படி, அங்கு விற்பனை செய்யப்படும் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்குவது கட்டாயம் ஆகும். அந்த வகையில், இந்த பகுதிகளில் விற்பனைக்கும் வரும் மொபைல் போன்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்குவது கட்டாயம் என்று 2020-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்க ஒரே காரணம் ஐரோப்பிய யூனியன் விதித்து இருக்கும் புதிய விதிகளை பின்பற்றுவதற்காகவே இருக்க வேண்டும்.

    • ஐபோன் 15 சீரிசில் மொத்தமாக நான்கு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.
    • ஐபோன் 15 சீரிசில் டைனமிக் ஐலேன்ட் அம்சம், மெல்லிய டிசைன், பெரிய டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.

    இந்தியாவில் புதிய ஐபோன்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், ஆப்பிள் இன்க் நிறுவனம் ஐபோன் 15 மாடல்களை தமிழ் நாட்டில் உற்பத்தி செய்ய துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குழும ஆலையில் முற்றிலும் புதிய ஐபோன் மாடல்களின் உற்பத்தி நடைபெற இருக்கிறது.

    தற்போது உற்பத்திக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. சீனாவில் உள்ள ஆலையில் இருந்து வினியோகம் துவங்கிய பிறகு தான், தமிழகத்தில் இருந்து புதிய யூனிட்கள் அனுப்பப்பட உள்ளன. புதிய ஐபோன் மாடல்கள் செப்டம்பர் 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் மிகப்பெரும் அப்டேட் ஆக பார்க்கப்படுகிறது.

     

    இந்தியாவில் உற்பத்தி செய்யும் போது, அவற்றுக்கான உபகரணங்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்படும். இதற்காக சென்னையில் உள்ள உற்பத்தி ஆலை தயார்நிலையில் உள்ளது. ஐபோன் 15 சீரிசில், ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ பிளஸ் என நான்கு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.

    புதிய ஐபோன் 15 சீரிசில் டைனமிக் ஐலேன்ட் அம்சம், மெல்லிய டிசைன், பெரிய டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று தெரிகிறது. ஐபோன் 15 ப்ரோ சீரிசில் ஏ17 பயோனிக் சிப்செட், ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களில் ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் குறைந்தபட்ச ஸ்டோரேஜ் 256 ஜிபி-யாக உயர்த்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    • புதிய GT 5 மாடல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என்று தகவல்.
    • இந்த ஸ்மார்ட்போன் 24 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    ரியல்மி நிறுவனத்தின் புதிய GT 5 ஸ்மார்ட்போனின் சரியான வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், வரும் நாட்களில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ரியல்மி சீனா தலைவர் சு கி சேஸ், ரியல்மி GT 5 ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.

    அவரது வெய்போ பதிவில் இது குறித்த பதிவில், "30-க்கும் அதிக இரண்டாம் தலைமுறை ஸ்னாப்டிராகன் 8 பிளாக்ஷிப் மாடல்களை வெவ்வேறு பிரான்டுகள் பயன்படுத்தி விட்டன. ஆனால் இவை எதுவும் உச்சக்கட்ட செயல்திறனை வழங்காதது ஏன்?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

     

    இந்த பதிவின் மூலம் புதிய GT 5 மாடல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இதே பிராசஸர் தற்போது ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ மற்றும் சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் 24 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது LPDDR5x ரேம், UFS 4.0 ஸ்டோரேஜ் ஆக இருக்கும் என்று தெரிகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ரியல்மி GT 5 மாடல் நுபியா ரெட்மேஜிக் 8S ப்ரோ பிளஸ் மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ மாடல்கள் வரிசையில், 24 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இணையும்.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் ரியல்மி GT 5 மாடலில் 6.74 இன்ச் 1.5K OLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அட்ரினோ GPU, அதிகபட்சம் 24 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP இரண்டாவது லென்ஸ், 2MP மூன்றாவது சென்சார், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 4600 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 240 வாட் சார்ஜிங், 5200 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 150 வாட் சார்ஜிங் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. 

    • லின்டா யாக்கரினோ வீடியோ கால் வசதி பற்றிய தகவலை தெரிவித்தார்.
    • X டிசைனர் ஆன்ட்ரியா கான்வே இதனை டுவிட் மூலம் உறுதிப்படுத்தினார்.

    X (முன்பு டுவிட்டர்) தளத்தில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து ஏராளமான மாற்றங்களை தளத்தில் மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இவ்வாறு செய்வதில் இருந்து தற்போதைக்கு எலான் மஸ்க் பிரேக் எடுக்க மாட்டார் என்றே தெரிகிறது.

    அந்த வகையில், X தளத்தில் வீடியோ கால் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டுவிட்டர் தளத்தில் மெசேஜிங் தவிர்த்து, ஹோம் ஃபீட் பிரிவில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தது. இதன் காரணமாக டுவிட்டர் தளத்தில் மிகவும் அரிதான நடவடிக்கையாக மெசேஜிங் வசதி வழங்கப்பட்டது. தற்போது, X தளத்தில் புதிதாக வீடியோ கால் பேசுவதற்கான வசதி வழங்கப்பட இருக்கிறது.

     

    சமீபத்திய பேட்டி ஒன்றில் X தலைமை செயல் அதிகாரியான லின்டா யாக்கரினோ வீடியோ கால் வசதி பற்றிய தகவலை தெரிவித்தார். "நீண்ட வீடியோ மற்றும் செய்தி கட்டுரைகள் பிரபலமாக மாறி வரும் நிலையில், உங்களுக்கு பிடித்த கிரியேட்டர்களுக்கு சந்தாதாரர் ஆகிடுங்கள், அவர்கள் தற்போது இதில் இருந்து வருவாய் ஈட்டி வருகின்றனர். நீங்கள் வீடியோவை பாருங்கள், விரைவில் உங்களது மொபைல் நம்பரை கொடுக்காமல், வீடியோ கால் மேற்கொள்ள முடியும்," என்று யாக்கரினோ தெரிவித்தார்.

    இதே தகவலை X டிசைனர் ஆன்ட்ரியா கான்வே டுவிட் மூலம் உறுதிப்படுத்தினார். இதில் X யு.ஐ.-இல் வீடியோ காலிங் செய்வதற்கான படம் இடம்பெற்று இருக்கிறது. அதில் யு.ஐ. வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் காலங்காலமாக இருப்பதை போன்றே காட்சியளிக்கிறது. X தளத்தில் இடம்பெற்று இருக்கும் புதிய கால் ஐகானை க்ளிக் செய்து ஆடியோ அல்லது வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.

    தற்போது X தளத்தில் ஆடியோ காலிங் செய்வதற்கான வசதியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வீடியோ கால் போன்றே ஆடியோ கால் வசதியும் முதல் முறையாக வழங்கப்பட இருக்கிறது. வீடியோ காலிங் யு.ஐ.-இல் மைக்ரோபோனில் மியூட்/அன்-மியூட், லவுட் ஸ்பீக்கர், டர்ன் ஆஃப் வீடியோ மற்றும் என்ட் தி கால் என நான்கு ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. புதிய அம்சம் பற்றி X சார்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வழங்கப்படவில்லை.

    ×